கவிஞர் கலி.பூங்குன்றன்
கடந்த 13ஆம் தேதியன்று மாலை 6.30 மணியளவில் திராவிடர் கழகத்தின் சார்பில் "2021 தேர்தல் முடிவுகள்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தலைமை வகித்தார்; திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்புரை ஆற்றினார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 60 நிமிடம் நிறைவுரையாற்றினார்.
திராவிடர் கழகத்தைப் பொருத்தவரையில் ஓர் அரசியல் கட்சியல்ல - ஆனாலும் அரசியலில் யார் ஆட்சி அமைப்பது - யார் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதில் கழகத்திற்கென்று தனித் தன்மையான சிந்தனையும், திட்டமிட்ட செயல்பாடுகளும் தந்தை பெரியாரின் காலந்தொட்டே இருந்து வந்திருக்கிறது.
தந்தை பெரியார் காங்கிரசிலிருந்து விலகி சுயமரியாதை இயக்கம் கண்ட காலகட்டத்தில், சென்னை மாநில தேர்தலில் நீதிக்கட்சிக்குத் தன் ஆதரவுக் கரத்தை நீட்டினார். இன்னும் சொல்லப் போனால், காங்கிரசில் இருந்தபோதே - நீதிக்கட்சி ஆட்சியில் பனகல் அரசர் (இராமராய நிங்கர்) பிரதமராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட இந்து அறநிலையத் துறை பாதுகாப்புச் சட்டத்திற்கு ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார்.
1926இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நீதிக்கட்சி தோற்ற போது, நீதிக்கட்சியினர் சோர்வு அடைந்தபோது "தோல்வியும் நன்மைக்கே!" என்று குரல் கொடுத்து கட்சியைத் தூக்கி நிறுத்தினார்.
மகாமகா சாணக்கியன் என்று பார்ப்பனர் வட்டாரத்த £ல் கணிக்கப்பட்ட - பனகல் அரசர் மறைந்த போது (16.12.1928) நீதிக்கட்சிக்கு மற்றொரு சோதனை! அப்பொழு தும் தந்தை பெரியார் அவர்களே - பார்ப்பனர் அல்லா தார் இயக்கமான அந்தக் கட்சி சாய்ந்து வீழ்ந்து விடாமல் பெருந்துணையாக நின்றவர் தந்தை பெரியாரே!
‘சுதந்திர' இந்தியாவின் முதல் தேர்தலான 1952ஆம் ஆண்டில் தந்தை பெரியார் காங்கிரசுக்கு எதிரான நிலையை எடுத்தார். கம்யூனிஸ்ட்டு கட்சிக்கு ஆதரவாக நின்றார்.
காங்கிரஸ் 152 இடங்களிலும், கம்யூனிஸ்ட்டு கட்சி 62 இடங்களிலும் வெற்றி பெற்றன. வேறு சில கட்சிகளும் களத்தில் இருந்தன. யாருக்கும் பெரும்பான்மை கிட்டாத நிலையில் - எப்பொழுதுமே தேர்தலில் நின்று, மக்கள் வாக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்று அறி யாத ராஜகோபாலாச்சாரியார் மேலவை உறுப்பினராக்கப் பட்டார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குப் பதவி ஆசை காட்டியும், வேறு வழிகளிலும் காங்கிரசுக்குள் கொண்டு வந்து ஆச்சாரியார் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கப்பட்டது. அரசியலில் முதன்முதல் கட்சித் தாவல் என்ற ஜனநாயக விரோத - குறுக்கு வழி அரசி யலுக்கு ராஜ பாட்டை வழிவகுத்தவர் ராஜகோபாலாச் சாரியார்.
அவர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட குலக்கல்வித் திட்டம் - தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடு கொந்தளித்து எழுந்த நிலையில் ‘அபார சாணக்கியன்' என்று அக்ரகாரவாசிகளால் ஆகாயம் வரை புகழ்ந்து பாராட்டப்பட்ட ஆச்சாரியார் ஆட்சியை விட்டே ஓடுமாறு செய்யப்பட்டது.
குருமூர்த்தி
ஒப்புக் கொண்டு விட்டாரே!
கேள்வி: தமிழக மக்கள் எந்த விஷயத்தில் தனித்துவம்?
பதில்: ஆன்மிகத்தில் மூழ்கிய தமிழ் மக்கள் தொடர்ந்து திராவிட கழகங்களுக்கு வாக்களிப்பது அவர்களது தனித்துவம் (‘துக்ளக்‘, 9.2.2020, பக். 29).
‘தமிழ்நாடு பெரியார் மண்தான் - திராவிடப் பூமிதான்' என்று திருவாளர் குருமூர்த்தி அய்யர் ஒப்புக் கொண்டு விட்டாரா இல்லையா?
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த காமராசர் முதலமைச்சராகப் பதவியேற்கத் தயங்கிய நிலையில், அவருக்கு தைரியம் கொடுத்து ஆட்சியில் அமர வைத்ததிலும் தந்தை பெரியாருக்கு முக்கிய பங்கு உண்டு. ஆட்சிக்கு வந்த காமராசர் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்திற்குக் கல்தா கொடுத்து, ஆச்சாரியார் மூடிய 6000 பள்ளிகளை மீண்டும் திறந்ததுடன் மேலும் 12,000 பள்ளிகளையும் திறந்து நாடெங்கும் கல்வி நீரோடை பரந்துபட்ட அளவில் சலசலவென ஓட வழி செய்தார். மதிய உணவுத் திட்டம், சீருடை, இலவசப் புத்தகம், இலவசக் கல்வி என்று மிகப் பெரிய புரட்சியை செய்தார். (மதிய உணவுத் திட்டம் என்பதே சென்னை மாநிலத்தில்தான் முதன் முதலாக 1920இல் அறிமுகப்படுத்தப்பட்டது. நீதிக்கட்சி யின் தோற்றுநர்களுள் ஒருவரான வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் சென்னை மாநில மேயராக இருந்தபோது கொண்டு வரப்பட்டது).
குலக்கல்வி திட்டத்தை ஒழித்துக்கட்டி கல்வி ஒளி பாய்ச்சிய காமராசரைக் கல்வி வள்ளல் என்று தந்தை பெரியார் பாராட்டினார். சட்டமன்ற உறுப்பினராக இல்லாதிருந்த காமராசர் குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்ட போது தந்தை பெரியார் அவருக்காகத் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அறிஞர் அண்ணாவும் ஆதரவு கொடுத்தார் என்பது வரலாறு.
காமராசரின் ஒவ்வொரு செயலும் - அதுவும் குறிப்பாக ஆச்சாரியாரைப் பதவியிலிருந்து விரட்டி, அந்த இடத்தில் அமர்ந்து நற்பெயர் ஈட்டிய காமராசர் மீது பார்ப்பனர்கள் ஆத்திர அனல் கட்டிகளை எடுத்து வீசினர்.
‘பச்சைத் தமிழர் காமராசர்' என்று அடுத்த கட்டத்துக்குச் சென்று அடையாளம் காட்டினார் அய்யா! அவ்வளவுதான் ‘கதர்ச்சட்டைக்குள் கறுப்புச் சட்டை‘ என்று எல்லாம் எழுத ஆரம்பித்தனர். 'கல்கி‘கள் காட்டூன் போட்டன.
1952 முதல் 1967 வரை இந்த நிலை தொடர்ந்தது. இப்படி தேர்தலில் போட்டியிடாத திராவிடர் கழகத்தின் கருத்தும், செயல்பாடும் தேர்தல் அரசியல் களத்தில் முக்கியப் புள்ளியாக இருந்து சுழன்று வந்திருக்கிறது.
ஆச்சாரியாரோடு 1967இல் அண்ணா தலைமையில் கூட்டணி வைத்திருந்தாலும் - தேர்தலுக்குப் பிறகு ஆச்சாரியாரைக் கழற்றிவிட்டு, அய்யா அவர்களின் ஆதரவை நாடியும், இடைப்பட்ட 18 ஆண்டுகால கசப்பினையெல்லாம் தூக்கி எறிந்து இன நலன் கருதியும், எந்த வகையிலும் பார்ப்பனர்களுக்கு வெற்றியாக அமைந்துவிடக் கூடாது என்ற இனநலக் கண்ணோட்டத் திலும் அய்யாவும் - அண்ணாவும் சங்கமித்தனர்.
நம் இனத்தார்கள் இனநல உணர்வோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான கலங்கரை விளக்கத்தை இரு தலைவர்களும் உருவாக்கிக் கொடுத்துள்ளதை தமிழர்கள் மறந்து விடக் கூடாது.
எல்லாமே இன நலப் போராகத்தான் - சமூக நீதிக் களமாகத் தான் அமைந்து வருகிறது. இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழ்நாட்டில் நடந்து வரும் நடப்புகள் - தமிழ்நாடு தேர்தல் உட்பட எல்லாவற்றிலுமே திராவிட மாடல்தான்!
1967 தேர்தல் முடிந்த நிலையில் தந்தை பெரியார் ஒன்றைச் சொன்னார். ஆச்சாரியார் இரண்டு முறை ஆட்சிக்கு வந்தபோதிலும் அந்த இரண்டு முறையும் வாய்தா காலம் அவரை ஆள விடவில்லை என்று சொன்னார்.
1971 தேர்தலில் காமராசரோடு சேர்ந்து மீண்டும் உயிர்ப் பெற்று எழலாம் என்று காலமான காலத்தில் ராஜாஜி கனவு கண்டார் - அதுவும் பகற் கனவாகப் போனது. இராமனை வைத்துக் கரையேறலாம் என்று சேலம் பிரச்சினையை ஞாலம் வரைக்கும் கொண்டு சென்றனர் - அது இராவணனுக்கு மகுடம் சூட்டும் பெரு விழாவாக முடிந்தது. இதுவரை 184 இடங்களில் திமுக வெற்றிக் கொடி நாட்டியது அந்த 1971 தேர்தலில்தான்.
ஆச்சாரியாரே ஒப்புக் கொள்கிறார்
ஆரியர் - திராவிடர் போராட்டமே!
"இன்றைய அரசியல் போராட் டம் என்பதே கம்யூனிஸ்டு கட்சிகள் முதல் எல்லா கட்சிகளுக்கும் சமுதாயத் துறைத் தத்துவங்கள் தான் அடிப்படை லட்சியமே தவிர, மற்றபடி வாயால் சொல்வதற்குக்கூட கொள்கைகள் கிடையாதே! அதாவது எதுவும் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்ற அடிப் படை யைக் கொண்டதுதான்..." (- தந்தை பெரியார், ‘விடுதலை‘, 22.5.1967)
இதையேதான் ஆச்சாரியார் (ராஜாஜி) வேறு சொற்களில் கூறு கிறார்.
"தேவர்கள் - அரக்கர்கள் போராட்டமே இன்றைய தமிழ் நாட்டின் நிலை" (- திருவொற்றியூ ரில் 18.9,1953)
21.4.1948ஆம் தேதி சென்னை சட்டசபை கேள்வி நேரத்தின் போது-
இராகவய்யா கேள்வி: பிராமணர், பிராமண ரல்லாதார் வேற்றுமையை சர்க்கார் அதி காரப்பூர்வமாக அங்கீகரிக்கிறதா?
கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் பதில்: பிறப்பு முதல் இறப்பு வரை இவ்வேற்றுமை இருக்கும் வரை அவற்றை சர்க்கார் எப்படி அங்கீகரிக்காமல் இருக்க முடியும் என்று எனக்குத் தெரிய வில்லை.
இவ்வாறு கூறியிருப்பவர் காங்கிரஸ்காரர்தானே - கருஞ்சட்டைக்காரர் அல்லவே!
செல்வி ஜெயலலிதா கலைஞரைப் பார்த்து ‘ஜென்மப் பகை' என்ற சொல்லைப் பயன்படுத்தினார். முத்தமிழ் அறிஞர் கலைஞர் பின் வாங்கவில்லை; ‘ஆம் உண்மைதான் ஜென்மப்பகைதான் - சந்திப்போம்!‘ என்று சூளுரைத்து வெற்றி வாகை சூடினார்.
நடந்து முடிந்த 2021 தேர்தலிலும் ஆரியம் கச்சை கட்டி நின்றது. பார்ப்பனர் சங்கம் வெளிப்படையாக தீர்மானமே நிறைவேற்றியது - "பிராமணர் வாக்குகள் பா.ஜ.க. இடம் பெறும் அதிமுக கூட்டணிக்கே - திமுகவை வீழ்த்துவோம்?" என்று சல்லடம் கட்டினர்.
‘துக்ளக்' குருமூர்த்திகளும், ‘தினமலர்‘, ‘தினமணி‘ வகையறாக்களும் வரிசை கட்டி நின்றனர். பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களை சொல்ல வேண்டியதில்லை. பா.ஜ.க. என்றாலே பார்ப்பன ஜனதா கட்சிதானே! இவற்றையெல்லாம் வரிசைப்படுத்திக் கூறினார் கழகத் தலைவர். திராவிடம் என்பது ஒரு தத்துவம் - அனை வருக்கும் அனைத்தும் - பேதத்திற்கு இடமில்லாதது என்று பொருள். ஆரியம் என்றாலே பேதம் - வேதம் அனைவரும் சமம் இல்லை என்று கூறுகிறது.
இந்த இரண்டுக்குமான போராட்டம்தான் புத்தர் காலத்திலிருந்து; ஹிந்துக்களுக்கு விரோதி ஸ்டாலின் என்றும், நெற்றியில் பூசிய குங்குமத்தை அழித்தார் என்றும் பிரச்சாரம் செய்தனர். சுயமரியாதைத் திருமண நிகழ்ச்சியில் மந்திரங்களை குறை கூறினார் என்றனர். வேலை தூக்கிக் கொண்டு அலைந்தனர். ஆனாலும் அவர்கள் தோல்வியைத் தான் மூட்டை மூட்டையாக சுமந்தனர்.
1971 தேர்தலில் இராமன், 2019 மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணன், 2021 தேர்தலில் முருகன் - இவையெல்லாம் கைகொடுத்ததா? என்ற வினாவை எழுப்பினார் தமிழர் தலைவர்.
பெரியார் மண்ணா? திராவிட பூமியா? - என்று வினாவை எழுப்பியவர்கள் இனிமேலாவது, அந்தக் குரலை எழுப்பாமல் இருந்தால் கொஞ்சமாவது மரியாதை இழுத்துப் பிடித்து நிற்கும்.
கருப்புச் சட்டை போட்டவர்கள் மட்டுமல்ல; யார் யார் உரிமைகள் மறுக்கப்பட்டார்களோ, ஜாதியால் இழிவுப்படுத்தப்பட்டார்களோ அவர்கள் நெற்றியில் திருநீறை அணிந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் உள்ளத்தில் வேரிலிருந்து நாவால் நவில்வது "தந்தை பெரியார்!" (காந்தியார் மகாத்மா என்றால், தென்னாட் டுக்கு "மகாத்மா தந்தை பெரியார்!" என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மாண்பமை நிதிபதி நாகமுத்து அவர்கள் உரக்கச் சொல்லவில்லையா?)
இன்றைய "ஆஸ்திகம்" என்பது உயர்ஜாதியினரின் நலம் - இன்று "நாஸ்திகம்" என்பது பெருவாரியான தமிழ் மக்களின் நலம். உங்களு:ககு இதில் எது வேண்டும்?" (‘விடுதலை', 19.2.1971) என்ற வினாவைக் குறள் போல் எழுப்பிய தவத்திரு குன்றக்குடி அடிகளார் கருப்புச் சட்டைக்காரரா? தளபதி மு.க.ஸ்டாலினை நாத்திகன் என்று கூறுபவர்கள் அமைச்சர்களும் (இந்து அறநிலை யத் துறை அமைச்சர் உட்பட) திமுக சட்டப் பேரவை உறுப்பினர்களும் கடவுளின் பேரால் உறுதிமொழி எடுக்காமல், "உளமாற" என்று எடுத்தனர் என்று ஆதங் கப்படுவோர் - ஆத்திரப்படுவோர் பதில் சொல்லட்டும் பார்க்கலாம்.
நாடாளுமன்றத்திலேயே தந்தை பெரியார் வாழ்க, திராவிடம் வெல்க என்ற ‘பீரங்கி' சத்தம் கேட்டதே!
திராவிடர் கழகத் தலைவர் விழுமிய முறையில் ஒரு வினாவை எழுப்பினார். இந்து மதத்தில் நாத்திகத்துக்கு இடம் உண்டா, இல்லையா? இந்து மதத்தில் ஒரு பிரிவாக சொல்லப்படும் பவுத்தம் கடவுளை ஏற்றுக் கொள்கிறதா?
இராமாயணத்தில் தசரதன் அமைச்சரவையில் ஜாபாலி என்ற பார்ப்பனர் அமைச்சராக இருந்தாரே - அவர் நாத்திகர் அல்லவா? ‘தென்னாட்டு ஜாபாலி' என்று கூறி தந்தை பெரியார் படத்தை அட்டைப் படத்தில் அலங்கரித்தது உண்டே ‘கல்கி‘!
ஏன் ஆர்.எஸ்.எஸின் - இந்துத்துவா பிதாமகன் என்று போற்றுகிறார்களே - அந்த வி.டி.சாவர்க்கார் நாத்திகர்தானே! என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார் தமிழர் தலைவர். பதில் உண்டா - பா.ஜ.க. சங்பரிவார் ணிtநீ., கூட்டத்தினரே!
(வளரும்)


No comments:
Post a Comment