காணொலியில் நடைபெற்ற கருத்தரங்கில் கோ.கருணாநிதி தொடக்கவுரை
சென்னை, மே 16- "இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து" என்ற தலைப்பில் 13.5.2021 அன்று திராவிடர் கழகத் தின் சார்பில் நடைபெற்ற காணொலி கருத்தரங்கில் திராவிடர் கழக வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதியின் துவக்க உரை:
இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து என்ற மிக முக்கியமான பிரச்சினை குறித்து திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெறும் காணொலி கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றும் திராவிடர் கழகத் தலைவர் மதிப்பிற்குரிய தமிழர் தலைவர் அவர்களே, நிகழ்வில் பங்கேற்றுள்ள திராவிடர் கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, நிகழ்வை தொகுத்து வழங்கிடும் அருமைத் தம்பி பிரின்ஸ் அவர்களே, கழக பொறுப்பாளர்களே, மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்களே, தோழர்களே, அனைவர்க்கும் பணிவான வணக்கம்.
மிக முக்கியமான பிரச்சினைகள் குறித்து என்றைக்கும் நமது திராவிடர் கழகம் மதிப்பிற்குரிய தமிழர் தலைவர் அவர்கள் மக்களுக்கும், அரசியல் அமைப்புகளுக்கும் சிறப்பான கருத்துக்களை, ஆலோசனைகளை அளிப்பது போன்றே தற்போது இட ஒதுக்கீட்டுக்கு எழுந்துள்ள ஆபத்து குறித்தும் விரிவாகவும் விளக்கமாகவும் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.
தலைப்பினையொட்டி, ஒரு சில செய்திகளை மட்டும் எனது துவக்க உரையில் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகி றேன். இட ஒதுக்கீட்டுக்கான ஆபத்து தொடர்ந்து நமக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், அண்மைக் காலமாக, அதுவும் மோடி தலைமையிலான ஆட்சியில் அதற்கான வேகம் அதிகமாகவே தென்படுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
அந்தவகையில் தான் 2017-ஆம் ஆண்டு நீட் தேர்வு என்ற ஒன்றினைக் கொண்டு வந்து சமூக நீதிக்கான ஒரு சாவு மணியைத் துவக்கினார்கள். அன்றைக்கு நமது தமிழர் தலைவர் அவர்கள் எச்சரித்தார்கள். அதனுடைய பாதிப்பு இன்றுவரை நமது தமிழ் நாட்டில் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் மீது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அதற்கு அடுத்தாற்போல், மருத்துவப் படிப்பிலே அகில இந்திய தொகுப்பு இடங்களில் ஒவ்வொரு மாநிலமும் மருத்துவ இடங்களை தரவேண்டும் என்று சொல்லி இளங்கலை படிப்பிலே 15 விழுக்காடு இடங்களும், முது நிலை படிப்பிலே 50 விழுக்காடு இடங்களும்அளித்திட உச்ச நீதிமன்றத்தின் ஆணையோடு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இடங்களை மாநிலங்களில் இருந்தும் பறிக்கப்படுகின்றன. குறிப்பாக தமிழகத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் மூவாயிரம் இடங்களுக்கு மேல் அகில இந்திய தொகுப்புக்கு அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தரப்படும் மருத்துவப் படிப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்டோர்க்கு இந்த ஆண்டு வரை இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இந்த மிக முக்கிய பிரச்சினையில் சென்ற ஆண்டு திராவிடர் கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. தொடர்ந்து தமிழகத்தில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் வழக்கு தொடர்ந்தன. அப்போது ஆட்சியில் இருந்த அதிமுகவும் வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டது.
சென்னை உயர் நீதிமன்றம் 27.7.2020 அன்று வழக்கின் தீர்ப்பினை அளித்தது. மத்திய அரசு பிற்படுத்தப்பட் டோர்க்கு இட ஒதுக்கீடு அளித்திட ஒரு தடையும் இல்லை என்று தீர்ப்பளித்தது. மத்திய அரசு இது தொடர்பாக அதானி தலைமையில் ஒரு குழுவை நியமித்து அதன் அறிக்கையும் சென்ற ஆண்டு அக்டோபரில் (2020) வெளிவந்துள்ளது. அந்த குழு தனது அறிக்கையில், சென்னை உயர் நீதிமன்றம் கூறியபடி மத்திய அரசு இட ஒதுக்கீடு அளித்திட எந்த தடையும் இல்லை என்ற தீர்ப்பை உதாசீனப்படுத்திவிட்டு, பிரச்சினையை மீண்டும் நீதிமன்றத்தின் முடிவுக்கே விட பரிந்துரைத்துள்ளது. சட்ட அமைச்சகத்தின் ஒப்புதலையும் பெற்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்பையும் பெற்று பிற்படுத்தப்பட்டோர்க்கு இட ஒதுக்கீடு தரலாம் என்றும் அறிக்கையில் கூறிவிட்டது.
தற்போது மராட்டியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து 5.5.2021 அன்று அசோக் பூஷண், எஸ்.அப்துல் மஜீர், எஸ்.ரவீந்திர பட், ஹேமந்த் குப்தா, எல். நாகேஷ்வரராவ் ஆகிய அய்ந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. மராட்டியர்களுக்கு இட ஒதுக்கீடு கூடாது என அய்ந்து நீதிபதிகளும் ஒருசேர தீர்ப்பளித்துள்ளனர். நீதிபதிகள் சொன்ன காரணம் என்னவென்றால், மராட்டி யர்கள், சமூகரீதியாக, கல்விரீதியாக பிற்படுத்தப்பட்டோர் இல்லை என்று கூறியுள்ளார்கள்.
ஆனால், மகாராட்டிரா அரசு, நீதிபதி கெய்குவாட் தலைமையில் ஆணையம் அமைத்து அதன் அறிக்கை யைப் பெற்று இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது. இது தொடர்பான வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் தந்த தீர்ப்பில் இட ஒதுக்கீடு சட்டம் செல்லும் என்று கூறியது. ஆனால், சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி மராட்டியர்களுக்கு 16 சதவீதம் இட ஒதுக்கீடு என்பதை மாற்ற வேண்டும் என்று தீர்ப்பளித்த நிலையில் மராட்டியர்களுக்கு வேலை வாய்ப்பில் 12 சதவீதம், கல்வியில் 13 சதவீதமாக சட்டத்தை மகாராட்டிரா அரசு மாற்றியது.
ஆனால் இதற்கு எதிராக வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்று அங்கே செப்டம்பர் 2020இல் தடை விதிக்கப் பட்டது. இறுதியாக 5.5.2021 அன்று மராட்டியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் சொன்ன காரணம், 50 சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என ஏற்கெனவே இந்திரா சகானி வழக்கில் தீர்ப்பு உள்ளது. மராட்டியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதால், மகாராட்டிராவில் இட ஒதுக்கீட்டை தருவதால், 50 சதவீத உச்ச வரம்பை மீறுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தார்கள். அத்துடன் இன்னொரு காரணத்தையும் சொன்னார்கள். அதாவது, மத்திய அரசு 2018இல் நிறைவேற்றிய 102ஆவது அரசமைப்பு திருத்த சட்டம் குறித்ததாகும்.
2017இல் மத்திய அரசு 123ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தினாலும், அந்த மசோதா மாநிலங்களவையில் ஏற்றுக் கொள்ளப்படாமல் மீண்டும் 2018-ஆம் ஆண்டு இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அது தான் 102ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தமாகும். இந்த சட்டத்தின்படி, பிற்படுத்தப்பட் டோர் யார் என அறிவிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்குக் கிடையாது. இனி மத்திய அரசும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்றும்தான் அறிவிக்கமுடியும் என அய்ந்து நீதிபதிகளில் மூன்று பேர் தீர்ப்பளித்துவிட்டனர்.
இன்றைக்கு மிக முக்கியமான பிரச்சினை, மராட்டியர் களுக்கு இட ஒதுக்கீடு சட்டம் செல்லாது என்பதாக தீர்ப் பளித்துள்ள உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக மகாராட்டிரா அரசு நியமித்த நீதிபதி கெய்குவாட் தலைமையிலான ஆணையத்தின் அறிக்கையையும் ஏற்கவில்லை. மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் நிராகரித்துவிட்டது.
மேலும் 50 விழுக்காட்டிற்கு மேல் இட ஒதுக்கீடு அளித்தால், அந்த சட்டம் செல்லாது என்றும் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது, மூத்த வழக்குரைஞர் முகுல் ரஸ்தோகி, மத்திய அரசு 2019இல் உயர்ஜாதியில் ஏழைகள் என்று கூறி 10 சதவீத இட ஒதுக்கீடு அளித்துவிட்டது. இதன் காரணமாக மத்திய அரசே 50 சதவீதத்தை மீறிவிட்டது. இதனைத் தொடர்ந்து பல மாநிலங்களும் 10 சதவீத இட ஒதுக்கீட்டை அளித்து, 50 சதவீத உச்ச வரம்பை மீறிவிட்டனர். இத்தகைய நிலையில் மராட்டியர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்ததால் 50 சதவீதத்திற்கு மேல் சென்று விட்டது என்று கூறி சட்டத்தை ரத்து செய்துள்ளீர்களே என நீதிபதிகளிடம் சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்த நீதிபதிகள் 10 சதவீத இட ஒதுக்கீடு உச்ச நீதிமன்றத்தில் தனி வழக்காக உள்ளது தற்போது அரசமைப்புச் சட்ட அமர்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆகவே அதுபற்றி நாங் கள் கருத்து தெரிவிக்க முடியாது என்று பதிலளித்துவிட்டனர்.
102ஆவது அரசமைப்புச்
சட்டத் திருத்தத்தின் வரலாறு:
உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள 102ஆவது அரசமைப் புத் திருத்தச் சட்டம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணை யத்திற்கு அதிகாரம் அளிக்கக்கொண்டு வரப்பட்டது.
1993-ஆம் ஆண்டு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் உருவாக்கப்பட்டது. இவ்வாறு ஆணையம் அமைத்திட காரணம், மண்டல் குழு பரிந்துரையின்படி பிற்படுத்தப்பட்டோர்க்கு அரசின் வேலைவாய்ப்பில் 27 சதவீதம் இடஒதுக்கீடு ஆணையை சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிறப்பித்து அந்த ஆணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று அதன் இறுதித் தீர்ப்பு 16.11.1992இல் ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வால் தரப்பட்டது. அந்த தீர்ப்பில் பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறிய பிரிவினரை (‘கிரிமிலேயர்’) நீக்கி இட ஒதுக்கீடு தர வேண்டும் என்றும் இதற்காக மத்திய, மாநில அரசுகள் பிற்படுத்தப் பட்டோர் ஆணையம் அமைக்க வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவித்தார்கள்.
“The Government of India, each of the State Governments and the Administration of Union Territories shall, within four months from today, constitute a permanent body for entertaining, examining and recommending upon requests for inclusion and complaints of over-inclusion and under-inclusion in the list of other backward classes of citizens. The advice tendered by such body shall ordinarily be binding upon the Government.” [Indra Sawhney and others Vs. Union of India and others (AIR 1993, SC 477)]
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசி யல் சட்ட அதிகாரம் வழங்கிட 10.4.2017இல், மத்திய அரசு 123ஆவது அரசமைப்பு சட்ட திருத்த மசோதாவைக் கொண்டு வந்தது. மக்களவையில் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு பெரும்பான்மை இருந்த நிலையில், எதிர்க்கட்சிகள் மசோதாவில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டியும் நிறைவேற்றப்பட்டது. மறு நாள் 11.4.2017 அன்று மசோதா மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டா லும், எதிர்ப் புகள் காரணமாக, உடன் தெரிவுக் குழுவிற்கு (SELECT COMMITTEE) அனுப்பப்பட்டது. அந்த குழுவின் தலைவராக மாநிலங்களவை உறுப்பினரும் பாஜகவின் பொதுச் செயலாளருமான பூபேந்தர் யாதவ் நியமிக்கப்பட் டார். மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து அறிக்கை அளித்திடவும் அக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டது.
தெரிவுக் குழுவின் அழைப்பின்பேரில், திராவிடர் கழகம் சார்பில் மதிப்பிற்குரிய தமிழர் தலைவர் புது டில்லியில் நாடாளுமன்ற இணைப்புக் கட்டடத்தில் குழு உறுப்பினர்களை நேரில் சந்தித்து கடிதம் அளித்ததோடு, விளக்கமாகவும் எடுத்துரைத்தார்.
ஆசிரியர் தெரிவித்த கருத்திலே முக்கியமானது, அரசு கொண்டு வந்த மசோதா, மாநில உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. தற்போது பிற்படுத்தப்பட்டோர் யார் என அறிவிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு உள்ளது. அதனை மசோதாவின் பிரிவு 342-ஏ பறிக்கிறது. அது நீக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்தால்தான், நாட்டின் கூட்டாட்சி தத்துவம் காப்பாற்றப்படும், மாநில உரிமை பாதுகாக்கப்படும் என்று தெளிவுபடுத்தினார். தெரிவுக்குழுவில் கருத்தினை முதன்முதலில் தெரிவித்தவர் தமிழர் தலைவர் அவர்கள் தான் என்பது கூடுதல் சிறப்பு.
342A. (1) The President may with respect to any State or Union territory, and where it is a State, after consultation with the Governor thereof, by public notification, specify the socially and educationally backward classes which shall for the purposes of this Constitution be deemed to be socially and educationally backward classes in relation to that State or Union territory, as the case may be.
In article 366 of the Constitution, after clause (26B), the following clause shall be inserted, namely:- (26C) "socially and educationally backward classes" means such backward classes as are so deemed under article 342A for the purposes of this Constitution’ (123rd constitution amendment bill).
மேலும், அந்தத் தெரிவுக்குழுவில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கள் கனிமொழி (திமுக), அ.நவநீதகிருஷ்ணன் (அதிமுக), டி.கே.ரங்கராஜன் (சிபிஎம்), பி.கே.ஹரிபிரசாத் (காங்கிரஸ்), சரத் யாதவ் (அய்க்கிய ஜனதா தளம்) என பலரும் கூட்டாக இணைந்து தெரிவுக் குழுவின் தலைவர் பூபேந்தர் யாதவிடம், மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகள் 342-ஏ,366 ஆகியவை மாநில உரிமைகளைப் பறிக்கிறது. அது நீக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் அளித்தனர்.
இதற்கு பதிலளிக்கும்வகையில், தெரிவுக் குழுவின் தலைவர் பூபேந்தர் யாதவ், இது குறித்து சமூக நலத்துறை யின் அதிகாரிகளிடம் விவாதித்ததாகவும், உறுப்பினர்கள் அச்சப்படுவதுபோல், மாநில உரிமைகளை இந்த மசோதா பறித்திடாது என்றும், மத்தியில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கவும், மத்திய பிற்படுத் தப்பட்டோர் பட்டியல்(CENTRAL LIST)குறித்து முடி வெடுக்கவுமே இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்ததை குழுவின் அறிக்கையில், எழுத்துப் பூர்வமாக பதிவு செய்துள்ளார்.
“In response to the above issues raised, the Ministry clarified that sub-clause (9) of article 338B does not in any way interfere with the powers of the State Governments to prepare their own list. The Committee was further informed that classes so included in the State Backward Classes List do not automatically come in the Central List of OBCs.”(Para 19 of Report of Select Committee 19.7.2017
“The Committee observes that the amendments do not in any way affect the independence and functioning of State Backward Classes Commissions' and they will continue to exercise unhindered their powers of inclusion/exclusion of other backward classes with relation to State List.”(Para 67 of Report of Select Committee 19.7.2017)
தெரிவுக்குழுவின் அறிக்கை 19.7.2017 அன்று நாடாளு மன்றத்தின் மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து 123ஆவது அரசமைப்புச் சட்ட மசோதா மாநிலங்களவையில் 31.7.2017 அன்று விவாதத்திற்கு வந்தபோது, மாநிலங்களின் உரிமையை இந்த மசோதா பறிக்கிறது என்ற குற்றச்சாட்டை உறுப்பினர்கள் டி.கே.எஸ். இளங்கோவன் (திமுக), டி.கே.ரங்கராஜன் (சிபிஎம்), முத்துக்கருப்பன் (அதிமுக), திக்விஜய் சிங் (காங்கிரஸ்), சரத் யாதவ் (அய்க்கிய ஜனதா தளம்) என ஏறத்தாழ 25 மாநிலங்களவை உறுப்பினர்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து, அதன் காரணமாக, மசோதா நிறைவேற்றப்பட முடியாமல், மீண்டும் மக்களவைக்கு அனுப்பப்பட்டது.
அன்றைய தினம் மாநிலங்களவையில் பேசிய மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர்சந்த் கேலாட், மாநில உரிமைகளை பாதிக்காது. மத்திய அரசுக்கான பிற்படுத்தப் பட்டோர் பட்டியல் குறித்தும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அதிகாரம் அளிப்பது குறித்தும்தான் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது என தெரிவித்தார். ஆனால், அமைச்சரின் பதிலை உறுப்பினர்கள் ஏற்கவில்லை. மசோதாவில் உரிய திருத்தம் கொண்டு வாருங்கள் என திக்விஜய் சிங் உள்ளிட்ட உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள்.
ஆனால், மத்திய அரசு, இது குறித்து எந்த மாற்றமும் செய்யாமல், மீண்டும் ஆகஸ்டு 2018இல் மசோதாவை அறிமுகப்படுத்தியது. மாநிலங்களவையில் உறுப்பினர்கள் எதிர்ப்பையும் மீறி 6.8.2018 அன்றும், மக்களவையில் 11.8.2018 அன்றும் மசோதா நிறைவேற்றப்பட்டது. அன் றைய தினமும் மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர் சந்த் கேலாட், இந்த மசோதா, மாநிலங்களின் உரிமையைப் பறிக்காது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார். (மாநிலங்களவை விவாதம் 6.8.2018 அறிக்கை பக்கம் 390) இதுதான் 102ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் வரலாறு.
தற்போது உச்ச நீதிமன்றம், மராட்டியர்களுக்கு இட ஒதுக்கீடு செல்லாது என்ற தீர்ப்பின்போது, இந்த 102ஆவது அரசமைப்புச் சட்டத்தைச் சுட்டிக்காட்டி, இந்த சட்டத் தின்படி, பிற்படுத்தப்பட்டோர் யார் என்பதை மாநிலங்கள் முடிவு செய்ய முடியாது. மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் தான் முடிவு செய்ய முடியும் என அய்ந்து நீதிபதிகளில் மூன்று நீதிபதிகள் (3:2) தீர்ப்பளித்து, அது பெரும்பான்மை தீர்ப்பாக அமைந்துவிட்டது.
ஆகவே உச்ச நீதிமன்றத்தின் 5.5.2021 தீர்ப்பின்படி, பிற்படுத்தப்பட்டோர் யார் என்பது குறித்து இனி மாநிலங் கள் மத்திய அரசுக்கு பரிந்துரை மட்டுமே செய்யமுடியும். (RECOMMENDATORY FUNCTION). பரிந்துரையை மத்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவர் ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். இறுதியில் நாடாளுமன்றம் தான் முடிவு செய்யும் என்பதுதான் 102ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தத்தின் சாரம் என உச்ச நீதிமன்றம் தெளிவு படுத்திவிட்டது. மராட்டியர்களுக்கு இட ஒதுக்கீடு செல் லாது என்பதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.
இத்தகைய சூழலில், ஏற்கெனவே, நீட் தேர்வில் சமூக நீதி புறக்கணிக்கப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோர்க்கு இட ஒதுக்கீடு நிராகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, பிற்படுத்தப்பட்டோர் யார் என அறிவிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை என்பதாகும்.
இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து:
மத்திய அரசு ஏற்கெனவே மாநில உரிமைகளைப் பறித்து மத்தியில் அனைத்து அதிகாரங்களும் குவிக்கப் படும் நிலையில், 102ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்த தின் காரணமாக ஏற்படும் ஆபத்து என்னவெனில், பிற்படுத் தப்பட்டோர் குறித்து அறிவித்திட இனி மாநிலங்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை மட்டுமே செய்திட முடியும் என்பதே.
இந்த தீர்ப்பில் நீதிபதிகள் கவனிக்கத் தவறிய ஒன்று என்னவென்றால், மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்(OBC CENTRAL LIST) என்பது 1993-ஆம் ஆண்டில் தான் நடைமுறையில் வந்தது. அதற்கு முன்னர் மத்திய அரசில் பட்டியல் கிடையாது. காரணம் பிற்படுத்தப் பட்டோர்க்கு இட ஒதுக்கீடே கிடையாது. ஆனால் மாநில அரசுகளைப் பொறுத்தவரையில், இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் பல மாநிலங்களில் இட ஒதுக்கீடு பிற் படுத்தப்பட்டோர்க்கு அளிக்கப் பட்டது. அது குறித்து பட்டியலும் (STATE LIST) வெளியிடப்பட்டது. தமிழ் நாடு போன்ற முற்போக்கான மாநிலத்தில் சுதந்திரத்திற்கு முன் னரே 1928 முதல் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது. பிற் படுத்தப்பட்டோர் பட்டியல் உள்ளது. மத்திய அரசுக்கு முன்பாகவே மாநிலங்கள் இட ஒதுக்கீட்டை மிகச் சிறப்பாக செயல்படுத்திய காரணத் தினால்தான், இந்த அளவிற்காவது சமூக நீதி நிலை பெற்றிருக்கிறது. இந்த உரிமை பறிபோகும் ஆபத்து இன்றைக்கு இருக்கிறது என்பதை நாம் உணர்ந்திட வேண்டும்.
அடுத்து, பிற்படுத்தப்பட்டோர்க்கு மத்திய அரசில் ஒரு பட்டியல், மாநில அரசில் ஒரு பட்டியல் தேவை இல்லை. ஒரே பட்டியல் போதும் என வரும் காலங்களில் மத்திய அரசு சொல்வதற்கும் வாய்ப்பு உள்ளது.
இதற்கு அடுத்து, எல்லா மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான இட ஒதுக்கீடு சதவீதம் மத்திய அரசில் இருப்பது போல் இருக்க வேண்டும். ONE NATION, ONE RESERVATION என்று சொல்லவும் கூடும். இதன் அடிப்படையில் எந்த மாநிலத்தில் இருந்தும் யார் வேண்டு மானாலும் எந்த மாநிலத்தின் வேலைக்கு விண்ணப்பிக்கலாம், கல்வி படிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டால், அது மாநிலங்களின் பண்பாட்டு, சமூக அமைப்பை சிதறடிக்கும் அபாயம் உள்ளது என்பதையும் நாம் புரிந்து கொண்டால்தான், இது இட ஒதுக்கீட்டைத் தாண்டி, காலங்கால மாக நிலவி வரும் பார்ப்பன மேலாதிக்கத்தை மேலும் தொடர்ந்திட எடுத்திடும் முயற்சி என்பதைப் புரிந்து கொள்ள முடியும் என்று சொல்லி எனது துவக்க உரையை நிறைவு செய்கிறேன்.

No comments:
Post a Comment