நடப்புக் கல்வியாண்டில் 85 சதவீத கல்வி கட்டணத்தை 6 தவணைகளில் வசூலித்து கொள்ளலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 31, 2021

நடப்புக் கல்வியாண்டில் 85 சதவீத கல்வி கட்டணத்தை 6 தவணைகளில் வசூலித்து கொள்ளலாம்

 தனியார் பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை, ஜூலை 31 நடப்புக் கல்வியாண்டில் 85 சதவீத கல்வி கட்டணத்தை வசூலித்து கொள்ள தனியார் பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என கடந்த ஆட்சியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பள்ளிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று (30.7.2021) நீதிபதி கிருஷ்ணகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இது தொடர்பான உத்தரவுகளை  பிறப்பித்துள்ளார். அவரது உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது;-

நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் 85 சதவீத பள்ளிக் கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம். தனியார் பள்ளிகள், தங்களது கல்விக் கட்டணத்தை நடப்பு ஆண்டில் 6 தவணைகளில் வசூலிக்க வேண்டும். மாணவர்கள் முதல் தவணையை தற்போது செலுத்த வேண்டும். கடைசி தவணையை 2022 பிப்ரவரி 1 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

கரோனா ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பை இழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் 75 சதவீத கட்டணத்தைச் செலுத்தலாம். வருமானம் இல்லாதவர்கள், கல்விக் கட்டணத்தில் சலுகைக் கேட்டு பள்ளிகளை நாடலாம்.

தனியார் பள்ளிகளில் தொடர முடியாத மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது கட்டணம் செலுத்த முடியாதவர்களுக்கு ஆர்.டி.. சட்டத்தின் கீழ் கல்விக் கற்க தனியார் பள்ளிகள் வாய்ப்பளிக்க வேண்டும். கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி மாணவர்களை பள்ளியிலிருந்து நீக்கக் கூடாது.

இவ்வாறு நீதிபதியின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்புக் கல்வியாண்டில்

11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை

உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, ஜூலை31- இராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் உட்பட 11 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடப்புக் கல்வியாண்டில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த வாசுதேவா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''தமிழ்நாட்டில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல் உட்பட 11 மாவட்டங்களில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளை, 2020-2021 ஆம் ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வில் சேர்க்க உத்தரவிட வேண்டும்''.

இந்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு பிறப்பித்த உத்தரவு:

''புதிதாகத் தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரி கட்டடங்கள், ஆய்வகங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளைத் தமிழ்நாடு அரசு விரைவில் செய்து முடிக்க வேண்டும்.

அதன் பிறகே தேசிய மருத்துவக் கல்விக் கழகத்தின் அனுமதி பெற முடியும். 2021 - 2022ஆம் கல்வி ஆண்டில் புதிய 11 மருத்துக் கல்லூரிகளில் தலா 150 மாணவர்கள் வீதம் சேர்க்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்''.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment