எம்பவர் அறக்கட்டளை மற்றும் சமூக நீதி அகாடமி சார்பில் காணொலியில் சமூக நீதி கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 9, 2020

எம்பவர் அறக்கட்டளை மற்றும் சமூக நீதி அகாடமி சார்பில் காணொலியில் சமூக நீதி கருத்தரங்கம்

தமிழர் தலைவர் உரை



சென்னை,நவ.9, எம்பவர் அறக் கட்டளை மற்றும் யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள சமூகநீதி அகாடமி சார்பில் முதல் கருத்தரங்கக் கூட்டம் 8.11.2020 அன்று காலை நடைபெற்றது.


திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும், மூத்த வழக்குரைஞரும்  மாநிலங் களவை உறுப்பினருமான பு.வில்சன் அவர்களும்  ‘இடஒதுக்கீடு கொள் கைக்கான சவால்கள் மற்றும் முன் னோக்கி செல்லும் பாதைகள்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.


அகில இந்திய யூனியன் வங்கி ஓபிசி பணியாளர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.ரவிக்குமார் அனைவரையும் வர வேற்றுப் பேசினார். நல சங்கத்தின் தலைவர் கோ.கருணாநிதி தலைமை ஏற்று சமூக நீதி அகாடமியின் செயல்பாடுகள், நோக்கம் குறித்து விவரித்தார்.


1885-ஆம் ஆண்டு முதல் சமூக நீதியின் வரலாறு, முதல் அரசமைப்பு திருத்தம், மருத்துவ சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் தொடர்பான விஷயங்கள் பற்றிய விரிவான விவரங்களை பு.வில்சன், எம்.பி. விரிவாக எடுத்துரைத்தார்.


மரியாதைக்குரிய ஆசிரியர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் தனது உரையில், மண்டல் குழு அறிக்கையின் பரிந்துரைகளான நீதித்துறை,  தனியார் துறை, பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு மற்றும் கிரீமிலேயரை ஒழித்தல் ஆகியவை நம்முன் உள்ள சவால்கள் என்பதைத் தெளிவாக எடுத்துரைத்தார். ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக் கெடுப்பை 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது நடத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். சமூக நீதியைப் பெறுவதற்கு அதிகார வர்க்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பதற்காக, பொதுக் கருத்தை உருவாக்கி நாடு முழுவதும் தொடர்ந்து செய் தியை பரப்புமாறு ஆசிரியர் அறிவுறுத்தினார்.


இரண்டு மணி நேரம் நடைபெற்ற கருத்தரங்கில் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு, அகில இந்திய யூனியன் வங்கி ஓபிசி நல சங்கம் மற்றும் மாநில சங்கங்களின் பொறுப்பாளர்கள், அசாம், மேற்கு வங்கம், ஒடிசா, பீகார், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், டில்லி, மும்பை, பூனே, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், கேரளம் என இந்தியா முழுவதிலும் இருந்து கிட்டத்தட்ட 100 உறுப்பினர்கள் ஜூம் செயலி மூலம் நடைபெற்ற காணொளி கூட்டத்தில் பங்கேற்றனர், மேலும் முக நூல் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்வில் 450-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். எம்பவர் அறக்கட்டளையின் அறங் காவலர் ஞா. மலர்கோடி நன்றி கூறினார்.


No comments:

Post a Comment