நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· மக்களின் நலனை மேம்படுத்துவதற்கான அரசின் திட்டங்கள் அனைத்தும் புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியால் நிராகரிக்கப்படுகின்றன, நிர்வாகத்தில் அவர் தலையிடுவதைத் தடுக்கும் நீதிமன்றத் தீர்ப்பு உள்ளது. இலவச அரிசி திட்டம், மாணவர்களுக்கு உதவி, மீனவர்களுக்கு மேம்பாட்டுத் திட்டங்கள், இளைஞர்களுக்கான வேலைகள் போன்ற நலத்திட்டங்கள் ஆளுநரால் தடுக்கப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், ஆளுநர் கிரண் பேடியை பதவியில் இருந்து நீக்கிட
வலியுறுத்தி ஜனவரி 8-ஆம் தேதி முதல் ஆளுநர் மாளிகை முன்பு அனைத்துக் கட்சி ஆதரவுடன் காலவரையற்றப் போராட்டம் நடைபெறும் என புதுச்சேரி முதல்வர்
வே.நாராயணசாமி அறிவித்துள்ளார்.
· மோடி அரசு புதிய விவசாய சட்டங்கள் இயற்றி விவசாயிகளை இருளில் தள்ளுகிறது. தேசப்பற்று என்பது நாக்பூரில் இருந்து அரை டிரவுசர் போட்டுக் கொண்டு பேசுவதில் இல்லை என்று ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
· இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர்
பி.ஆர்.அம்பேத்கர் தனது அய்ந்து லட்சம் தொண்டர்களுடன் நாக்பூரில் புத்த நெறியை ஏற்றுக்கொண்டதன் 65 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், கருநாடகாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அம்பேத்கரிஸ்டுகள் 2021 அக்டோபர்
14 ஆம் தேதி ‘தம்மத்தை’ ஏற்றுக்கொள்வார்கள் என கருநாடக முன்னாள்
துணை முதல்வர் டாக்டர் ஜி.பரமேஷ்வரா அறிவித்துள்ளார்.
தி
டெலிகிராப்:
· கடும் குளிரையும், மழையின் தாக்கத்தையும் தாண்டி விவசாயிகள் டில்லி அருகே துணிவுடன் மோடி அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருகிறார்கள். மோடி அரசோ, விவசாயிகள் போராட்டத்தைத் தொடர முடியாமல் சோர்ந்து போய், வெளியேறிவிடுவார்கள் என்ற எண்ணத்தில் உள்ளது. பீகார் மாநிலத்தில் பிரிட்டிஷாரை எதிர்த்து சம்பரன் பகுதியில் மக்கள் போராடி உயிர் நீத்ததுபோல் டில்லி விவசாயிகள் நிலையும் ஆகிவிடக் கூடாது என காங்கிரஸ் தலைவர்
ராகுல் காந்தி அரசை எச்சரித்துள்ளார்.
· மகாராட்டிராவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள், மாணவர்களும், பல்வேறு தரப்பு மக்களும் சேர்ந்து, நாக்பூரிலிருந்து ஜனவரி 3-ஆம் தேதி ஞாயிறு இரவு டில்லிக்கு மோடி அரசின் வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக புறப்பட்டனர். கிழக்கு மகாராட்டிரா மற்றும் மராத்வாடா பகுதிகளைச் சேர்ந்த வேளாண் கடன் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் மனைவிகளும் இந்த “டெல்லி சலோ” வாகன அணிவகுப்பில் சேர்ந்துள்ளனர்.
டைம்ஸ்
ஆப் இந்தியா:
· விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் சட்டத் திருத்தத்தை அவசரச் சட்டமாக மத்திய அரசு இயற்றிட வேண்டும். இது குறித்து 2018இல் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட தனியார் உறுப்பினரின் மசோதாவை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்து குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும் என விவசாய அமைப்புகள்
மத்திய அரசை வலியுறுத்துகின்றன..
- குடந்தை
கருணா
4.1.2021
No comments:
Post a Comment