கோயில் கொள்ளை - பின்னணியில் இருப்போர் யார்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 29, 2021

கோயில் கொள்ளை - பின்னணியில் இருப்போர் யார்?

ஹிந்து ஆலயங்கள் கொள்ளையடிக்கப்படுவதாகவும், இந்த நிலை மாற்றப்பட ஹிந்து அறநிலையத் துறை ஆலயத்திலிருந்து வெளியேற வேண்டும் என்றும் அரட்டை அடிக்கிறது ஆர்.எஸ்.எஸின் வார இதழான 'விஜயபாரதம்'.

உண்மையிலேயே கோயிலில் கொள்ளை அடிப்பவர்கள், அர்ச்சகர் பார்ப்பனர்களும், ஹிந்துத்துவா அபிமானிகளும், பக்தர்களும் தான் என்பதற்கு எத்தனை எத்தனையோ எடுத்துக்காட்டுக்கள் உண்டு.

பிரபலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அரசர் கிருஷ்ணதேவராயர் காணிக்கையாக அக்கோயிலுக்கு அளித்த வைர நகைகளும், தங்க நகைகளும் எங்கே என்ற கேள்வி எழுந்தது.

அம்மாநில உயர்நீதிமன்றமே கணக்கெடுப்பு நடத்திட உத்தரவு பிறப்பித்ததுண்டு.

டாலர் சேஷாத்திரி என்ற பார்ப்பனர் திருமலையான் டாலர் விற்பனையில் செய்த மோசடி ஊருக்கே தெரியும். ஆனாலும்  அந்தப் பார்ப்பன நபர்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததோடு தொடர்ந்து கோயிலுக்குள் பணியாற்றிய தகவல் சிரிப்பாய் சிரிக்கவில்லையா?

சிதம்பரம் நடராஜன் கோயில் கொள்ளையர்பற்றி, எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் சட்டப் பேரவையில் விலாவாரியாகப் பேசப்படவில்லையா?

கோயில் சொத்துக்களை அபகரிப்பவர்கள், கோயில் நிலங் களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள், கோயிலுக்குச் சொந்தமான கட்ட டங்களுக்கும் வாடகை செலுத்தாமல் கோடிக்கணக்கில் நிலுவை வைத்தவர்கள் பற்றி அவ்வப்போது தகவல்கள் வந்துகொண்டு தான் உள்ளன.

குறிப்பாக சென்னை மயிலாப்பூரில் கபாலிசுவரர் கோயிலுக்குச் சொந்தமான பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாடகையோ, குத்தகையோ கொடுக்காமல் அனுபவித்துக் கொண்டிருப்போர் பட்டியலை, கோயில் அதிகாரி பரஞ்சோதி என்பவர் வெளியிடவில்லையா? 9 ஆண்டுகளுக்கு முன்பே ஊடகங்களில் வெளிவந்ததே!

473 பேர்கள் கொண்ட அந்தப் பட்டியலில் இருவர்தான் வேற்று மதத்தவர்; மீதி 471 பேர்களும் ஹிந்துக்களே, ஹிந்துக்களே என்பது 'விஜயபாரதங்களுக்கு'த் தெரியாதா?

வாடகை கொடுக்காதவர் பட்டியலில் முக்கியமானது பாரதிய வித்யா பவன்-காந்தி கொலைக்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை அகற்றுவதில் முக்கியப் பங்காற்றியவருமான கே.எம்.முன்ஷியால் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் பாரதிய வித்யா பவன். கல்வியைப் பரப்புவது என்ற பெயரில் கபாலிசுவரருக்கு வைத்திருக்கும் வாடகை பாக்கி 32 இலட்சம் ரூபாய்.

அடுத்தது, மயிலாப்பூர் கிளப். ஜனவரி, 1, 1903 அன்று தொடங்கப்பட்ட பெருந்தனக்காரர்களின் தனி உடைமை கிளப்பான இது, கிரிக்கெட், டென்னிஸ் விளையாட்டுகளுக்கு  வீரர்களை தயார்படுத்தும் பயிற்சித் திடல். இதன் உறுப்பினர்களுக்குச் சீட்டாட்டம், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், ஜிம், வட இந்திய - தென் இந்திய உணவு விடுதிகள் மற்றும் 24 மணி நேர பார் போன்ற வசதிகள், என பல கிரவுண்டு கோயில் நிலத்தை குத்தகைக்கு வளைத்துப் போட்டிருக்கும் இந்த ஆன்மீக மெய்யன்பர்கள் கபாலிக்கு வைத்திருக்கும் குத்தகை பாக்கி 3.57 கோடி ரூபாய்.

தேசியத் தலைவர்எனப்பெத்த பேர்வாங்கிய நாகேஸ்வரரா வினால் ஆரம்பிக்கப்பட்டு, ஊருக்கெல்லாம் தலைவலி தைலம் தரும் அமிர்தாஞ்சன் நிறுவனம் கபாலிசுவரருக்கு வைத்திருக்கும் குத்தகைப் பாக்கி ரூ.6 கோடியே 45 இலட்சம்.

கல்விக்கும், ஒழுக்கத்துக்கும் பேர் போனதாக மெச்சிக் கொள்ளப்படும் பி.எஸ். உயர்நிலைப்பள்ளி கோயிலுக்குச் சொந்தமான 76 கிரவுண்ட் நிலத்தை 1928-இல் குத்தகைக்கு எடுத்தது. பின்னர் குத்தகை ஒப்பந்தம் 1979-இல் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. இன்று ஒரு கிரவுண்ட் நிலத்தின் சந்தை விலை ரூ.5 கோடிக்கும் மேலாகும். பல பிரபல உயரதிகாரிகளை உருவாக்கியதாகப் பெருமையாகப் பேசும் இந்தப்பள்ளி, 76 கிரவுண்டுகளுக்கு ஆண்டு குத்தகையாக ரூ.1250அய் மட்டும் ஒரே ஒருமுறை தந்துவிட்டு, கபாலிசுவரரை நீதிமன்றத்துக்கு இழுத்து வாய்தாவுக்கு அலைய விட்டுக் கொண்டிருக்கிறது.

மயிலாப்பூரில் காமதேனு திரையரங்குக்கு எதிரே கபாலிசு வரருக்குச் சொந்தமான 25 கிரவுண்ட் நிலத்தை ஆக்கிரமித்திருப்பவர் பார்த்தசாரதி அய்யங்கார். இன்று அந்த நிலத்தின் மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல். 1901- இல் 99 வருடக் குத்தகையாக எடுத்தவர்கள் இதனை உள்குத்தகைக்கு விட்டு, அது பல கை மாறி இன்று வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் எழுப்பப்பட்டு, 35 பேர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இப்படியே போகிறது பட்டியல்.

முதலை வாயில் சிக்கிய இந்தச் சொத்துகளை ஒவ்வொன்றாக மீட்பதற்கு நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள் ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள். பாரம்பரியமிக்க பெரிய மனிதர்களின் கிளப் என்று கூறப்படும் மயிலாப்பூர் கிளப்பின் வாசலில், “இது கபாலிசுவரர் கோயில் சொத்துஎன்று போர்டு எழுதி வைத்திருக்கிறது ஹிந்து அறநிலையத்துறை.

சமூகவலைதளங்களில் இதுபோன்ற தகவல்கள் வெளி வந்தனவே, சம்பந்தப்பட்டவர்கள் மூச்சுவிடவில்லையே!

கோயில்கள் பார்ப்பனர்களின் கொள்ளைக்கான மய்யமாக இருந்த நிலையில்தான், கோயில் சொத்துக்களைப் பாதுகாக்க நீதிக்கட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம்தான் ஹிந்து அறநிலையத்துறை சட்டம்.

சர்.சி.பி. ராமசாமி அய்யர் தலைமையில் அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு கோயில் கொள்ளையையும், அலங் கோலங்களையும் அலசி அலசி அறிக்கை கொடுத்தது தெரியுமா 'விஜயபாரதங்களுக்கு?'

No comments:

Post a Comment