சென்னை மாநகராட்சி மன்றம் அனுமதி
சென்னை, ஆக.8 பிறப்பு, இறப்பு பதிவுக்கான தாமதக்கட்டணத்தை 2 ஆண்டுகளுக்கு ரத்து செய்யும் தமிழ்நாடு அரசின் உத்தரவை சென்னை மாநகராட்சியில் அமல்படுத்த மாநகராட்சி மன்றம் அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாடு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு விதிகளின்படி, ஒரு நபர் இறந்துவிட்டால் 21 நாட்களுக்குள் தொடர்புடைய பிறப்பு மற்றும் இறப்பு பதிவு அலுவலரிடம் பதிவு செய்ய வேண்டும். இதற்கு எந்தவித கட்டணமும் இல்லை. 22ஆவது நாள் முதல் 30ஆவது நாளுக்குள் பதிவு செய்ய ரூ.100, 31ஆவது நாள் முதல் ஓராண்டுக்குள் பதிவு செய்ய ரூ.200, ஓராண்டுக்குமேல் ஆன பிறகு பதிவு செய்ய ரூ.500 என தாமத கட்டணம் செலுத்த வேண்டும்.
2 ஆண்டுகளாக கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், வீடுகளில் நிகழ்ந்த பிறப்பு மற்றும் இறப்புகளை, தொடர்புடைய பிறப்பு, இறப்பு பதிவு அலுவலர் அலுவலகத்துக்கு சென்று பொதுமக்களால் பதிவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம்தேதி வரை நிகழ்ந்த பிறப்பு, இறப்பு தாமத பதிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை சென்னை மாநகராட்சியில் அமல்படுத்த மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டிருந்தார். அதற்கு மாநகராட்சி மன்றம் தற்போது அனுமதி வழங்கியுள்ளது.
மராட்டியத்தில் 790 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
மும்பை, ஆக.8 கரோனா ஊரடங்கு காலத்தில் மராட்டியத்தில் 790 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக அமைச்சர் யஷோமதி தாக்குர் தெரிவித்துள்ளார்.
மராட்டியத்தில் ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் திருமணம் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. எனவே குழந்தைகள் திருமணத்தை தடுக்க மாநில அரசு விழிப்புணர்வு நிகழச்சியை 5.8.2021 அன்று தொடங்கியது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வருகிற செப்டம்பர் மாதம் முடிவடைகிறது. இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் யாஷோமதி தாக்குர் கூறியதாவது:- ஊரடங்கின் போது பல்வேறு இடங்களில் குழந்தைகள் திருமணம் நடப்பதாக புகார்கள் வந்தது. 18 வயதுக்கு குறைந்த பெண்களுக்கு நடக்க இருந்த திருமணங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர். 2020ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் சுமார் 790 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. குழந்தைகள் திருமணம் குறித்து பொதுமக்கள் 1098 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment