சென்னை, ஆக. 5- பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யமும், திராவிடர் கழகத்தின் மகளிரணி, திராவிட மகளிர் பாசறையும் இணைந்து நடத்திய மகளிர் பெரியாரியல் பயிற்சி வகுப்பு - 1, வகுப்பு - 2 ஆகிய இரண்டு வகுப்புகளின் நிறைவு விழா 31.07.2021 அன்று நடைபெற்றது.
மாலை 6.00 மணி அளவில் தொடங்கிய நிறைவு விழா நிகழ்ச்சிக்கு கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி தலைமை ஏற்றார். திராவிட மகளிர் பாசறையின் மாநில செயலாளர் பா.மணியம்மை வரவேற்புரையாற்றினார். திராவிட மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் சே.மெ. மதிவதனி இணைப்புரை வழங்கினார்.
பெண்களால் பெண்களுக்காகப் பெண்களைக் கொண்டே நடத்தப்பட்ட இந்த மகளிர் பெரியாரியல் வகுப்புக்கான ஏற்பாடுகளை, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் வழியாக கழகத்தின் மகளிரணி - மகளிர் பாசறைத் தோழர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்த பல்கலைக்கழகத்தின் வேந்தர் தமிழர் தலைவர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து, மகளிர் பெரியாரியல் பயிற்சி வகுப்பு - 1 இன் தலைமை ஒருங்கிணைப்பாளர் மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி அவர்களால் வாசிக்கப்பட்ட பயிற்சி வகுப்பின் அறிக்கை வருமாறு:
சிறப்பாக பங்கேற்ற மகளிர்
தருமபுரி மண்டலம், சேலம் மண்டலம், திருச்சி மண்டலம், நெல்லை மண்டலம், என்ற நான்கு மண்டலங்களை உள்ளடக்கிய 11 மாவட்டங்களின் சார்பாக மகளிர் தோழர்கள் பயிற்சி வகுப்பில் சிறப்பாக கலந்து கொண்டார்கள். பதிவு செய்த மகளிர் தோழர்கள் மொத்தம் 95 பேர்.
நெல்லை மண்டலம் சார்பாக 15
சேலம் மண்டலம் சார்பாக 21
திருச்சி மண்டலம் சார்பாக 20
தருமபுரி மண்டலம் சார்பாக 39
பத்து நாள் நடைபெற்ற மகளிர் பெரியாரியல் பயிற்சி வகுப்பில் சராசரியாக ஒரு நாளைக்கு 65 மகளிர் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியின் துவக்கத்தில் காணொலி இணைப்புரை வழங்கிய தோழர் வித்யா பிரபு அன்றைய ‘விடுதலை’ நாளி தழின் முக்கிய செய்திகளை வாசித்து விடுதலையை மகளிர் தோழர்களுக்கு அறிமுகம் செய்தார்.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒரு மகளிர் தோழர் தந்தை பெரியாரின் பொன்மொழிகளை வாசித்தார்.
கேள்வி - பதில்
அதைத் தொடர்ந்து அன்றைய வகுப்பு ஆசிரியர் பற்றிய அறிமுக உரையை ஒரு மகளிர் தோழர் வழங்கினார்.
ஆசிரியர்கள் சரியாக 45 நிமிடங்கள் வகுப்பு எடுத்து வகுப்பின் இறுதியில் 15 நிமிடங்கள் கேள்வி பதில் நிகழ்வாக தொடர்ந்தது. நிகழ்ச்சியின் இறுதியில் ஒரு மகளிர் தோழர் நன்றி கூறினார்.
இதுபோன்று தொடர்ந்து பத்து நாள்களும் வகுப்புகள் சிறப்பாக நடைபெற்றன.
வகுப்புகள் முடிந்த மறுநாள் தேர்வு எழுத சுமார் 41 மகளிர் தோழர்கள் விண்ணப்பித்திருந்தார்கள். அதில் 39 மகளிர் தோழர்கள் தேர்வுகளை எழுதினார்கள். தேர்வு நேரத்தின் போது மாதிரி மின்னஞ்சல் அனுப்புவதில் தொடங்கி அத்தனை உதவிகளையும் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் இளங்கோவன் அவர்கள் சிறப்பாக செய்து கொடுத்தார்.
தொழில்நுட்பப் பயிற்சி
பயிற்சி வகுப்பு தொடங்குவதற்கு முன்னதாக பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் இயக்குநர் முனைவர் நம்.சீனிவாசன், கழகப்பொதுச் செயலாளர்கள் வீஅன்புராஜ், தஞ்சை இரா.ஜெயக்குமார் ஆகியோர் தோழர் வி.சி.வில்வம், தோழர் அருண் காந்தி ஆகியோர் மூலமாக காணொலி தொழில் நுட்பத்திற்கான பயிற்சி அளித்தார்கள். மாநில கழக அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன் எங்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தினார்.
எக்செல் படிவத்தில் மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரிக்கும் பணியில் மாணவர் கழக மாநில அமைப்பாளர் செந்தூரபாண்டியன், மாணவர் கழகத்தின் நிலவன், ஓசூர் வனவேந்தன் மிகுந்த உதவியை அளித்தார்கள் .
தற்காப்புக் கருவி பரிசளிப்பு
ஒவ்வொரு நாளும் பயிற்சி வகுப்பில் வகுப்பெடுத்த ஆசிரியரைப் பற்றியும், அவருடைய உரையைப் பற்றிய சிறப்பான கருத்துக்களையும் எழுதுகின்ற மாணவர்களுக்கு பெண்களின் தற்காப்புக்காக பெப்பர் ஸ்ப்ரே எனப்படும் கைக்குள் அடங்கக்கூடிய கருவியினைப் பரிசாக ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டமும் - தோழர்களும் இணைந்து அளித்தார்கள்.
எட்டு நாள்களுக்கு மேல் வகுப்பில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் அவரவர்களுடைய கைப்பேசிக்கு ரூபாய் 50/- டேட்டா ரீசார்ஜ் மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி அவர்களால் செய்யப்பட்டது.
நெல்லை மாவட்ட தலைவர் அய்யா ராஜேந்திரன் வகுப்பில் பங்கேற்ற மாணவர்களுக்கு ஓராண்டு பெரியார் பிஞ்சு சந்தா வழங்குவதாக அறிவித்துள்ளார்.
சோம.இளங்கோவன் பரிசுத் தொகை
திராவிடர் கழக மகளிரணி - மகளிர் பாசறை தோழர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடையும் வண்ணம் பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் முதல் மதிப்பெண் பெறுகின்ற மாணவருக்கு ரூபாய் 10000/-மும், இரண்டாம் மதிப்பெண் பெறுகின்ற மாணவருக்கு ரூபாய் 5000/-மும் பரிசுத்தொகை என்று அறிவித்துள்ள மைக்கு எங்கள் நன்றியைப் பதிவு செய்கிறோம்.
இந்த பயிற்சி வகுப்பின் வெற்றிக்கு சரியாகக் களப்பணி ஆற்றிய எங்களுடைய குடும்ப சகோதரிகள் தருமபுரி மண்டலம் தோழர் இந்திரா காந்தி; திருச்சி மண்டலம் அம்பிகா கணேசன், சாந்தி சுரேஷ், ரூபியா; சேலம் மண்டலம் சே.மெ காவியா; நெல்லை மண்டலம் கவுதமி தமிழரசன், சத்யபிரியா; ஆகிய மண்டல ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் தெரிவித்துக் கொள்கி றோம். ஜூம் - காணொலி தொழில்நுட்பத்தை இயக்கி இந்த பயிற்சி வகுப்பு இவ்வளவு திறம்பட வெற்றி பெற காரணமாக அமைந்த மகளிர் தோழர் கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் பாசறை தலைவர் வித்யா பிரபு, பெரியார் பிஞ்சு கியூபா ஆகியோருக்கு நன்றியைப் பதிவு செய்கிறோம், என்று மகளிர் பெரியாரியல் பயிற்சி வகுப்பு - 1 இன் அறிக்கையை வாசித்தார்.
பொன்மொழிகள்
வகுப்பு இரண்டின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ந.தேன்மொழி வகுப்பு இரண்டின் அறிக்கையை வாசித்தார்.
வேலூர், காஞ்சிபுரம், கடலூர், புதுச்சேரி மாநில மகளிரணி மண்டலங்களுக்கான பயிற்சி வகுப்பு அறிக்கை வருமாறு:
அறிவு ஆசான் தந்தை பெரியாரின் பொன்மொழிகளோடு துவங்கியது எங்கள் பயிற்சி வகுப்பு .
முத்து முத்தான பொன்மொழிகள் - வாசித்தவர்கள் - அன்புக்கனி, அறிவுமதி, ஜெயந்தி, யாழ்சுபா, அபிநயா, பொன் சத்யா, வசுமதி, ராஜகுமாரி, அஸ்வினி, ஷோபனா ஆகியோர்.
அடுத்ததாக பயிற்சி வகுப்பில் பெரியார் ஆயிரம் புத்தகத்தில் இருந்து தினசரி ஒருகேள்வி கேட்கப்பட்டது. அதில் முதலில் பதில் சொல்லி வெற்றி பெற்றவர்களுக்குத் தினசரி 100 ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. இப்பரிசை வழங்கியவர் கடலூர் மண்டல மகளிரணி செயலாளர் ரமா பிரபா அவர்கள்.
பரிசு பெற்றவர்கள்
சுஷ்மிதா, தமிழேந்தி, ஜெயந்தி, செல்வராணி, தமிழ் செல்வி, ராஜகுமாரி, கண்ணம்மா, அறிவுமதி, உஷா ஆகியோர். தொடர்ந்து சரியான பதில் சொல்லி முதலிடம் பிடித்தவர் சுஷ்மிதா.
ஒவ்வொரு நாளும் வகுப்பு ஆசிரியர் வகுப்பு குறித்தும் அறிமுக உரையாளர் குறித்தும் விளம்பரம் மகளிருக்கு அனுப்பப்பட்டது. அதற்குப் பேருதவியாக இருந்தவர் வேலூர் மாவட்ட தலைவர் வி.இ.சிவக்குமார்.
வரலாற்று நிகழ்வுகள்
பலதரப்பட்ட வரலாற்று நிகழ்வுகள், சமூக நீதி போராட் டங்கள், பெண்ணுரிமை, ஜாதி ஒழிப்பு, பகுத்தறிவு சிந்தனைகள் குறித்து வகுப்புகள் மாணவர்களுக்குப் பாடமாக - விளக்க உரையாக அமைந்தன. பயிற்சி ஆசிரியரிடம் மாணவர்கள் சிறப்பாக கேள்விகளை முன்வைத்தனர். வகுப்பு ஆசிரியர்கள் மிகச்சிறப்பாக அவர்கள் கேள்விகளுக்கு விடை அளித்தனர். ஒவ்வொரு வகுப்பிலும் அய்ந்து கேள்விகள் மாணவர்கள் கேட்டனர். எல்லோருடையதும் சிறப்பான கேள்வி; எனினும் மிகச்சிறப்பான கேள்விகள் தேர்வு செய்யப்பட்டு அவர் களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
மிகச்சிறந்த கேள்விகளைக் கேட்டவர்களாக 20 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 100 ரூபாய் வழங்கப் பட்டது. இந்த பரிசை வழங்கியவர்கள் வேலூர் மாவட்ட மகளிரணி - மகளிர் பாசறை மகளிர். கேள்விகள் கேட்டு வெற்றி பெற்றவர்கள் - காயத்திரி, சுஷ்மிதா, ஜெயந்தி, யாழ்சுபா, முனியம்மாள், தமிழ்செல்வி, ரம்யா, உஷா.
கிராமப்புற மகளிர்
குறிப்பிட வேண்டியது - அதிகமாகக் கேள்விகளை முன்வைத்தவர்கள் - கழகம் சாராத மகளிர், அதிலும் கிராமப் புற மகளிர் என்பது குறிப்பிடத்தக்கது .
பயிற்சி வகுப்பில் கேட்கப்பட்ட சில கேள்விகள் .
1. ஜாதி அரசியலை ஒழிப்போம் என்று பேசும் தமிழ்நாட் டின் முன் வரிசையில் இருக்கும் அரசியல் தலைவர்கள் பலர் மறைமுகமாக தங்கள் ஜாதி கட்டமைப்பை வலு செய்கிறார்கள். பெரும்பாலான ஜாதிகளின் வளர்ச்சி இங்கு தான் நடக்கிறது. இதை தடுத்து சமதர்ம அரசியலை கொண்டு வருவது சாத்தியமா?
2. பெரியார் அய்யாவைப் போலவே வீரமணி அய்யாவும் அளவில்லாத தனித்தன்மைகளைக் கொண்டவர். இவர்கள் இருவரிடமே உள்ள தாங்கள் பார்த்து வியந்த சிறப்பான தனித்தன்மைகள் என்ன?
3. பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என்கிறீர்கள்.ஆனால் மாதவிலக்கான நாள்களில் சில வீடுகளில் உள்ள பூஜை அறையிலே கூட விட மாட்டார்கள். ,அப்படி இருக்க கோயில் கருவறைக்குள் விடுவது சாத்தியமா?
4. பெரியார் மணியம்மையாரை மகளாக தத்து எடுத்து இருக்கலாம், திருமணம் செய்வதற்கான ஆழமான காரணம் என்ன?
5. பகுத்தறிவு கல்வியை பாடமாகக் கொண்டு வர வேண்டும் - ஏன்?
6.பெரியார் ஜாதி இல்லேன்னு சொன்னார் - அப்புறம் எதற்கு இடஒதுக்கீடு? அப்ப பெரியார் ஜாதி இருக்குன்னு சொல்றாரா?
ஒவ்வொரு நாளும் பயிற்சி வகுப்பில் தாங்கள் புரிந்து கொண்டதை பயிற்சி வகுப்பாளர்கள் 20 வரிகளுக்குள் தங்கள் கருத்துக்களாகக் குழுவில் பதிவு செய்தனர். அதில் சிறப்பாக பதிவு செய்தவருக்கு பரிசு வழங்கப்பட்டது.
சிறப்பான கருத்துகள் பதிவு
சிறப்பான கருத்துக்களைப் பதிவு செய்த செல்வராணி, முனியம்மாள் இருவருக்கும் கழக வெளியீடான “நீதிமன்றங் களில் பெரியார்” என்ற நூலை வேலூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் லதா, முனியம்மாள், தமிழேந்தி ஆகியோ ருக்கு முறையே நூறு ரூபாய் வேலூர் மாவட்ட மகளிரணி தலைவர் கலைமணி அவர்களால் பரிசாக வழங்கப்பட்டது.
ஜெயந்தி, யாழ்சுபா, முனியம்மாள், தமிழ்ச்செல்வி ஆகியோருக்கு வேலூர் மண்டல மகளிரணி தலைவர் ச.ஈஸ்வரி “அய்யாவின் அடிச்சுவட்டில்” என்ற நூலை பரிசாக வழங்கினார்.
தமிழ்ச்செல்வி, மாளவிகா, முனியம்மாள் ஆகியோருக்கு தமிழர் தலைவரின் ‘வாழ்வியல் சிந்தனைகள்’ நூலும்; சவுந்தர்யா, யாழ்சுபா, ஜெயந்தி ஆகியோருக்கு வாழ்வியல் சிந்தனையுடன் பேனாவும் பரிசாக வழங்கியவர் திருப்பத்தூர் மாவட்ட மகளிரணி தலைவர் கவிதா.
பார்ப்பன இலக்கியங்கள்
ராஜகுமாரி, ஜெயந்தி, சவுந்தர்யா, சுஷ்மிதா, முனியம்மாள், மாளவிகா, வசந்தி, யாழ்சுபா, தமிழ்ச்செல்வி, கலா, மோனிஷா இவர்களுக்குச் செயலவைத்தலைவர் சு.அறிவுக்கரசு அவர் கள் எழுதிய “பார்ப்பன இலக்கியங்கள்”, “கடவுள் மறுப்பின் கதை” என்ற இரண்டு நூல்களையும் மாநில மகளிரணி அமைப்பாளர் ந.தேன்மொழி வழங்கினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடைய பொன் மொழிகளை சிறப்பாக பதிவிட்டவர்களில் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டனர் - அன்புக்கனி, அறிவுமதி, ஜெயந்தி. அவர் களுக்கு நம்.சீனிவாசன் எழுதிய “தமிழர் தலைவர் வீரமணி யின் வாழ்வும் பணியும்“ என்ற நூலை பரிசாக வழங்கியவர் கடலூர் மண்டல மகளிரணி செயலாளர் ரமாபிரபா.
தொடர்ந்து வகுப்புக்கு வருகை புரிந்த 54 மகளிருக்கு தந்தை பெரியாரின் “பெண் ஏன் அடிமையானாள்” நூல் வழங்கி ஊக்கப்படுத்தி இருக்கிறார் நம் கடலூர் மண்டல மகளிரணி செயலாளர் ரமாபிரபா அவர்கள்.
சிறப்பான போட்டி
இது 18 வயதும் 70 வயதுமான மகளிருக்கான சிறப்பான போட்டி. 54 பேர் தேர்வு எழுத தகுதி இருந்தாலும் 28 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். அவர்கள் வேலூர் மற்றும் கடலூர் மண்டலம் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிருக்கான இப்பயிற்சி வகுப்பை ஏற்பாடு செய்த தமிழர் தலைவர் அவர்களுக்கு நன்றி. பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் நம்.சீனிவாசன், இளங்கோவன் அவர் களுக்கும் நன்றி! பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில் பரிசு கள் வழங்கும் பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் சோம.இளங்கோவன் அய்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்ந்து வகுப்பு - 1 சார்ந்த தோழர்கள் வித்யா பிரபு, தருமபுரி மண்டலம்; தேஜஸ்வி, சேலம் மண்டலம்; சத்யபிரியா, நெல்லை மண்டலம்; R.D.யாழினி, திருச்சி மண்டலம்;
வகுப்பு - 2 இன் சார்பாக ரமாபிரபா, கடலூர் மண்டலம்; ஜெயந்தி, சுஷ்மிதா, ராஜகுமாரி, ஆகியோர் பெரியார் பயிற்சி வகுப்புகளைக் குறித்த தங்களது கருத்துகளைப் பதிவு செய்தார்கள்.
வாழ்த்திப் பேசினர்
தொடர்ந்து பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார், மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன் பயிற்சி வகுப்பினை வாழ்த்திப் பேசினார்கள்.
பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் இயக்குநரும், இந்த பெரியாரியல் பயிற்சி வகுப்பு சிறப்பாக நடைபெறுவதற்கு ஓர் அடிப்படை காரணமுமாக விளங்கிய பேராசிரியர் நம். சீனிவாசன் அவர்கள், ஒரு பெண் படித்தால் அந்த குடும்பமே படித்தது போலாகும்; பெண்களின் கைகளில் இருக்கின்ற கரண்டிகளைப் பிடுங்கிவிட்டு அவர்கள் கைகளில் புத்தகங் களைக் கொடுத்துப் படிக்கச் சொல்ல வேண்டும் என்று முழங்கிய தந்தை பெரியாரின் கருத்துகளை முன்னிறுத்தி, மகளிர் தோழர்களுக்கு பகுத்தறிவையும், அறிவியல் அறி வையும் கொடுப்பதற்காக இந்த பெரியாரியல் வகுப்பு மிகவும் பயன்பட்டது என்று குறிப்பிட்டு வாழ்த்துரை வழங்கினார்.
இயக்கம் சாராத மகளிரும்...
பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் மருத்துவர் சோம. இளங்கோவன் அவர்கள் இயக்கம் சாராத மகளிரும் இந்த பெரியாரியல் பயிற்சி வகுப்பில் பெரியாரைப் பற்றி தெரிந்து கொண்டு, பெரியாரின் கருத்துகளைப் பற்றிய தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கியது மிகவும் பாராட்டத்தக்கதாகும் என்று வாழ்த்தினார். கழகத்தின் பிரச் சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி பேசும் பொழுது மகளிர் தோழர்களின் ஒருங் கிணைப்புப் பணி - நெட்வொர்க்கிங் - மிகவும் சிறப்பாக இருந்தது என்றும், மாணவர்களைக் காட்டிலும் மகளிர் தோழர்கள் மிகவும் சிறப்பாகவும், மிகுந்த ஈடுபாட்டோடும் இந்த பயிற்சியில் கலந்து கொண்டது என்பது மிகச்சிறப்பு என்றும் பாராட்டினார்.
மன நிறைவான விழா
கழகத் துணைத் தலைவர் கவிஞர் அவர்கள் தன்னுடைய வாழ்த்துரையில், இந்த விழா நிறைவு விழா அல்ல. மன நிறைவான விழா. இது இத்தோடு முடியப்போவதில்லை. இந்த அறிவுப் பணி தொடர்ந்து நடைபெறும் என்றும்,இன்றைக்குத் திடீரென்று “இந்து தமிழ்”, “அவள் விகடன்” போன்ற பத்திரிக்கைகள் பெண் உரிமைகளைப் பற்றி எழுதத் துவங்கி இருக்கின்றன. ஆனால் அந்த பத்திரிகைகள் எல்லாம் திட்ட மிட்டு மிகச் சாமர்த்தியமாக- இதற்காக நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து குரல் கொடுத்தவர் தந்தை பெரியார் என்பதைச் சொல்லாமல் தந்தை பெரியாரை இருட்டடிப்பு செய்கிறார்கள்.
அதில் “இந்து தமிழ்” பத்திரிக்கையில் ஒரு வாசகரின் “இதற்காகவெல்லாம் பாடுபட்டவர் தந்தை பெரியார்” என்ப தைச் சுட்டிக்காட்டிய கடிதத்தை மட்டும் வெளியிட்டிருக் கிறார்கள்.
பத்திரிகைகளைப் பரப்புகின்ற பணியில்
இதுபோன்ற ஒரு காலகட்டத்தில் நம்முடைய பிரச்சாரச் சாதனங்களான ‘விடுதலை’, ‘உண்மை’ ஆகிய பத்திரிகை களைப் பரப்புகின்ற பணியில் மகளிர் தோழர்கள் கண்டிப்பாக ஈடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மகளிர் பொறுப்பாளர் தோழர்களுக்கு, இந்த பயிற்சி வகுப்பில் இணைந்து உள்ள மகளிரொடு தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறும், அவர்களை இணைத்து நிறைய நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்க வேண்டும் என்றும், அதன் விளைச் சலாக இந்த மகளிர் தோழர்களில் இருந்து நிறைய அருள் மொழிகள், மணியம்மைகள், மதிவதனிகள், ரமாபிரபாக்கள், தேன்மொழிகள் உருவாக வேண்டும் என்றும் வாழ்த்தி உரையாற்றினார்.
அறிவார்ந்த நிகழ்வில்
இறுதியாக நிறைவுரை ஆற்றிய வணக்கத்திற்கும் போற்றுதலுக்கும் உரிய திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் அவர்கள்,
பெண்கள் என்றால் பொதுவாக சினிமாக்களுக்கு செல் வார்கள், தொலைக்காட்சித் தொடர்களைத் தொடர்ந்து பார்ப்பார்கள், இது போன்ற அறிவார்ந்த நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டார்கள் என்ற அந்த வழமையை அடித்து நொறுக்கி இந்த அறிவார்ந்த நிகழ்வில் மகளிர் தோழர்கள் ஏராளமான அளவில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி என்று தன்னுடைய கருத்தை பதிவு செய்தார்.
இங்கே இடைநிற்றல் என்பதே இல்லாமல் தொடர் கற்றல், அதிலும் குறிப்பாக தந்தை பெரியாரைப் பற்றிய தொடர் கற்றல், 10 நாள்களாக தொடர்ந்து நடைபெற்று வந்ததை மிகவும் சிறப்பாக பாராட்டினார்.
இந்த நிகழ்வில் வகுப்புக்கென ஒரு கடுமையான பணியை ஆற்றிய ஒருங்கிணைப்பாளர், தோழர்களுக்கு தன்னுடைய மிகுந்த பாராட்டுகளை, வாழ்த்துகளை தமிழர் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
கேள்வி - பதில்
தொடர்ந்து மிகச் சிறப்பான ஒரு கேள்வி - பதில் நிகழ்வு அமைந்தது.
தமிழர் தலைவருடனான கேள்வி - பதில் நிகழ்ச்சியில் மகளிர் தோழர்கள் எம்.கே குமுதா, ஆர்.டி முகில், சுஷ்மிதா, அன்புக்கனி, வசந்தி, யாழ் சுபா ஆகியோர் தமிழர் தலைவரிடம் கேள்விகளை எழுப்பினர். அத்தனை மகளிர் தோழர்களுக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மிகச் சிறப்பான பதில்களை பொறுமையோடும், அன்போடும் அளித்தார்.
நிகழ்வின் இறுதியில் மாநில மகளிரணி பொருளாளர் தோழர் அகிலா எழிலரசன் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment