வீர வணக்கம் எங்கள் ஆசானே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 24, 2020

வீர வணக்கம் எங்கள் ஆசானே!

எங்கள் வீட்டுத்

துடைப்பம் கூட

சாஸ்திரம் பேசும்!

எப்படி அய்யா

எங்கள் பாட்டனையும் கூட

பகுத்தறிவு பேச வைத்தாய்?

 

எங்கள் வீட்டுச் சுவர்களில்

இலவசமாகக் குடியிருக்கும்

பல்லிகளுக்கும் கூட

பஞ்சாங்கம் உண்டு - அதன்

சத்தம் கூட

எங்கள் மூளைக் கூட்டில்

அதிர்ச்சி ஏப்பத்தை

ஏற்படுத்தும்;

பல்லி எந்தப்

பள்ளியில் படித்தது?

பல்லி என்ன

பன்மொழிப் புலவரா?

என்று

பேரப் பிள்ளையையும்

எப்படி அய்யா

பேச வைத்தாய்?

 

மொட்டைப் பாப்பாத்தியை

இப்போதெல்லாம்

பார்க்க முடிகிறதா?

அக்கிரகாரத்தின்

இருட்டுக்குள்ளும் - அறிவு

அதிரடிப் படையை

எப்படி அய்யா

அனுப்பி வைத்தாய்?

 

பூனை குறுக்கே போனால்

போச்சு

எல்லாம் போச்சென்று

புலம்பி சாகும்

எங்கள் மனசை - புது

புறநானூற்றுப்

புலி மகனாய்ப்

புதுப்பித்த

மர்மம் என்ன?

சொல்லுங்கள் அய்யா!

 

ஆம் நீ

கண்டு பிடித்தது

புதிய ரசாயனம்!

பகுத்தறிவு என்னும்

சோதனைச் சாலையில்

உருக்கிய காரணம்!

வேலை செய்ய

ஆரம்பித்து விட்டது அய்யா

உங்கள் புதுரசாயனம்!

சந்தேகப்படு

எதையும் என்றாய்!

சந்தேகப் புலியாய்

எங்களை

மாற்றிவிட்டாய்!

 

கல்விக்கண்

திறந்தது¢

உத்தியோகக்

கதவுகளும் திறந்தன!

கர்ப்பக் கிரகமும்

திறந்தது;

 

பஞ்சம சூத்திரத்

தலைகளும் நிமிர்ந்தன!

 

மானமிகு மகளிராய்

எழுந்தனர்!

 

உன் நினைவென்னும்

நீர் வீழ்ச்சியில்

உருவாகும் மின்சாரம்

எங்கும் வெளிச்ச

ரேகைகள்!

அய்யா உங்கள்

சகாப்தம்

துவங்கியது

துவங்கியது!

எங்கள் கையும்

ஓங்கியது

ஓங்கியது!

இனி இங்கு

வீழ்ச்சியில்லை!

வெல்லும் திராவிடம்!

வீர வணக்கம்!

எங்கள் ஆசானே!

- கவிஞர் கலி.பூங்குன்றன்


No comments:

Post a Comment