ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க வழக்கு; தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 8, 2021

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க வழக்கு; தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு

சென்னை, ஆக.8  ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கான அனுமதியை நீட்டிக்க கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில்  விசாரணைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பால், தூத்துக்குடியில் சுமார் 1,500 காவலர்கள் குவிக்கப்பட்டனர். ஆனால், இந்த வழக்கு  விசாரணைக்கு வரவில்லை.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு மூன்று மாதம் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் மே 13ஆம் தேதி ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது.

ஜூலை 30ஆம் தேதி வரை மொத்தம் 2,266 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன், 11.19 மெட்ரிக் டன் வாயு நிலை ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் வழங்கிய 3 மாத அனுமதி ஜூலை 31ஆம் தேதியோடு முடிவடைந்தது. எனவே, ஸ்டெர்லைட் நிறுவனம் ஜூலை 30ஆம் தேதியோடு ஆக்சிஜன் உற்பத்தியை நிறுத்தியது.

கரோனா 3ஆவது அலை எச்சரிக்கை உள்ள நிலையில், ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என, வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனு கடந்த ஜூலை  30ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், தமிழ்நாட்டில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை.

எனவே,ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க வேண்டியதில்லை என, ஆட்சேபம் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

ஆனால், உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட வழக்குகளில் இந்த வழக்கு இடம் பெறவில்லை.

No comments:

Post a Comment