ஆயிரம் பாவேந்தர்கள் வரலாம்; கவிச்சக்கரவர்த்திகள் தோன்றலாம்; ஆனால், ஒரே ஒரு புரட்சிக்கவிஞர்தான் வர முடியும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 6, 2021

ஆயிரம் பாவேந்தர்கள் வரலாம்; கவிச்சக்கரவர்த்திகள் தோன்றலாம்; ஆனால், ஒரே ஒரு புரட்சிக்கவிஞர்தான் வர முடியும்!

பேருரையல்ல - எனக்குக் கிடைத்த பேறான ஓர் உரை!

 புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழாவில்  தமிழர் தலைவர் சிறப்புரை

சென்னை, மே.6 ஆயிரம் பாவேந்தர்கள் வரலாம்; கவிச்சக்கரவர்த்திகள் தோன்றலாம்; ஆனால், ஒரே ஒரு புரட்சிக்கவிஞர்தான் வர முடியும்! இது பேருரையல்ல - எனக்குக் கிடைத்த பேறான ஓர் உரை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 131 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா!

கடந்த 29.4.2021 மாலை 7 மணியளவில் கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம், கருநாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம், மும்பை இலெமுரியா அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் இணைந்து புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 131 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழாவினை ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி தொடங்கி, அவரின் பிறந்த நாளான 29.4.2021 (10 நாள்கள்)வரை ஒவ்வொரு நாளும் மாலை 7 மணிமுதல் 8.30 மணிவரை காணொலி மூலம் கருத்தரங்கை நடத்தி வந்தனர். நிறைவு நாளான 29.4.2021 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

நம்முடைய ஒப்பற்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களுடைய 131 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா என்ற இந்த அருமையான அறிவுத் திருவிழாவில் - உங்களையெல்லாம் சந்திக்கக் கூடிய ஓர் அரிய வாய்ப்பினை ஏற்படுத்தியமைக்கு முழுக் காரணமாக இருக்கக்கூடிய நெறியாளர் - கருநாடக மாநில பத்திரிகையாளர் அமைப்பின் தனி பெரு மையாளர் அருமைத் தோழர் மானமிகு முத்துமணி நன்னன் அவர்களே,

இவ்விழாவிற்குத் தலைமையேற்று 10 நாள்கள் புரட்சிக்கவிஞர் அவர்களுடைய பெருமைகளை யெல்லாம், அவர் ஏன் எப்பொழுதும் தேவைப்படு கிறார் என்கிற அருமைகளையெல்லாம் சிறப்பாக எடுத்து வைப்பதற்கு முழுக் காரணமாக அமைந்து, இன்றைய விழா நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றி ருக்கக்கூடிய தமிழ் இலெமுரியா இதழின் நிறுவன ஆசிரியரும், இன உணர்வாளரும், மொழிப்பற் றாளரும் தீவிரமான ஆய்வாளருமான அன்பிற்கும், பண்பிற்கும் உரிய அருமைச் சகோதரர் குமணராசன் அவர்களே,

இந்நிகழ்வில் வரவேற்புரையை சிறப்பாக ஆற்றி, ஆழமான கருத்துகளை எடுத்து வைத்த புதுக் கோட்டை அருமைத் தோழர் கீதா அம்மையார் அவர்களே,

அதுபோலவே, சிறப்பான வகையில், இந்நிகழ்வின் இறுதியில் நன்றியுரை கூறவிருக்கக்கூடிய கருநாடக தலைமை ஆசிரியர்கள், உயர்நிலை - மேல்நிலைப் பள்ளி  ஆசிரியர் குழுவின் பொறுப்பாளரும், கருநாடக மாநில திராவிடர் கழகப் பொறுப்பாளருமான அன்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரிய செயல்வீரர் மானமிகு முல்லைக்கோ அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொண்டிருக்கின்ற அந்த அமைப்பினைச் சார்ந்த அருமைப் பெரியோர் களே, சான்றோர்களே, உலகம் முழுவதும் இருந்து இந்நிகழ்வினை கேட்டும், பார்த்தும் கொண்டிருக் கக்கூடிய அருமை நண்பர்களே, அவையோர்களே, தாய்மார்களே, தோழர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித் துக் கொள்கிறேன்.

புரட்சிக்கவிஞர் அவர்களைப்பற்றி ஒரு செய்தி - தந்தை பெரியார், பாரதிதாசன் அவர்களை, புரட்சிக் கவிஞர் என்று அழைத்தார். தொடர்ந்து நாமும், புரட்சிக்கவிஞர் என்றுதான் தொடக்கத்தில் எல்லாம் சொன்னோம்.

'பாவேந்தர்' பாரதிதாசன் என்று ஓர் அடை மொழியை கொடுத்து, இப்பொழுது அதிகமான அளவிற்கு அதைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

 ஆயிரம் பாவேந்தர்கள் வரலாம்; கவிச்சக்கரவர்த்திகள் தோன்றலாம்;

ஆனால், ஒரே ஒரு புரட்சிக்கவிஞர்தான் வர முடியும்!

அன்பான, உரிமையுடன் ஒரு வேண்டுகோள் என்னவென்றால், ஆயிரம் பாவேந்தர்கள் வரலாம்; கவிச்சக்கரவர்த்திகள் தோன்றலாம்; ஆனால், ஒரே ஒரு புரட்சிக்கவிஞர்தான் வர முடியும் - வந்திருக் கிறார். அவர் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை.

புரட்சி என்று சொல்லுகிற நேரத்தில், அந்தப் புரட்சி அறிவுப் புரட்சி. அறிவை ஆயுதமாகக் கொண் டிருக்கின்ற ஒரு புரட்சி.

பெரியாரின் ஆயுதக் கிடங்கில் உருவானவர்கள் பேரறிஞர் அண்ணா; புரட்சிக்கவிஞர் போன்றவர்கள்

தந்தை பெரியார், சமுதாயப் புரட்சியில், எப்படிப் பட்ட பேராயுதமோ - போராயுதமோ - அதேபோல, அந்த ஆயுதக் கிடங்களிலே உருவானவர்கள் பேரறி ஞர் அண்ணா போன்றவர்கள்; புரட்சிக்கவிஞர் போன்றவர்கள்.

புரட்சிக்கவிஞருடைய அந்த வீச்சு, எதிரிகளை யெல்லாம் குலை நடுங்கச் செய்யக்கூடிய அளவிற்கு இருக்கும்.

அந்தப் பேராயுதங்களைக் கண்டு இன்றைக்கும் கூட பலர் அஞ்சுகிறார்கள். இன்றைய என்னுடைய பொழிவைப் பொறுத்தவரையில், கடந்த 10 நாள்களாக, புரட்சிக்கவிஞருடைய கவிதைகளுடைய சிறப்பு, மாண்பு,  அதன் ஆழங்கள், நயங்கள் இவை பற்றி தகுதிமிக்க சான்றோர்கள், பெருமக்கள், அறிஞர்கள் இங்கே எடுத்துரைத்திருக்கிறார்கள்.

சிறப்பாக, குறிப்பாக நம்முடைய தலைவர் அவர்களும், வரவேற்புரையாற்றிய அருமைத் தோழர் கீதா அம்மையார் அவர்களும் சொல்லும்பொழுது, ஒரு பேருரையாற்றுவார் என்று சொன்னார்கள்.

பேருரையல்ல - எனக்குக் கிடைத்த பேறான ஓர் உரை!

நான் ஆற்றப் போவது, பேருரையல்ல - எனக்குக் கிடைத்த பேறான ஓர் உரையாகும்.

ஏனென்றால், அவர் சொன்னதைப்போல, புரட்சிக் கவிஞரை இன்றைக்கு சிலர் படித்துக் கொண்டிருக் கிறார்கள்; சிலர் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்; சிலர் நேசித்துக் கொண்டிருக்கிறார்கள். அதேநேரத் தில், நம்முடைய தோழர்கள் பலர், அவரைச் சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், எல்லாவற்றையும்விட, புரட்சிக்கவிஞ ரைப் பார்த்திருக்கிறோம் என்றால், பெருமை; அதைவிட, புரட்சிக்கவிஞரோடு பழகியிருக்கிறோம்; அவருக்குத் தொண்டு செய்தோம் என்றால், அதைவிடப் பெருமை. அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பில், புரட்சிக்கவிஞர் அவர்களை, பல கோணங்களில், பல நேரங்களில் பார்க்கக்கூடிய, பழகக்கூடிய, அவருடைய தொண்டை, ஆற்றலை உணரக்கூடிய அந்த சிம்ம கர்ஜனையை - அந்த இடி முழக்கத்தையெல்லாம் கேட்கக்கூடிய வாய்ப்பும் - அவருடைய அருகில் இருந்து - அவர் எப்படியெல்லாம், கொள்கை உணர்வோடும், வீர செறிவோடும் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் - அந்த மிடுக்கைப் பார்த்து இயங்கக்கூடிய அளவிற்கு அந்த வாய்ப்பும் பெற்ற - ஓர் இளைஞனாக அன் றைக்கு இருந்தவன், இன்றைக்கு அவரைப்பற்றி உரை யாற்றக்கூடிய வாய்ப்பைப் பெறுகிறேன் என்றால், அது பேருரையல்ல - பேறு பெற்ற உரையாகும்.

எனவே, அந்தப் பேறு பெற்ற உரையை ஆற்றுவதற்கான வாய்ப்பை நான் பெறுவதற்குக் காரணமான அருமை நண்பர்கள் முத்துமணி நன்னன் அவர்களுக்கும், குமணராசன் அவர்களுக்கும், கீதா அவர்களுக்கும், அருமைத் தோழர் முல்லைக்கோ அவர்களுக்கும், அமைப்பை உருவாக்கிக் கொண் டிருக்கின்ற தோழர்களுக்கும் என்னுடைய உளப் பூர்வமான நன்றியை முதற்கண் உரித்தாக்கிக் கொண்டு என்னுரையைத் தொடங்குகின்றேன்.

புரட்சிக்கவிஞர் என்ற சொற்றொடரையே பெரிதும் பயன்படுத்தவேண்டும் என்பதை நான் அடிக்கடி வற்புறுத்துகின்றவன்.

மற்றவர்கள் எட்ட முடியாத எல்லைக்குச் சென்று கொண்டிருக்கின்றன;

உயரத்திற்குப் போய்ச் சேர்ந்திருக்கின்றன

எனவே, என்னுடைய உரையில் பெரும் பாலும் புரட்சிக்கவிஞர் என்ற சொல்லாடல்தான் இடம்பெறும்.  அதைத் தவறாக யாரும் கருத வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், நான் தொடக்கத்திலேயே சுட்டிக்காட்டியதைப்போல, ஆயிரம் பாவேந்தர்கள் வரலாம் - ஆனால், ஒரே ஒரு புரட்சிக்கவிஞர்தான் இந்த உலகத் தில் கிடைத்தவர் என்ற அளவிலேதான், அவருடைய கருத்துகள் - மற்றவர்கள் எட்ட முடியாத எல்லைக்கு, உயரத்திற்குப் போய்ச் சேர்ந்திருக்கின்றன. மிகத் தேவையான ஒன்றை, துணிவாகச் சொல்லக்கூடிய அளவிற்கு இருந்த ஒருவர் என்ற பெருமை அவருக்கு என் றைக்கும் தனித்த முத்திரையைப் பதித்துக் கொண்டிருப்பதாகும்.

என்றைக்குமே அவர் கொள்கையை விட்டுக் கொடுத்ததில்லை

அவருடைய புகழ் என்றைக்கும் நிலைத்த புகழ். அவருடைய கொள்கைகளில் அவர் சமரசமே செய்துகொண்டதில்லை.  என்றைக்குமே அவர் கொள்கையை விட்டுக் கொடுத்து வாழ்ந்ததே இல்லை. அப்படிப்பட்ட அவரைப்பற்றி சொல்கின்ற நேரத்தில்,

இன உணர்வுமிக்க நம்முடைய தோழர்கள் இங்கே சுட்டிக்காட்டியதைப்போல, மற்றவர்களுக்குள்ள உணர்வு நமக்கு இல்லாத காரணத்தினால், நம்மில் இவ்வளவு பெரிய அளவிற்கு உயர்ந்தவர், இன் றைக்கு உலகளாவிய பெருமையைப் பெற முடிய வில்லை.

அந்தந்த மண்ணில் பிறந்தவர்களைத்தான் முதன்மைப்படுத்துவார்கள்

இங்கே நம்முடைய அருமைத் தோழர் குமண ராசன் அவர்கள், வங்காளத்தில் நடந்த ஒரு நிகழ்வைத் தன்னுடைய தலைமை உரையில் சுட்டிக்காட்டினார். மேற்கு வங்கத்தில் இருக்கின்றவர்கள் யாராக இருந் தாலும், இலக்கியமாக இருந்தாலும், அரசியலாக இருந் தாலும் அல்லது கலையாக இருந்தாலும், அந்த மண்ணில் பிறந்தவர்களைத்தான் முதன்மைப்படுத்துவார்கள்.

இரவீந்திரநாத் தாகூரைப்பற்றித்தான் பேசு வார்கள்; விவேகானந்தரைப்பற்றித்தான் பேசுவார் கள். அதற்குத்தான் முன்னுரிமை கொடுப்பார்கள். அது தவறு என்று நான் சொல்லமாட்டேன். அவர்களுடைய இன உணர்வு என்பது அது.

செய்யத் தவறிய நாம்தான் குற்றவாளி!

இரவீந்திரநாத் தாகூர் அவர்களுடைய கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, அன்றைக்கு மிகப் பெரிய அளவிற்கு முயற்சி எடுத்த காரணத்தினால், அவர் நோபல் பரிசு பெறக்கூடிய தகுதியுள்ளவரானார்.

அந்தத் தகுதி புரட்சிக்கவிஞர் அவர்களுக்கு வரும்படியாக நாம் செய்யத் தவறிவிட்டோம். அதற்கு நாம்தான் குற்றவாளி. நாம் என்று சொல்லும்பொழுது, பரவலான ஒரு செய்தி.

ஆங்கிலத்தில் அவருடைய கவிதைகள் மொழி பெயர்க்கப்பட்டு இருக்குமேயானால் அல்லது பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு, முழுமையாக ஆக்கப்பட்டு - நோபல் பரிசுக்குரிய குழுவிற்கு அனுப்பப்பட்டு இருக்குமேயானால், அந்தக் காலகட்டத்தில், மிகப்பெரிய அளவில், நோபல் பரிசுக்கு மேல் தகுதி பெற்றவர் என்பதை உலகம் ஒப்புக்கொள்ளும்.

தந்தை பெரியாருக்கும் - புரட்சிக்கவிஞருக்கும் உள்ள மிகப்பெரிய ஒற்றுமை

நோபல் பரிசுக்காக இதை நான் சொல்லவில்லை. புரட்சிக்கவிஞர் அவர்கள் புகழைப்பற்றி கவலைப் படவில்லை.  தந்தை பெரியாருக்கும் - புரட்சிக் கவிஞருக்கும் மிகப்பெரிய ஒற்றுமை என்னவென்றால், அவர்கள் கொள்கைக்காக வாழ்ந்தவர்கள், லட்சியத் திற்காக வாழ்ந்தவர்கள். நன்றியை எதிர்பார்க்காதவர்கள், புகழை நோக்காதவர்கள் - அந்த அளவிற்குத்தான் மானம் பாராத தொண்டு செய்யக்கூடிய வாய்ப்பைப் பெற்றவர்கள்.

(தொடரும்)

No comments:

Post a Comment