மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
சென்னை, மே 26 விவசாயிகள் நலனுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு புதிதாக திருத்தம் செய்த 3 வேளாண் சட்டங்களுக்கு பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அந்த சட்டங்களை திரும்பப் பெறக்கோரி, விவசாயிகள் கடந்த நவம்பர் 26 ஆம் தேதி டில்லி எல்லையை முற்றுகையிட்டு போராட்டத்தை தொடங்கினர்.
போராட்டம் தொடங்கி 6 மாதங்கள் நிறை வடைவதையொட்டி, இன்று (26.5.2021) கருப்பு நாளாகக் கடைப்பிடித்து நாடு முழுவதும் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்க 40 விவசாய சங்கங்கள் அடங்கிய சம்யுக்தா கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்துள்ளது. விவசாயிகளின் போராட்ட அழைப் புக்கு காங்கிரஸ், திமுக, சிவசேனா, தேசிய மாநாட்டு கட்சி உள்பட 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
திராவிடர் கழகம் ஆதரவு
‘‘விவசாயப் பெருங்குடி மக்கள் வரலாறு காணாத வகையில் நடத்தும் அறப்போரையும், அவர்களது அந்த நியாயமான மக்களாட்சி உரிமை யையும் ஆதரிக்கும் வகையில் இன்று நடைபெற விருக்கும் நாடு தழுவிய அறப் போராட்டத் திற்குத் திராவிடர் கழகம் அதன் ஆதரவினை நல்குகிறது’’ என்று விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நேற்று (25.5.2021) வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் விவசாயிகள் நலனுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்றும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் இன்று (26.5.2021) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:
நாடாளுமன்ற நடைமுறைகளைப் புறக்கணித்து அவசரம் அவசரமாகக் கொண்டு வந்த விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைச்சட்டம் 2020, வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் சட்டம் 2020, அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகிய மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் டில்லியில் தங்கள் போராட்டத்தைத் துவங்கி இன்றுடன் (26.5.2021) ஆறு மாத காலம் நிறைவு பெறுகிறது.
இன்றளவும் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை - உணர்வுகளை மதித்து அந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு இதுவரை முன்வரவும் இல்லை - ஆக்கப்பூர்வமான பேச்சு வார்த்தை நடத்தி அதற்கான தீர்வு காண்பதற்கும் முயற்சிக்க வில்லை என்பது கவலையளிப்பதாக இருக்கிறது.
2021 -தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில், இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறத் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி - இவற்றை ரத்து செய்திட மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தப்படும் என்று தமிழக மக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப் பட்டது. எனவே, டில்லியில் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று, மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்கள் தொடர்பாகத் திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment