அனைவருக்கும் அனைத்தும் என்பதே சமூகநீதி தத்துவம் - உயர்ஜாதியினருக்கும் உரிய பங்கு அளிப்பதில் எவ்விதத் தடையுமில்லை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 29, 2021

அனைவருக்கும் அனைத்தும் என்பதே சமூகநீதி தத்துவம் - உயர்ஜாதியினருக்கும் உரிய பங்கு அளிப்பதில் எவ்விதத் தடையுமில்லை!

பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்றசமூகநீதி - தமிழகம் உருவாக்கிய சிற்பிகள் முதலமைச்சர்கள்இணையவழி கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

சென்னை, செப்.29 -  அனைவருக்கும் அனைத்தும் என்பதே சமூகநீதி தத்துவம்; உயர்ஜாதியினருக்கும் உரிய பங்கு அளிப்பதில் எவ்விதத் தடையுமில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

‘‘சமூகநீதி - தமிழகம் உருவாக்கிய சிற்பிகள் முதலமைச்சர்கள்''

கடந்த 21.8.2021  அன்று மாலை  சென்னை பச்சையப் பன் கல்லூரியில் - தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற் றாண்டு விழா (1920-2021) - சிறப்பு நிகழ்ச்சியில் (1.8.2021 முதல் 21.8.2021 வரை) ‘‘சமூகநீதி - தமிழகம் உருவாக்கிய சிற்பிகள் முதலமைச்சர்கள்'' (17.12.1920 முதல் இன்றுவரை தமிழ்நாடு முதலமைச்சர்களின் வாழ்வும் - பணியும்) என்ற தலைப்பில் நடைபெற்ற இணைய வழி கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

மிகுந்த பெருமையோடும், மகிழ்ச்சியோடும் தொடர்ந்து இத்தனை நாள்கள் ஒரு நூற்றாண்டு வர லாற்றை, அதில் இடம்பெற்ற ஆட்சிகளின்  ஆளுமை களை, முதலமைச்சர்களை, அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் அவர்களுடைய சாதனைகளையெல்லாம் மக்களுக்கு நினைவூட்டி, மிகச் சிறந்த ஒரு தத்துவமாக - சமூகநீதி என்பது எப்படி இந்த மண் - உலகத்திற்கே ஏன் குறிப்பாக இந்தியாவினுடைய பல்வேறு மாநிலங் களுக்குக்கூட ஒரு அருட்கொடையாக அளித்த ஒன்று என்பதை நிலைநாட்டக் கூடிய வகையில், பச்சையப்பன் கல்லூரியினுடைய வரலாற்றுத் துறையின் மேல்பட்ட ஆய்வு மாணவர்கள் சிறந்த கருத்தியலோடு ஏற்பாடு செய்துள்ள இந்த அருமையான நிகழ்ச்சிக்கு, வரலாற்றுத் துறை வரலாற்றையும் படைத்திருக்கிறது - வெறும் வரலாற்றுத் துறையாக இல்லை - வரலாறு படைத்த வரலாற்றுத் துறை என்ற பெருமையை என்றைக்கும் அது தக்க வைத்துக்கொண்டிருக்கிறது என்ற சிறப்புக் குரிய நிகழ்ச்சியான இந்த நிகழ்ச்சி - நிறைவு நிகழ்ச்சி என்று சொல்லக்கூடிய இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய அன்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரிய இந்தக் கல்லூரியினுடைய முதல்வர் - முனைவர் சிறீஜெயந்தி அம்மையார் அவர்களே,

இவ்வளவு பெரிய நிகழ்ச்சியா? என்று

வியக்கும் வண்ணம்

அதுபோலவே, வரவேற்புரை - அறிமுக உரை என்கிற பெயராலே, பேராசிரியர் ஷோபனா அவர்கள், இவ்வளவு பெரிய நிகழ்ச்சியா என்று வியக்கும் வண்ணம் ஒரு தொகுப்புரையைக் கொடுத்தார்கள்.

அதேபோல, டாக்டர் சரவணன் அவர்கள், நம்மு டைய அருமைப் பேராசிரியப் பெருமக்கள் எல்லோரும் ஒத்துழைத்து, மிக அருமையான ஒரு நிகழ்வை - வர லாற்று நிகழ்வை - யாருக்கும் தோன்றாதது - பச்சை யப்பன் கல்லூரி மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக் கும், பேராசிரியர்களுக்கும் தோன்றும். ஏனென்றால், இது பேரறிஞர் அண்ணாவைத் தந்த கல்லூரி. இனமானப் பேராசிரியர் இங்கே பயிற்றுவித்து மாணவர்களைத் தயாரித்த கூடம். அதுமட்டுமல்ல, டாக்டர் மு.. போன்ற வர்கள் மிகப்பெரிய சிந்தனையாளர்களாக, கல்வி யாளர்களாக, துணைவேந்தர்களாக உயரக்கூடிய அள விற்கு உயர்ந்தார்கள் என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

சமூகநீதி ஒவ்வொரு முதலமைச்சரின்

முத்தாய்ப்பு முறை

அப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பச்சையப்பன் கல்லூரியில் மிகப்பெரிய அளவிற்கு வரலாற்று நிகழ் வுகள் நடந்திருக்கின்றன என்று சொல்லுகின்ற நேரத்தில், சிறிய, பெரிய வாய்ப்புகளையெல்லாம் நினைவூட்டக் கூடிய இந்த அருமையான நிகழ்ச்சியில், சமூகநீதி ஒவ்வொரு முதலமைச்சரின் முத்தாய்ப்பு முறை - என்று சொல்லவேண்டும் என்று சொன்னால், ஒரு நூறாண்டு காலத்தில் வாழ்ந்தவர்கள் அவர்கள் எல்லாம்.

கடலைக் காட்டுகிறேன் என்று உங்களை கப்பலில் ஏற்றி, ஒரு பகுதியைக் காட்டினால் - பரந்த விரிவான வானம் என்று சொன்னால், அதை நீங்கள் புரிந்துகொள்ள முடியாது. வேண்டுமானால், சில மேகங்களை அருகிலே பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.

அதுபோலத்தான் நண்பர்களே, எனக்குக் கொடுக்கப் பட்டு இருக்கும் மணித்துளிகளில், சில சில செய்திகளை உங்களுக்கு வேக வேகமாக ஆங்கிலத்தில் ஏரியல் வியூ என்று சொல்வார்களே அதுபோல, விமானத்தில் பய ணம் செய்கிறவர்கள் - கீழே காட்டி, இதுதான் அந்த இடம் என்று சொல்வதைப்போல, வரலாற்றுக் குறிப்பு களைச் சொல்கிறோம்.

நூறாண்டு கால சென்னை ராஜ்ஜியத்தினுடைய வரலாறாக முகிழ்த்தது சாதாரணமானதல்ல. இதிலே மய்யப்புள்ளியாக, கருத்தாக நாம் எடுத்துக்கொள்வது, சமூகநீதி என்பதாகும்.

வருங்காலத் தலைமுறைக்கு வரலாற்றினுடைய சுவடுகளை அடையாளம் காட்டக்கூடியதாக...

அதை செதுக்கிய சிற்பிகள், அதை செயலாக் கியவர்கள் இவர்களுடைய வரலாற்றையெல்லாம் நினைத்து நாம் புகழஞ்சலி செலுத்தவேண்டும். வருங் காலத் தலைமுறைக்கு வரலாற்றினுடைய சுவடுகளை அடையாளம் காட்டக்கூடியதாகவும் அமைவது என்பது இந்த நிகழ்ச்சியினுடைய மிக முக்கியமான நீரோட்டம்.

அந்த வகையில், சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள முதல்வர், பேராசிரியப் பெருமக்கள், ஆய்வுத் துறை மாணவர்கள், குறிப்பாக மேற்பட்டப் படிப்புத் துறையினர், வரலாற்றுத் துறையினர் உள்பட அனைவருக்கும், இங்கே திரண்டிருக்கக்கூடிய அறிவார்ந்த அரங்கமாக இருக்கக்கூடிய - இன்றைய அறிவியல் காரணமாக, ஓர் அறைக்குள் நாம் அமர்ந்திருந்தாலும், அகில உலகமும் அதைக் கேட்கக்கூடிய வாய்ப்பு இன்றைக்கு அறிவியல் அதனை வளர்த்திருக்கிறது - பெருமையாகத் தந்திருக் கிறது - அப்படிக் கேட்டுக்கொண்டிருக்கின்ற அறிவார்ந்த பெருமக்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தந்தை பெரியார் அவர்களைப்பற்றி

பேரறிஞர் அண்ணா

நூறாண்டு கால வரலாறு என்பது, அது சாதா ரணமானதல்ல. தந்தை பெரியார் அவர்களைப் பற்றி பேரறிஞர் அண்ணா அவர்கள் சொல்லும் பொழுதுYou are putting centuries in a capsule என்ற ஒரு ஆங்கிலச் சொற்றொடரைப் பயன் படுத்தினார்கள். பல நூற்றாண் டுகளை ஒரு சிறிய குளிகையிலே அடக்குவதைப்போல, அவருடைய பணிகள் இருந்தது என்று.

அதையே இன்னும் கொஞ்சம் விரிவாக ஆக்கிக் கொண்டு, அதையே இதற்கும் நான் பயன்படுத்த விரும் புகிறேன். அண்ணா அவர்கள் சொன்ன உவமைதான்.

இந்த நூறாண்டு காலத்திலே சமூகநீதி என்பது - அவ்வளவு பெரிய சாதனையை - தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல - தென்மாநிலங்களுக்கு மட்டுமல்ல - பழைய சென்னை ராஜதானியிலிருந்து உருவாக் கியிருக்கலாம் - மெட்ராஸ் பிரசிடென்சி என்று அந்தக் காலத்திலிருந்து பிறகு மெட்ராஸ் ஸ்டேட் டாகி, பிறகு பேரறிஞர் அண்ணா அவர்களுடைய அரிய திறத்தினாலே, மிகப்பெரிய அளவிற்குதமிழ்நாடுஎன்று பெயர் பெற்ற தாய்த் திருநாட் டுக்கு அந்த வாய்ப்புகள் வந்திருக்கின்றன.

திராவிட இயக்க முதலமைச்சர்களில் முத்திரை பதித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்

அதுபோல, எம்மொழி செம்மொழி என்று கம்பீரமாக நம்முடைய பேராசிரியை அவர்கள் ஆரம்பித்தார்களே, அப்படிப்பட்ட சிறப்பு முறை இருக்கிறதே - அதை செய்த பெருமை - திராவிட இயக்க முதலமைச்சர்களில் முத்திரை பதித்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களு டைய சாதனை.

இப்படி வரலாற்றில் ஏராளமான சாதனைகள்.

நாம் எங்கே இருந்து தொடங்கவேண்டும்? நீதிக்கட்சி யிலிருந்து தொடங்கவேண்டும். 1921 லிருந்து 2021 ஆம் ஆண்டிற்கு வருகிறோம். ஒரு நூற்றாண்டு.

நீண்ட வரலாற்றினுடைய பரந்து விரிந்த அந்த வரலாற்றில் - நூறாண்டு ஒரு சாதாரணமாக இருக்கலாம் - ஆனால், நமக்கு நூறாண்டு வரலாற்றில் எப்படியெல் லாம் மாறுதல்கள் ஏற்பட்டு இருக்கின்றன?

அவற்றிற்கு முதலமைச்சர்களின் பங்களிப்பு எப்படி?

அதற்குத் தத்துவங்கள் எப்படி பயன்பட்டு இருக் கின்றன?

வெறும் முதலமைச்சர்களாக இருந்தால், அவர்கள் வரலாற்றில் இடம்பெற்றிருக்க முடியாது. காரணம், வரலாறு முதலமைச்சர்களை வைத்து எழுதப்படுவதல்ல.

புரட்சியாளர்களை, மாறுதலை உருவாக்கக்கூடியவர் களை வைத்துதான் மிகப்பெரிய அளவிற்கு வரலாறு எழுதப்படுகிறது.

தொடர்ந்து அறிஞர் பெருமக்களை அழைத்து, எல்லோரையும்பற்றி, மிக முக்கிய முதலமைச்சர்களைப் பற்றியெல்லாம் குறுகிய காலத்தில் இருந்தவர்கள் உள்பட எல்லோரையும் நீங்கள் மிகத் தெளிவான அளவிற்கு அடையாளம் கண்டு, ஒவ்வொரு நாளும் தனித்தனியே பேசியிருக்கிறீர்கள்.

என்னுடைய பணி எளிதான பணியல்ல!

ஆனால், எல்லாவற்றையுமே திரட்டி நீங்கள் சொல் லுங்கள் என்று சொல்லும்பொழுது, என்னுடைய பணி எளிதான பணியல்ல. இருந்தாலும், எந்த அளவிற்கு வாய்ப்பு இருக்கிறதோ - அந்த அளவிற்கு அதைச் செய்யக்கூடிய  -அந்த சூழ்நிலையை மிகத் தெளிவாக உருவாக்கிக் காட்டுவதுதான் என்னுடைய வேலையாக இருக்கும்.

பிரீமியர்என்றுதான் அழைப்பார்கள்

அந்தக் காலத்தில்...

முதலாவதாக ஒரு செய்தி - குறிப்பாக ஆழமாக புரிந்துகொள்ள வேண்டிய செய்திகளில் நீதிக்கட்சி ஆட்சி என்று அழைக்கப்பட்ட அந்த நீதிக்கட்சி ஆட்சி யில், பிரீமியர் என்று அந்தக் காலத்தில் பெயர். தமிழிலே மொழிபெயர்க்க வேண்டுமானால், பிரதமர் என்று பொருள். இப்பொழுது பிரதமர் என்றால், அதற்கு வேறு பொருள் அரசியல் ரீதியாக.

நீதிக்கட்சி ஆட்சி வெற்றி பெறுகிறது - ஆனால், அவர் அந்தப் பதவியை ஏற்க மறுக்கிறார் வெள்ளுடை வேந்தர் - கட்சியின் தலைவர் சர்.பிட்டி.தியாகராயர். திராவிட இயக்கத்தின் தனி முத்திரை. ‘பதவிக்காக அல்ல - கொள்கைக்காக இந்த இயக்கம் தொடங்கப்பட்டதுஎன்பதற்கு அடையாளமாக.

கடலூர் வழக்குரைஞர் சுப்பராயலு ரெட்டியார் என்று அழைக்கப்படுகின்ற அவரை அழைத்தார்கள். அவ ருக்கு உடல்நலக் குறைவின் காரணமாக சிறிது காலம் தான் அவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்தார்.

சமூகநீதிக்கு ஏற்பட்ட ஆபத்து -

அதை களைவதற்கு அவர் முதலில் வந்தார்

அவருடைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பனகல் அரசர் அவர்கள் வரலாற்று ரீதியில் மிகப்பெரிய சாதனைகளையெல்லாம் செய்தார்கள். அவற்றையெல் லாம் இங்கே மற்றவர்கள் சொல்லியிருப்பார்கள். நான் குறிப்பாக ஒன்றை சொல்லுகிறேன். அவருடைய காலத் தில் அதிகாரங்கள் கிடையாது. உங்களுக்குத் தெரியும் - குறிப்பிட்ட அதிகாரங்கள் வரையறுக்கப்பட்ட முறை - இரட்டை ஆட்சி என்று சொல்லக்கூடிய அந்தக் கால கட்டத்தில், பல சாதனைகளை செய்த நேரத்தில், முதலில் அவர்கள் ஒரு சமதர்மத்தை, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு ஜாதியின் காரணமாக, சமூகநீதிக்கு ஏற்பட்ட ஆபத்து - அதை அவர் களைவதற்கு முதலில் வந்தார். இதுதான் அந்தக் கொள்கையினுடைய தத்துவம்.

திராவிட இயக்கத்தினுடைய முன்னோடி நீதிக்கட்சி - 1967 இல் அண்ணா அவர்கள் வெற்றி பெற்றவுடன், அவரைப் பார்த்து கேட்டார்கள் செய்தியாளர்கள்;

பத்தாண்டுகளில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்களே,  அரசியல் கட்சியாக மாறிய நிலையில்என்று கேட் டார்கள்!

மற்றவர்களாக இருந்தால், பெருமையோடு, ஆம் என்று சொல்லி, தங்களுடைய சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால், பேரறிஞர் அண்ணா அடக்கத்திற்குரியவர் - ஆழமானவர்.

நீதிக்கட்சி - புதைக்கப்படவில்லை,

விதைக்கப்பட்டு இருக்கிறது

அவர் மிகுந்த அடக்கத்தோடு சொன்னார், “இல்லை என்னுடைய பாட்டன் நீதிக்கட்சி - நூறாண்டு காலத்திற்கு முன்னால், அது புதைக்கப் படவில்லை, விதைக்கப்பட்டு இருக்கிறது. அதன் காரணமாக எழுந்ததுதான் இந்த ஆட்சி” - என்றார்.

இப்பொழுது தமிழ்நாடு முதலமைச்சராக இருக்கும் மாண்பமை ஸ்டாலின் அவர்கள் அந்தப் பெருமையைப் இன்றைக்குப் பெற்றிருக்கிறார் என்று சொன்னால்,

அவர் சொன்னார், ‘‘நான் திராவிட இயக்கத்தின் நீதிக்கட்சியினுடைய தொடர்ச்சி'' என்று சரியாகச் சொன்னார்.

எனவே, நூறாண்டு காலத்தில், இப்படி ஓர் அரசியல் வரலாற்றில், தொடர் சங்கிலியைப் போன்ற ஒரு அமைப்பு வந்தது என்பதே ஒரு தனித்த வரலாறு.

இதுவே வேறு எவருக்கும் இல்லாத ஒரு தனிச் சிறப்பு!

 ‘‘திரவிடியன் மாடல்’’

ஆய்வாளர்கள் அதை ‘‘திரவிடியன் மாடல்'' என்று ஆய்வுச் செய்யக்கூடிய அளவிற்கு, பன்னாட்டளவில் நோபல் பரிசு பெற்ற  அறிஞர்கள் உள்பட, பாராட்டக்கூடிய அளவிற்கு வாய்ப்புகளைப் பெற்றிருக்கக்கூடிய ஒரு திருப்பம் இது.

ஏன் அந்தப் பெருமை என்றால், சமூகநீதியை வைத்துத்தான் அந்தப் பெருமை.

எனவேதான், என்னுடைய இந்த உரையிலே, ஏரா ளமான சாதனைகளை அவர்கள் செய்திருந்தாலும்கூட, மய்யப்புள்ளியாக சமூகநீதியை எடுத்துக்கொண்டு, கொஞ்சம் அங்கொன்றும், இங்கொன்றுமாகத் தொட்டுக் காட்டி, என்னுடைய நேரத்தை நிறைவு செய்ய நான் விழைகிறேன்.

அந்த வகையிலே அருமை நண்பர்களே, சில விஷயங்களைத் தொட்டுத் தொட்டுக் காட்டிவிட்டுத்தான் போக முடியுமே தவிர, விரிவாக சொல்வதற்கு நேர மில்லை. ஏனென்றால், இது அறிவார்ந்த அரங்கம் - உங் களுக்கு விரிவுரை தேவையில்லை. நீங்கள் தெளி வானவர்கள் - உங்களுக்குத் தொட்டுக் காட்டினாலே, அதை விரிவாக்கிக் கொள்ளக்கூடிய ஆற்றலும், ஆளுமையும், திறமையும் படைத்தவர்கள் நீங்கள். அந்த வகையிலே இதைத் தெளிவாகச் சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறோம்.

வாய்ப்பு மறுக்கப்பட்ட சமுதாயம் இந்தச் சமுதாயம் - ‘நீதிக்கட்சிஎன்ற அதற்குப் பெயர் எப்படி வந்தது?

அநீதி நடந்திருந்தால்தான்,

நீதி வேண்டும் என்று கேட்பார்கள்

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் - ‘ஜஸ்டிஸ்என்ற தலைப்பில் அவர்கள் நடத்திய ஆங்கில நாளேடு. அது மக்கள் மத்தியில் மிகத் தெளிவாக பதிந்த காரணத்தினால், ‘நீதிக்கட்சியாயிற்று. நீதி வேண்டும், நீதி வேண்டும் என்று நீதி கேட்டார்கள். எப்பொழுது நீதி கேட்பார்கள்? அநீதி நடந்திருந் தால்தானே, நீதி வேண்டும் என்று கேட்பார்கள்?

என்ன அநீதி?

சமூக அநீதி?

எப்படி அந்த சமூக அநீதி?

ஜாதி உள்ள ஒரு சமுதாயம் - பிறப்பினால் மனிதர் களுடைய அறிவை, வாய்ப்பை அளக்கக்கூடிய ஒரே நாடு, நம்முடைய நாடு. உலகத்தில் வேறு எந்த நாட்டிலும், பிறப்பினால் பேதம் என்று சொல்லும்பொழுது, தொடாதே, படிக்காதே, எட்டி நில் என்று சொல்ல மாட்டார்கள்.

நிற பேதம்கூட மற்ற நாடுகளில் உண்டு. கல்வி அவர்களுக்கு மறுக்கப்படவில்லை. வேண்டுமானால், தனியே படித்துக் கொள் என்று சொன்னார்கள்.

ஆனால், இங்கே மனுதர்மம் - குலதர்மத்துக் கொடியை ஏற்றக்கூடிய மனுதர்மம்.

ஜாதி காரணமாக - ஜாதி பிரிக்கப்பட்டது கொடுமை மட்டுமல்ல - அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அழ காகச் சொன்னதைப்போல, ‘‘கிரேடெட் இன் இக்குவா லிட்டி'' என்று சொல்லக்கூடிய அளவிற்கு, படிக்கட்டு ஜாதி முறை. என்னைவிட உயர்ந்தவர்- எனக்குக் கீழே ஒருவர் - அவருக்குக் கீழே இன்னொருவர், அவருக்கும் கீழே இன்னொருவர்.

பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர, அதற்கும் கீழே பஞ்சமர்கள் அய்ந்தவாது ஜாதி - அதற்கும் கீழே எல்லா ஜாதிகளையும் சேர்ந்த பெண்கள் என்று வரிசைப் படுத்தினார்கள்.

அதுதான் படிக்கட்டு ஜாதி முறை -

யாரையும் சங்கடப்படுத்துவதற்காக அல்ல!

அதில் கீழ்ஜாதிக்காரனுக்கு இந்த வார்த்தையை நான் பயன்படுத்துவதற்கு மனுதர்மத்தில் இருப்பதற்காகச் சொல்கிறேன்; யாரையும் சங்கடப்படுத்துவதற்காக அல்ல.

எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்கு அறிவைக் கொடுக்கலாகாது; கல்வியைக் கொடுக்கலாகாது.

எனவே, அந்த மனுதர்மத்தை எதிர்த்துப் போர்க் கொடி தூக்குவதற்குப் பிறந்த இயக்கம்.

காலங்காலமாக நூற்றுக்கு மூன்று பேராக இருக்கின் றவர்கள், 97 பேருக்கு இடம் தராமல் இருக்கக்கூடிய வாய்ப்பு. பசியேப்பக்காரர்களை பந்திக்கு வெளியில் நிற்கச் சொல்லி, புளியேப்பக்காரர்கள் மட்டுமே எப்பொ ழுதுமே புசித்து அனுபவித்துக் கொண்டிருந்தார்கள் என்ற சூழல். இவற்றையெல்லாம் மாற்றுவதற்குப் பிறந்த இயக்கம்தான், 110 ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றிய திராவிட இயக்கம் - நீதிக்கட்சி என்பதாகும்.

சமூகநீதி கேட்டார்கள்; அதிலே மிகப்பெரிய வெற்றியை நிலை நாட்டினார்கள். எந்த அளவிற்கு நிலைநாட்டினார்கள் என்றால், அவர்கள் கேட்டது இங்கே சமூகநீதி - ஆனால், அந்தக் குரலினுடைய ஒலி, இந்தியா முழுமைக்கும் ஒலித்தது. தமிழ்நாட்டு சட்டசபை யில் சட்டங்களாக - சமூகநீதிக்கான அடித்தளத்தை வகுக்கக் கூடியதாக - அந்த அடிநீரோட்டத்தைத் தரக் கூடியதாக இருந்தாலும் நண்பர்களே, இந்தியா முழு மைக்கும் அல்ல - இனி வரக்கூடிய எந்த அரசுக்கும் இருக்கக்கூடிய வாய்ப்பை - இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இந்த ஆட்சிகள் அதற்கு முன்னோட்டமாக இருந்திருக்கின்றன.

Preamble என்று சொல்லக்கூடிய WE, THE PEOPLE OF INDIA    என்று ஆரம்பிக்கக்கூடிய - அரசமைப்புச் சட்ட பிரியாம்பளில், என்ன சொல்லுகிறார்கள்? (பீடிகை யில்).

தயவு செய்து நினைத்துப் பாருங்கள்; நீங்கள் அறி வார்ந்த வரலாற்று மாணவர்கள்; நீங்கள் மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப் போகிறவர்கள்.

WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens:

JUSTICE, social, economic and political; 

LIBERTY of thought, expression, belief, faith and worship;

EQUALITY of status and of opportunity;

and to promote among them all FRATERNITY assuring the dignity of the individual and the unity and integrity of the Nation.

நீதிக்கட்சி - திராவிட ஆட்சி!

எல்லா குடிமக்களுக்கும், நமக்கு நாமே வழங்கிக் கொள்ளக்கூடிய இந்திய அரசமைப்புச் சட்டத்திலே, இது எப்பொழுது; 1950 அந்த ஆண் டிற்கு முன்பு - ஆனால், அதற்குப் பல ஆண்டு களுக்கு முன்பு, இதற்கு வித்திட் டதுதான் இந்த நூறாண்டு கால ஆட்சியில் இருக்கக்கூடிய நீதிக் கட்சி - திராவிட ஆட்சியின் சாதனை சமூகநீதி! வியப்பாக இல்லையா?

‘‘திரவிடியன் மாடல்'' என்று இன்றைக்கு ஆய் வாளர்களாலே எடுத்துக்கொள்ளப்படக்கூடிய தலைப்பு இருக்கிறதே - அந்த அடிப்படை இருக்கிறதே அதற்குரிய வாய்ப்புகள்.

Justice - Social Justice

Economic justice

Political Justice

இதை வரிசைப்படுத்தி இருக்கிறது அரச மைப்புச் சட்ட பீடிகை -

எனவேதான், இந்த நூறாண்டு கால வரலாற்றை - சட்டமன்ற வரலாறு என்பதை சொல்லும்பொழுது, அது ஏதோ ஒரு சாதாரணமானதாக இல்லை. இது உருவாக்கிய தாக்கங்கள் - இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெறக்கூடிய அளவிற்கு அந்தத் தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது.

எனவே, சமூகநீதியை மய்யப்படுத்துகின்ற நேரத்தில், இதை சுட்டிக்காட்டவேண்டும்.

பனகல் அரசர் அடுத்து வருகிறார்; மூன்று முறை அவர்கள் ஆட்சி செய்கிறார்கள். அதற்கடுத்து, போதிய பெரும்பான்மை வரவில்லை என்று சொன்னவுடன், பெரும்பான்மை வரவில்லையானாலும், ஆட்சியில் எப்படியாவது இருக்கவேண்டும் என்று அவர் நினைக்க வில்லை.

கல்விக் கமிட்டி

மாறாக, தன்னுடைய ஆதரவைக் கொடுத்து, டாக்டர் சுப்பராயன் அவர்களை - அன்றைய பிரீமியராக ஆக்கினார்.

அந்த வாய்ப்பிலே, அவருடைய காலத்திலே இருக்கக்கூடிய சூழ்நிலை வரை வருகிறது.

முதலில், கல்விக் கமிட்டி - ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள், ஆதிதிராவிட மக்கள் - யாரைபஞ்சமர்கள்என்று போட்டிருந்தார்களோ, அவர்களுக்காக கல்விக் கமிட்டியை நியமித்தார்கள்.

1924 ஆம் ஆண்டு அவர் போட்ட உத்தரவு - தெருக்களில் நடக்கும் ஆதிதிராவிடர்களை யாரும் தடுக்கக் கூடாது - என்பதாகும்.

தாத்தாஇரட்டைமலை சீனிவாசன் காலத்தில், பனகல் அரசர் அரசாணை போட்டிருந்தார். மனித உரிமைகளை யாரும் மறுக்கக்கூடாது.

இதற்காக திருவிதாங்கூரில் (கேரளாவில்) தந்தை பெரியார் அவர்கள் போராடி, வைக்கம் போராட்டத்தை ஓராண்டு காலம் நடத்துகிறார்கள். 1924 - நடக்க உரிமைக் கேட்டு!

அதற்கு முன்பே, பல மாதங்களுக்கு முன்பே தமிழ் நாட்டில் - சென்னை மாகாநாணத்தில் இது நடக்கிறது என்றால், எப்படி சமூகநீதி வளர்ச்சி?

எல்லோருக்கும் எல்லாம்

அனைவருக்கும் அனைத்தும்

இதுதான் சமூகநீதியினுடைய தத்துவம். யாருக்கும் வாய்ப்புகளை மறுப்பதல்ல.

உயர்ஜாதியினருக்குக்கூட உங்களுக்குக் கிடையாது என்று சொல்லவில்லை. உங்களுடைய பங்கை மட்டும் நீங்கள் அனுபவியுங்கள். நம்முடைய நாட்டிலே ஒரு தத்துவம் ‘‘தாயும், பிள்ளையும் ஒன்றானாலும், வாயும், வயிறும் வேறு''

அதுபோலத்தான், எல்லோருக்கும் எல்லாமும் தரக் கூடிய நிலை. காலேஜ் கமிட்டியை அமைத்து, அதற்குப் பிறகு வாய்ப்புகளை உருவாக்கி பலவற்றை செய்தார்.

சமஸ்கிருதத்தை உயர்ஜாதிக்காரர்கள் மட்டும்தான் படிக்க முடியும்

ஒரு சிறிய உதாரணத்தைச் சொல்லுகிறோம் -

மருத்துவர்களாக வருவதற்கு, சமஸ்கிருதம் படித் திருந்தால்தான் டாக்டராக வர முடியும் என்று முன்பு சொன்னார்கள்.

சமஸ்கிருதத்தை உயர்ஜாதிக்காரர்கள் மட்டும்தான் படிக்க முடியும்; மற்றவர்கள் படிக்கக்கூடாது என்று தடுக்கப்பட்டார்கள். எப்படி வேதத்தைப் பெண்கள் படிக்கக்கூடாது; கீழ்ஜாதிக்காரர்கள் படிக்கக்கூடாது என்று சொன்னார்களோ, அதுபோல சமஸ்கிருதத்தைப் படிக்கக்கூடாது என்று சொன்னார்கள். காரணம், அதுதேவபாஷைஎன்று அவர்கள் சொன்னார்கள்.

அதைத் தங்களுடைய ஏகபோகமாக வைத்துக் கொண்டார்கள். சமஸ்கிருதம் படித்திருந்தால்தான் டாக்டராக வர முடியும் என்றால், உங்களுக்குப் பொருள் தெரியும்; யார் மருத்துவர்களாக வர முடியும்?

அதை மாற்றிக் காட்டிய பெருமை - பனகல் அரசரை சாரும்.ஒரு சிறு உதாரணம் - பல செய்திகள்.

ஒரு சர்வ கொள்ளை ராஜ்ஜியம்

அதுபோலவே, இன்றைக்கு அறநிலையப் பாதுகாப் புத் துறை வருமுன் - அது ஒரு சர்வ கொள்ளை ராஜ் ஜியமாக இருந்த நேரத்தில், அதையெல்லாம் தடுத்து நிறுத்தி, ஒரு தணிக்கை முறையில் கொண்டு வந்து, கோயில் சொத்து - வருமானம் என்பதை ஒருங்கிணைத்து அதனுடைய விளைவுகளாக மிகப்பெரிய வாய்ப்புகளை உருவாக்கினார். இன்று வரையில் அதனுடைய சிறப்புகள் இருக்கின்றன.

இன்றைக்கு மீண்டும் யார் அதற்கு முன்பு இருந் தார்களோ, மீண்டும் அதனைப் பெறவேண்டும் என்று துடிப்பாக துடித்துக்கொண்டு அவர்கள் ஒரு போராட் டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே, சமூகநீதிக்கான மிகப்பெரிய வரலாற்றை உருவாக்கிய பெருமை உண்டு நீதிக்கட்சிக்கு.

அதுமட்டுமல்ல, பெண்களைக் கொச்சைப்படுத்தி, ‘தேவதாசிகள்என்று சொல்லி, கோயிலில் பொட்டுக் கட்டி வரக்கூடிய நிலையை - ஒரு சூழலை ஏற்படுத் தினார்கள் என்றால், இந்தக் கொடுமையை வேறு எங்கு போய்ச் சொல்வது?

தேவதாசி முறைஒழிக்கப்பட்டு, பெண்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன

மற்ற நாடுகளில்கூட வேறு முறைகள் இருக்கலாம். ஆனால், பெண்கள் கடவுளுக்குப் பொட்டுக்கட்டி வாழ வேண்டும் - அதன்மூலமாக அவர்கள் தேவதாசிகளாக இருக்கவேண்டும் என்று சொல்லி, அதன்மூலமாக ஒரு சமுதாயத்தையே பாழ்படுத்தி வைத்திருந்த நேரத்தில், இந்தக் காலகட்டத்தில்தான், தேவதாசி முறை ஒழிக் கப்பட்டு, பெண்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

அறநிலையப் பாதுகாப்புத் துறை, தேவதாசி முறை ஒழிப்பு, பெண்களுக்கு வாய்ப்பு போன்றவற்றையெல்லாம்  ஆறாண்டு காலம் நேரிடையான நீதிக்கட்சி ஆட்சியில். அதற்குப் பிறகு ஆதரவு கொடுத்து டாக்டர் சுப்பராயன் ஆட்சிக்காலத்தில்.

இவருடைய ஆட்சிக் காலத்தில்தான் வகுப்புவாரி உரிமை என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அந்த வகுப்புரிமையின் வரலாறு மிக முக்கியமாக வகுப்புரிமை ஆணையைப் பிறப்பித்தது.

இவருடைய காலத்தில், 1921 இல் முதல் ஆணை; 1923 இல் இரண்டாவது ஆணை - அவையெல்லாம் செயல்படவில்லை. அதிகார எல்லை மிகக் குறுகலானது அப்பொழுது.

உங்களுடைய பிள்ளைகளுக்கு

முத்தையாஎன்று பெயரிடுங்கள்!

அந்த வகையில் வரும்பொழுது டாக்டர் சுப் பராயன் ஆட்சிக்கு நீதிக்கட்சி வெளியில் இருந்த ஆதரித்தது. அதிலிருந்து வரும்பொழுதுதான், முத்தையாக்கள் - உங்களுடைய பிள்ளைகளுக்குமுத்தையாஎன்று பெயரிடுங்கள் என்று தந்தை பெரியார் அவர்கள்குடிஅரசுஏட்டில் எழுதினார்.

அப்படிப்பட்ட அவருடைய வகுப்புரிமை ஆணை யால்தான் - மிகப்பெரிய அளவிற்குக் கல்விக் கண்ணை பலருக்கும் திறக்கக்கூடிய வாய்ப்பு நேரிடையாக ஏற்பட்டது.

1928 இல் நிறைவேற்றப்பட்டது. பலமுறை அதற்கு ஆபத்தை உருவாக்கலாம் என்றிருந்தாலும், அதிலே வெற்றி பெற முடியாத அளவிற்கு இருந்து - இதே இந்திய அரசமைப்புச் சட்டம் 1949 இல் நமக்கு நாமே வழங்கிக் கொண்டு வந்த நேரத்தில், 1950 ஆம் ஆண்டு அவர்கள் வழக்குப் போட்டார்கள்.

நான் மருத்துவக் கல்லூரிக்கு மனு போட்டிருக்கிறேன். இதிலே ஜாதி அடிப்படை வேறுபாடு இருக்கக்கூடாது; அடிப்படை உரிமை என்று சொல்கிறீர்கள். எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று செண்பகம் துரைராஜன் என்கிற உயர்ஜாதி பார்ப்பன அம்மையார் அவர்கள், மனு போடாமலே, மனு போட்டதாக ஒரு தவறான தக வலை பிரமாணமாகக் கொடுத்து, அது நீதிமன்றங்களால் கவனிக்கப்படாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தீர்ப்புகள் வந்தன.

இந்த வகுப்புரிமை ஆணை செல்லாது என்று வரக் கூடிய அளவிற்கு வந்தது. அதற்குப் பிறகுதான் தந்தை பெரியார் அவர்கள் போராடி, முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் வந்தது என்பதையெல்லாம் பலர் உங்களுக்குச் சொல்லியிருப்பார்கள். இந்த அறிவார்ந்த மக்களுக்கு இது புதிய செய்தி அல்ல.

அது இந்தியா முழுமைக்கும் அன்றைக்குப் பயன்பட்டது. அதனுடைய விளைவு என்ன?

ஏனென்றால், மிகத் தெளிவாக பொருளாதார நீதி - அதற்கு முன்னாலே இருப்பது சமூகநீதி - அதற்குப் பின்னாலே இருப்பது  அரசியல் நீதி.

பச்சையப்பன் கல்லூரி நண்பர்களுக்கு,

பேராசிரியப் பெருமக்களுக்கு...

அந்த வாய்ப்புகளைப் பெருக்கக் கூடிய அள விற்கு வந்தார்கள். இதில் இன்னொரு செய்தியை உங்களுக்குச் சொல்லவேண்டும்.  பச்சையப்பன் கல்லூரி நண்பர்களுக்கு, பேராசிரியப் பெருமக் களுக்குத் தெரியுமா - அல்லவா என்பது எனக்குத் தெரியாது.

நீதிக்கட்சி ஆதரவு கொடுத்த காலத்தில், ஒரு மாநாடு சென்னையில் நடைபெறுகிறது. தந்தை பெரியார் உள்பட பலர் அந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

அந்த மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற் றப்பட்டு, அது அரசாங்கத்திற்குச் சென்று அது நடைமுறைப்படுத்தப்படுகிறது.

எதைப்பற்றித் தெரியுமா?

உங்கள் கல்லூரியைப்பற்றி!

பச்சையப்பன் கல்லூரி 1928 ஆம் ஆண்டிற்கு முன்பு, (S.C.), (ஷி.சி.) என்று சொல்லக்கூடிய ஆதி திராவிட சமுதாய மக்களுக்கு, மற்றவர்களுக்கும் படிக்க இடம் கிடையாது என்றார்கள்!

அதற்கு என்ன வியாக்கியானம் சொன்னார்கள் என்றால், பச்சையப்பன் முதலியார் அவர்கள் ஹிந்து - ஆகவே, ஹிந்து அல்லாதவர்களுக்கு அங்கே இட மில்லை. இவர்கள் அவர்ணஸ்தர்கள் - ஜாதிக்குக் கீழே இருக்கிறார்கள் என்று சொல்லி, அவர்களை ஒதுக்கி வைத்தார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் கலந்துகொண்ட சமூக சீர்திருத்த மாநாடு சென்னையில் நடை பெற்றபொழுது, அந்த இளைஞர்கள் மாநாட்டில் தீர்மானமாகப் போடப்பட்டது. அதனை புத்தமாக நாங்கள் வெளியிட்டிருக்கிறோம்.

மனித உரிமைக்கு விரோதமானது;

அது சமூகநீதிக்கு விரோதமானது!

அந்தத் தீர்மானத்தை அரசாங்கத்திற்குச் சொல் கிறார்கள் - பச்சையப்பன் கல்லூரியில், ஆதிதிராவிட சமுதாயத்தினருக்கும், சிறுபான்மைச் சமுதாயமாக இருக்கின்ற இஸ்லாமியர்கள் போன்றவர்களுக்கும் இட மில்லை என்று மறுப்பது இருக்கிறதே, அது மனித உரி மைக்கு விரோதமானது; அது சமூகநீதிக்கு விரோத மானது. ஆகவே, அவர்களுக்கும் இடம் கொடுக்க வேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் கூறியிருந்தார்கள்.

அதற்குப் பிறகுதான் அரசாங்கம் அதனை மாற்றிய தற்குப் பிற்பாடுதான், இன்றைக்கு இந்தக் கல்லூரியில்கூட மற்றவர்களுக்குக் கதவு திறந்தது.

வரலாற்றில் மறைக்கப்பட்ட செய்திகள்; மறுக்கப்படக் கூடியவை அல்ல

எனவே, இந்த இயக்கங்கள் மற்றவர்களுக்கு, நாட்டு மக்களுக்குச் செய்ததெல்லாம் பிறகு. முதலில், பச்சை யப்பன் கல்லூரியினுடைய கதவுகளேகூட, குறிப்பிட்ட வர்களுக்கு மட்டும்தான் திறந்திருந்தது. இன்னாருக்குத் தான் இடம்; இவர்களுக்கு இடமில்லை என்று சொன்ன நிலை மாறி, அனைவருக்கும் அனைத்தும் என்ற தத்துவம் - சமூகநீதிக் கொடி ஏற்றப்பட்டது முழுமையாக இந்தக் கல்லூரியில் என்றால், அந்தத் தீர்மானத்திற்குப் பிறகுதான் நண்பர்களே, அரசு அதை மாற்றி, அரசாணை வெளியிட்டு நடத்தியது.

இவையெல்லாம் வரலாற்றில் மறைக்கப்பட்ட செய்திகள்; மறுக்கப்படக் கூடியவை அல்ல.

ஆகவே, அப்படிப்பட்ட ஒரு அற்புதமான சூழ்நிலையில்,  ஒரு சின்ன உதாரணத்திற்காக இதை எடுத்துச் சொன்னேன்.

செண்பகம் துரைராஜன் வழக்குசென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டு, கம்யூனல் ஜி.. செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

அதற்கு முன்னால் நடந்த செய்திகளை - சமூகநீதியில் எப்படி போராட்டம் வந்தது என்று சொன்னால், பிரகாசம் 1945 இல் வருகிறார்.

தமிழ்நாட்டினுடைய இரட்சகர் காமராஜர்

அதற்கு முன்பு, இராஜகோபாலாச்சாரியார்  முதல மைச்சராக இருந்த காலத்தில், பள்ளிக்கூடங்களை மூடுகிறார். குலதர்மக் கல்வி திட்டத்தை 1954 இல்தான் அவர் கொண்டு வந்தார் என்பது உங்களில் பலருக்குத் தெரியும். பெரியார் அதனை எதிர்த்தார். அதன் பிறகு தான், அந்தக் குலதர்மக் கல்வித் திட்டம் மிகப்பெரிய அளவிற்கு ஒழிந்து, அதுவே, இராஜகோபாலாச்சாரியார் பதவி விலகலுக்குக் காரணமாகி, அந்த இடத்தில்தான் கல்வி வள்ளல் பச்சைத் தமிழர் காமராஜர் அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.

வரலாற்றில், தமிழ்நாட்டினுடைய இரட்சகராக இருந்து ஒரு பெரிய வரலாற்றை உருவாக்கினார் என்று சொல்வதெல்லாம் உங்களுக்கு நினைவூட்ட வேண்டிய செய்திகள் அல்ல - தெரிந்த செய்திகள்.

சென்னை ராஜ்ஜியதானி சட்டமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது

அதற்கு முன்பு, வகுப்புரிமையைக் குறி வைத்தார்கள். தொடர்ந்து ஜி.பிரகாசம் - அவர் ஆந்திராவைச் சேர்ந்த உயர்ஜாதிக்காரர் முதல் அமைச்சரான நிலையில்  அதே அணியில் இருக்கக்கூடியவர் தென்னேட்டு விசுவநாதன். கம்யூனல் ஜி..வை ரத்து செய்யவேண்டும் என்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார் சட்டமன்றத்தில். அந்தத் தீர்மானம் சென்னை ராஜ்ஜியதானி சட்ட மன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.

ஆனால், அதை நடைமுறைப்படுத்துவதற்காக என்னென்ன செய்ய முடியுமோ, அவர் அதையெல்லாம் செய்தார்.

அப்பொழுதெல்லாம் கட்சியினுடைய தலைவராக, ஓராண்டு, ஈராண்டுக்கு ஒருமுறை தேர்ந்தெடுப்பார்கள்; பெரும்பான்மை கட்சியில் - காங்கிரஸ் கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராக வந்தார்.

வேக வேகமாகச் சொல்வதால், பல்வேறு செய்திகளை வரிசைப்படுத்தி சொல்ல முடியவில்லை. காலவரிசை தேவையில்லை. சமூகநீதி கண்ணோட்டத்தோடு செய்தி கள்தான் மிகவும் முக்கியம்.

1938 இல் 2500 பள்ளிக்கூடங்களை மூடினார் இராஜ கோபாலாச்சாரியார்; அதை மிகப்பெரிய அளவிற்கு பெரியார் எதிர்த்தார்.

ஹிந்தியைத் திணிக்கவேண்டும் என்று சொல்லும் பொழுது, சென்னை லயோலா கல்லூரியில் பேசும் பொழுது இராஜகோபாலச்சாரியார் சொன்னார், ‘‘சமஸ் கிருதத்தை நேரிடையாகப் புகுத்தினால் எதிர்ப்பு வரும் என்பதற்காகத்தான், ஹிந்தியை நான் புகுத்துகிறேன்'' என்று சொன்னார். அப்பொழுது கட்டாய ஹிந்தி வந்தநேரம்.

அதுதான் அண்ணா அவர்களுடைய பிரகடனத்தில், திராவிட இயக்க ஆட்சியில் 1969 இல் முப்பெரும் சாதனைகளில் ஒன்றாக, இருமொழிக் கொள்கை வரு வதற்குக் காரணமாக அடித்தளமாக இருந்தது - இன்று வரையில் அந்தப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தவேண்டிய அவசியமும்,  அவசரமும்கூட இருக்கின்றன.

இன்றைய செய்தி - நாளைய வரலாறு;

நேற்றைய நிகழ்வுகள் - இன்றைய வரலாறு

அப்படிப்பட்ட சூழ்நிலையில், அரசியலே அல்ல - வரலாற்றுக் குறிப்புகள். அரசியல் நிகழ்வு களைச் சொல்லுகிறபொழுது சுட்டிக்காட்டவேண் டும். இன்றைய செய்தி - நாளைய வரலாறு. நேற் றைய நிகழ்வுகள் - இன்றைய வரலாறு. நாம் படிக்கக்கூடிய வரலாறு.

வரலாற்றை, வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு பார்க்கவேண்டும். அதிலே நமக்கு வக்கிரங்கள் தேவை யில்லை. அதிலே நமக்கு ஆசாபாசங்கள் தேவையில்லை. ஒரு அப்ஜக்ட்டிவ்சம் (objectivism) என்று சொல்லக் கூடிய அளவிற்கு, மிகப்பெரிய வரலாற்றுக் கண் ணோட்டத்தோடு பார்க்கின்ற நேரத்தில் நண்பர்களே,. குலக்கல்வித் திட்டம் என்று சொல்லக்கூடியதை - முதல மைச்சராக இருந்த இராஜாஜி அவர்கள், அன்றைக்கு வெள்ளைக்காரக இருந்த ஒரே ஒரு கல்வி அதிகாரியிடம் கேட்கிறார், இதுபோன்ற ஒரு குலக்கல்வித் திட்டம் இருக்கிறது என்று.

அதனை அனுமதிக்க முடியாது என்று அவர் மறுத்துவிட்டார்.

இவர் அதற்குமேலே போக முடியவில்லை. இரண் டாண்டு காலத்திலே இவருடைய ஆட்சியே கீழே இறங்கக்கூடிய சூழல் 1938 இல், ஹிந்தி எதிர்ப்பின் காரணமாக.

பிறகு அதை மனதில் வைத்துக்கொண்டுதான், 1952, 1954 இல் வருகின்றபொழுது அந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

ஆகவே, பள்ளிக்கூடங்களை மூடி, மனுதர்ம சிந்த னையை உருவாக்குகிறார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்த பிறகுதான், மூடிய பள்ளிக்கூடங்களைத் திறந்தார்கள்.

எப்படி மருத்துவக் கல்லூரியில், சமஸ்கிருதம் தெரிந்தால்தான் படிக்க முடியும் என்று சமூகநீதிக்கு விரோதமான செய்திகள் நடந்தனவோ - அதே போலத்தான் நண்பர்களே இன்னொரு செய்தி.

அன்றைக்கு ஒன்றிரண்டு பொறியியல் கல்லூரி கள்தான் இருந்தன. அதிலும் தந்திரங்களைச் செய்

தார்கள்.

(தொடரும்)

No comments:

Post a Comment