'விடுதலை'ப் போர் வீரனை வீட்டுக்கு வீடு கொண்டு சேர்ப்போம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 8, 2020

'விடுதலை'ப் போர் வீரனை வீட்டுக்கு வீடு கொண்டு சேர்ப்போம்!


கரோனா காலம் - மக்களின் வாழ்வைப் புரட்டிப் போட்டு கர்வத்துடன் சிரிக்கிறது.


சாதாரணமல்ல - ஒரு எட்டு மாதம் தொடர்ச்சியாக மக்களின் வாழ்வை சிதற அடித்தது என்பது - இதுவரை கேள்விப்படாத ஒன்றே!
பிரச்சாரக் கூட்டங்கள் இல்லை - மாநாடுகள் இல்லை.
ஏன் இன்னும் சொல்லப்போனால், கோவில்கள் கூடப் பூட்டப்பட்டுவிட்டன.
அவனின்றி ஓர் அணுவும் அசையாது'' என்று ஆன்மிகவாதிகள் கதறுவார்கள். கரோனா யாரால் வந்தது என்ற கேள்வி இளைஞர்களின் மத்தியில் எழத்தான் செய்யும்.
லயோலா கல்லூரி எடுத்த ஒரு கணக்கெடுப்பில் காஞ்சி சங்கராச்சாரியார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிறகு, மத நம்பிக்கையற்றவர்கள், நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகமானது என்ற ஒரு செய்தி வெளிவந்தது.
அதுபோலவேதான் கரோனாவுக்கு முன், கரோனா வுக்குப் பின் - இளைஞர்கள் மத்தியில் கடவுள் நம்பிக்கைபற்றிய கணக்கில் மாறுபாடு நிச்சயம்.
திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் பிரச்சாரம், போராட்டம் இரு அணுகுமுறைகள்.



பிரச்சாரத்தைப் பொறுத்தவரையில் மேடை போட்டுக் கூட்டம் பேசுவது அறவே  அற்றுப் போனது - இது அனைவருக்குமே பொருந்தும்.
பிரச்சாரம் என்ற வகையில் அறிவியல் சாதனமான காணொலி நமக்குக் கை கொடுத்தது. கழகத் தலைவர் பெரும்பாலும் காணொலிமூலம் கருத்துகளை சளைக் காமல் வழங்கிக் கொண்டே இருந்தார்.
பிரச்சாரத் தடத்தில் விடுதலை'யின் பங்களிப்பு அசாதாரணமானது. அஞ்சல் துறை செயல்படவில்லை; இரயில்வே பணியும் முடங்கியது.
இந்த நேரத்தில், விடுதலை'யின் நிலை என்ன? என்ற கேள்வி எழுந்த நேரத்தில், 86 ஆண்டு விடுதலை'யின் 58 ஆண்டு அதன் ஆசிரியர் என்ற கின்னஸ்' சாதனை படைத்த நமது மானமிகு ஆசிரியர் அவர்கள் இணைய தளத்தின் வழி விடுதலை' என்னும் மூச்சுக் காற்றை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் ஒரு யுக்தியை மேற்கொண்டார்.


ஒவ்வொரு தோழரும் 2 சந்தா என்று சேகரித்தாலே போதுமே! மாநிலப் பொறுப்பாளர்கள் முதல் கிளைக் கழகப் பொறுப்பாளர் வரை,  இன்று ஒரு முடிவு எடுப்போம்!


நாம் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய வீச்சாகி விட்டது. அச்சிட்ட விடுதலை'யின் வாசகர்களைவிட இணைய தள வாசகர்களின் எண்ணிக்கைக் கூடியது என்பது விடுதலை' வரலாற்றில் மட்டுமல்ல - இயக்க வரலாற்றில் புதியதோர் நம்பிக்கை ஒளியே!
அறிவியலைப் போற்றும் நமது கழகம் இந்த அறிவியல் சாதனத்தை மிகச் சரியாகவே பயன்படுத்திக் கொண்டது.


அந்தக் கால கட்டத்தில்கூட சென்னையில் விடுதலை' அச்சிடுவது நிறுத்தப்படவில்லை என்பது ஒரு கூடுதல் செய்தியாகும்.
அஞ்சலகமும், இரயில்வேயும் செயல்பாட்டுக்கு வந்த பிறகு விடுதலை'யை சந்தாதாரர்களுக்கு அனுப்பும் பணி தொடங்கப்பட்டு விட்டது.


நமது கழகப் பொறுப்பாளர்கள், பொதுச்செயலா ளர்கள், மாநில அமைப்பாளர், அமைப்புச் செயலாளர்கள் விடுதலை' சந்தா சேர்க்கும் பணியில் கரோனா அச்சுறுத்தலையும் புறந்தள்ளி பம்பரமாய்ச் சுழன்று விடுதலை' சந்தா சேர்க்கும் பணியில் மும்முரம் காட்டுவது குறித்து நமது தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிக்கைமூலம் வெளிப்படுத்தினார்.


வார இதழாக விடுதலை'யை நடத்தலாம் என்று நினைத்த தந்தை பெரியார் அவர்களின் முடிவு மாற்றப்பட்டு, நாளேடாகவே தொடர்வதற்கு முழு முதற்காரணமாக இருந்தவர் நமது தலைவர் ஆசிரியர் அவர்கள். அதற்காக நமது கழகம் மட்டுமல்ல, தமிழ் நாடே - ஏன் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் கூட நன்றிக் கடன்பட்டவர்கள் ஆவார்கள்.
அவரின் 80 ஆம் ஆண்டில், அரசியல் கட்சி யினரேகூட வியக்கும் அளவில் 50 ஆயிரம் விடுதலை' சந்தாக்களைச் சேர்த்துக் கொடுக்கும் வல்லமை நம்மிடம் இருந்தது. இப்பொழுது நினைத்தாலும் நம் சாதனையை நாமே பாராட்டிக் கொள்ளலாம்போல் தோன்றுகிறது!


விடுதலை' இன்றேல் இந்த நாட்டுக்கு சமூக விடுதலை ஏது? ஜாதி ஒழிப்பிலும், மூடநம்பிக்கை தகர்ப்பிலும், பெண்ணடிமை வேரை வீழ்த்துவதிலும், மனித உரிமைப் பேணுவதிலும், மண்ணுரிமைக் குரல் கொடுப்பதிலும், மாநில உரிமைக் கொடியைப் பட்டொளி வீசி உயரப் பறக்கவிட்டதிலும், சமூகநீதிக் கப்பலை மூழ்கடிக்க ஓங்கிக் கொந்தளித்து எழுந்த பெரும் புயலை எல்லாம் மண் கவ்வச் செய்ததிலும், விடுதலை' என்னும் வீரனின் வீர சாகசங்கள் கொஞ்சமா நஞ்சமா?


86 ஆண்டு விடுதலை' வரலாற்றில் எத்தனை எத்தனை விழுப்புண்கள், விலாப்புரத்தில் வேல் வீச்சுகள், ஜாமீன் கோரல்கள், பறிமுதல்கள், தணிக்கைக் கால தடாலடிகள் - துரோகங்கள் எல்லாவற்றையும் புரட்சிகரமான தன் கொள்கைப் புன்னகையுடன் புறமுதுகிட்டு ஓடச் செய்த 'ஒப்பாரும் மிக்காரும் இல்லாத சகாப்தத் தலைவர்' தந்தை பெரியாரின் வெற்றிப் போர்வாள் அன்றோ விடுதலை'.


ஜஸ்டிஸ் கட்சி விடுதலை' என்னும் ஏட்டைத் தொடங்குகிறது என்றவுடன், அடேயப்பா, அறிவுலக ஆசான் அய்யா பெரியார் அடைந்த மகிழ்ச்சிக்கோர் அளவேயில்லை.


இதோ அய்யா எழுதுகிறார்:
ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக ஜூன்  மாதம் முதல் தேதியிலிருந்து (1935) தமிழ் பத்திரிகை ஒன்று விடுதலை' என்னும் பெயரால் வாரம் இருமுறையாக சென்னையிலிருந்து வெளியாகி  இரண்டு இதழ்கள் நம் பார்வைக்கு வந்தன. அதைப்பற்றி ஒரு மதிப்புரை எழுதவேண்டிய அவசியம் எதுவும் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை.


ஏனெனில், 2, 3 வருடங்களாகவே பரிசுத்த வீர ரத்தவோட்ட முள்ள ஒவ்வொரு பார்ப்பனரல்லாதாரும் இரவும் - பகலுமாய் தமிழ்ப் பத்திரிகை! தமிழ்ப் பத்திரிகை! என்கின்ற தாகத்துடன் அலைந்து கொண்டிருந்தும், அதை எந்தத் தலைவர்களும் கவனியாமல் அலட்சியமாய் இருந்ததும், அதன் பயன்களை சமீப காலத்தில் ஏற்பட்ட பல தேர்தல்களின் மூலம் அனுபவித்ததும், மறுபடியும் புதிய முறையில் முன்னிலும் அதிகமாக இரண்டு பங்கு சப்தத்துடன், தமிழ்ப் பத்திரிகை! தமிழ்ப் பத்திரிகை! மக்கள் கூப்பாடு போட்டதுமான விஷயம் யாரும் அறியாததல்ல!


அப்படிப்பட்ட நிலையில், விடுதலை' என்னும் பெயரால் ஒரு பத்திரிகை வெளியாகி இருப்பதைப் பார்த்து எந்தப் பார்ப்பனரல்லாதாரும் தங்களுக்கு ஏதோ ஒரு பாக்கியம் கிடைத்ததாக மகிழ்ச்சியடைவார்களே ஒழிய, இதற்கு மதிப்புரை வருகின்றதா? அது எப்படி வருகின்றது? என்று யாரும் கவனிக்கமாட்டார்கள். ஆதலால், நாம் மதிப்புரை எழுதும் வீண் வேலையில் பிரவேசிக்காமல், வந்துவிட்டது தமிழ்ப் பத்திரிகை' என்று விளம்பரம் செய்யவே ஆசைப்படுகின்றோம்.


விடுதலை'ப் பத்திரிகை இன்று வாரம் இருமுறையாக வெளிவந்தாலும், கூடிய சீக்கிரம் தமிழ் மக்களின் ஆதரவுக்கேற்ப தினசரி ஆகும் என்பதில் நமக்கு அய்யமில்லை.


காற்றின் விசையாகச் சுழன்றடித்து விடுதலை' சந்தாக்களைக் குவித்து, நம் தலைவரிடம் ஒப்படைப்போம்! ஒப்படைப்போம்!!


பத்திரிகையானது நல்ல மாதிரியில் பார்ப்பன விஷமப் பிரச்சாரங்களுக்கு  மார்புக் காட்டும் முறையில் சரியான விஷயங்களைக் கொண்டு வெளியாகி வருவதால், அதை ஆதரிக்க வேண்டிய அவசியம் எந்த விதத்திலும் குறைவாகக் காணப்படவில்லை என்றே சொல்வோம்.'' (குடிஅரசு', 9.6.1935).


என்று தந்தை பெரியார் தம் உள்ளத்து உணர்வை உயிர்த் துடிப்புடன் வார்த்தைகளாக அள்ளிக் கொட்டியுள்ளார். வாரம் இருமுறை விடுதலை' தந்தை பெரியார் எழுதியபடியே நாளேடாக - அதுவும் தந்தை பெரியார் பொறுப்பிலேயே 1937 (ஜனவரி ஒன்று) முதல் வெளி வந்தது. ஆகா, எத்தகைய பொருத்தம்! பொருத்தம்!!


அப்பேர்ப்பட்ட விடுதலை'க்குத்தான் நாம் சந்தா சேர்க்கிறோம் என்று எண்ணுகிறபோது, நாம் எவ்வளவுப் பெருமைப்படுகிறோம் - உணர்ச்சியால் உந்தப்படுகிறோம் - வரலாற்றிலும் இடம்பெறுகிறோம் என்பதை எண்ணிப் பாருங்கள் தோழர்களே!


50 ஆயிரம்  விடுதலை' சந்தா சேர்ப்பை நாம் முடிவு செய்தபோது என்ன கூறினோம் நினைவிருக்கிறதா?


எதையும் தனக்கென்று கேட்காத நமது தலைவர் ஆசிரியர் கேட்பது ஒன்றே ஒன்றுதான் -அதுதான் விடுதலை' சந்தா! 50 ஆண்டு காலம் விடுதலை' ஆசிரியராகப் பணியாற்றியமைக்கான பாராட்டு விழாவில் அந்த வாக்குறுதியைக் கொடுத்துதான் ஆசிரியர் அவர்களை  பங்குகொள்ள வைத்தோம்  -நாணயமாகவும் காப்பாற்றி நின்ற சொல்லலர்!' என்பதையும் நிறுவினோம்!


வரும் டிசம்பர் 2 - நமது தலைவர் ஆசிரியர் அவர்களின் 88 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா! அதற்குள் காற்றின் விசையாகச் சுழன்றடித்து விடுதலை' சந்தாக்களைக் குவித்து, நம் தலைவரிடம் ஒப்படைப்போம்! ஒப்படைப்போம்!!
ஒவ்வொரு தோழரும் 2 சந்தா என்று சேகரித்தாலே போதுமே! மாநிலப் பொறுப்பாளர்கள் முதல் கிளைக் கழகப் பொறுப்பாளர்வரை,  இன்று ஒரு முடிவு எடுப்போம்!


விடுதலை' சந்தா சேர்ப்போம் - சேர்ப்போம் - தலைவரின் கரங்களில் ஒப்படைப்போம்! ஒப்படைப் போம்!! என்பதுதான் அந்த முடிவு!
விரைவீர்! வினை முடிப்பீர்! முடிப்பீர்!!


- கலி.பூங்குன்றன் -
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
பொறுப்பாசிரியர், விடுதலை'


 


 


No comments:

Post a Comment