சென்னை, ஜூன் 26 மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் விருப்பம் போல் பயணம் செய்யும் மாதாந்திர 1000 ரூபாய் பேருந்து சலுகை அட்டை சென்னையில் 29 மய்யங்களில் வழங்கப்படுகிறது.
கரோனா தொற்றின் காரணமாக கடந்த மே, ஜூன் மாதங்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. பின்னர் பாதிப்பு குறைந்ததைத் தொடர்ந்து ஜூன் 21ஆம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கடந்த மாதம் பேருந்துகள் ஓடாததால் அப்போது பயன்படுத்தாத பேருந்து சலுகை அட்டை ஜூலை மாதம் 15ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்து சலுகை அட்டை வாங்காதவர்கள் வசதிக்காக தற்போது 1000 ரூபாய் பேருந்து பயண அட்டை விநியோகிக்கப்பட்டு வருகிறது. பேருந்து பயண அட்டை விநியோகத்தின் கால அவகாசத்தை நீட்டித்து வழங்குமாறு பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வந்தது.
அதனை ஏற்று அதன் கால அவகாசத்தை வருகிற 26ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதால் இந்த பயண அட்டையினை பெற்றுக்கொண்டு அடுத்த மாதம் (ஜூலை 15ஆம் தேதி வரை) பயணம் செய்யலாம். மேலும் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாத அடிப்படையில் பயணம் செய்திட மாதாந்திர பேருந்து சலுகை அட்டை 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த மே மாதம் பயணம் செய்ய வழங்கப்பட்டுள்ள மாதாந்திர பேருந்து சலுகை அட்டை ஜூலை மாதம் 15ஆம் தேதி வரை பயன்படுத்தி பயணம் செய்திட அமைச்சர் ராஜ கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
விடுபட்ட மாணவர்கள் அனைவருக்கும் இலவச மடிக்கணினி: அரசு தகவல்
சென்னை, ஜூன் 26 விடுபட்ட மாணவர்கள் அனைவருக்கும் இலவச மடிக்கணினி விரைவில் வழங்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் தெரிவித்தார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த காவுதீன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு ரூ.912 கோடி ஒதுக்கப்பட்டு, 9.12 லட்சம் மடிக்கணினிகள் வாங்கப்பட்டன. இலவச மடிக்கணினியால் அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். 2017- 2018ஆம் ஆண்டில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை.
இந்நிலையில் 2018 முதல் 2021 வரை மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முந்தைய கல்வியாண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க வில்லை. 2017- 2018ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர் களுக்கு இலவச மடிக்கணினி வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி டி.எஸ்.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அரசுத் தரப்பில், விடுபட்டுள்ள மாணவர்களுக்கு வழங்குவதற்காக மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. விரைவில் அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் உத்தரவிட முடியாது. இருப்பினும் மாணவர்களின் படிப்புக்கு மடிக்கணினி மிகவும் அவசியமானது. இதனால் விடுபட்ட அனைத்து மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்க அரசு பரிசீலனை செய்ய வேண்டும். இத்துடன் வழக்கு முடித்து வைக்கப்படுகிறது எனத் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
24 கோடி லிட்டர் கழிவு நீர் கடலில் கலப்பு
சென்னை, ஜூன் 26 திடக்கழிவு மேலாண்மையில், சென்னை மாநக ராட்சி, குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியத்தின் திறமையற்ற செயல்பாடுகளால், தினமும் 24 கோடி லிட்டர் கழிவு நீர் கடலில் கலப்பதாக, மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சட்டசபையில் நேற்று முன்தினம் தாக்கலான, 2019ஆம் ஆண்டு வரையிலான கணக்கு தணிக்கை அறிக்கை விபரம்:தமிழக தொலைநோக்கு திட்டம் - 2023ன் படி, 100 சதவீதம் கழிவு நீர் சுத்திகரிக்கும் திட்டம் நம்பிக்கையளிக்கும் வகையில் இல்லை.சென்னை மாநகராட்சியில் இணைக்கப்பட்ட, 42 பகுதிகளில், 31இல் பாதாள சாக்கடை திட்டம் இல்லை. திட்ட பணிகளில் பல்வேறு டெண்டர் பிரச்சினைகள் உள்ளதால், சரிவர செயல்படுத்தப்படவில்லை. மாநகராட்சி மற்றும் குடிநீர், கழிவு நீரகற்று வாரிய திறமையற்ற செயல்பாடுகளால், மழை நீர் கால்வாயில் தினமும், 24 கோடி லிட்டர் கழிவு நீர் அடையாறு, பக்கிங்ஹாம், கூவம் ஆறுகள் வழியே கடலில் கலக்கிறது. கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் சரிவர செயல்படவில்லை. இதனால், 5.7 மில்லியன் கன மீட்டர் மீத்தேன் வாயு காற்றில் கலந்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்தி உள்ளது. பயோ காஸ் மின் தயாரிப்பு நிலையங்கள் முறையாக செயல்பட்டிருந்தால், இந்த மீத்தேன் வாயுவை மின்சாரமாக மாற்றி, பல கோடி ரூபாய் மின் கட்டணத்தை மாநகராட்சி சேமித்திருக்கலாம். அந்த வாய்ப்பை நழுவ விட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment