உலகமெல்லாம் பெரியார் கொள்கை ஆள வேண்டும் என்பதற்காக நாம் உழைக்க வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 8, 2020

உலகமெல்லாம் பெரியார் கொள்கை ஆள வேண்டும் என்பதற்காக நாம் உழைக்க வேண்டும்


புலவர் மா. நன்னன் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தலில் தமிழர் தலைவர் உரை


பெரியார் பேருரையாளர் புலவர் மா. நன்னன் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் நன்னன்குடி சார்பில் காணொலி கூட்டமாக நேற்று (07.11.2020) மாலை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு புலவர் நன்னன் அவர்களின் மகள் வேண்மாள் வரவேற்புரை ஆற்றினார். அவரைத் தொடர்ந்து பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தின் துணைத் தலைவரும், எமரால்டு பதிப்பகத்தின் உரி மையாளருமான கோ.ஒளிவண்ணன் அவர்கள் உரையாற் றினார். அவர் தமது உரையில் பெரியார் பேருரையாளர்  நன்னன் அவர்களின் பண்புநலன்கள், நன்னன் அவர் களின் இளமைக் காலத்தில் அவர் மேற்கொண்ட சிக்கனம், சேமிப்பு தொடர்பாக அவர் பகிர்ந்து கொண்ட தகவல் களையும், தமிழுக்காக அவர் ஆற்றிய உண்மையான தொண்டறப் பணிகளையும் எடுத்துரைத்தார்.  நன்னன் ஆற்றிய சீரிய பணிகள்!
தொடர்ந்து நன்னன் அவர்களின் பேரன் அறிவன் உரையாற்றினார். அவர் தம் குழந்தைப் பருவம் முதல் புலவர் நன்னன் அவர்களுடனான தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அவரைத் தொடர்ந்து புலவர் நன்னன் அவர்களின் மாணவரும், சீரிய பெரியார் பற்றாளருமான பேராசிரியர் முனைவர் கு.வணங்காமுடி அவர்கள் உரையாற்றினார். அவர் தமது உரையில் நன்னன் அவர்களின் பணிகளை நினைவூட்டி தமக்கு தமிழுணர்வு ஏற்பட்டதற்கும், இலக்கிய ஆர்வம் ஏற்பட்டதற்கும், தந்தை பெரியார் மீதும் திராவிடர் இயக்கத்தின் மீதும் இருந்த ஈடுபாடு உறுதிப்பட்டதற்கும் புலவர் நன்னன் அவர்களே காரணம் என்றுரைத்தார். மேலும்  தந்தை பெரியார் நூற்றாண்டு விழா அரசின் சார்பில் நடைபெற்றபோது அய்யா நன்னன் அவர்கள் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராக இருந்து ஆற்றிய பணிகளை நினைவு கூர்ந்தார். அவரைத் தொடர்ந்து நன்னன்குடி சார்பில் அவ்வை அவர்கள் உரையாற்றினர். அவரது உரையில் நட்பிற்கு இலக்கணமாய் திகழ்ந்த இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் மற்றும் புலவர் நன்னன் ஆகியோரின் தொடர்புகளை எடுத்துரைத்தார். ரைத் தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினரும், திமுக செய்தித் தொடர்பாளருமான டி.கே.எஸ். இளங்கோவன் உரையாற்றினார். அவர் தமது உரையில், தாம் மாநிலக் கல்லூரியில் பயின்றபோது, பேராசிரியராகப் பணியாற்றிய நன்னன் அவர்களின் கற்பித்தல் சிறப்பு பற்றி பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.  இளமைக் காலம் முதலே அவருக்கு இருந்த சமூகப்பற்றையும், எம்.என்.ராய் அவர்களின் 'ராடிகல் டெமக்ரடிக்' கட்சியில் பிடிப்புக் கொண்டிருந்ததையும், பின்னர் திராவிடர் இயக்கத்தில் ஈடுபாடு ஏற்பட்டதையும் விளக்கி, தொடர்ந்து கலைஞர் அவர்களுக்கும், பேராசிரியர் நன்னன் அவர் களுக்கும் இருந்த நட்புறவு பற்றிய ஏராளமான தகவல் களைப் பகிர்ந்து கொண்டார். மாணவர்களைத் திராவிட இயக்கத்தின் பால் ஈர்த்ததில் பேராசிரியர் நன்னன் அவர்களின் பணியை எடுத்துரைத்தார்.


தமிழர் தலைவர் தலைமையுரை
நிறைவாகத் தலைமையுரையாற்றிய தமிழர் தலைவர் அவர்கள், மானமிகு புலவர் நன்னன் அவர்கள் தன்னைச் செதுக்கிக் கொள்ள மட்டுமல்ல... நம்மையெல்லாம் உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் பெரியார் என்ற பகுத்தறிவு உளியைத் தான் பயன்படுத்தினார்கள். அந்த நெறியை உலகெங்கும் பரப்புவது தான் இந் நினைவு கூரலின் மூலம் நாம் உறுதிகொள்ள வேண்டிய ஒன்று. உலகமெல்லாம் பெரியார் கொள்கை ஆள வேண்டும் என்பதற்காக உழைக்க வேண்டும். உலகமெல்லாம் அது தேவைப்படுகிறது.
அலாவுதீனின் அற்புத விளக்கு என்று சொல்லி, லண்டனில் படித்து வந்தவரைக் கூட ஏமாற்ற முடியும் என்றால், இந்தப் பகுத்தறிவுப் பிரச்சாரத்தின் தேவை பாமர மக்களிடம் மட்டுமல்ல, படித்தவர் மத்தியிலும் தேவை என்பதைத் தான் அச் செய்தி அண்மையில் நமக்கு உணர்த்தியது. அத்தகைய பணியைத் தான் பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவராக இருந்த நேரத்திலும் எப்போதும் நன்னன் அவர்கள் செய்தார்கள்.


பெரியாரின் மாணவர்கள் நாங்கள் - அன்றும் இன்றும் என்றும்!


ஈரோட்டில் பெரியார் அவர்களே நேரடியாக நடத்திய பயிற்சிப் பட்டறைகளில் பயிற்சி பெறக் கூடிய வாய்ப்பைப் பெற்றவர்கள் கலைஞர், நாவலர், பேராசிரியர், நன்னன் மற்றும் எங்களைப் போன்றவர்கள். அந்தப் பயிற்சிக்குப் பின்னால், ஊர் ஊராகச் சென்று பிரச்சாரப் பணியில் ஈடுபட எங்களை அனுப்பிவைப்பார்கள். அந்த வாய்ப்பையெல்லாம் பெற்றவர்கள் நாங்கள்.


திராவிட இயக்கத்தினுடைய நூற்றாண்டு விழாவை யொட்டி, கலைஞர் எங்களையெல்லாம் அழைத்து கலைஞர் தொலைக்காட்சியில் திராவிட இயக்க வர லாற்றைப் பற்றி தொடர் பொழிவு நிகழ்த்தச் சொன்னார்கள். நூற்றாண்டை 12-இல் தொடங்குவதா? 16-இலிருந்து தொடங்குவதா என்று யோசித்தபோது, பிரச்சாரத்திற்காகத் தானே - அதை எப்போதும் செய்யலாம் என்று உடனடி யாகத் தொடங்கிவிட்டோம். அதில் புலவர் மா.நன்னன் அவர்கள் ஆற்றிய உரைகளையெல்லாம் தொகுத்து திராவிட இயக்கம் நூறு என்ற தலைப்பில் புத்தகமாக ஆக்கியிருக்கிறார்கள். இன்றைக்குத் திராவிட இயக்கம் தமிழுக்கு என்ன செய் திருக்கிறது என்றெல்லாம் கேட்பவர்கள் இருக்கிறார்களே? அவர்களுக்கெல்லாம் அன்றைக்கே உரிய பதிலைத் தந்திருக்கிறார்கள். திராவிட இயக்கம் தமிழுக்கு என்ன செய்திருக்கிறது என்று கேட்கிற அளவுக்கு அவர்களுக்கு அறியாமை முதிர்ந்திருக்கிறது. என்று தன்னுடைய முத்திரையோடு தொடங்கி, விளக்கியிருக்கிறார்கள்.  தமிழைக் காத்தது திராவிடர் இயக்கம். மறைமலையடிகள் தொடங்கிய தனித் தமிழ் இயக்கத்துக்குப் பாதுகாப்பாக இருந்தது திராவிடர் இயக்கம். அவர் திராவிடர் இயக்க ஆதரவாளர். தமிழ் ஆதரவு என்றாலே, அதற்கு ஆரிய எதிர்ப்பு என்று தான் அந்தக் காலத்திலே பொருள் என்று அதிலே எடுத்து விளக்குகிறார்கள்.


தமிழுக்கு முக்கியத்துவம் உண்டா?
இன்றைக்குத் தமிழுக்கு முக்கியத்துவம் உண்டா? சமஸ்கிருதத்திற்குத் தரப்படுகிற முக்கியத்துவத்தைத் தமிழுக்குத் தருகிறார்களா? இரண்டொரு நாள்களுக்கு முன்னால் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேட்கிறார்கள். அகழாய்வு நடக்கின்ற இடங்களிலெல்லாம் தமிழ்ச் சான்றுகள் கிடைக்கின்றனவே, தமிழ் நெட்டெழுத்துகள் கிடைக்கின்றன. தொல்லியல் துறையில் தமிழ் அறிஞர் களுக்கு இடம்வேண்டாமா? சமஸ்கிருதத்திற்குத் தானே முக்கியத்துவம் தருகிறீர்கள் என்று நீதிபதிகள் கேட் கிறார்கள். திராவிட இயக்கம் வீதிமன்றங்களில் கேட்ட கேள்விகள், இன்று சமூகநீதிக் கேள்விகளாக நீதிமன்றத் திலே நீதிபதிகளால் கேட்கப்படுகின்றன. இந்த உணர்வைக் கொடுத்தது திராவிடர் இயக்கம் அல்லவா?
அன்றைக்கு ஊட்டப்பட்ட உணர்வு அது. திராவிட மாணவர் கழகத்திலே அவர்கள் இருக்கின்ற போது எடுத்த புகைப்படத்திற்குக் 'கடற்பாறைகள்' என்று தலைப்பிட் டிருக்கிறார். திராவிட மாணவர் கழகம் எண்ணிக்கையிலே குறைவானவர்களாக இருக்கலாம்; ஆனால் எண்ண பலத்திலே நிறைவானர்கள். ஏனென்றால், கடற்பாறை களைப் போல உறுதியானவர்கள். அசைத்துப் பார்க்கலாம் என்று நினைக்கிறார்கள். எத்தனை அலைகள் வந்தாலும், அவற்றையெல்லாம் கடந்து நிற்கும் உறுதிபடைத்தவர்கள். கடற்பாறைகளை வேல்களால் துளைத்துவிட முடியாது. வேல் முறியுமே தவிர, வேறில்லை.
மொழி என்பது பண்பாட்டின் உறைவிடம். அண்மை யில் வரலாற்று ஆய்வாளர் ரோமிலா தாப்பர் அவர்களின் டிசண்ட் (ஞிவீமீஸீ) நூல் வெளிவந்திருக்கிறது. மொழியை வைத்துத் தான் இந் நாட்டில் நம்மைப் பிரித்தார்கள் என்பதை பல்வேறு சான்றாவணங்களோடு அந்த அம்மையார் விளக்குகிறார். ரிக் வேதத்தில் இரண்டு பிரிவுகளைத் தான் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். ஒன்று ஆரியர்; இன்னொன்று தஸ்யூக்கள். ஆரியர்கள் என்றாலே மரியாதைக்குரியவர்கள் என்று பல இடங்களிலே  மாக்ஸ் முல்லர் போன்றவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். எப்படியவர்கள் மரியாதைக்குரியவர்கள் என்றால், சமஸ்கிருதத்தைச் சரியாகப் பேசுகிறவர்கள் என்ற காரணத்தினாலே அவர்கள் மரியாதைக்குரியவர்கள். ஆர்யா என்ற இந்தச் சொல்லிலிருந்துதான் ஆரியர் என்ற வார்த்தையை மாக்ஸ்முல்லர் கண்டுபிடித்துப் பயன்படுத் துகிறார். எனவே, சமஸ்கிருதத்தைச் சரியாக உச்சரித்துப் பேசியவர்களும், வேதமதத்தைப் பின்பற்றியவர்களும் தான் அந்தக் காலத்தில் உயர்ந்தோராகக் கருதப்பட்டனர். அவர்கள் தான் ஆரியர்கள். மற்றவர்கள் தஸ்யூக்கள்.
The Rigveda refers frequently to two distinct categories of people, the arya varna and the dasa varna. The arya, from which Max Mueller invented the word ‘Aryan’, were those that were respected as persons of status, who spoke Sanskrit correctly, and followed the Vedic religion. Language was the key to identity and it incorporated status. என்று எழுதுகிறார்.


போராட்டக் களம் காத்திருக்கிறது
எனவே, மொழி வெறும் மொழியாகப் பயன்பட வில்லை. அதுதான் நமது பண்பாட்டின் அடிப்படையாக இருந்திருக்கிறது. இன்றைக்கும் என்ன நிலைமை? தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில், வழக் குரைஞர் ஒருவர் தகவல் கேட்கிறார். அவர் திராவிடர் கழகத்துக்காரரா? கருப்புச்சட்டைக்காரரா என்பது வேறு விசயம். ஆனால், ஆங்கிலத்திலே அவர் கடிதமெழுதித் தகவல் கேட்கிறார். எந்த மொழியிலே கடிதம் எழுதித் தகவல் கேட்கிறார்களோ, அந்த மொழியிலே தகவல் தருவதுதானே நியாயம். ஆனால் முழுக்க முழுக்க இந்தியிலே பதில் வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம், விமான நிலையத்தில் பரிசோதிக்கிற  உங்களுக்கு இந்தி மொழி தெரியாதா? என்று கேட்கிறார் என்றால், "இந்தியைத் திணிக்கிறோம், உங்களால் என்ன செய்ய முடியும் பாருங்கள்" என்று சவால் விடுகிறார்கள் என்றால், இந்திக்குத் தமிழ்நாட்டில் ஆதிக்கமாம்; நீங்கள் எல்லோரும் வாருங்கள் நாட்டினரே! என்ற அழைப்புக் கேற்ப, எதற்காக நன்னன் போன்றவர்கள் எழுதினார்களோ, பேசினார்களோ அதற்காக இன்றைய இளைஞர்கள் போராட வேண்டிய அவசியம் இருக்கிறது. வாருங்கள் இளைஞர்களே, போராட்டக் களம் காத்திருக்கிறது. நன்னன் போன்றவர்களைப் படிப்பதோடு மட்டுமல்ல; அவர்கள் எழுதியதைப் பிடித்துக் கொண்டு, பெரியாரின் கொள்கை வெல்ல களத்திற்கு வாருங்கள்! என்று அழைப்பு விடுத்து உரையாற்றினார்.


நிறைவாக, நன்னன்குடி சார்பில் அம்மையார் அவ்வை நன்றி கூறினார். நன்னன் குடியினரும், திராவிடர் இயக்கப் பற்றாளர்களும், தமிழின உணர்வாளர்களும் ஏராளமாக இந்நிகழ்வில் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment