தந்தை பெரியாரின் அருமை ஜப்பானியர்களுக்குத் தெரிகிறது - இங்குள்ள சனாதனிகளுக்குத் தெரியவில்லையே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 28, 2021

தந்தை பெரியாரின் அருமை ஜப்பானியர்களுக்குத் தெரிகிறது - இங்குள்ள சனாதனிகளுக்குத் தெரியவில்லையே!

தந்தை பெரியார் பிறந்த நாளில்கற்போம் பெரியாரியம்' நூலை வெளியிட்டு  பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உரை

சென்னை,செப்.28தந்தைபெரியாரின்அருமைஜப்பானியர்களுக்குத் தெரிகிறது; இங்குள்ள சனாதனிகளுக்குத் தெரியவில்லையே என்றார் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீர பாண்டியன் அவர்கள்.

‘‘கற்போம் பெரியாரியம்‘’ நூல் வெளியீடு

 கடந்த 17.9.2021  அன்று காலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 143 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ‘‘கற்போம் பெரியாரியம்'' நூலை வெளியிட்டு திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செய லாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே,

உரையாற்றி சென்றிருக்கின்ற நமது அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு சேகர்பாபு அவர்களே,

ஜப்பான் தூதரகக் கலாச்சார மற்றும் தகவல் பிரிவு ஆராய்ச்சியாளர் செல்வி மியூசிகி இனோஉவே சான் அவர்களே, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, கரூர் நாடாளுமன்ற உறுப் பினர் ஜோதிமணி அவர்களே, பேராசிரியர் சுலோசனா அவர்களே, வரவேற்புரையாற்றி இருக்கின்ற பொறி யாளர் இன்பக்கனி அவர்களே,

இந்த அரங்கில் கூடியிருக்கின்ற பெரியோர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கவிஞர் அவர்கள் எனக்குக் கொடுத்திருக்கின்ற நேரம் 15 நிமிடங்கள்தான். ஆனாலும், ஆசிரியர் அவர்கள், எல்லோருக்கும் மதிய உணவு இருக்கிறது. ஆகவே, நீங்கள் கொஞ்சம் கூடுதலாக வேண்டுமானாலும் நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்ன அந்த சலுகையைப் பயன்படுத்திக் கொண்டு, தேவைப் பட்டால், கூடுதலாக ஒரு 5 நிமிடங்கள் சேர்த்து 20 நிமிடங்கள் எடுத்துக்கொண்டு என்னுடைய உரையை அமைத்துக்கொள்கிறேன்.

கேட்காதவர்களுக்காக ஒரு மறு ஒலிபரப்பு

நான் பேசத் தொடங்குவதற்கு முன்பு - இந்த நாளை சமூகநீதி நாள் என்று அறிவித்திருக்கின்ற தமிழ்நாடு அரசு - ஏன் அறிவித்தது? அதற்கான பின்புலம் என்ன என்பதை மிகச் சுருக்கமாக இன்று காலையில், ஒரு நிமிட செய்தியாக தோழர்கள் எல்லோருக்கும் அனுப்பி யிருந்தேன். உங்களில் சிலர் கேட்டிருக்கலாம்; கேட்காத வர்களுக்காக ஒரு மறு ஒலிபரப்பு.

ஆசிரியர் அவர்களுடைய கருத்துகளை வைத்துத் தான் நான் அதைச் சொல்லியிருந்தேன். நேரலை ஒளிபரப்பு இது. நான் சொன்னதற்கான காரணம் இதுதான்.

பெரியாரை, பெரியார் என்று சொன்னால், அவருக் குப் பெருமை சேர்ந்துவிடுமோ என்று அஞ்சி, சிறியோர் சிலர் அவரை .வெ.ரா. என்கிறார்கள்.

பெரியாருக்கு ஏன் அத்தனை உயரமான சிலை என்று, சில குள்ளமான மனிதர்கள் கேள்வி கேட்கி றார்கள்.

இப்பொழுதும் அய்யா பெரியார் சிலையை, சிலர் உடைக்கிறார்கள். காவிச் சாயம் பூசி, அவரை அவமா னப்படுத்தவேண்டும் என்று நினைக்கிறார்கள். காவி என்றால், அவமானம் என்று அவர்களுக்குத் தெரிந்தி ருக்கிறது.

சாகும்வரையில், ஜாதியை எதிர்த்துப் போராடிய அய்யா பெரியார் அவர்களை, ‘நாயக்கன்' என்று சிலர் நக்கலடிக்கிறார்கள். இத்தனைக்கும் பிறகு, அய்யா அவர்கள் இறந்து 50 ஆண்டுகளை நெருங்குகிற இந்தக் காலகட்டத்திலும், தமிழ்நாட்டில், இந்த மண்ணில் அய்யா உயிர்ப்போடு வாழ்ந்து கொண்டிருக்கிறாரே, அதற்கு என்ன காரணம்?

சமூகநீதிதான் அசையா சொத்து!

வேறொன்றும் இல்லை; நம் தமிழர் தலைவர் அவர்கள்தான் சொல்லுவார்.

பெரியார் அவர்களிடத்தில் அசையும் சொத்தும் உண்டு; அசையா சொத்தும் உண்டு.

நாம் எல்லோரும் அசையும் சொத்து;

பெரியார் அவர்கள் தந்துவிட்டுப் போயிருக்கின்ற சமூகநீதிதான் அசையா சொத்து!

நான் கடைசியாக இப்படி முடித்தேன் - இவ்வள வையும் உள்வாங்கிக்கொண்டுதான், கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி  தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் சட்டமன்றத்தில் ஓர் அறிவிப்பு கொடுத்தார், தந்தை பெரியார் பிறந்த நாள் - சமூகநீதி நாள், அவ்வளவுதான்.

இத்தனையும் உள்வாங்கிக்கொண்டு அந்த அறிவிப்பு  வெளியில் வந்திருக்கிறது.

ஜப்பானில் இருக்கின்றவர்களுக்குப் புரிகின்றது - இந்த சனாதனிகளுக்குப் புரியவில்லை

ஆனால், இன்னமும் பலருக்குப் புரியவில்லை. இன்றைக்குக் காலையில் வெளிவந்ததினமணி'யில் நடுப்பக்கத்தில் ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது. கண்டிப்பாக கவிஞர் அவர்கள் படித்திருப்பார்.

கவிஞர் சொல்லுகின்றபொழுது சொன்னார், ராமனா நேரிடையாகச் சென்று போரிட்டார்? வானரப் படை கள்தானே! என்றார். இன்னமும் கொஞ்சம் பாக்கியிருக் கிறார்கள். சில பேர் தப்பித்து வந்துவிட்டார்கள். அவர் களில் ஒருவர் நடுப்பக்கக் கட்டுரையில் எழுதியிருக்கிறார். இந்த .வெ.ரா. பிறந்த நாளுக்கு ஏன் சமூகநீதி நாள் என்று பெயரிட்டார்கள் என்பது புரியவில்லை என்கிறார்.

ஜப்பானில் இருக்கின்றவர்களுக்குப் புரிகின்றது - இந்த சனாதனிகளுக்குப் புரியவில்லை. இந்த விழாவிற்கு அவர்களை அழைத்திருக்கலாம் - ஜப்பானியர்களுக்கே புரிகிறது. இவர்களுக்குப் புரியவில்லை - இவர்களுக்குப் புரிய வைப்பது நம்முடைய வேலையும் இல்லை. புரியவேண்டியவர்களுக்கெல்லாம் புரிகிறது.

ஆசிரியர் அவர்களுக்கு இந்த மேடையில், நாம் அத்தனை பேரும் நன்றி சொல்லவேண்டும். பெரியாரை உலகளாவிய ஒரு சிந்தனையோடு, உலகம் முழுவதும் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்.

ஜப்பானிய மொழியில் தந்தை பெரியார் அவர்களின் நூல்கள் வந்திருக்கிறது என்றால், இங்கே உரையாற்றிய கமலக்கண்ணன் சொன்னார், நான் பெரியாருக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன் என்று.

நாங்கள் எல்லோரும் கமலக்கண்ணனுக்கும் நன்றிக் கடன் பட்டிருக்கின்றோம். செந்தில்குமாருக்கும், அந்த நண்பர்களுக்கும் நன்றிக் கடன் பட்டிருக்கின்றோம்.

ஆய்வு நூல் அன்று - அறிமுக நூல்.

‘‘கற்போம் பெரியாரியம்'' என்ற தலைப்பில் ஆசிரியர் அவர்கள் 352 பக்கங்களில் எழுதியிருக்கிறார். முழுமை யாகப் படித்து முடித்துவிட்டேன்.

அந்தப் புத்தகம் ஆய்வு நூல் அன்று - அறிமுக நூல்.

யாருக்கான அறிவு நூல்?

யாருக்கான பாட நூல்?

நம் எல்லோருக்குமே பாட நூல்.

உண்மையாகவே அவர் ஆசிரியர்தான்!

நான் முன்வைக்கின்ற ஒரே ஒரு வேண்டுகோள் - நம்மில் அத்தனை பேருமே ஒருமுறை அந்தப் புத்த கத்தை மறுபடியும் படிக்க வேண்டும். பெரியாரைப் படித்திருக்கிறோம், சிந்தனைகளை அறிந்திருக்கிறோம். ஆனாலும், எப்படி பெரியாரை அறிந்துகொள்ளவேண் டும் என்று, படிப்படியாகச் சொல்லிக் கொடுக்கின்ற அவர் - உண்மையாகவே ஆசிரியர்தான்.

இந்தப் புத்தகம் படிக்கும்பொழுதுதான் எனக்குத் தோன்றிற்று - நாம் ஆசிரியர் என்று, ‘விடுதலை' நாளி தழின் ஆசிரியர் என்பதற்காக சொல்கிறோம். இல்லை, இந்தப் புத்தகத்தைப் படியுங்கள், அவர் ஆசிரியர்தான் என்பது புரியும்.

நமக்குத் தெரிந்த செய்திகளுக்கு நுட்பமாக எங்கேயிருந்தெல்லாம் இந்த சான்றுகளைக் காட்டுகிறார். சுய மரியாதை இயக்கம்பற்றி நாம் அறியாமல் இருக்கிறோமா? நாம் அத்தனை பேரும் அறிவோம்.

ஆனால், இந்த சுயமரியாதை இயக்கம் என்ப தைப்பற்றிய ஒரு நுட்பமான செய்தியை அந்த இயலிலே சொல்கிறார். உலகத்திலே எத்தனையோ கட்சிகள், எத்தனையோ இயக்கங்கள் உண்டு.

வர்க்கத்திற்காக உருவாக்கப்பட்ட கட்சி - வர்க்கப் போராட்டத்திற்காக - இனத்தின் அடிப்படையில்  - மொழியின் அடிப்படையில், நம்முடைய நாட்டில் ஜாதிக்குக்கூட கட்சியும், சங்கமும் இருக்கின்றன.

சுயமரியாதைக்காக ஓர் இயக்கம்

எங்கேயாவது உலகத்தில் சுயமரியாதைக்காக ஓர் இயக்கம் உருவான வரலாற்றைப் பார்த்திருக்கிறோமா என்று கேட்கிறார். உண்மையிலேயே இல்லை.

எங்கே தோன்றுகிறது அது?

ஓர் ஆளுக்கு நாம் நன்றி சொல்லவேண்டும்.

10 வயது சிறுவனாக பெரியார் இருக்கின்றபொழுது, பள்ளிக்கூடத்திற்குப் போகின்ற நேரத்தில், வீட்டில் சொல்லி அனுப்புகிறார்கள். ‘தாகம் எடுத்தால், நீ மேல்ஜாதிக்காரர்கள் வீட்டில்தான் குடிக்கவேண்டும்; வேறு எங்கும் குடிக்கக்கூடாது'' என்று.

அவாள் வீட்டிற்குப் போய் தண்ணீர் கேட்கிறார், 10 வயது சிறுவனாக இருந்த பெரியார்.

அப்பொழுது அவர்கள் தண்ணீரைக் கொடுத்து விட்டு, ‘‘அண்ணாந்துதான் குடிக்கவேண்டும்; உதடு பட்டுடக்கூடாது'' என்று சொன்னவுடன், இவருக்குச் சுருக்கென்கிறது.

தண்ணீர் குடித்து முடித்தவுடன்,

‘‘அந்த சொம்பை கீழே வைத்துவிடு'' என்று சொல்லி, உள்ளே இருந்து கொஞ்சம் ஜலம் எடுத்துண்டு வந்து, அதை அலம்பிண்டு அந்த சொம்பை எடுத்துக்கொண்டு போனார்களே, அந்த இடத்தில் அவருக்கு சுயமரியாதை பளிச்சென்று வந்தது.

சுயமரியாதை இயக்கத்தைப் பெரியார் தொடங்கியபொழுது, வயது 46

தான் தொட்ட ஒரு பாத்திரத்தைத் தொடாமல், அதன் மீது தண்ணீர் தெளித்து எடுக்கிறார்கள் என்றால், இனி நாளையிலிருந்து தாகம் எடுத்தாலும், இந்த வீட்டிற்கு வரக்கூடாது; வேறு யாருடைய வீட்டிற்காவது போவது என்று பெரியார் முடிவெடுத்தபொழுது வயது 10. அவர் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியபொழுது, 46.

36 ஆண்டுகள் உள்ளே எரிந்த கனல், அந்த இயக்கமாக வெளிவந்தது என்பதை எழுதுகிறார்.

அந்த சுயமரியாதை இயக்கத்தைப்பற்றி பெரியார் என்ன குறிப்பிடுகிறார்?

எவ்வளவு செய்தி இருக்கிறது என்பதைப் பாருங்கள்.

பெரியார் எழுதுகிறார்,

‘‘என்னைப் போன்ற சாதாரணமான ஒருவன் கையில் எடுத்ததால், இந்த சுயமரியாதை இயக்கம் வேண்டு மானால், பெரிய விளம்பரம் பெறாமல் போகலாம், ஆனால், சுயமரியாதை என்கிற கோட்பாட்டுக்கு இணை யாக எதுவும் இல்லை'' என்று பெரியார் எழுதுகிறார்.

பெரியார் சாதாரணமானவர் என்றால், நாமெல்லாம் யாரானவர்கள் ?

என்னைப் போன்ற சாதாரணமான என்று பெரியார் தன்னைச் சொல்லிக் கொள்வார் என்றால், அவர் சாதாரணமானவர் என்றால், நாமெல்லாம் யாரானவர்கள் என்று எண்ணிப்பார்க்கிறேன்.

போலியான தன்னடக்கம் எப்பொழுதும் பெரியாரி டத்தில் கிடையாது.

ஏன் அப்படி அவர் சொல்கிறார் என்றால், அவர் தன்னை இயல்பாக அப்படித்தான் கருதிக் கொண்டிருந் திருக்கிறார்.

அப்படி கருதிக் கொண்டிருந்த வரையில்தான், நம்மால் கூடுதலாக வேலை செய்ய முடியும்.

தன்னைப்பற்றியே கூடுதலாக நினைக்கின்றபொழுது வந்து சேருகிற ஆபத்து என்ன தெரியுமா?

நான் 90 கிலோ இருக்கிறேன் என்றால், தான் என்கின்ற கர்வம் வந்தால், அது இன்னொரு 90 கிலோவையும் சுமந்துகொண்டு நடக்கவேண்டும்.

பெரியார், தன்னைத்தானே சாதாரணமானவராக நினைத்துக்கொண்டு, எல்லா வேலைகளையும் தன் தோள்மீது போட்டுக்கொண்டு பணியாற்றி இருக்கிறார்.

நமக்கு இந்தப் பணிகளும், இந்த வேலைகளுமே நிறைய இருக்கின்றன.

ஜோதிமணி அவர்களிடம் நான் சொன்ன அந்தச் செய்தி, ஒருமுறை தேர்தலில் நிற்பதற்கான வாய்ப்புகளில், சில சிக்கல்கள் ஏற்பட்டு, அவர் மன உளைச்சலில் இருக்கிறார் என்று கேள்விப்பட்டு, நான் அவரிடம் தொலைப்பேசியில் சொன்னேன், ‘‘விடும்மா, இது இல்லை என்றால், நமக்கு ஆயிரம் வேலை இருக்கிறது'' என்றேன்.

உண்மையாகவே, பெரியாரின் கைத்தடியை கையில் ஏந்தக் கூடிய பெண்ணாக, அவர் எந்தக் கட்சியில் இருந்தாலும், ஜோதிமணியை நான் பார்க்கிறேன்.

இப்பொழுது அவர் இங்கே பேசியதற்குப் பிறகு எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், இரண்டு பேர் இல்லீங்க, ஆர்.எஸ்.எஸ்.சினுடைய அய்ந்து தத்துவங்கள் பின்னால் இருக்கின்றன என்று இவ்வளவு நுணுக்கிப் பார்த்த பிறகு, நீங்கள் தேர்தலில் நின்றதும், அரசியலுக்குப் போனதும் சரிதானோ என்று எனக்குத் தோன்றுகிறது - தேவைப்படுகிறது.

ஒவ்வொன்றையும் பிரித்துப் பிரித்து ஆசிரியர் அய்யா அவர்கள்  எழுதியிருக்கிறார்

எல்லாத் தளங்களிலும் நமக்குத் தேவைப்படுகிறது - இந்த நாள் சமூகநீதி நாள் என்பதால் நான் சொல்கிறேன், ஒவ்வொன்றையும் பிரித்துப் பிரித்து ஆசிரியர் அய்யா அவர்கள்  எழுதிக் கொடுத்திருக்கிறார்.

பெரியாரும் - பகுத்தறிவும்!

பெரியாரும் - பெண்ணுரிமைச் சிந்தனைகளும்!

பெரியாரும் - சமூகநீதியும்!

பெரியாரின் அணுகுமுறை!

பெரியாரின் மனிதநேயம்!

அனைத்தையும் பிரித்துப் பிரித்து சின்னப் பிள்ளை களுக்குச் சொல்வதைப்போல சொல்லியிருக்கிறார்.

இன்றைக்குச் சமூகநீதி நாள் என்பதற்காக நான் சொல்கிறேன். சமூகநீதிக்காகப் பெரியார் என்ன செய்து விட்டார் என்று பாவம், ‘தினமணி'க்குத் தெரியவே யில்லை.

இந்தப் புத்தகத்தையாவது படித்துத் தொலையுங்கள் என்று நான் சொல்கிறேன்.

காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த நாளிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் - 1919 இல் காங்கிரசில் சேருகிறார் - 1925 இல் வெளியில் வருகிறார். 6 ஆண்டுகளும் காங்கிரஸ் மாநாட்டில், வகுப்புவாரி உரிமைக்காகத் தீர்மானத்தைக் கொண்டு வந்தவர் தந்தை பெரியார்.

1920 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் மாநாடு நடைபெறுகிறது. பெரியார் தீர்மானத்தைக் கொண்டு வருகிறார். அந்தத் தீர்மானம், 6 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிடுகிறது.

ஆனால், அந்த மாநாட்டிற்குத் தலைமை வகித்த சீனிவாச அய்யங்கார் என்ன சொல்லுகிறார் என்றால், ‘‘இது பொதுநலத்திற்குக் கேடு என்பதால், இந்தத் தீர்மா னம் வெற்றி பெற்றாலும் ஏற்றுக்கொள்ள முடியாது'' என்று.

அவர்களிடத்தில் எப்பொழுதும் ஒரு யுக்தி உண்டு. அவர்களுக்கு ஆபத்து வந்தால், தேசத்திற்கு ஆபத்து என்று சொல்லிவிடுவார்கள்.

குப்தர்களின் காலம் பொற்காலம் யாருக்கு?

பாடப் புத்தகத்திலே குப்தர்களின் காலம் பொற்காலம் என்று இருக்கும். அந்தப் பாடத்தை நடத்தும்போதே நான் கேள்வி கேட்பேன், யாருக்கு? என்று கேள்வி இருக்கிறது என்று.

குப்தர்களின் காலம் பொற்காலம் - நமக்கல்ல - யாருக்குப் பொற்காலம் என்று ஒரு பெரிய கேள்வி இருக்கிறது. பூணூல் போட்டவர்களுக்குப் பொற்காலம்.

அண்மையில்கூட, ஒருவர் மிகவும் கோபப்பட்டு, அவர் பெயரையெல்லாம் இந்த மேடையில் சொல்ல வேண்டாம் - சுகி சிவத்திற்கு ஆன்மிகமே புரியவில்லை என்றார்.

உடனே நான் எழுதினேன், சுகிசிவத்திற்கு ஆன்மிகம் தெரியாதா? அல்லது அவர் தோளில் பூணூல் கிடை யாதா? உங்களுக்கு எது வருத்தமாக இருக்கிறது என்று.

கிருபானந்தவாரியாரையே ஏற்காதவர்கள் இவர்கள். எனவே, சுகிசிவத்தை நான் அதிகம் பாராட்டுவதில்லை - அது அவருக்குத் தொல்லையாக சேரவேண்டாம் என்பதற்காக.

நீங்கள் எண்ணிப்பார்க்கவேண்டும், எந்தத் தளத்திலிருந்தாலும், பெரியார் விதைத்த விதைகள் எங்கும் இருக்கின்றன என்பதுதானே ஓவியர் மருது. வேறு யார்?

மருதுவினுடைய கைவண்ணத்திற்கு மேடைக்கு அழைத்துப் பாராட்டுகிறார்கள் என்றால், எங்கே இந்தத் திடலில் இருக்கின்ற ஒரு செய்தியே - மூத்த தோழராக இன்றைக்கும், என்றைக்கும் இருக்கின்ற அந்த உணர்வு - அவர் முழுக்க முழுக்க நம்முடைய திடலில் இருக் கின்றவர் இல்லை - ஆனாலும், அந்த உணர்வாளரின் படம் இந்தத் திடலுக்குள் இருக்கவேண்டும் என்று ஆசிரியர் கருதுகிறார் என்றால், மருதுவுக்கும் பாராட்டு, எங்கள் மைனருக்கும் பாராட்டு.

அடுத்து வருகிற புதிய படை இல்லையா?

மைனரைத் தெரியுமா? என்று அய்யா கேட்டார்கள்.

தெரியும், அவங்க அப்பாவையும் காலையில் பார்த் தேன் என்றேன்.

, மேஜரையும் தெரியுமா? மைனரையும் தெரியும், மேஜரையும் தெரியுமா? என்று கேட்டார்.

நமக்கு எல்லாவிதமான படைகளும் தேவைப்படு கின்றன.

சமூகநீதியில்,

1920 இல் திருநெல்வேலி,

1921 இல் தஞ்சாவூர்,

1922 இல் காங்கிரஸ் மாநாடு திருப்பூரில்,

1923 இல் சேலம்,

1924 இல் திருவண்ணாமலை,

1925 இல் காஞ்சிபுரம்

ஆறு செய்திகளையும் அய்யா இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

கொள்கையாக வைத்துக்கொள்ளலாம்; தீர்மானமாக நிறைவேற்றவேண்டாம் என்றார் இராஜாஜி!

1921 ஆம் ஆண்டு மாநாடு தஞ்சாவூரில் நடை பெறுகிறது  - அப்போதும் பெரியார் தீர்மானத்தைக் கொண்டு வருகிறார். மாநாட்டுக்குத் தலைவராக இருந்த இராஜாஜி என்ன சொல்கிறார் என்றால், ‘‘இதை நாம் கொள்கையாக வைத்துக்கொள்ளலாம்; தீர்மானமாக நிறைவேற்றவேண்டாம்'' என்று.

கொள்கையாக வைத்துக்கொண்டு ஊறுகாய்தான் போடவேண்டும்.

நடைமுறைக்கு வரவிடாமல், கொள்கையாக வைத்துக்கொள்ளலாம், ஆனால், தீர்மானமாகக் கொண்டு வரவேண்டாம் என்கிறார்.

பிறகு, இவர்கள் எல்லாம் ஒழியட்டும்; வரதராசுலு நாயுடு ஒரு மாநாட்டிற்குத் தலைமை வகிக்கும்பொழுதும் அந்தத் தீர்மானம் அனுமதிக்கப்படவில்லை.

கடைசியாக அய்யா, எப்பொழுது பொறுமை இழந் தார் என்றால், அவர் மிக நெருக்கமான நண்பராகக் கருதுகிற திரு.வி.. தலைமையேற்ற காஞ்சிபுரம் மாநாட்டிலும் மறுக்கப்பட்டபொழுது அவர் வெளியில் வந்தார். இத்தனை செய்திகளும் இந்தப் புத்தகத்தின் உள்ளே இருக்கின்றன.

பெரியாருடைய போராட்டங்கள்!

பெரியாருடைய போராட்டங்கள், 1920 இல் கள்ளுக் கடை மறியலில் தொடங்கி, வைக்கம் போராட்டம், சேரன்மாதேவி குருகுலப் போராட்டம், பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம் - திருவல்லிக்கேணியில் இருக்கின்ற பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டம் - பெயரை அழிக்கவேண்டுமா என்று சிலர் கேட் கிறார்கள்.

பல பேருக்கு பல சந்தேகங்கள் இருக்கின்றன. இன்னும் சிலர் குழம்பி குழம்பி நாங்கள் தமிழரா? திராவிடரா? என்று தெருத் தெருவாகக் கேட்டுக்கொண் டிருக்கிறார்கள்.

பாவம், நீங்கள் தமிழர்கள், நீங்கள் திராவிடர்கள் - திராவிடக் கருத்தியலை ஏற்றுக்கொண்டிருந்தால், திராவிடர்கள்.

ஒரே ஓர் எடுத்துக்காட்டைச் சொல்லட்டுமா?

பெங்களூருவை நீக்கினால் தமிழர்கள்; அய்யங்காரை நீக்கினால் திராவிடர்கள்!

பெங்களூரு அய்யங்கார் பேக்கரியில், பெங்களூ ருவை மட்டும் நீக்கினால் போதும் என்றால், நீங்கள் தமிழர்கள், நாங்களும் தமிழர்கள்.

அய்யங்காரை முதலில் நீக்கவேண்டும் என்றால், நீங்கள் திராவிடர்கள்.

வெறும் பெங்களூருவை மட்டும் நீக்கினால் மட்டும் போதாது - அய்யங்காரை முதலில் நீக்கு.

ஒரு கூட்டத்தில் நண்பர் ஒருவர் பேசிக்கொண் டிருந்தார் - ஜாதி அமைப்பு வேண்டும் - ஜாதிக் கட்டுப் பாடு வேண்டும் - ஜாதி இருந்தால்தான் நமக்குப் பாது காப்பு என்று பேசிக்கொண்டிருந்தபொழுது, இன்னொ ருவர் எழுந்து கடுமையாக அதனை மறுத்தார்.

அந்த நண்பர் பேசுவதை நான் ஏற்கவில்லை. நானும் தொடக்கத்திலிருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறேன் - ஜாதி, ஜாதி என்றே சொல்லிக் கொண்டிருக்கிறார்; அப்படி சொல்லக்கூடாது, சாதி என்று சொல்லுங்கள் என்றார்.

அவர் ஜாதி சங்கத்தை மறுக்கவில்லை. ஜாதி என்று சொல்லாதீர்கள், சாதி என்று சொல்லுங்கள் என்றார்.

ஜாதி மட்டும் கூடாது என்றால், நீங்கள் தமிழராக இருக்கலாம்; ஜாதியே கூடாது என்றால், நீங்கள் திரா விடத் தமிழர்தான். அதுதான் அடிப்படை.

பிராமணாள் கபேபெயர்ப் பலகை நீக்கப் போராட்டம்!

உங்களுக்கு அந்த சந்தேகம் போகாது. ஏனென்றால், அந்த சந்தேகம் உண்மையானதல்ல. யார் திராவிடர்? யார் தமிழர்? என்று திரும்பத் திரும்பக் குழம்பிக் கொண் டிருக்கின்றவர்கள் எல்லோருக்கும் சேர்த்துத்தான், அய்யா அவர்கள்பிராமணாள் கபே' என்கிற பெயரைக் கூட நீக்கவேண்டும் என்று ஒரு போராட்டத்தை எத்த னைக் காலம் நடத்தினார்? தினந்தோறும் ஒரு 5 பேர் சென்று, அந்த உணவகத்தின்முன்பு ஆர்ப்பாட்டம் செய்வார்கள்.

அதேபோலத்தான் வடநாட்டு சேட்டுகள் கடைக்கு முன்பாக தினந்தோறும் தொடர்ந்த ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இவர்கள் என்ன  5 பேர், 6 பேர்தானே வந்துகொண்டிருக்கிறார்கள், இதனால் என்ன நடக்கப் போகிறது என்று நினைத்தால், தினந்தோறும் வரு வார்கள்.

அமைதியாக, கையெடுத்து வணங்கி, ‘‘இந்தக் கடைக்குள் போகாதீர்’’

ஆங்கிலத்தில் நியூசன்ஸ் என்று சொல்வார்களே - இதைவிட  பெரிய தொல்லையை வேறு யாரும் கொடுக் கவே முடியாது. மாலை 5 மணிக்கு, 6 மணிக்கு கடைக்கு ஆள்கள் வரும்பொழுது, 6 பேர் எந்தவிதமான அடி தடியோ, ஆர்ப்பாட்டமோ செய்யாமல்,  அமைதியாக, கையெடுத்து வணங்கி, ‘‘இந்தக் கடைக்குள் போகாதீர்'' என்று சொல்வார்கள்.

இதைவிட தொல்லை அந்தக் கடைக்காரருக்கு வேறு என்ன இருக்க முடியும்?

எத்தனைவிதமான போராட்டங்களை அய்யா நடத்தினார்; கடைசியாக 1957 இல் மிக உச்சகட்டமான போராட்டம் சட்ட எரிப்புப் போராட்டம்; அதற்குப் பிறகும், 1960 இல் இராமர் பட எரிப்புப் போராட்டம் - அதற்குப் பிறகு, தமிழ்நாடு நீங்கலாக, இந்திய வரைபட எரிப்புப் போராட்டம்.

இதை யாருக்காக நான் அழுத்திச் சொல்கிறேன் என்றால், நாம் திராவிடரா? தமிழரா? என்று குழப்பும், குழப்ப கோஷ்டிக்குத்தான்.

திராவிட நாடு நீங்கலாக என்று பெரியார் சொல்ல வில்லை; தமிழ்நாடு நீங்கலாக இந்திய வரைபட எரிப்பு என்று தொடர்ச்சியான போராட்டங்களைப்பற்றிய செய்திகள்.

இந்திய அரசமைப்புச் சட்டம் முதன்முதலாகத் திருத்தப்பட்டதே, நாம் இங்கு நடத்திய பெரியார் தலை மையிலான போராட்டங்கள்தான் அடிப்படை என்பதற் கான சான்று எங்கே இருக்கிறது?

1951 மே மாதம் 29 ஆம் தேதி, பிரதமர் நேரு அவர்கள், நாடாளுமன்றத்தில் பேசிய உரையிலிருந்து அய்யா எடுத்துக் கொடுத்திருக்கிறார்.

ஜோதிமணி அவர்கள் எடுக்கிறார் என்றால், நாடாளு மன்றத்தில் உறுப்பினர், அவரால் எடுத்துவிட முடியும். ஆனால், இங்கே அமர்ந்துகொண்டு அய்யா எடுக்கிறார் என்றால், எல்லாம் இந்த நூலகத்தில்  இருக்கிறது; இந்தத் தமிழ்நாட்டின் வரலாறு, இந்தியாவின் வரலாறு இந்த நூலகத்தில் இருக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொள்கிறவர் எல்லோரும் அறிவாளியாக இருப்பார்.

பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களின் உரை

நேரு என்ன பேசுகிறார், நேருவினுடைய சொற்களை ஆங்கிலத்தில் அப்படியே எடுத்துக் கொடுத்திருக்கிறார்.

You know what was the immediate cause for bringing the first Amendment.

நீங்கள் குறித்துக் கொள்ளவேண்டும். அது முதல் திருத்தம் இல்லை என்று சிலர் பேசிக்கொண்டிருக் கிறார்கள்.

“You know what was the immediate cause for bringing the first Amendment to the constitution. You all know that there are certain happenings in Madras State, which have had us to make this Amendment”

‘‘சென்னை மாகாணத்தில் நடந்த சில நிகழ்வுகள்தான் இந்தத் திருப்பத்தைக் கொண்டு வருவதற்கான ஒரு வேகத்தை, தேவையை நமக்குக் கொடுத்தன'' என்கிறார் நேரு.

எனவே, இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் திருத் தியது - தன்னை சாதாரணமானவன் என்று சொல்லிக் கொண்டாரே அய்யா பெரியார் அவர்கள்தான்.

அனைத்து செய்திகளையும் இப்படி வரிசையாக, ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லியிருக்கின்ற அந்தக் காட்சிகளை நாம் பார்க்கிறோம்.

எனவே, இந்தப் புத்தகம் புதிதாக இயக்கத்திற்குள் வருகின்ற ஒவ்வொருவருக்கும் படிப்பதற்குக் கொடுக் கப்படவேண்டிய புத்தகம்.

நான் உண்மையாக நேற்றைக்கு கருதினேன் - இனிமேல் புதிதாக யாராவது திராவிட இயக்கத்தைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்றால், எங்கும் போக வேண்டாம் - ‘‘கற்போம் பெரியாரியம்'' என்னும் இந்த ஆசிரியரின் புத்தகத்தைப் பரிசாகக் கொடுங்கள்; அதை விட முக்கியம், அவர்களைப் படிக்கச் சொல்லுங்கள். பரிசாக வாங்கிக் கொள்வார்கள் எல்லோரும். அதைப் படித்தாக வேண்டும்.

இறுதியாக ஒரு செய்தியைச் சொல்லி நான் என்னுரையை  நிறைவு செய்கிறேன்.

செண்பகம் - துரைராஜன் வழக்கு!

மருத்துவக் கல்லூரி படிப்பிற்காக இன்றைக்கும் நம் பிள்ளைகள் இறந்துகொண்டிருக்கிறார்கள். நீட் தேர்வை எதிர்க்கவேண்டும் என்கிற அதேநேரத்தில், பிள்ளை களுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்கவேண்டும்; ஒரு நாளும் தற்கொலையை கையில் ஏந்தக்கூடாது என் பதை நாம் திரும்பத் திரும்ப சொல்லவேண்டி இருக்கிறது.

மருத்துவராகவில்லை என்றால் இந்த உலகத்தில் வாழ முடியாதா என்ன?

அந்த மருத்துவக் கல்லூரிப் படிப்பு குறித்துதான் வழக்கு. முதன்முதலாக 1950 ஜனவரி 26 ஆம் தேதி, அரசமைப்புச் சட்டம் வருகிறது; ஜூன் மாதமே வழக்குப் போடுகிறார்கள் செண்பகம் துரைராஜன் - சீனிவாசன் என்கிற இரண்டு பேர். எல்லா செய்தியும் இந்தப் புத்தகத்தில் தேதியோடு இருக்கிறது.

ஜனவரி மாதத்தில் அரசமைப்புச் சட்டம் - ஜூன் மாதத்தில் வழக்கு - அதைவிட ஒரு வேடிக்கை என்ன தெரியுமா? உயர்நீதிமன்றத்தில் ஜூலை மாதத்திலேயே தீர்ப்பு வருகிறது.

இதில் இரண்டு செய்திகள் - எந்த செண்பகம் துரைராஜன் வழக்குத் தொடுத்தாரோ, அவர் மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பிக்கவே இல்லை.

உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் அய்யா பெரியாரின் கைத்தடி நொறுக்கிப் போட்டிருக்கிறது

அதைவிட கொடுமை - வழக்குத் தொடுத்த அந்த அபிடவிட்டில் அவர் கையெழுத்தே போடவில்லை. கையெழுத்துகூட போடாத ஒரு மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, அடுத்த மாதமே தீர்ப்பளித்தது - 1950 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில்.

உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது - டிசம்பர் மாதமே அவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.

இங்கே நாம் கவனிக்கவேண்டியது என்னவென்றால், சட்டத்தை மட்டும் திருத்தவில்லை - உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் அய்யா பெரியாரின் கைத்தடி நொறுக்கிப் போட்டிருக்கிறது என்பது வரலாறு.

தென்கொரியாவிலிருந்து ஒரு தோழர்!

நான் இறுதியாக சொல்ல விரும்பிய செய்தி- இரண்டு நாள்களுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து ஒரு தொலை பேசி வந்தது. அந்த நண்பர் என்னிடம் உரையாற்றும் பொழுது, ‘‘என்னுடைய பெயர் டாக்டர் சத்தியமூர்த்தி, ஜெனடிக் இன்ஜினியரிங் என்கிற துறையில், ஒரு பேராசிரியராக இருக்கிறேன், நான் தென்கொரியாவில் இருந்து பேசுகிறேன். 2008 ஆம் ஆண்டிலிருந்து நான் இங்கே இருக்கிறேன். சேலத்திற்குப் பக்கத்தில் ஒரு சிறிய குக்கிராமத்தில் பிறந்தவன் நான்.

நானும், என் மனைவியும் தென்கொரியாவில், பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்களாக 2008 ஆம் ஆண்டிலிருந்து பணியாற்றுகின்றோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், எங்கள் முன்னால் ஒரு கேள்வி வைக்கப்பட்டது. இவ்வளவு சிறிய குக்கிராமத்திலிருந்து இவ்வளவு பெரிய பொறுப்பிற்கு வெளிநாட்டில் நீங்கள் வந்திருக்கிறீர்களே - இதற்குப் பின்னணியில் உங்கள் நாட்டில் ஏதேனும் ஓர் இயக்கம் இருந்த திருக்கிறதா? என்று கேட்டார்கள்.

எனக்குத் தெரியவில்லை, அதற்குப் பிறகுதான் தேடத் தொடங்கினேன். அதற்குப் பிறகுதான் தெரிந்து கொண்டேன், பெரியாரின் நூல்களையும், ஆசிரியரின் நூல்களையும் படித்தேன்; அதற்குப் பின்னால் என்னு டைய உரையையும், தோழர் அருள்மொழி உரையையும் தொடர்ந்து கேட்டதாக'' அவர் சொன்னார்.

பெரியார்தான் என்னை கொரியாவிற்குக் கொண்டு வந்து சேர்த்தவர்

‘‘உங்கள்இரண்டு பேருடைய உரைகளும், பெரியார் தான் என்னை கொரியாவிற்குக் கொண்டு வந்து சேர்த் தவர் என்கிற உண்மையை எனக்குப் புரிய வைத்தது. இதை நான் பல்கலைக் கழகத்தில் சொன்னேன்.

இப்பொழுது எங்கள் பல்கலைக் கழகத் துணை வேந்தர், பேராசிரியர்கள் எல்லாம் என்ன சொல்கிறார்கள் என்றால், இப்படிப்பட்ட ஒரு மனிதன் - இப்படிப்பட்ட ஓர் இயக்கம் - நீங்கள் பிறந்த மண்ணில் இருந்திருக்கிறது என்று சொன்னால், அந்த இயக்கத்தைப்பற்றியும், இன்றும் அதனுடைய நிலைபற்றியும் நீங்கள் ஒரு புத்த கத்தைக் கொண்டு வாருங்கள்; நாங்கள் கொரிய மொழி யில் மொழி பெயர்த்து பல்கலைக் கழக வெளியீடாக வெளியிட விரும்புகிறோம் என்று சொன்னார்கள்'' என்கிறார்.

ஜப்பான் ஆயிற்று - இப்பொழுது கொரியா!

எந்தப் புத்தகத்தை நான் மொழி பெயர்ப்பதற்குப் பரிந்துரைக்கலாம் என்று அவர் கேட்டார்; இரண்டு நாள்களில் சொல்கிறேன் என்றேன்.

‘‘கற்போம் பெரியாரியம்‘’ என்ற இந்த நூலைவிட பொருத்தமான ஒன்று இருக்க முடியாது!

ஆசிரியர் அனுமதித்தால், ‘‘கற்போம் பெரியாரியம்'' என்ற இந்த நூலைவிட பொருத்தமான ஒன்று இருக்க முடியாது. ஆசிரியரின் அனுமதி வேண்டி, விடைபெறு கிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment