கலி. பூங்குன்றன்
"இன்று உங்களின் முகமலர்ச்சி - மகிழ்ச்சி காட்டும் உணர்ச்சி - உங்கள் உறுதிமொழியில் தொனிக்கும் எழுச்சி 10 வயது சிறுவனாக நான் மேடை ஏறினேனே, அந்த வயது உடையவனாகவே என்னை ஆக்கி விட்டது. உணர்ச்சி மயமாகவே நான் இருக்கிறேன்" என்று கூறி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தன் உரையைத் துவக்கிய நிலையில் நடிகவேள் எம்.ஆர். இராதாமன்றமே ஒரு நிசப்தமான புள்ளியில் நெருக்குருகி நின்றது. (4.9.2021, கழக மாநில அளவிலான கூட்டம்)
"பெரியார் உலகம்" என்பது தலைவர் ஆசிரியரின் கனவு.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - மண்ணச்சநல்லூர் வட்டம், திருச்சி - சென்னை முக்கிய சாலையில் உள்ள சிறுகனூருக்கு வந்த வாழ்வு சாதாரணமானதல்ல.
அங்கேதான் அறிவு ஆசான் - "மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு!" என்று குறளைவிட குறுகிய சொற்களில் மனிதத்திற்கு இலக்கணம் வகுத்த அந்த ஈரோட்டுச் சூரியன் பெயரில் உருவாகப்போகும் "பெரியார் உலகம்!"
30 ஏக்கர் பரப்பளவு உள்ள அந்த இடத்தில்தான் அந்தப் பெரியார் உலகம் உருவாக இருக்கிறது- எதிர் கால சந்ததியினருக்கு கடந்த வரலாறுகளைச் சொல்லிக் கொடுக்கும் பகுத்தறிவு - அறிவியல் கூடமாகப் பரிணமிக்க உள்ளது - எதிர்கால சிந்தனைக்கான எண்ணவோட்டத்தை எடுத்து இயம்பும் எழிலார்ந்த சோலையாக மலர்ந்து மணம் வீசப் போகிறது. பல அம்சங்களும் பரிணமிக்கப் போகின்றன.
ஏழாண்டுகளுக்கு முன் நம் தலைவர் ஆசிரியரின் எண்ணத்தில் முகிழ்த்த முத்தான கருத்து தான் இது.
'வீரமணி சார் - பணத்தைப் பற்றிக் கவலைப்படா தீர்கள்; உங்களிடம் விலை மதிக்க முடியாத பேராயுதம் ஒன்று இருக்கிறது. அதுதான் பெரியார் என்ற 'டார்ச்சு' - அதைக் கையில் ஏந்திச் செல்லுங்கள். எவ்வளவுப் பணமும் உங்களிடம் கையேந்தி நிற்கும்' என்று மறைந்த பாரதிதாசன் பல்லைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் மணி சுந்தரம் அவர்களின் கூற்றுதான் நினைவுக்கு வருகிறது.
பெரியார் பாலிடெக்னிக்கைத் தொடங்கும்போதும் சரி, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தைத் துவக்கும் போதும் சரி - கையில் என்ன பணக் கட்டுகளா இருந்தன?
எப்படி சாதிக்க முடிந்தது? வங்கியில் கடனாக வாங்கி இருந்தாலும் அதனை எப்படி நாணயமாகத் திருப்பிக் கொடுக்க முடிந்தது!
இயக்கத் «£தழர்களின் இடையறாத உழைப்பும், நிதி திரட்டலும் - தந்தை பெரியார் என்ற பேராசான் பொழிந்த தொண்டு மழையால் முளைத்து முதிர்ந்து கதிர் மணிகளாய்க் குலுங்குகிறோம் நாம் என்ற நன்றி உணர்ச்சிப் பெருக்கால் மக்கள் தந்த நிதியால் தானே இவற்றையெல்லாம் சாதிக்க முடிந்தது - முடிகிறது.
அதிகார பலமா? ஆட்சிப் பலமா? செல்வந்தர்களின் அணி வரிசையா? இவை எல்லாம் நமக்கு ஏது, எது?
இவை ஏதுமின்றி நாம் சாதித்து முடித்தோம் என்பதுதான் எத்தனைப் புகழுக்குரிய மகுடம்!
இவற்றை எல்லாம் சாதிக்க முடிந்தது என்ற முறுக்கேறிய துணிவுதான் - இதுவரை நாம் சாதித்ததை விட சவாலாக இருக்கும் "பெரியார் உலகம்" நிர்மாணத் தையும் நிறுவ முடியும் என்ற முடிவுக்கு வந்தார் நமது தலைவர் ஆசிரியர்.
88 ஆண்டு அகவையில் 78 ஆண்டுப் பொது வாழ்வு என்பது இந்தத் தலைவருக்கு மட்டுமே உண்டு. இந்த விகிதாசாரம் வேறு எந்தத் தலைவருக்கும் கிடையாது - கிடையவே கிடையாது. இது இவரின் தனித் தன்மையான பொன்னிழை!
தமிழ் நிலத்தின் பட்டி தொட்டி எல்லாம் இவருக்கு அத்துபடி - மூலை முடுக்கெல்லாம் இவர் மூளையில் அடிக்கப்பட்ட முளைக் குச்சிகள். அந்த முக்கூட்டில் கூட ஒரு காலத்தில் மேசையில் ஏறி அவர் முழங்கி இருப்பார்.
ஒரு மரத்தைப் பார்த்த அளவில்கூட 'டிரைவர் - நீ போகும் பாதை - சாலை தவறானது!' என்று எச்சரிக்கும் மின்னாற்றல் கொண்ட நினைவு சக்தி அவருடையது.
அனுபவம் என்னும் செல்வம் அவரிடம் அபரீதமாக இருக்கிறது. நினைவாற்றல் என்னும் நிதி நிரம்பவே கொட்டிக் கிடக்கிறது. இவற்றை எல்லாம் விட உலகத் தலைவர் பெரியாரின் பட்டறை நெருப்பில் வார்க்கப்பட்ட வைரம் பாய்ந்த நெஞ்சுரம் மிக்கவே இருக்கிறது.
அன்னையாரை பிரசவ அறையிலேயே இழந்த தலைவருக்கு - அன்னையாராக அம்மா மணியம்மையார் வந்தார். அந்த அன்பு, பாசம், கனிவும் இன்னொரு பக்கத்தில் இதயத்தில் இழையோடிக் கொண்டு இருந்ததால் இயக்கத் தோழர்களுக்கு ஒன்று என்றால் அவரின் இதயக் கண்கள் செந்நீர் வடிக்கும்.
இப்படியெல்லாம் ஒரு தலைவர் உருவாவது என்பது அவ்வளவு எளிதல்ல.
நேற்றைய கூட்டத்தில் அவர் பேசியது நாவால் அல்ல - இதயத்தால்! தந்தை பெரியார் இரண்டு கட்டளைகளை இட்டார். ஒன்று ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் பணியான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை ஈட்டுதல் என்பதாகும்.
தந்தை பெரியார் காலத்தில் இதற்கான அறிவிப்பு வந்து, களங்களும் உருவாக்கப்பட்ட நிலையில் நம் மக்களுக் கெல்லாம் கண் விழிப்பைத் தந்த தந்தை பெரியார் தம் கண்களை இறுகி மூடிக் கொண்டார்.
அன்னை மணியம்மையார் தலைமையேற்றார். போராட்டக் களங்கள் பல கண்டார். அஞ்சல் அலு வலகங்கள் முன் மறியல் போராட்டம், ஒன்றிய அமைச் சர்களுக்குக் கறுப்புக் கொடி போராட்டம் என்றெல்லாம் அத்திசையை நோக்கிக் களங்கள் அமைக்கப்பட்டு உஷ்ணப் பூமியாக தமிழ்நாடு உருவாக்கப்பட்டது.
அய்யாவை 95 ஆண்டு காலம் வாழ வைத்த அந்தத் தாய்ப் பறவையோ ஆண்டு 60 ஆகுமுன்பே “நான் போகிறேன் - நீ பார்த்துக் கொள்!" என்று நமது ஆசிரியரிடம் சாவியைக் கொடுத்துப் பறந்து சென்று விட்டது.
அய்யா மறைந்த போது நம் ஆசிரியருக்கு வயது வெறும் நாற்பதே. ‘விடுதலை' ஆசிரியர் பொறுப்பை ஏற்றபோது வயது வெறும் இருபத்தொன்பதே!
அன்னையாரை இழந்தபோது 45 வயதே ஆனாலும் இந்த இளந்தோள் இமயமலையைச் சுமந்தது போல - எஃகு உள்ளம் கொண்ட உறுதியான கருஞ்சட்டைத் தோழர்கள், தொண்டர்களின் உறுதி என்னும் தோள் வலுவால் துணிந்து களத்தில் இறங்கி ஒவ்வொன்றிலும் வெற்றிக் கொடியை நாட்டி வந்திருக்கிறார்.
89ஆம் வயதில் அடி எடுத்து வைக்கும் நமது தலைவர் ஆசிரியர் நேற்று நெகிழ்ந்து சொன்ன சொற்கள் - (கண்ணீரைக் காட்டினால் கழகத் தோழர்கள் பலவீனம் அடைந்தால் என்ன செய்வது என்ற எண்ணத்தில் - ஆம் கண்ணீர் சிந்தக்கூட உண்மைத் தலைவர்களுக்கு உரிமை கிடையாது)
வாராது வந்த மாமணியாம் இந்தத் திராவிட ஆட்சியில் அய்யாவின் அந்த இறுதிக் கட்டளையை நிறைவேற்றிவிட்டோம். 58 கோயில்களில் பட்டியலின மக்கள் உட்பட அர்ச்சகர்களாக அமர்ந்து விட்டனர். கருவறையில் ஓம் சத்தம் ஒழிந்து "போற்றி! போற்றி!!" என்ற தமிழ் ஒலி கேட்கிறது - ஆம், நமது வெற்றி உறுதியாயிற்று. அய்யாவின் கட்டளையும் நிறைவேற்றியாயிற்று.
இரண்டாவது கட்டளை தலைநகரில் கலைஞருக்குச் சிலை வைத்து ஆக வேண்டும் என்ற அய்யாவின் கட்டளை.
அய்யாவின் ஆணையை அன்னை மணியம்மையார் நிறைவேற்றிக் கொடுத்தார்.
ஆனால் எம்.ஜி.ஆர். மரணித்தபோது அந்தச் சிலையினை மார்பில் குத்திக் குடை சாய்த்தனர் குள்ள மனங்கொண்டோர்.
அந்த இடத்தில் கலைஞர் சிலையை வைத்தே தீருவோம் என்று ஆவேசம் காட்டினார் நமது ஆசிரியர்.
கலைஞரோ ‘முட்டுக்கட்டை‘ போட்டார் - ஆண்டுகள் ஓடின. கலைஞரும் கண் மூடினார்.
இதுதான் சந்தர்ப்பம் - சென்னை அண்ணா சாலையில் அதே இடத்தில் முத்தமிழறிஞரின் சிலையை வைப்பது என்பதில் மும்முரம் காட்டினார் - முதலமைச்சரிடமும் எழுத்து மூலமும் தெரிவித்தார் ஆசிரியர்.
பதில் வரவில்லையே என்று எண்ணி இருந்த நேரத்தில் "ஆசிரியர் அய்யா விருப்பப்படி - வேண்டுகோள்படி அண்ணா சாலையில் கலைஞர் சிலை வைக்கப்பட்டே தீரும்!" என்று அறுதியிட்டு முதலமைச்சர் உறுதி வழங்கியதைத் தொலைக்காட்சியில் கண்டு ஆசிரியர் ஆனந்தப் பெருக்கு மழையில் நனைந்தார்.
ஆக அய்யாவின் இரண்டாவது கட்டளையையும் நிறைவேற்றி விட்டோம் - எம் பணி முடிந்தது.... என்றார்.
"கரோனா கண்மூடித்தனமாக தாக்குதல் தொடுத்த போது நான் நினைத்தேன் - நம் உயிரும் பறிக்கப்பட்டால், அய்யாவின் கட்டளைகளை நிறைவேற்றா நிலையல்லவா ஏற்படும்" என்று நினைத்தாராம் - அதையும் நேற்றைய கலந்துரையாடலில் வெளிப்படுத்தினார்.
"எதுவும் எனக்கு நேரவில்லை - அய்யாவின் கட்டளையை முடித்து விட்டேன்" என்ற பெருமூச்சிலும் ஒரு மன நிறைவு தலைவரின் சொற்களில் ததும்புகிறது.
இப்பொழுது என்ன நிலை? நூறு கோடி ரூபாய் திட்டத்தில் பெரியார் உலகம் - இது நம் தலைவர் ஆசிரியரின் திட்டம்.
"இன்னும் ஏழாண்டுகளில் இந்தப் பணி நிறைவு பெறும். அதுவரை நான் இல்லாத நிலை ஏற்பட்டால் எனக்கு மெத்த நம்பிக்கை இருக்கிறது - எம் தோழர்கள் அதனை சாதித்து முடிப்பார்கள்" என்று தலைவர் ஆசிரியர் சொன்ன அந்தத் தருணம் உணர்ச்சி மயமானது - நெகிழ்ச்சி மயமானது!
தூத்துக்குடியில் 1948இல் நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாட்டில் தந்தை பெரியார் சொன்னாரே!
"நான் இறந்தாலும் ஏனைய திராவிடத் தோழர்கள் ஏமாந்து விட மாட்டார்கள். என்னுடைய வேலையை அப்படியே விட்டுவிட மாட்டார்கள் தொடர்ந்து போராடி வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டு விட்டது"
(‘குடிஅரசு', 5.6.1948)
என்றாரே - கிட்டத்தட்ட அதே சொற்களை நமது ஆசிரியர் சொன்னது என்னே பொருத்தம்! அப்படி அவர் சொன்னது ஆச்சரியமானதல்ல - அப்படி சொல்லாவிட்டால் தான் ஆச்சரியம்! காரணம் அய்யாவின் சிந்தனைச் செல்வங்களைப் பத்து வயதில் உள்வாங்கி உருவான உள்ளத்துக்குச் சொந்தக்காரர் அவர்.
நேற்றைய கூட்டத்தில் தொடக்கவுரை ஆற்றிய திரா விடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் ஒன்றைக் குறிப்பிட்டார்.
"அய்யாவின் கட்டளைகளை எல்லாம் ஆசிரியர் நிறை வேற்றி விட்டார். ஆசிரியரின் கட்டளையான "பெரியார் உலகம்" என்பதை நாம் நிறைவேற்றுவோம் என்று கூறினார்.
"இந்தக் கமிட்டி என்பது ஒரு MADE OVER கமிட்டி. என் பொறுப்புகளை பகிர்ந்து அளிக்கிறேன்!" என்று கூறினார் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
"புடம் போட்ட தோழர்கள் என்னைச் சுற்றியிருக் கிறார்கள். அதனால் எதையும் சாதிக்க முடியும் என்னால்" என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டார் தலைவர்.
"தந்தை பெரியார் 150ஆம் ஆண்டுக்கு இன்னும் ஏழாண்டுகள் இருக்கின்றன. அதற்குள் 4 கட்டங்களாக பெரியார் உலகம் பணியை முழுமையாக முடிப்போம் - முதற்கட்டமாக அய்யா சிலையை நிறுவுவோம். அதற்கான விழா விரைவில் நடைபெறும்" என்று அறிவித்தார் கழகத் தலைவர்.
"இந்தப் பணியை நாம் நிறைவாக நிகழ்த்திக் காட்டுவோம் - அதன்மூலம் நமது தலைவர் ஆசிரியரின் ஆயுளையும் நீட்டிடச் செய்வோம்" என்று கழகத் துணைத் தலைவர் சொன்னபோது ஆரவாரமும், கைத்தட்டலும் இராதா மன்றத்தையே குலுக்கியது.
நம் முன்னிருக்கும் முதல் பணி பெரியார் உலகமே, ‘விடுதலை'ப் பணியே!
“வணக்கம்! - பெரியார் உலகம்!" என்று ஒரு தோழர் இன்னொரு தோழரைச் சந்திக்கும்போது உச்சரிக்கப்பட வேண்டும். அது உள்ளத்தின் வேரில் பழுத்த பலாவாக இருக்கும் - இருக்க வேண்டும் - சென்று வாருங்கள் தோழர்களே! உங்களோடு நாங்கள் எல்லோருமே பயணிப்போம்!


No comments:
Post a Comment