ஜாதிவாரி கணக்கெடுப்பும் லாலு பிரசாத்தின் கேள்வியும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 29, 2021

ஜாதிவாரி கணக்கெடுப்பும் லாலு பிரசாத்தின் கேள்வியும்

2021ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இதர பிற்படுத்தப்பட்டோர் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட மாட்டாது என்று ஒன்றிய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ள தற்கு, பாஜக கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு (2021) தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஆனால் கரோனா தொற்று பரவல் காரணமாக, கணக்கெடுக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்பட்டது.

மகாராட்டிரா மாநில அரசு, ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து - இந்த வழக்கில், ஒன்றிய அரசு  பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

தற்போதைய மக்கள் தொகையில் ஜாதி வாரியாக கணக்கெடுக்கப்பட்டாலும் சமூக - பொருளாதார நிலை  குறித்த அதன் தரவுகள் துல்லியமாக, நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கப் போவதில்லை. அதனால் இந்தக் கணக்கெடுப்பால் எந்தவிதப் பயனும் ஏற்படப்போவதில்லை. எனவே, 2021ஆம் ஆண்டில் ஜாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்துவதில்லை என்ற கொள்கை முடிவை ஒன்றிய அரசு  எடுத்துள்ளதாகவும்,  அரசின் கொள்கை முடிவிற்கு மாறாக இதர பிற்படுத்தப்பட்டோரை உள்ளடக்கிய ஜாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

ஒன்றிய அரசின் பிரமாண பத்திரம் கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் இடையே கடும்  விமர்சனத்தை ஏற் படுத்தி உள்ளது. ஏற்கெனவே பாஜகவின் கூட்டணி கட்சிகளான நிதிஷ்குமாரின் அய்க்கிய ஜனதாதளம் மற்றும் ஆர்ஜேடி, பிஎஸ்பி, சிவசேனா மற்றும் ஜேடியு, அப்னா தளம் மற்றும் பாமக உள்பட பல்வேறு அமைப்புகள் ஜாதி வாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி வந்தன. ஆனால், மோடி அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியாது என்று அறிவித்துள்ளது.

ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்தும் தனது கண்டனத்தை டிவிட் மூலம் தெரிவித்து உள்ளார்.  மக்கள் தொகைக் கணக் கெடுப்பில், பாம்பு-தேள்கள், கிளிகள், யானைகள், குதிரைகள், நாய்-பூனைகள், பன்றிகள் போன்றவை பிற பறவைகள்-விலங்குகள்-தாவரங்களுடன் கணக்கிடப் படும். ஆனால் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான மக்கள் தொகையை மட்டும் கணக்கிட மாட்டார்களா?  பிஜேபி - ஆர்எஸ்எஸ் பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளை ஏமாற்றுகிறது" என்று சாடியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ஒன்றிய அரசாங்கத்தின் இந்த பிரமாண பத்திரம்மிகவும் கவலைக்குரியதுஎன்று கூறினார். இது பாஜகவின் இதர பிற்படுத்தப்பட்டோரை மய்யப்படுத்திய அரசியலின் தேர்தல் நலன்களுக்கும், அதன் வாக்குறுதிகளுக்கும், செயல்களுக்கும் உள்ள வித்தியாசத்தை அம்பலப்படுத்துகிறது என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.

பாஜக கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பாஜ கட்சியின் செய்தித் தொடர்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுதன்ஷு திரிவேதி பதில் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஜாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கும் கட்சிகள் பின்தங்கிய மக்களுக்கு என்ன செய்தார்கள், ஏன் அவர்களின் தலைவர்கள் தங்கள் உறவினர்களின் நலனுக்காக தங்களை மட்டுப்படுத்திக் கொண்டார்கள்" என்று சம்பந்தமின்றிக் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில், பாஜகமீது அதன் கூட்டணி கட்சிகளே கடுமையான விமர்சனங்களை வைத்துள்ள தால், கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, வேளாண் சட்டம் உள்பட பல மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக கூட்டணி கட்சிகள் குரல் எழுப்பியுள்ள நிலையில், தற்போது, கூட்டணி கட்சிகள் பாஜக மீது மேலும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளன.

பாஜகவைச் சேர்ந்த சுஷில் மோடி, சங்கமித்ரா மவுரியா மற்றும் பங்கஜா முண்டே உள்ளிட்ட பல பாஜக எம்.பி.க்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலி யுறுத்தி உள்ளனர்.  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூட பிற்படுத்தப்பட்ட ஜாதியினரின் உண்மையான புள்ளிவிவரங்களை அறிய ஜாதிவாரி கணக்கெடுப்பு ஏன் நடத்தப்படவில்லை என்று கேட்டுள்ளனர்.

பீகார், ஒடிசா, மகாராட்டிரா மற்றும் கருநாடகா மாநிலங்களும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. ஜார்க்கண்ட் கூட இப்போது அதற்கு ஆதரவாக வளைந்து வருகிறது. ஒன்றிய அரசு ஒப்புக்கொண்டால் அதை நடத்த தாம் தயாராக இருப்பதாக சில மாநிலங்கள் முன்வந்துள்ளன.

இந்தியப் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர், மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போது ஜாதியைக் கணக்கிடுவதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறியுள்ளார். அப்படி இருக்கும் போது, ஒன்றிய அரசு ஏன் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுக்கிறது?

பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பிரதமர் மோடி, ஜாதிவாரி கணக்கெடுப்பை  உறுதி செய்வார் என்று எதிர்பார்த் தால், அது கடைந்தெடுத்த ஏமாற்றமே!

இப்பொழுதுள்ள கணிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு மிகக் குறைந்த விழுக்காட்டில் தான் உள்ளது. பிற்படுத்தப்பட்டோர்களின் உண்மையான புள்ளி விவரம் வெளிச்சத்துக்கு வந்தால் அவர்கள் உரிமைக் குரலை எழுப்பு வார்களே. அதனை ஆர்.எஸ்.எஸ். விரும்புமா?

பிற்படுத்தப்பட்ட மக்களே மோடி அரசை அடையாளம் காண்பீர்!

No comments:

Post a Comment