யூனியன் வங்கி நிகழ்ச்சியும் சமூக நீதியின் எழுச்சியும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 28, 2021

யூனியன் வங்கி நிகழ்ச்சியும் சமூக நீதியின் எழுச்சியும்

இந்திய யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் நல சங்கத்தின் - தமிழ்நாடு மாநில 26ஆம் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் கடந்த 25.9.2021 அன்று நடைபெற்றது.

வங்கிப் பணியாளர்களும், வங்கியின் தலைமை அதிகாரிகளும் பங்கேற்று உரையாற்றினர்.

சிறப்பு அழைப்பாளர்களாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தி.மு.. மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரும் கலந்து கொண்டு கருத்துகளை எடுத்துக் கூறினர்.

திராவிடர் கழகத் தலைவர் ஆற்றிய உரையின்போது - வேறு எங்கும் காண இயலாத - பணியாளர்கள், அதிகாரிகளுக்கிடையே உள்ள இந்த இணக்கத்தை, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் பெற்றியைப் பெரிதும் பாராட்டினார்.

சங்க நிர்வாகிகள் அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் செயல்படுவதையும் சுட்டிக் காட்டினார்.

சமூக நீதி - இடஒதுக்கீடு தொடர்பாக அவர் எடுத்து வைத்த கருத்துகள் மிகவும் முக்கியமானவை.

1. 1992ஆம் ஆண்டு முதல் மண்டல் குழு பரிந்துரையின்படி பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது என்றாலும், இதுவரை 27 விழுக்காடு முழுமையான அளவில் அமல்படுத்தப்படுவதில்லை.

இது சட்டப்படி பெருங்குற்றமாகும். இந்தக் குறைபாடு எந்த இடத்தில் இருக்கிறது? இதனை சரி செய்ய நாம் என்ன செய்ய வேண்டும் என்பது மிகவும் முக்கியமாகும்.

சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டில் முதல் அமைச்சர் ஓர் அரிய அறிவிப்பினை வெளியிட்டார். இடஒதுக்கீடு சரிவர செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க கண்காணிப்புக் குழு அமைக்கப்படும் (Monitoring Committee) என்பதுதான் அந்த அறிவிப்பு.

இதே போன்ற ஓர் அமைப்பு ஒன்றிய அரசிலும் ஏற்படுத்தப்படவேண்டும்.

திரு.சுதர்சனம் நாச்சியப்பன் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு இத்தகைய பரிந்துரையைத் தெரிவித்தும், அதனை ஒன்றிய அரசு செயல்படுத்தவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

2. ஜாதி வாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டும். ஜாதி சட்டப்படி இருக்கும்வரை, அதற்கான புள்ளி விபரங்கள் கண்டிப்பாக தேவையே!

இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் வரும் பொழுதெல்லாம் நீதிபதிகள் கேட்கும் முதல் கேள்வியே ஜாதி எண்ணிக்கை பற்றிய புள்ளி விவரம் (Data) என்ன என்பதுதான்.

பிற்படுத்தப்பட்ட மக்களின் உண்மையான விழுக்காடு என்ன என்பது தெரியவரும் நிலையில், இடஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்குமாறு கேட்பார்கள், வலியுறுத்து வார்கள் என்ற அச்சம்தான் - ஜாதிவாரிக் கணக்கெடுப்பை எடுக்கத் தயங்குவதன் பின்னணி என்பதையும் திராவிடர் கழகத் தலைவர் அம்பலப்படுத்தினார்.

3. அரசுத் துறைகள், பொதுத் துறைகள் தனியார் கைக்கு வேகமாக சென்று கொண்டுள்ளன. தனியார் துறைகளில் இடஒதுக்கீடு இல்லாத நிலையில், இது ஓர் ஆபத்தான போக்காகும் என்று சுட்டிக்காட்டிய தலைவர் அவர்கள், தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு சட்டப்படி கொண்டு வரப்பட வேண்டும் என்பதையும் வலி யுறுத்தினார்.

4. சமூக நீதி என்று வரும்போது அதில் பாலியல் நீதியும் அவசியமாகும்.

5. நீதித் துறையில் மாவட்ட நீதிபதிகள் வரை இடஒதுக்கீடு உண்டு. உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் இடஒதுக்கீடு அவசியம்.

6. வங்கிகள் தனியார் மயமானால், இதுபோன்ற பணியாளர்கள் நிகழ்ச்சியில் அந்த வங்கி அதிகாரிகள் தயக்கமில்லாமல் பங்கேற்க வருவார்களா, என்ற கேள்வியையும் திராவிடர் கழகத் தலைவர் எழுப்பினார்.

இவற்றையெல்லாம் நேர்த்தியாகக் குறிப்பிட்ட திரா விடர் கழகத் தலைவர், சமூக நீதிக்காக நாங்கள் களத்தில் இறங்குகிறோம் என்றால் நீங்கள் எல்லாம் களத்தில் இறங்க வேண்டாம் - களத்தில் நிற்கும் எங்களுக்குக் கரம் கொடுங்கள் என்ற வேண்டுகோளையும் முன் வைத்தார்.

இந்திய யூனியன் வங்கியின் பொதுக்குழு சமூகநீதிக் களத்தின் பொதுவான அம்சங்களையும் வலியுறுத்திய நிகழ்வாக அமைந்தது பாராட்டத்தக்கது.

No comments:

Post a Comment