நவ.8 உத்தமபாளையம் காளாத்தீசுவரர் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த அடையாளம் தெரியாத நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேருந்து நிலையம் அருகே 800 ஆண்டு பழைமையான காளாத்தீசுவரர், ஞானாம் பிகை கோவில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக் கோவிலில் முன்னாள் ராணுவ வீரர்கள் 3 பேர் சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர கோவிலை சுற்றி கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கோவிலின் பின்பக்க சுற்றுச்சுவர் வழியாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஏறி குதித்து உள்ளே புகுந்தார். பின்னர் அந்த நபர், கோவிலின் கடவுளர் சன்னதி முன்பு இருந்த 2 உண்டியல்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றார். இதற்கிடையே அதிகாலை வழக்கம்போல் கோவில் நடை திறக்கப்பட்டு, அர்ச்சகர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் வந்தனர். அப்போது சன்னதி முன்பு இருந்த 2 உண்டியல்கள் உடைக்கப்பட்டு கிடந்தன.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கோவில் பணியாளர்கள், இதுகுறித்து உடனடியாக உத்தமபாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கோவிலில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை காவல்துறை ஆய்வு செய்தனர். அதில், முகத்தில் துணியை கட்டிக்கொண்டு நபர் ஒருவர் கம்பியுடன் கோவிலின் பின்பக்க வழியாக சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்த காட்சிகள் பதிவாகி இருந்தன. இதனை பதிவு செய்து கொண்ட காவல்துறை இந்த கொள்ளை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment