திராவிடம் என்பது அனைத்தையும் விமர்சிப்பது, சமூகநீதிப் பார்வையே திராவிடம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 14, 2021

திராவிடம் என்பது அனைத்தையும் விமர்சிப்பது, சமூகநீதிப் பார்வையே திராவிடம்

திராவிடர் கழக இளைஞரணியின் 23 ஆவது இணையவழி தொடர் சொற்பொழிவு

வழக்குரைஞர் .அருள்மொழி உரை

சென்னை, மே 14 திராவிடர் கழக இளைஞரணி சார்பில் திராவிடம் என்பது எனும் தலைப்பில் 23 ஆவது இணையவழி தொடர் சொற்பொழிவு கூட்டம் மே 9 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி முதல் 8.45 மணி வரை நடைபெற்றது.

கூட்டத்தில் வட சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் வரவேற்புரையாற்றினார். தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் வே.இராஜவேல் தலைமையேற்று உரை யாற்றினார். மாநில இளைஞரணி செயலாளர் .சீ.இளந்திரையன் இணைப்புரை வழங் கினார்.  மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் ஈரோடு காமராஜ், பொழிசை கண்ணன், ஆத்தூர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை யேற்று உரையாற்றினர்.

 திராவிடர் கழக பொதுச்செயலாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார் தொடக்க உரை யாற்றினார்.

திராவிடர் கழக பிரச்சார செயலாளர்  அருள்மொழி  கலந்து கொண்டு திராவிடம் என்பது என்னும் தலைப்பில், திராவிடம் என்பது என்கிற தலைப்பு எதற்காக என்றால் அடிக்கடி திராவிடம் என்றால் என்ன? திராவிடர் என்றால் யார்? என்கிற  கேள்வி களுக்கு பதில் கூறுவதற்காக தான் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதுபோன்ற கேள்விகளை யார் கேட்க வேண்டும் என்றால் திராவிடத்தால் தங்கள் மேலாதிக்கத்தை இழப்பவர்கள் அல்லது தாங்கள் ஏகபோகமாக அனுபவித்து கொண்டிருந்த உரிமைகள் மற்றவர்களுக்கு பகிர்ந்து அளித்து வருவதற்கு காரணமாக இருந்த இந்த திராவிடம் எனும் தத்துவத்திற்கு  எதிரான ஆரியர்கள் தான் கேட்க வேண்டும். ஆனால் யார் கேட்கிறார்கள் என்றால் பாதி புரிந்தும் புரியாமலும் இருக்கிற தம்பிகள் தான்.

தமிழகம் அமைதியான சூழ்நிலையை அடைந்திருக்கிறது

இன்றைக்கு தமிழகம் அமைதியான சூழ்நிலையை அடைந்திருக்கிறது. அதற்கு காரணம் இப்போது நடந்து முடிந்திருக்கும் தேர்தல் முடிவுகளும், ஆட்சி மாற்றமும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையும் அவர்களின் ஆட்சி நடப்பது தமிழ்நாட்டில் ஒரு பாதுகாப்பை, நிம்மதியை, அமைதியை உருவாக்கியிருக்கிறது.

திராவிடத்தின் சமூகநீதி பார்வை

ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தக்கூடிய தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் அவர்களின் முக்கியமான 5 ஆணைகளை வழங்கியிருக்கிறார். அதிலொன்று பெண்கள் நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என்பது. மற்ற அறிவிப்புகள் எல்லாம் முதன்மையானவை, சிறப்பானவை என்றாலும் கூட இந்த நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்கிற அறிவிப்பு பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஏனென்றால் இதுதான் திராவிடத்தின் சமூகநீதி பார்வை. ஏன் அவ்வாறு பார்க்கவேண்டும், ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இந்த சலுகை என்பது மிகப்பெரிய சேமிப்பாக இருக்கிறது. ஒரு ஆண் சேமித்து அந்த சேமிப்பை பெண்ணிடம் கொடுப்பது என்பது இன்றைய சூழ்நிலையில் நடக்காத ஒன்று அதற்கு மாறாக அந்த பெண்ணிடமே சேமிப்பு தங்கும் வகையில் பெண்களுக்கு இந்த சலு கையை கொடுக்கணும் என்கிற பார்வைதான் சமூகநீதிப் பார்வை. அடுத்து திருநங்கை களுக்கும் இந்த சலுகை வேண்டும் என்கிற கோரிக்கை வந்தவுடன் அவர்களுக்கும் கட்டணச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு வசதியை வாய்ப்பை அதி காரத்தை எல்லோருக்கும் பரவலாக்குவது தான் திராவிடம் திராவிடத்தினுடைய அடிப்படை.

வரலாற்றில் திராவிடக் குறிப்புகள்

திராவிடம் என்பதற்கு வரலாற்றுரீதியாக மானுடவியல் அறிஞர்கள் சொல்லுவது என்ன என்றால் ஒரு காலகட்டத்தில் திராவி டர்கள் சிந்து சமவெளியில் வாழ்ந்தவர்கள், பிறகு அவர்கள் ஆரியர்களின் ஊடுருவல் காரணமாக தென்னிந்தியா விற்கு வந்த வர்கள் என்று ஒரு குறிப்பும், தமிழர்களுக் கென்று குமரிக்கண்ட வரலாறு இருக்கிறது அதில் கடல்கோள் வருவதற்கு முன்னால் இந்தியாவும் இலங்கையும் இணைந்து இந்த நிலப்பரப்பில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்று ஆய்வு குறிப்பும் உண்டு. தமிழகத்திலிருந்து இமயம் வரை வாழ்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரமாக கீழடியில் கிடைத்திருக்கும் எழுத்துக் களும், சிந்துவெளியில் கிடைத்திருக்கும் எழுத்துக் களும் ஒரே மாதிரியான ஒற்றுமையுடன் இருக்கிறது. அப்போ திராவிடர்கள் தமிழகத்தையும் தாண்டி இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்திருக்கிறார்கள்  என்று ஒரு ஆய்வும் இருக்கிறது. அடுத்து 10,000 ஆண்டுகளுக்கு முன்பு திராவிடர்கள் சுமேரியா பகுதிகளிலிருந்து இங்கு வந்தவர்கள் என்று ஒரு ஆய்வும் இருக்கிறது. இந்த இரண்டு ஆய்வும் பொய் ஆரியர்கள் இங்கு வரவில்லை அவர்கள் இங்கே தான் வாழ்ந்தார்கள் என்று ஒரு ஆய்வு இருக்கிறது.

பகுத்தறிவு என்பது ஆதாரங்களோடு ஆய்வு செய்வது

இப்படிப்பட்ட சூழ்நிலையில் பகுத்தறிவு என்பது மாறி வரும் செய்திகளில் பதட்டப் படாமல் அதற்குரிய ஆதாரங்களோடு ஆய்வு செய்வது. ஆனால் தற்போது திராவிடம் என்றால் என்ன என்று கேள்வி கேட்பவர்கள் தமிழின் பெயரால் தங்களை வளர்த்துக் கொள்கிறவர்கள் புதிய வரலாறு படைக்கிறவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றால் திராவிடம் என்பது தெலுங்கர்களை மட்டுமே குறிக்கும், தமிழர்களை குறிக்காது இதனை அவர்கள் விளக்குவதற்குள் தலையே சுற்றி விடும்.

யாரெல்லாம் இந்த திராவிடம் என்கிற சொல்லை முன்னெடுக்கிறார்கள் என்றால் ஞானசம்பந்தரை முன்னிறுத்தும் ஆதி சங்கரர் இவர் திராவிட சிசு என்கிறார். ஞானசம்பந்தர் சைவத்தையும் தமிழையும் பாடியதால் அவரை அவ்வாறு அழைத்தார். அடுத்து சிலப்பதிகாரத்தில் சேரனுக்கு வாழ்த்துச் சொல்லும் போது மூன்று தமிழ் நிலைகளையும் சேர்த்து திராவிடம் புகழ் பெருக என்று ஒரு குறியீடும் சொல்லப் படுகிறது. இயற்கை சார்ந்த கவிதைகள், பாடல்கள் நிறைய இருக்கக்கூடிய சங்க இலக்கியத்தில் பெண்கள் இயல்பாக பாடும் பாடல்களில் எல்லாம் இதுபோன்ற கருத் துக்கள் கூறப்பட்டு இருக்கிறது. பகவத் கீதை மூலமாக தெரிவிக்கப்படும் வருணாசிரம தர்மம், நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன், குணத்தின் அடிப்படையில் அவர்கள் பிறப்பு அமைந் துள்ளது, என்று கூறுகிறது. அப்படியென்றால் பிறப்பு முதலா? குணம் முதலா? என்ற கேள்வி இங்கே தோன்று கிறது. பகவத்கீதையில் கூறப்படும் ஜாதிக்கு விதிக்கப்பட்ட கடமைக்கு பெயர் சுதர்மம், அந்த சுதர்மத்திற்கு எதிராக செயல்படுவது பரதர்மம்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

ஜாதி தொழிலைச் சரியாகச் செய்தால் உனக்கு கர்மயோகம் கிடைக்கும் என்று சொல்லுவது பகவத் கீதை.  இதற்கு மறுப்பாக பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றும் தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்றும் திருக் குறள் சொல்கிறது. பார்ப்பான் குற்றமே செய்தாலும் தண்டிக்க கூடாது வணங்க வேண்டும் என்பது மனுநீதி, பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் என்று சொல்லுவது திருக்குறள். திருக் குறளை ஏற்றுக் கொண்டால் மனுநீதியை, பகவத் கீதையை ஏற்றுக்கொள்ள முடியாது. இப்படி யாக திருவள்ளுவர், அவ்வையார் போன்ற வர்களின் தொடர்ச்சிதான் நாம் என்பது இன்னொரு குறியீடு.

தென்னிந்தியாவில் இருக்கும் மக்கள் மற்றும் அவர்கள் பேசும் மொழி இவை அனைத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. இவை அனைத்துக்குமே ஒரு தலைமை குடும்பம் இருக்கிறது.

இதற்கு நேரெதிராக உள்ள வடமொழி ஆரியப் பண்பாடு கொஞ்சம்கூட இவற்றோடு ஒத்துவர வில்லை. இவற் றை ஆய்வு செய்து திராவிட ஒப்பிலக்கணம் என்று வெளியிட்டவர் கால்டுவெல்.

திராவிட மக்கள் என்பது ஒரு குறியீடு

வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்ந்த காலத்தில் ராமநாதபுரம் சமஸ்தானத்தின் ஆட்சியாளராக இருந்த முத்து விஜய சேதுபதி, அவருடைய தங்கை, பர்வத வர்த்தினி, முத்துராமலிங்க சேதுபதி போன்ற வர்களின் வரலாற்றை எடுத்துக் கூறி அவர் களின் ஜமீனை மீட்டெடுக்க லண்டன் நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் துணை நின்றது திராவிட நாடு,திராவிட மக்கள் என்பது ஒரு குறியீடு, இது 1868 இல் ஒரு சட்ட புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எந்த சட்ட புத்தகமானாலும் அதில் இந்து சட்டம், திராவிட சட்டம் என அனைத்திற்கும் குறிப்பு கள் உள்ளன. தமிழர் இல்லை தமிழ் இல்லை என்று நாம் எப்போதும் சொன்னதில்லை ஆனால் திராவிடம் என்பது இவை அனைத் திற்கும் அடிப்படை என்றுதான் கூறுகிறோம்.

திராவிட சங்கம்

வள்ளலாரிடம் அப்போதிருந்த சங்கராச் சாரி கேட்கிறார் ஏன் நீங்கள் சமஸ்கிருதம் படிக்கவில்லை என்று வள்ளலார் சொல்லு கிறார் எங்களுக்கு தமிழே போதும் என்று, சமஸ்கிருதம் உலக மொழிகளுக்கெல்லாம் தாய் என்று சங்கராச்சாரி சொன்னபோது எங்கள் தமிழ் உலக மொழி களுக்கெல்லாம் தகப்பன் என்று வள்ளலார் கூறியதாக வரலாறு, ஆரியர்களின் கடவுளை ஏற்றுக் கொண்ட பக்தர்கள் கூட சமஸ்கிருத மொழியை ஏற்றுக்கொள்ள வில்லை. இப்படி எட்டாம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை மவுனமாக கொதித்துக் கொண்டிருந்த உணர்வின் வெளிப்பாடுகள் தான் 1850 க்கு பிறகு வெளிவந்த சட்டங்களும், வள்ளலார் போன்றோரின் ஆன்மீகமும். மொழி வாழ்த்து பாடிய மனோன்மணியம் சுந்தரனார், அயோத்திதாச பண்டிதர் தொடங்கிய திராவிட சங்கம், அதில் வெளியிடப்பட்ட பத்திரிக்கை  பெயர் ஒரு பைசா தமிழ். இந்த திராவிட சங்கத்திற்கும் தமிழுக் கும் என்ன தொடர்பு என்றால் இரண்டும் ஒன்றுதான்.

திராவிடம் என்பது அனைத்தையும் விமர்சிப்பது

பட்டினப்பாலை என்ற ஓர் இலக்கியம் . அதிலே ஒரு மன்னன் வெற்றி பெறுகிறான். வெற்றி பெற்ற மன்னன் எதிர் நாட்டினுடைய செல்வங்களை கவர்ந்து வருகிறார். அதில் ஆநிரை கவர்தல், மகளிர் கவர்தல் என்பதை யெல்லாம் பண்பாடு என்கிறார்கள். இவற்றை யெல்லாம் தமிழ் பண்பாடு என்று ஒத்துக் கொள்வோமா? அப்படி ஒத்துக் கொண்டால் நீங்கள் வெறும் தமிழன், இல்லை தவறு என்றால் நீங்கள் திராவிடன். இப்படி முற் போக்கான கேள்விகளை முன்வைத்து, அனைத்தையும் விமர்சனத்திற்கு உள்ளாக்கு வது திராவிடம்.

இந்தியா விடுதலை ஆவதற்கு முன்பே காங்கிரஸ் மூலமாக ஆங்கிலேயர்களிடம் இட ஒதுக்கீடு கேட்ட தலைவர் தான் தந்தை பெரியார். இப்படி அதிகாரம், உரிமை, சலுகை, கல்வி, வளம், பொருளாதாரம் இவை அனைத்தும் ஒரு சமுதாயம் மட்டுமே அனு பவிக்கக்கூடாது, அதை அனைவருக்கும் பகிர்ந்து கொடு என்பதுதான் திராவிடம்.

தமிழ்நாடு பெயர் வைத்ததே திராவிடம் தான்

பிற்காலத்தில் அரசியலில் அதே கோரிக் கையை முன்வைத்து தென்னிந்திய நலவு ரிமைச் சங்கமாக தொடங்கி, அது நீதிக் கட்சி யாக மாற்றம் பெற்று, பார்ப்பனரல்லாதார் இயக்கமாக செயல்பட்டு அரசியலில் இருந்து அதனை சாதித்தது தான் திராவிடம். தந்தை பெரியார் நீதிக் கட்சியில் இணைந்து, சுயமரியாதை இயக்கமாக அதனை நடத்தும் போது திராவிடம் சுயமரியாதையாக இருக்கிறது. இவையெல்லாம் நடக்கும்போது மலையாளம், கன்னடம், தெலுங்கு, தமிழ் இப்படி எல்லா மொழி பேசுபவர்களும் ஒன்றாக இருந்து சென்னை மாகாணமாக இருந்தது தான் அன்றைய தமிழ்நாடு. அப்போது வைத்த பெயர்தான் திராவிடம், அதில் யாருக்கும் எந்த தடையும் இல்லை. தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்ததே திராவிடம் தான். சங்கரலிங்க னாரை சென்று அவருடைய வீட்டிலேயே சந்தித்து, பெயர் மாற்றம் செய்கிறோம் என்று ஆறுதல் கூறிய அறிஞர் அண்ணா அவர்கள்  தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்த அன்றைக்கு அன்னைக்கு குழந்தைகள் பெயரிடுக்கிறோம் என்று எழுதினார்.

சிந்துவெளி நாகரிகம் முதல் கீழடி வரை திராவிடம் தமிழ் ஒன்றாகத்தான் இருந்தி ருக்கு அதனுடைய தலையாய குடும்பம் தமிழ் குடும்பம் தான். தமிழில் ஆரியப் பண்பாடு கலந்தது, அந்த ஆரியத்திற்கு வெறும் தமிழனாய், தமிழை மட்டும் நம்பியவர்கள் அடிமையாக்கப்பட்டார்கள், ஆரிய தத்துவத்தை எதிர்த்த திருவள்ளுவர் ஆரிய மொழியை எதிர்த்த சைவ வைணவ பக்தர்கள், ஆரிய வழிபாட்டு முறையை எதிர்த்த சித்தர்கள், ராமநாதபுரம் ஜமீன்தார்கள் திராவிட நாடு திராவிட மக்கள் என்று லண்டன் நீதிமன்றத்தில் சட்டப்படி  பதிவு செய்தது, வள்ளலாரின் ஆன்மிகப் போராட்டம், மனோன்மணியம் சுந்தரனாரின் திராவிட தமிழ், அயோத்திதாச பண்டிதரின் திராவிட சங்கம், தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் என தொடர்ந்து இந்த மண்ணிலே திராவிட இயக்கம் பற்றிய சிந்தனை ஒலித்துக் கொண்டே இருக்கிறது. தாலிகட்டுவது தமிழர் பண்பாடு இல்லை அதற்கு முன்னால் தாலி இல்லாமல்

யாயும் ஞாயும் யாரா கியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி யறிதும்

செம்புலப் பெயனீர் போல

அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே

என்று சொல்லுகின்ற பண்பாடுதான் தமிழ் பண்பாடு என்று சொல்லுவது திராவிடம், வாழ்வை பகுத்தறிவோடு, ஜாதி ஒழிப்போடு, பெண்ணுரிமையோடு இணைத்து எல்லோருக்கும் எல்லாவற் றையும் பகிர்ந்து அளிக்கக்கூடிய சமூக நீதியை உள்ளடக்கிய தத்துவத்திற்கு பெயர் திராவிடம்என்று திராவிடத்திற்கு வரலாற்று ஆதாரங்களோடு மிக நீண்டதொரு சிறப்புரையை எழுச்சியோடு வழங்கினார்.

இக்கூட்டத்தில் விழுப்புரம் மண்டல இளைஞரணி செய லாளர் தா. இளம்பரிதி, புதுவை இளைஞரணி தலைவர் தி.இராசா, கடலூர் மண்டல இளைஞரணி செயலாளர் பஞ்சமூர்த்தி, குடந்தை மாவட்ட இளை ஞரணித் தலைவர் .சிவகுமார், தஞ்சை மாவட்ட இளைஞரணி தலைவர் சுப்பிர மணியன், அரியலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் சு.அறிவன்,  அமைப்புச் செயலா ளர்கள் மதுரை செல்வம்,   வி.பன்னீர்செல்வம், ஊமை.ஜெயராமன், சிகாகோ சோம.இளங் கோவன், தஞ்சை மண்டல திராவிடர் கழக செயலாளர் குருசாமி, மண்டல தலைவர் சடகோபன், செயலாளர் பட்டாபிராமன்,  தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங், மாவட்ட செயலாளர் வழக் குரைஞர் அருணகிரி, திருத்துறைப்பூண்டி மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, விருதுநகர் மாவட்ட செயலாளர் ஆதவன், தாராபுரம் மாவட்ட செயலாளர் சண்முகம், கடலூர் மாவட்டத் தலைவர் தண்டபாணி, பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் வீரையன்,  திருச்சி மாவட்டத் தலைவர் ஆரோக்கியராஜ், குடந்தை மாவட்டத் தலைவர் நிம்மதி, அரியலூர் மாவட்டச் செயலாளர் .சிந்தனைச்செல்வன், சாமி நாதன், தயாளன், கோபால், பிரகாஷ், சங்கர், இராமச்சந்திரன், திருத்துறைப்பூண்டி புகழேந்தி,  . முருகேசன், கோவை இராஜா, கோவை இரமேசு, திருச்செங்கோடு சுரேசு உள்பட 90-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

புதுவை மாநிலத் தலைவர் சிவ.வீரமணி இணைய வழியாக ஒருங்கிணைப்பு செய்து உதவினார்.

கூட்டத்தின் நிறைவில் பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி செயலாளர்

சு.அரவிந்த்குமார் நன்றி கூறினார்.

தொகுப்பு:

நூலகர் வே.இராஜவேல், தஞ்சை

No comments:

Post a Comment