இணையத்தில் தகவல் பரிமாற்றம்: விஞ்ஞானிகள் சாதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 29, 2021

இணையத்தில் தகவல் பரிமாற்றம்: விஞ்ஞானிகள் சாதனை

இணையத்தின் செயல்பாட்டுக்கு அடிப்படை அளவுகோலாக இருப்பது, ஒரு விநாடிக்கு எத்தனை தகவல்கள் அனுப்ப முடியும் என்பதுதான்.

அண்மையில், 3000 கி.மீ நீளமுள்ள ஒளி இழைக் கம்பிகள் மூலம் ஒரு விநாடிக்கு 319 டெராபிட் தகவல்களை அனுப்பி உலக சாதனை படைத்திருக்கின்றனர், ஜப்பானைச் சேர்ந்த என்.அய்.அய்.சி.டி,யின் விஞ்ஞானிகள்.

இங்கும் அங்குமாக இருக்கும் பல கோடி கணினிகளை இணைப்பவை ஒளி இழைக் கம்பிகள். கடலுக்கு அடியே போடப்படும் இவற்றின் வழியேதான், இணையத்தின் அனைத்துத் தகவல்களும் பரிமாறப்படுகின்றன.

ஒரு நாட்டின் இணையத் தகவல் பரிமாற்ற வேகத்திற்கும், அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் தொடர்பு இருப்பதாக வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

எனவேதான், இணைய தகவல் பரிமாற்ற வேகத்திற்கான பந்தயம் தொடங்கியிருக்கிறது.

தற்போது அமெரிக்கா மற்றும் ஜப்பானில், வீடுகளுக்கான இணைய இணைப்பின் வேகம் ஒரு நொடிக்கு 10 ஜி.பி. என்கிற அளவில்தான் உள்ளது. இதை வைத்துப் பார்க்கையில், 319 டெராபிட் என்பது பல நூறு மடங்கு வேகம் என அறியலாம்.

ஜப்பானியர்கள், இணையத் தகவல்களை ஒளிவடிவமாக மாற்றி அனுப்புவது முதல், மறுமுனையில் அவற்றைப் பெறுவது வரை பல நுட்பமான முன்னேற்றங்களை இதில் செயல்படுத்தியுள்ளனர்.

மேலும், ஏற்கெனவே உள்ள ஒளி இழைகளின் வலைப்பின்னலையே இவை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment