கும்பகோணத்தில் கலவரத்தைத் தூண்டும் சங்பரிவார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 4, 2021

கும்பகோணத்தில் கலவரத்தைத் தூண்டும் சங்பரிவார்!

கும்பகோணம் நகரில் இஸ்லாமிய தோழர் ஒருவர் ரஹ்மத் பீஃப் ஹவுஸ் ஒன்றைத் தொடங்கினார். கும்பகோணத்தில் மட்டுமல்ல; தமிழ்நாடெங்கும் முஸ்லிம்கள் மட்டுமல்ல - எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும்  மாட்டுக்கறி உணவுக் கடை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். பெரும்பாலும் உணவு விடுதிகளிலும் மாட்டுக்கறி உணவு முக்கியமாக இடம் பெறுகிறது.

கோழி பிரியாணி, ஆட்டு பிரியாணி மாதிரி மாட்டுக்கறி பிரியாணி பல கடைகளில், பல ஊர்களில் விற்பனை நடைபெறுகிறது.

இந்த நிலையில் கும்பகோணத்தில்  ‘Beef’ ‘பீப் - மாட்டுக்கறி கடையைத் திறக்கக்கூடாது - நடத்தக்கூடாது என்று சொல்லுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.

பா... ஆளும் சில மாநிலங்களில் மாட்டுக்கறி தடை சட்டம் உள்ளதுபோல் தமிழ்நாட்டில் கிடையாது.

இந்த நிலையில் கும்பகோணத்தில் மாட்டுக்கறி உணவுக் கடையைத் திறக்கக்கூடாது - அனுமதிக்கக் கூடாது என்று கூறி ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்களும், பா...வினரும் (விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் தாம்) பிரச்சினையைக் கிளப்பி இருப்பது - தேவையற்ற பதற்றத்தை அந்தப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

சங்பரிவார்களின் இத்தகைய சட்ட விரோத அராஜக நடவடிக்கையை அறிந்த திராவிடர் கழகத்தினரும், இடது சாரிகளும், விடுதலை சிறுத்தைகளும் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு காவல் நிலையத்தில் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.

சங்பரிவார் சார்பாக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதால், நாங்களும் அதனைக் கண்டித்து போராட்டம் நடத்திடுவோம் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ள நிலையில் இரண்டு போராட்டங்களுக்கும் அனுமதியில்லை என்று காவல்துறை தெரிவித்து விட்டது.

பா.,.. சங்பரிவார்களின் நோக்கம் என்ன? ஏதோ ஒரு காரணம் காட்டி மதக்கலவரத்தை உருவாக்கலாம் என்பதுதான் அவர்களின் திட்டம்.

பல மாநிலங்களில் தங்கள் கட்சியை வளர்ப்பதற்காக எதையாவது ஒரு காரணத்தைச் சொல்லி மதக்கலவரத்தை உண்டாக்குவது என்பது அவர்களின் திட்டமிட்ட அணுகு முறையாகும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பா..., சங்பரிவார் வேர் பிடிக்க முடியவில்லை என்பது யதார்த்தமான நிலையாகும். இதனை முற்றிலும் தெரிந்து கொண்ட நிலையில், மதக்கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் குளிர் காயலாம் என்று கருதுகிறார்கள்.

இதனை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டியது அரசின் கடமையாகும். கும்பகோணத்தில் ஆரம்பித்து ஒவ்வொரு ஊரிலும் இதுபோன்ற பிரச்சினைகளைக் கையில் எடுத்துக் கொள்வது என்று திட்டமிட்டு இருப்பதாகவே தெரிகிறது.

சமூக நல்லிணக்கம் மேலோங்கி நிற்கும் தமிழ் மண்ணில் மதவாத வெறியாட்டத்தை அனுமதிக்க முடியாது - கூடாது.

கும்பகோணம் கோயில் நகரமாம் - அதனால் அங்கு மாட்டுக்கறி உணவுக் கடையை அனுமதிக்க முடியாதாம். அப்படி என்றால் கும்பகோணம் நகரில் மாட்டுக்கறி விற்பனையே கிடையாதா? கும்பகோணத்தில் உள்ள மக்கள் மாட்டுக்கறியை சாப்பிடுவதே கிடையாதா?

அவர்கள் கூறுவதை வைத்துக் கொண்டு பார்த்தாலும் கும்பகோணத்தில் மட்டும் தான் கோயில் இருக்கிறதா?

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொல்லிக் கொண்டு, கும்பகோணத்தை மட்டும் மய்யப்படுத்துவது அசல் போக்கிரித்தனமாகும்.

மாட்டுக்கறி கூடாது என்பது எந்த அடிப்படையில்? ஹிந்து மதத்தில் மகா விஷ்ணுவின் அவதாரம் என்று எடுத்துக் கொண்டால் பன்றி (வராக அவதாரம்), மீன் (மச்சாவாதாரம்) எடுத்திருக்கிறார் என்கிறார்களே! அப்படியானால் பன்றிக்கறி, மீன் இவற்றைக்கூட சாப்பிடக்கூடாது என்று சொல்லுவார்களா? சேவல் முருகனின் வாகனம் என்று கூறி குறிப்பாக சுவாமி மலையிலும், திருச்செந்தூரிலும், பழனியிலும், திருப்பரங்குன்றத்திலும், அறுபடை வீடுகளிலும் கோழிக்கறிகள் விற்பனைக்கூடாது என்பார்களா?

பா... ஆட்சி செய்யும் அசாமிலும், கோவாவிலும் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது - மாட்டுக்கறி விற்பனை கூடாது என்று சொல்லத்தயாரா? சமீபத்தில் அசாம் மாநில அமைச்சர் சான்போர் ஷீல்லே மாட்டுக்கறி அதிகம் சாப்பிடுங்கள் என்று வலியுறுத்திப் பேசியுள்ளாரே! அவரைக் கட்சியிலிருந்து நீக்கி விடுவார்களா?

இந்தியக் கிரிக்கெட்டில் விளையாடும் பார்ப்பனர்கள் (பெரும்பாலும் கிரிக்கெட்டில் பார்ப்பனர் ஆதிக்கம்தானே!) அனைவரும் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் தானே!

130 கோடி மக்கள் தொகைக் கொண்ட இந்தியா - ஜப்பான் ஒலிம்பிக்கில் பெற்ற பதக்கங்கள் எத்தனை? மாட்டுக்கறி சாப்பிடும் சின்னஞ்சிறு  குட்டி நாடுகள் எல்லாம் பதக்கப் பட்டியலில் முன் வரிசையில் இருக்கிறதே!

இந்தியா பதக்கங்கள் பெற முடியாமைக்குக் காரணங்களுள் முக்கியமானது உணவுப் பழக்கமும்  தானே!

கும்பகோணத்தில் வீண் வம்பில் ஈடுபட்டு மதக் கலவரத்திற்கு வித்திட முயலும் கும்பல் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்து தொடக்கத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.

No comments:

Post a Comment