மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை
மதுரை, ஜூலை 30 கீழடி மற்றும் சிவகளையை சங்ககால வாழ்விடப்பகுதிகளாக அறிவித்து திறந்தவெளி அருங்காட்சியகங்களை அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
கீழடியில் தற்போது தமிழ்நாடு அரசின் சார்பில் ஏழாம் கட்ட அகழாய்வு கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனால் கீழடி அகழாய்வு தளத்தைக் காண பொதுமக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வம் காணப்படுகிறது. நாள்தோறும் ஏராளமானோர் கீழடி அகழாய்வு தளத்திற்கு வந்து அங்கு நடைபெறும் அகழாய்வுப் பணிகளை பார்வையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினரான சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கீழடி மற்றும் சிவகளையை சங்க கால வாழ்விடப்பகுதிகளாக அறிவித்து திறந்த வெளி அருங்காட்சியங்களை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்குக்கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அவர் தனது அறிக்கையில்அகழாய்வுக் குழிகள் காலத்தின் கண்ணாடி போன்றது. அதன் கண்டுபிடிப்புகளை இருப்பிடம் விட்டு அகலாமல் காட்சிப்படுத்துவது வரலாற்றுத் துறைக்கு செய்யும் நேர்மையான பங்களிப்பாகும் எனத் தெரிவித்துள்ளார்.
கீழடி, சிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியங்களை அமைக்க, வரும் நிதிநிலை அறிக்கையில் கூடுதல் நிதியினை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சு.வெங்கடேசன் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:
Post a Comment