-கி. வீரமணி எம்.ஏ., பி.எல்.
தீபாவளி பண்டிகைக்கும், தமிழர் - திராவிடர்களுக்கும் என்ன சம்பந்தம்? ஒன்றுமில்லை. இது ஆரியப் பண்பாட்டு படையெடுப்பினால் திராவிடர் களிடையே தொத்திக் கொண்டு, பகுத்தறிவையும், பொருளையும் பாழ்படுத்தி, நம்மைக் காட்டுமிராண்டிக் காலத்திற்கு இழுத்துச் செல்லும் பின்னோக்கிய பயண முயற்சியாகும்.
இதைப்பற்றிக் கூறுகையில், சங்கராச்சாரிகள் முதல் அரசியல் தலைவர்கள்வரை கிளிப்பிள்ளைப் பாடங்களைப் போல் ஆண்டுதோறும் செய்திகளைப் பரப்பும்போது, இது தீய சக்திகளை வென்று நன்மைகள் உண்டாகக் கொண்டா டப்படும் விழா என்று உளறிக் கொட்டுகின்றனர்!
அந்த மேதாவிகள், சேற்றை - மணம் கமழும் சந்தனம் என்று கருதி, பூசிக்கொண்டு கூத்தடித்துக் கும்மாளம் போடும் பக்தி போதையாளர்கள் - கொஞ்சம் நிதானத்துடன் சிந்தித்தால், இந்தத் தீபாவளிப் புரட்டு உடைவது உறுதி.
மறைமலை அடிகளாரின் கருத்தும் - கணிப்பும்!
பகுத்தறிவுவாதிகள், நாத்திகர்கள் இவர்கள் இப்படிக் கூறுகிறார்கள் என்று எளிதில் எவரும் அலட்சியப்படுத்திட முடியாத ஒருவர். அசுரர்கள், அரக்கர்கள் என்பது யாரைக் குறித்து, ஆரியப் பார்ப்பனர்கள் எழுதி வைத்துள் ளனர் என்பதை தமிழ்க்கடல் மறைமலை அடிகள் வேளாளர் நாகரிகம் என்ற தமது ஆராய்ச்சி நூலில் (பக்கம் 61) எழுதியுள்ளதைப் படியுங்கள்.
வேள்விகள் (யாகங்கள்) எல்லாம் ஆரியரால் செய்யப் பட்ட வெறி யாட்டு நாத்திக வேள்விகளேயாம். அவ்வேள்வி களை (யாகங்களை) அழித்து அவற் றைப் புரிந்த ஆரி யரை ஒறுத்து (தண்டித்து) அவர்தம் செருக்கினை அடக்கின பிட்சாடனருத்திரர், வீரபத்திரர் ருத்திரர் முதலியோரின் செயல்கள் எல்லாம் தமிழ் மக்களின் செயற்கருஞ் செயல்களேயாம்.
ஆரியரின் இத்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்து வந்த சூரன் இராவணன் முதலான நிகரற்ற தமிழ் வேந்தர்களே, ஆரியர்களால் அரக்கர், என்று இகழ்ந்து பேசப்படுவராயினர் என்கிறார் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார்.
சுரர் யார்? - அசுரர் யார்?
சுரபானத்தைக் குடித்தவர்கள் சுரர்கள். சுரபானத்தைக் குடிக்காதவர்கள், குடிக்க மறுத்தவர்கள் (திராவிடர்கள்) அசுரர்கள் - அதாவது சுரர் அல்லாதவர்.
திருஷ்டம் பார்வை - அதிருஷ்டம் என்றால் பார்வை யற்றது குருட்டுத்தனம் என்பதுபோல எதிர்மறைப் பொருட் சொல்லேயாகும்!
பண்டித ஜவகர்லால் நேருவிலிருந்து பல்வேறு வரலாற்று ஆசிரியர்கள் பலருடைய கருத்துகளையும் இதற்குச் சான்றா கப் பல மேற்கோள்களைக் காட்ட நம்மால் முடியும்.
தீயசக்தி நரகாசுரன் என்று கூறப்படுகிறான்; அவனைக் கொல்லுவதற்காகவே அவதாரங்களில் ஒன்றான கிருஷ் ணன் அவதாரத்தினையும் எடுத்தார் மகாவிஷ்ணு என்று எழுதி அறிவுக்குப் பொருந்தாத கதைகளை காலங்காலமாய்ப் பரப்பி வருகின்றனரே!
கிருஷ்ணனைவிட பெரிய தீய சக்தி வேறு உண்டா? புராண இதிகாச கதைப்படியே!
சின்ன வயதில் வெண்ணெய்த் திருடியவன் திருட்டுக் குற்றத்தினைச் செய்தவன் நல்ல சக்தியா? தீய சக்தியா?
பெண்கேலி கடவுள் கிருஷ்ணனே!
பெண்களை பதினாயிரத்திற்குமேல் மனைவியாகக் கொண்டவன் - கோபிகாஸ்திரீகள் என்ற மற்றவன் மனைவி களையெல்லாம் தன் உடைமையாக தான் விரும்பிய போதெல்லாம் அழைத்தவுடன் வரவேண்டிய (Call Girls) என்பது மாதிரி நடந்துகொண்டவன் தீய சக்தியா? நல்ல சக்தியா?
பெண்கள் குளிக்கும் குளத்திற்கு அருகே சென்று கரைமீது அவர்கள் வைத்திருந்த புடைவைகளைத் திருடி வைத்துக்கொண்டு, மரத்தின்மீது ஏறி உட் கார்ந்து, அந்தப் பெண்களை உடையில்லாக் கோலத்தில் பார்க்க விரும்பி, அவர்கள் தங்கள் உடலைத் தண்ணீருக்குள் மூழ்கிப் பாதுகாத்துக் கெஞ்சியபோது, மேலே வாருங்கள் என்று கூறிய படுகேவலமான, அசிங்கம், ஆபாசம், அருவருப்பு நிறைந்த செயலுக் குரியவன் தீய சக்தியா? நல்ல சக்தியா?
இன்று Eve- teasing என்ற பெண் கேலியைச் செய்யும் வக்ரபுத்தி கொண்ட இளைஞர் களுக்கு வழிகாட்டியே, இந்த கிருஷ்ணன் என்றால், அதை எவரே மறுக்க முடியும்?
போரைத் தூண்டிய கடவுள்!
போரற்ற உலகு தேவை என்கிறபோது, போர் செய்ய மறுப்பவனைக்கூட, போர் புரிந்தே ஆக வேண்டும்; அப்போதுதான் உன் குலதர்மம் காப்பாற்றப் படும்; உன் குலப்பெண்கள் பிற வர்ணத்தாருடன் கலந்து விட்டால், வர்ணாசிரம தர்மம் அழிந்துவிடும் என்று கீதையில் போர்க் களத்தில் உபதேசித்த இந்த யோக்கிய சிகாமணியைவிட பெரிய தீய சக்தி வேறு உண்டா?
தன்னைப் பெற்ற தாயைக்கூட கொச்சைப்படுத்தும் வகையில் பெண்களும், சூத்திரர்களும் பாவயோனியி லிருந்து பிறந்தவர்கள் என்று கூறியவன் தீய சக்தியா? நல்ல சக்தியா?
பொய் சொல்லத் தூண்டியவன்!
பாரதப் போரில் பாண்டவர் அணி ஜெயிக்க வேண்டும் என்பதற்காக கோயபெல்சுக்கு முன்னோடியாக, அஸ்வத் தமா அதாகுஞ்சரா என்று பொய் சொல்லும்படி யோசனை சொன்ன கண்ணன் தீய சக்தியா? நல்ல சக்தியா?
(இந்தக் கதை பீஷ்மரை ஜெயிக்க அவர் மகன் அசுவத் தாமன் இறந்ததாகச் சொல்லு என்கிறான். உண்மையில் அசுவத்தாமன் என்ற யானைதான் கொல்லப்பட்டது. இதை மாற்றி ஏமாற்றியவன் பகபவனா? நல்லவனா?)
இப்படி எத்தனையோ எழுதலாம். எவரும் மறுக்க முடியாது!
தந்தை பெரியார் கேட்கிறார்
தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் நாள் தீபாவளி என்பது சரியானதுதானா? பகுத்தறிவு உரைகல்லில் வைத்து உரைத்துப் பார்க்கச் சொல்லுகிறார்; பகுத்தறிவுப்பகலவன் தந்தை பெரியார்.
சகோதரிகளே, இதில் ஏதாவது புத்தியுள்ள தன்மையோ, அறிவோ இருக்கிறதா என்பதைப் பாருங்கள்! விஷ்ணுக் கடவுள் பூமியைப் புணர முடியுமா என்றாவது, பூமியைப் புணர்வதால் பிள்ளை பிறக்குமா என்றாவது யோசித்துப் பாருங்கள்! இப்படிப் பொய்யான பண்டிகையினால் எவ் வளவு கஷ்டம், எவ்வளவு கடன், எவ்வளவு அறியாத்தனம், எவ்வளவு பிரயாசை என்பவைகளை நம் மக்கள் நினைப்ப தேயில்லை. அப்பண்டிகையைக் கொண்டாட ஒவ்வொரு வனும் தேவைக்குமேல் செலவு செய்து துன்பப்படுகிறான்.
தன்னிடம் இல்லாவிட்டாலும், கடன் வாங்கியாவது - கடன் என்றால், ஒன்றுக்கு ஒன்றரைப் பங்கு வட்டி ஏற்பட்டுவிடு கின்றது. பட்டாசு கொளுத்துவது எவ்வளவு துன்பம் என்றும், இதனால் பலவித அபாயங்கள் தோன்றி உபாதைகள் ஏற்பட்டு விடுவதும், துணியில் நெருப்புப் பிடித்து உயிர் போதலும், பட்டாசு சுடும்போது திடீரென வெடிப்பதால் உடல் கருகி, கண், மூக்கு, கை, கால் ஊனம் வருவதும் அல்லாமல், இந்தப் பண்டிகை கொண்டாடுவதற்கு அறி குறியாக எவ்வளவோ பேர்கள் சாராயம் குடித்து மயங்கித் தெருவில் விழுந்து புரண்டு மானம் கெடுவதும், மேலும் இதற்காக இனாம் என்று எத்தனை பாமரர் பிச்சை எடுப்பது அல்லது தொந்தரவு கொடுத்துப் பணம் வசூல் செய்வது ஆகிய இந்தக் காரியங்களினால் எவ்வளவு பணம், எவ்வளவு நேரம், எவ்வளவு ஊக்கம், எவ்வளவு அறிவு செலவாகின்றது என்றும் எண்ணிப் பாருங்கள்! இவைகளை எந்த இந்தியப் பொருளாதார - தேசிய நிபுணர்களாவது கவனித்தார்களா என்று கேட்கிறேன். (குடிஅரசு, 20.10.1929)
பொருள்கள் நாசம்!
நமது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் குருட்டுப் பற்றுதலால், தீபாவளியின்போது ஏராளமான பொருள்கள் நமது நாட்டில் வீண் விரயமாக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட வீண் செலவுகளில் பட்டாசு முதலிய வெடிகள் சுடுதல், பலகார வகைகளை அளவுக்கு மிஞ்சிச் சாப்பிடுதல், புதுத்துணிகள் வாங்குவதில் தன் நிலைமைக்கு அதிகமாகச் செலவு செய்தல் முதலியன முக்கியமாகும். இவற்றில் வெடிகள் சுடுவதன்மூலம் நமது நாட்டுப் பொருள் சீனா முதலிய அந்நிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டு அவ்வந்நிய நாடுகளில் நமது நாட்டிலுள்ள மூட மக்கள் தேவைக்கு வெடிகள் செய்வதென்று மனித நன்மைக்கு உபயோகிமில்லாத ஒரு தொழில் வளர்க்கப்பட்டு வருகிறது. தீபாவளியில் தின்பண்டங்கள் தின்னவேண்டும் என்றி ருக்கும் வழக்கத்தால் மக்களிடையே நோய் விருத்தியாகிறது. தின்பண்டங்களை ஒவ்வொருவரும் தனது தேக நிலைக்குத் தகுந்த அளவு நிரந்தரமாகப் புசித்து வரவேண்டுமேயொழிய - வருஷத்தில் சில தினங்களில் மாத்திரம் பண்டிகைகள் கொண்டாடும் விசேஷ தினங்களென ஏற்படுத்திக் கொண்டு - அந்த நாட்களில் மாத்திரம் அதிகமாகப் புசித்தால் நோய டைவது நிச்சயம். தமிழ்நாட்டில் அஜீரணத்தால் ஏற்படும் காலரா என்னும் தொத்து நோய் ஒவ்வொரு வருஷமும் ஆரம்பமாவது தீபாவளி காலத்தில்தான் என்பதை அனை வரும் அறிவர்.
தீபாவளியில் புதுவஸ்திரம் கட்டியாகவேண்டி யிருக்கும் வழக்கம் மேற்கண்ட மற்ற இரண்டு தீங்குகளைவிட மிகவும் பாதகமானது. மக்களுக்குத் துணி அவசியம் எனக் கொண்டா லும் ஒவ்வொரு வரும் தனக்கு வேண்டிய துணிகளை நாளடைவில் அந்தந்தச் சமயத்திலுள்ள தேவைக்குத் தக்கவாறும், தனது பொருள் நிலைமைக்குத் தக்கவாறும் வாங்கிக் கொள்ளவேண்டும். பழைய துணிகள் கிழியாமல் வேண்டிய அளவு இருக்கும்போது, புதிதாய் வாங்க வேண் டியதில்லை. பொருள் கஷ்டம் ஏற்படும் காலத்தில் கிழிந்த ஆடைகளைக் கூடியவரையில் மறுபடியும் செப்பனிட்டுத் தைத்து உபயோகப் படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டு மேயொழிய, புதுப் புதுத் துணி வாங்கித்தான் ஆக வேண்டு மென்ற நியதியைக் கைக்கொள்ளக் கூடாது.
ஆனால், தீபா வளிக் கொண்டாட்டம் என்னும் மூட சம்பிரதாயத்தின் காரணமாய் ஒருவன் தன் வசத்தில் ஏராள மான ஆடைகள் ஏற்கனவே வாங்கி வைத்திருந்தபோதிலும் - தற்சமயம் அவசிய செலவுக்கே பணமில்லாமல் திண்டாடிக் கொண்டிருந்த போதிலும், பண்டிகைக் காலத்தில் புத்தாடை வாங்கி உடுத்தவேண்டுமென்று கட்டாயப்படுத்தப்படுகிறான்.
இதன் பயனாய் ஏழை மக்கள் தங்களுக்குவேண்டிய துணிகளைத் தீபாவளிச் சமயத்தில் தவிர வேறு சமயங்களில் வாங்காமலிருக்கிறார்கள். துணி வியாபாரத்தில் ஒரு வருஷத்திய வியாபாரம் முழுவதும் ஒரு தினத்தில் நடத்தவேண் டியிருப்பதால், ஒரு நெருக்கடி ஏற்பட்டுத் துணி விலை அதிகப்பட்டு, ஏழைகளுக்கு நஷ்டமுண்டாகிறது.
ஆகையால், நமது நாட்டு மக்கள் இவ்வித நெருக்கடி யிலும், கஷ்டத்திலும் பட்டு உழலாமலிருக்க வேண்டு மானால், தீபாவளிப் பண்டிகையைக் கைவிடவேண்டிய தவசியம். தேச நலத்தை விரும்புகிறவர்களும் - ஏழை மக்களின் அறியாமையை அகற்றப் பாடுபடுப வர்களும் தங்கள் செய்கையில் தீபாவளியைக் கொண் டாடாமல் மற்றவர்களுக்கு வழிகாட்டுவதிலும் - தீபாவளியைப் பகிஷ் கரிக்க வேண்டுமெனப் பொது மக்களிடையே தீவிரப் பிரச் சாரம் செய்வதிலும் முன்னிற்க வேண்டியது அவசியமாகும். பொது நன்மையைக் கோரும் அறிவாளிகளிடத்தில் இவ் விஷயத்தைப்பற்றி அபிப்பிராய பேதமிருக்க வேண்டிய தில்லை. (குடிஅரசு, தலையங்கம், 1.11.1931)
அறிவு ஆசான் தந்தை பெரியார் கேட்கும் இந்தக் கேள்விகளுக்கு என்ன பதில்?
சிந்திக்க ஏன் தயக்கம்?
பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டு மானாலும் செலவழிக்கத் தயாராக இருக்கின்றீர்கள். சுதந் திரத்தையும், சமத்துவத்தையும் எவ்வளவு வேண்டுமானா லும் விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கின்றீர்கள். ஆனால், உங்கள் பகுத்தறிவுதனை சிறிதுகூடப் பயன்படுத்தத் தயங்கு கிறீர்கள். அது விஷயத்தில் மாத்திரம் ஏன் சிக்கனம் காட்டுகிறீர்கள்? பார்ப்பனரல்லாதவர்களில் சில பண்டிதர்கள் மாத்திரம் வயிறு வளர்த்தால் போதுமா? கோடிக் கணக்கான மக்கள் நாணமற்று, மானமற்று, கால் வயிற்றுக் கஞ்சிக்கும் வகையற்று அலைவதைப் பற்றிய கவலை வேண்டாமா? என்று கேட்கின்றேன். - தந்தை பெரியார்.
இப்போது, ஆர, அமர, யோசித்துச் சொல்லுங்கள். தீமை எங்கே? நன்மை எங்கே இருக்கிறது? என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!
- விடுதலை, 6.11.2004
No comments:
Post a Comment