வந்தவாசி தொகுதியில் பல்நோக்கு மருத்துவமனையை அரசு அமைக்க வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 5, 2021

வந்தவாசி தொகுதியில் பல்நோக்கு மருத்துவமனையை அரசு அமைக்க வேண்டும்

 சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார் வலியுறுத்தல்

சென்னை, செப். 5- வந்தவாசியில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்க வேண்டும் என சட்டமன்றத்தில் உரையாற்றிய வந்தவாசி சட்ட மன்றத் தொகுதி உறுப்பினர் எஸ். அம்பேத்குமார் கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் 1.9.2021 அன்று வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை உள்ளிட்ட மானியக்கோரிக்கைகள் மீதான விவகாரத்தில் பங்கேற்று பேசிய வந்தவாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார்:-

இனிவரும் காலங்களில் அரசினால் கட்டப்படும் வீடுகள் சென்னைப் பெருநகர வளர்ச்சிக்குழுமப் பொறியாளரும், கட்டுமானப் பொறியாளரும் அனுமதி கொடுத்த பின்பே கான்கிரீட் போட அனுமதிக்க வேண்டும்.

வந்தவாசியில் மக்கள் தொகை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் வந்தவாசி தொகுதிக்கு ஒரு பல்நோக்கு மருத்துவமனை அமைத்து மருத்துவ வசதியை செய்து கொடுக்குமாறு அரசை கேட்டுக் கொள்கிறேன்.

வந்தவாசி அரசு மேல்நிலைப்பள்ளி 100 ஆண்டுகளைக் கடந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் அதில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ஒரு அடுக்கு அரங்கம் அமைத்துத்தர வேண்டும்.

 வந்தவாசி அருகே ஓடும் சுகநதி ஆற்றினை தூர்வாரி, தடுப்புசுவர் கட்டி, தேவைப்படும் இடங்களில் தடுப்பணைக்கட்டி, இப்பகுதியிலுள்ள விவசாயிகளை காப்பாற்றி, அவர்கள் வாழ்வில் ஒளி வீச செய்ய வேண்டும். வந்தவாசி அருகே உள்ள பெரணமல்லூரை தலைமையிடமாகக் கொண்டு, ஒரு தனி வட்டம் அமைத்துத்தர வேண்டும்.

மாராட்டிய ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட வந்தவாசி கோட்டை, 400 ஆண்டு கால வரலாற்றின் அடையாளமாக உள்ளது. சிதிலமைடைந்த வந்தவாசி கோட்டையை பராமரிப்பதோடு, வந்தவாசி போர் நடந்த நினைவை குறிக்கும் வகையில் அவ்விடத்தில் நினைவுத்தூண் அமைக்க வேண்டும்.

 இவ்வாறு அவர் உரையாற்றினார்.

No comments:

Post a Comment