பிரபல ஊடகங்கள் மூலம் தொடர்ந்து போலிச்செய்திகளை வெளியிட்ட மத்திய பிஜேபி அரசின் பொய்ப் பிரச்சாரங்கள் அம்பலமாகிக் கொண்டு வருகின்றன.
இறந்து போன பேராசிரியர் மற்றும் செயலற்ற அமைப்புகள் பல, பிரதமர் மோடியையும் பா.ஜ.க. அரசையும் புகழும் மிகப்பெரிய பொய் பிரச்சார வலையம் ஒன்று வெளிநாட்டில் சிக்கியது.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸை தளமாகக் கொண்ட அய்ரோப்பிய யூனியனின் 'டிஸ்இன்போலேப்' என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறித்து விரிவாக கூறிப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளாக 750 க்கும் மேற்பட்ட போலி ஊடகங்கள், உலகளாவிய பொய் மற்றும் தவறான தகவல் பிரச்சாரத்தில், பயன்படுத்தப்பட்டிருப்பது இந்த விசாரணையில் தெரிய வந்துள்ளது. 2006ஆம் ஆண்டு தனது 92 வயதில் இறந்து போன பேராசிரியரும், பன்னாட்டு மனித உரிமைச் சட்டத்தின் நிறுவனத் தந்தையர்களில் ஒருவராகவும் கருதப்பட்ட லூயிஸ் ஷோன் என்பவரது பெயரும் இந்தப் போலிப் பிரச்சாரத்தில் பயன்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போலி செய்தி நிறுவனங்கள் என்று கண்டறியப்பட்டவற்றில் சில இந்திய செய்தி நிறுவனமான ஏ.என்.அய். (ஏசியா நியூஸ் இன்டர்நேஷனல்) மற்றும் சிறீவஸ்தவா குழுமம் ஆகியவை பா.ஜ.க. புகழ்பாடும் இந்த பொய் பிரச்சாரத்தில் முக்கிய முகவர்களாக செயல்பட்டுள்ளன.
2019ஆம் ஆண்டு காஷ்மீரில் ஆய்வு செய்ய வலதுசாரி சிந்தனை கொண்ட, அய்ரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துவந்த போதுதான் சிறீவஸ்தவா குழும செயல்பாடுகள் இந்தியாவில் முதல்முறையாக வெளிச்சத்திற்கு வந்தன.
உலகின் 116 நாடுகளில் செயல்படும் 400-க்கும் மேற்பட்ட, சிறீவஸ்தவா குழும போலி வலைத்தளங்களில் பதியப்படும், இந்திய ஆதரவு நிலை மற்றும் சீனா, பாகிஸ்தானுக்கு எதிரான பிரச்சாரங்களைக் கொண்டு, அய்ரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களை எப்படி இந்தியாவுக்கு அழைத்துவந்தது என்பதை டிஸ்இன்போலேப் அறிக்கை விவரிக்கிறது.
சிறீவஸ்தவா குழுமம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் போலியான செய்தி வலைத் தளங்களில் பதியப்படும் இந்த செய்திகளை; எந்த ஒரு ஆய்வையும் மேற்கொள்ளாமல், அய்ரோப்பிய செய்தி நிறுவனங்களில் வந்த செய்தி என்று ஏ.என்.அய். செய்தி நிறு வனம் வெளியிட்டுவந்தது. இவ்வாறு வெளியான ஏ.என்.அய். செய்தியை மேற்கோள் காட்டி இந்திய செய்தி நிறுவனங்கள் பலவும் அந்த செய்தியை அப்படியே பதிவிட்டன.
இந்த மொத்த நடவடிக்கையும் இந்திய உளவுத்துறையின் மேற்பார்வையிலேயே நடைபெற்றிருப்பதாக அறிக்கை வெளியிட்டிருக்கும் லெஸ் ஜோர்ஸ், இந்த செய்திகளின் அடிப்படையிலேயே அய்ரோப்பிய நாடாளுமன்ற குழு இந்தியா வந்ததாக தெரிவித்துள்ளது.
மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அறிக்கைகளை பெறுவதற்கு அய்ரோப்பிய தலைவர்களை இந்த குழுவினர் அடிக்கடி சந்தித்திருக்கிறார்கள் என்று டிஸ்இன்போலேப் கூறுகிறது.
பிஜேபி அரசின் சாதனைகள் என்று இஷ்டத்துக்குப் பரப்பி வருகிறது.
20 ஆம் நூற்றாண்டின் முன்னணி பன்னாட்டு சட்ட அறிஞர்களில் ஒருவரும், 39 ஆண்டுகளாக ஹார்வர்ட் சட்ட ஆசிரிய உறுப்பினருமான - லூயிஸ் ஷோன் என்ற பெயரில் 2007ஆம் ஆண்டு அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் சி.எஸ்.ஓ.பி. சார்பாக பங்கேற்று இந்தியாவிற்கு ஆதரவாக பேசியதாகவும் மேலும் 2011 ஆம் ஆண்டு வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியதாகவும் கூறியிருந்தது.
உண்மையில், பேராசிரியர் லூயிஸ் ஷோன் 2006ஆம் ஆண்டே தனது 92ஆவது வயதில் இறந்து விட்டார் என்ற அதிர்ச்சி தகவலை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அமைதி குறித்து ஆய்வு நடத்தும் ஆணையமான சி.எஸ்.ஓ.பி. என்ற மேற்கூறிய அமைப்பு 1930ஆம் ஆண்டே தொடங்கப்பட்டு 1975ஆம் ஆண்டு அய்.நா.வின் அங்கீகாரம் பெற்றது. இருந்த போதும், 1970 க்கு பிறகு சி.எஸ்.ஓ.பி. ஒரு செயலற்ற அமைப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோல், இறந்தவர்களின் பெயர்களிலும் செயலற்ற அமைப்புகளின் பெயர்களிலும் தவறான மற்றும் பொய் பிரச்சாரம் செய்வதையே நோக்கமாக கொண்டு செயல்படும் சிறிவஸ்தவா குழுமம் 2005 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்பட்டது என்பதும், தற்போதுவரை 400 க்கும் மேற்பட்ட போலி இணையதளங்கள் சிறீவஸ்தவா மற்றும் அவரது நிறுவனங்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருவது அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக உள்ளது.
போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள் என்றுதான் திருப்பித் திருப்பி சொல்ல வேண்டியுள்ளது.
No comments:
Post a Comment