24 மணிநேரமும் இயங்கும் கோவிட் தடுப்பூசி முகாமினை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 6, 2021

24 மணிநேரமும் இயங்கும் கோவிட் தடுப்பூசி முகாமினை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்

சென்னை, செப்.6- சென்னை மாநகராட்சியில் அடையாறு மண்டலத்தில் உள்ள நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் 24 மணிநேரமும் இயங்கும் கோவிட் தடுப்பூசி முகாமினை  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு 4.9.2021 அன்று தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-175, வெங்கட்ரத்னம் நகர், நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் 24 மணிநேரமும் இயங்கும் கோவிட் தடுப்பூசி மய்யத்தினை  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்  கே.என்.நேரு அவர்கள்  தொடங்கி வைத்தார். தொடர்ந்து,  டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 10 கர்ப்பிணிகளுக்கு முதல் தவணை நிதியுதவியாக ரூ.6 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் ரூ.2000 மதிப்பிலான ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பெட்டகத்தை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

பின்னர் , அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கோவிட் தடுப்பூசி மய்யங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் மூலமாக பொதுமக்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பல்வேறு ஆலோசனைகள் மற்றும் உத்தரவுகளின் அடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மாற்றுத்திறனாளிகள், வணிகர்கள், குடிசைப் பகுதிகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் பெண்கள் மற்றும் காசநோய் பாதித்த நபர்கள் மற்றும் 80 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் ஆகியோருக்கு சிறப்பு முகாம்களின் மூலம் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும்  கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட் பட்ட பகுதிகளில் மண்டலத்திற்கு மூன்று கோவிட் தடுப்பூசி முகாம்கள் என 45 தடுப்பூசி முகாம்கள் பள்ளிகள், மாநகராட்சி அலுவலகங்கள் ஆகியவற்றின் மூலம் நடத்தப்பட்டு வந்தன.  இந்தத் தடுப்பூசி முகாம்கள் தற்பொழுது வார்டிற்கு 1 முகாம் என 200 தடுப்பூசி முகாம்களாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

கோவிட் தடுப்பூசி செலுத்துவதை மேலும் அதிகரிக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் 24 மணிநேரம் இயங்கக்கூடிய கோவிட் தடுப்பூசி மய்யங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.  அதனடிப்படையில், ஒரு மண்டலத்திற்கு ஒரு மய்யம் என 15 மண்டலங்களில் 24 மணி நேரமும் இயங்கும் கோவிட் தடுப்பூசி மய்யங்கள் 4.9.2021 அன்று முதல் தொடங்கப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சியில் இதுவரை 41,45,452 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.  பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசிகள் விரைந்து செலுத்தப்பட்டு வருகிறது.  குடிசைப் பகுதிகளில் தனிக்கவனம் செலுத்தப்பட்டு சுமார் 56,063 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 

மேலும், இந்த நிகழ்ச்சியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட திட்டமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் தாய்மார்களுக்கு நிதியுதவியும், ஊட்டச்சத்து பெட்டகங்களும் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

No comments:

Post a Comment