அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழில்நுட்பப் பிரிவுகளைத் துவக்க வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 28, 2021

அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழில்நுட்பப் பிரிவுகளைத் துவக்க வேண்டும்

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை,ஜூலை28-  தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர்மு..ஸ்டாலின் தலைமையில் நேற்று (27.7.2021) தலைமைச் செயலகத்தில்  நடைபெற்றது.

இக்கூட்டத்தில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநரகத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு..ஸ்டாலின்,  பள்ளி, கல்லூரிகளில் இளைஞர்களுக்குத் தொழில்நெறி வழிகாட்டுதல், தொழிற்சாலைகளின் தேவைகளுக்கு ஏற்பப் புதிய தொழிற்பயிற்சி நிலையங்களைத் துவக்குதல், அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழில்நுட்ப பிரிவுகளைத் தேவைப்படும் இடங்களில் துவக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

இளைஞர்களுக்கு

புதிய வேலைவாய்ப்புகளை நம் இளைஞர்களுக்கு உருவாக்கித் தர வேண்டும் என்பது இந்த அரசின் முக்கிய நோக்கம் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், இதற்கென அனைத்து மாவட்டங்களிலும் பெரிய அளவிலான உண்மையான  பலன்தரும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும் எனவும், தொழிற்சாலைகளின் எதிர்காலத் தேவைக்கேற்றவாறு பயிற்சியாளர்களுக்கு நவீனத் தொழில்நுட்பங்களில் பயிற்சி (Futuristic Employable Skill Training) வழங்கவும், அரசினர் தொழில் பயிற்சி நிலையங்களில் கட்டுமான திறன் பயிற்சி மய்யம் அமைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை ஆற்றிவரும் பணிகள், அமைப்புசாராத் தொழிலாளர்கள் நல வாரியங்களின் செயல்பாடுகள், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குத் தொழில்நெறி வழிகாட்டுதல், தொழிற்பயிற்சி நிலையங்களின் செயல்பாடுகள், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் செயல்பாடுகள் ஆகியவை குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.  நம் மாநிலத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின்கீழ் தற்போது 18 அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், 30 இலட்சம் தொழிலாளர்கள் பதிவுசெய்து கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, விபத்து நிவாரணம், ஓய்வூதியம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற்று வருகின்றனர். நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களின் மீது விரைவாகத் தீர்வு கண்டு பயனாளிகளுக்கான பலன்கள், நலத்திட்ட உதவிகள், குறித்த காலத்தில் சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

அமைப்புசாராத் தொழிலாளர் களுக்குத் திறன் பயிற்சி வழங்கவும், அவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை ஒருங்கிணைத்து அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக கைப்பேசி செயலினை (Mobile App)உருவாக்கிடவும், தொழிலாளர் துறையில் அதிக அளவிலான சேவைகளை இணைய வழியாக்கி தொழில் புரிவதைச் சுலபமாக்கிடவும், தொழிலாளர்கள் நலனுக்கான புதிய திட்டங்களைக் கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் மேற்கொள்ளவும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

பயனாளிகளைச் சென்றடைய...

அரசின் திறன் மேம்பாடு தொடர்புடைய திட்டங்கள் உரிய பயனாளிகளைச் சென்றடைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய முதலமைச்சர், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயனடையும் வகையில், தொழில் நிறுவனங்களின் தேவை சார்ந்து, வளர்ந்து வரும் தொழில் பிரிவுகளான விர்ச்சுவல் ரியாலிட்டி, க்ளவுட் கம்ப்யூட்டிங், 3-டி பிரிண்டிங், சைபர் செக்யூரிட்டி ஆகியவற்றில்  திறன் பயிற்சிகள் வழங்கவும், தோட்டக்கலை மற்றும் விவசாயம் சார்ந்த கருவிகளின் பயிற்சியினை இளைஞர்களுக்கு வழங்கவும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் .கிருஷ்ணன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறைச் செயலாளர் இரா.கிர்லோஷ் குமார், தொழிலாளர் ஆணையர் முனைவர் அதுல் ஆனந்த், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ஜி.பிரகாஷ், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்  முனைவர் சி.என். மகேஸ்வரன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் கொ. வீரராகவராவ்,  தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இயக்குநர் கே.ஜெகதீசன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்  இயக்குநர் (தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டம்) மரு.ஜி.அசோக்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment