தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்கி ஆணை பிறப்பித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
நேற்று (4.9.2021) காலை சென்னை பெரியார் திடலில் உள்ள எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவ்விவரம் வருமாறு:
தந்தை பெரியார் அவர்களுடைய 143 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா - திராவிடத் திருவிழவாக வருகின்ற செப்டம்பர் 17 ஆம் தேதியன்று, மிகப் பெரிய அளவிலே நாடு தழுவிய அளவி லும், உலகத்திலுள்ள பல நாடுகளிலும்கூட நடைபெறக்கூடிய சூழலில், கரோனா அச்சுறுத்தல் இன்னும் தீராத நிலையில், சட்ட வரம்பிற்குட்பட்டு, காணொலிகள் மூல மாகவும், இன்னும் சந்திக்கின்ற இடத்தில் போதுமான தனி நபர் இடை வெளி, மற்றவற்றை கடைப்பிடித்து நிகழ்ச்சி களையும், விழாக்கள், கொண்டாட்டங்கள், காணொலி நிகழ்ச்சிகளை நடத்த திராவிடர் கழகத்தால் மட்டுமல்ல, பகுத்தறிவாளர் கழகத்தால் மட்டுமல்ல - அனைத்துப் பெரியார் பற்றாளர்கள், அனைத்து இயக்கங்களாலே ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.
செப்டம்பர் 17 இல் பெரிய கருத்தரங்கம்!
அன்றைய தினம் இதேபோல,
17 ஆம் தேதி காலையில் வழக்கம்போல் அய்யா அவர்களுடைய நினைவிடத்தில் தனிநபர் இடைவெளி, கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, மரியாதை செலுத்திவிட்டு, ஒரு கருத்தரங்கத்தை பெரியார் திடலில் இதேபோன்று இடைவெளியோடு சட்ட பூர்வ மாக நடத்தக்கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில், மிக முக்கியமான ஒரு வாய்ப்பாக இருக்கக்கூடிய செய்தி என்னவென்று சொன்னால்,
இந்த ஆண்டு வேறு எந்த ஆண்டும் இல்லாத சிறப்பு - தந்தை பெரியார் அவர்களுடைய நெஞ்சில் தைத்த முள்ளை நம்முடைய மாண்புமிகு மானமிகு முதலமைச்சராக வந்துள்ள, திராவிடப் பாரம்பரியத்தினுடைய மீட்சி - என்னுடைய ஆட்சி என்று தெளிவாகப் பிரகடனப்படுத்திய மு.க.ஸ்டாலின் அவர்களுடைய செயல் திறத்தினாலே - தந்தை பெரியார் அவர்கள் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்ற முடியவில்லையே என்ற முதலமைச்சர் கலைஞர் அவர்களுடைய ஆதங்கத்தைப் போக்கி, அனைத்து ஜாதியி னரும் அர்ச்சகர் என்ற தந்தை பெரியார் இறுதி யாக களத்திலே நின்ற - அந்த அருமையான எண்ணத்தை சிறப்பாக செயல்படுத்தி, இன் றைக்கு தமிழர்களும், திராவிடர்களும், பயிற்சி பெற்றவர்கள் அர்ச்சகர்களாகவும், ஓது வார்களாகவும் பணியமர்த்தம் செய்யப்பட்டுள் ளனர். எதிர்ப்பும், சலசலப்புகள் இருந்தாலும், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், சட்ட பூர்வமாக அனைத்தையும் செய்திருப்பது குறித்து எல்லையற்ற மகிழ்ச்சியைப் பெறுகி றோம். அய்யா அவர்கள் உடலால் மறைந்திருக் கிறார்கள், உணர்வால் நிறைந்திருக்கிறார்கள். பெரியார் என்பது ஒரு தத்துவம் - அது தனி மனிதரல்ல - ஒரு சகாப்தம் - ஒரு காலகட்டம் - ஒரு திருப்பம் என்று அண்ணா அவர்கள் சொன்னார்கள்.
50 ஆண்டுகளுக்கு முன்பாக...
அதை நிரூபிக்கும் வண்ணம், ஒரு 50 ஆண்டுகளுக்கு முன்பாக, இதே இடத்தில் தந்தை பெரியார் அவர்கள் மாநாட்டை நடத்தி பிரகடனப்படுத்தினார்கள்.
அந்தப் போராட்டம் மிகப்பெரிய வெற்றியாக - இன்றைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே நடைபெற்று, அனைத்து ஜாதியினரிலிருந்தும் அர்ச்சகர்களாகி இருக் கிறார்கள். இது வெறும் அர்ச்சகர் நியமனமல்ல. தந்தை பெரியார் அவர்கள் நடத்திய மாநாட்டிற்கு அவர்கள் கொடுத்த பெயரே - ''இழிவு ஒழிப்புக் கிளர்ச்சி'' என்பதுதான்.
143 ஆம் பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு தனிச் சிறப்பு வாய்ந்ததாகும்!
சூத்திரப் பட்டமோ, பஞ்சம பட்டமோ, ஜாதிப் பட்டமோ, ஜாதி இழிவோ இருக்கக்கூடாது. எல்லோரும் சமம் - அனைவரும் சமம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, சமத்துவத்தை வலி யுறுத்தக் கூடிய ஒன்றாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகியுள்ள நிலை இருக்கிறது என்பது - வருகின்ற தந்தை பெரியார் 143 ஆம் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் தனிச் சிறப்பாகும்.
எனவேதான், தந்தை பெரியார் அவர்கள் நெஞ்சில் தைத்த முள் என்று கலைஞர் உருவ கப்படுத்தினார்களே - அந்த முள் அகற்றப்பட்டு இன்றைக்கு மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
கரோனா காலகட்டமாக இல்லாவிட்டால், மிகப்பெரிய பெருந்திரள் மக்கள் கூட்டமாக நடத்தி, முதலமைச்சரை அழைத்துப் பாராட்டி மிகப்பெரிய அளவிற்கு சிறப்பு செய்யக்கூடிய அளவிற்கு வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும்.
ஆனால், சட்டத் திட்டத்திற்கு உட்பட்டு நாங்கள் நடந்துகொள்ளவேண்டும் என்ப தற்காக - மிக அடக்கத்தோடு அந்த நிகழ்வு களை காணொலி கருத்தரங்கங்களாகவும், மற்ற நிகழ்ச்சிகளையும் நடத்துவதற்கு ஏற்பாடு செய் யப்பட்டு இருக்கிறது நாடு தழுவிய அளவில்.
பெரியாருக்கு முன்! பெரியாருக்குப் பின்!
அதற்கடுத்து நண்பர்களே, திருச்சிக்கு அருகில், 25 கிலோ மீட்டருக்குப் பக்கத்தில், திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் இருக்கக்கூடிய சிறுகனூர் என்ற ஊரில், 30 ஏக்க ருக்குமேல் இருக்கக்கூடிய பரந்த விரிந்த இடத்தில், பெரியார் உலகம் என்பது கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டு, அதற் குண்டான முயற்சிகளையெல்லாம் எடுத்து, அது ஒரு தனி சிந்தனையாக - பெரியாருடைய காலம் எப்படிப்பட்டவை? பெரியாருடைய சாதனைகள் எப்படிப்பட்டவை? பெரியாருக்கு முன்! பெரியாருக்குப் பின்! என்று வரலாற்றை நாம் பிரித்துப் பார்க்கக்கூடிய அளவிற்கு சொல்லக்கூடிய நிலையுண்டு,
அதேபோல, திராவிடம் என்ன சாதித்தது? சமூகநீதியாக இருந்தாலும், பெண்ணுரிமையாக இருந்தாலும், பாலியல் நீதியாக இருந்தாலும் எல்லாத் துறைகளிலும் எப்படி வளர்ந் திருக்கிறார்கள் என்பதையெல்லாம் வரலாற்றுப் பூர்வமாக நிலைக்கக்கூடிய அளவிற்கு, எப்படி அமெரிக்காவில் டிஸ்னி வேர்ல்டு என்று சொல்லக்கூடியதில் பல அம்சங்கள் இருக்கின்றனவோ, அதுபோல பெரியார் உலகம் என்ற ஒரு சிறப்பான மய்யத்தை ஏற்பாடு செய்வதற்கு இதுவரையில் சில தடங்கல்கள் இருந்தன. கடைசியாக தடையில்லா சான்றுகளை - ஒன்றிய அரசிடமிருந்துகூட நாங்கள் பெற்றுவிட்டோம். ஆனால், இங்கே இருந்த அதிமுக ஆட்சியாளர்களிடம் அமைதியை நாள்கள் கேட்ட பொழுது நான்கு ஆண்டுகளாக அந்தக் கோப்பு கிடப்பில் போடப்பட்டு இருந்தது.
அனுமதி கொடுத்த பெருமை இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களையே சாரும்!
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன், உடனடியாகக் கையெழுத்துப் போட்டு, நமக்கு அனுமதி கொடுத்த பெருமை இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களையே சாரும். அதற்காக அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதன் காரணமாக அந்தப் பணிகள் இன்றைக்குத் தொடங்கப்பட்டு இருக்கின்றன.
எனவே, அதற்குரிய சட்டபூர்வமான தேவைகள் மற்றவையெல்லாம் நிகழ்ந்த நிலையில், அதனுடைய தொடக்க விழா உங்களுக்கு அறிவிக்கப்படும்; அநேகமாக முதலமைச்சர் அவர்களைத் தொடங்கி வைக்கும்படி கேட்டுக்கொள்ள இருக்கிறோம். அவர்களும் அந்த வாய்ப்பைத் தருவார்கள் என்று நினைக்கின்றோம்.
அந்த வகையில், பெரியார் உலகம் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஏழு ஆண்டுகளில், நிறைவு பெறும். நான்கு கட்டங்களாக அப்பணிகள் நடைபெறும். 95 அடி உயர சிலை; பீடம் 40 அடி. மின்தூக்கி மூலமாக மேலே செல்லகூடிய வசதிகள் எல்லாம் செய்யப்படுகின்றன.
சில வாரங்களிலோ - மாதங்களிலோ அறிவிக்கக்கூடிய நல்வாய்ப்பு
ஆகவே, அதன் தொடக்க விழாவினை இன்னும் சில வாரங்களிலோ அல்லது மாதங் களிலோ அறிவிக்கக்கூடிய நல்வாய்ப்பு வரும்.
அதேபோன்று நண்பர்களே, மிக முக்கிய மாக மருத்துவக் கல்வி - நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி, புதிய சட்டம் கொண்டு வந்து, அதற்குரிய வாய்ப்புகளைக் கோருவதற்கு, ஒரு நீண்ட போராட்டத்தை நாம் நடத்தவேண்டி இருக்கிறது. அதற்கும் முயற்சி எடுக்கும் தமிழ்நாடு அரசுக்கு நம்முடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேநேரத்தில் மருத்துவ மேற்படிப்பு உயர் சிறப்பு மேற்படிப்பிலும் மருத்துவர்களுக்கு உரிய இடங்கள் கிடைக்க முடியாத சூழல் இருக்கிறது. இதுகுறித்தும் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம். அந்தத் தீர்மானத்தை உங்கள்மூலமாக தமிழ்நாட்டு அரசுக்கும், மற்றவர்களுக்கும் உரிய முறையில் கொண்டு போகிறோம்.
சமூகநீதியில் பெரியார் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள்
ஆகவேதான், வருகின்ற பெரியார் பிறந்த நாள் விழா என்பது இதற்கு முன் நடந்த பிறந்த நாள் விழாக்களைவிட, பல வகைகளிலும் சிறப்பாக - பெரியார் வாழக்கூடிய களத்தில் இந்த விழா நடைபெறுகிறது.
ஏனென்றால், வாழ்நாள் முழுவதும் ஜாதி ஒழிப்பு வீரராக, போர் வீரராக, போராளியாக வாழ்ந்தவர் பெரியார். அதுபோலவே, சமூகநீதி யில் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாம் இன்றைக்கு ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு நீதிமன்றத்தின் மூலமாகவும், மக்கள் மன்றத்தின் மூலமாகவும் உறுதியாகி இருக்கிறது. அதற்கு இடஒதுக்கீடு வாய்ப்புகள் உண்டு.
எனவேதான், சமூகநீதிக்காகத்தான் பெரியார் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியே வந்தார். அந்த சமூகநீதி இன்றைக்கு நடைமுறையில் வந்திருக்கிறது என்பதும் பெரியாருக்குக் கிடைத்திருக்கிற வெற்றி.
எனவே, வருகின்ற பெரியார் பிறந்த நாள் விழா என்பது மிகச் சிறப்பாக நடைபெறக்கூடிய விழாவாக அமையும். அந்த வகையில், இது பாராட்டத்தகுந்தது.
கோவில்களில் தமிழில் அர்ச்சனை!
அன்னை தமிழில் அர்ச்சனை என்று சொன்ன நேரத்தில், அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது என்ற செய்தி அண்மையில் வெளிவந்தது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
தமிழில் அர்ச்சனை செய்யவேண்டும் என்பதற்காக நாங்கள் பல மாநாடுகளை நடத்தும்பொழுது, எங்களிடத்தில் கேள்வி கேட்டார்கள், கடவுள் இல்லை என்று சொல்லக்கூடிய உங்களுக்கு அர்ச்சனைப்பற்றி என்ன கவலை? என்று கேட்டார்கள்.
கடவுள் இல்லை என்பது எங்கள் கொள்கை. ஆனால், நம்புகிறவர்கள் கோவிலுக்குப் போகிறார்கள் அல்லவா - தமிழ் நீஷ பாஷை என்று சொன்னால் ஏற்க முடியுமா? இது உரிமைப் பிரச்சினை. கொள்கைப் பிரச்சினையைத் தாண்டி, உரிமைப் பிரச்சினை என்பதை விளக்கிச் சொன்னோம். அதிலே கூட இப்பொழுது வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி.
அதேபோன்று, மற்ற இடங்களிலும் தாராளமாக இந்தக் கொள்கைகள் வெற்றி பெறும். காரணம், இது நேர்மையானது, நாணயமானது, சமூகத்திற்குத் தேவையானது என்ற அளவில், மகிழ்ச்சியோடு இந்த ஆண்டு சிறப்பாக தந்தை பெரியார் பிறந்த நாள் கொண்டாடப்படும்.
திராவிடப் பாரம்பரியத்தினுடைய பெருமை எப்படிப்பட்டது?
திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஒவ்வொரு சிறப்பான செய்தியும் வரவேற்கக் கூடியது. திராவிடப் பாரம்பரியத்தினுடைய பெருமை எப்படிப்பட்டது என்பதை நேற்றுகூட நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில், பண்டித அயோத்திதாசருக்கு 175 ஆம் ஆண்டு பிறந்த நாள் - மணிமண்டபம். வ.உ.சி. அவர்களுடைய 150 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - என்று 14 அறிவிப்புகளை சிறப்பாக வெளியிட்டு இருக்கிறார்கள்.
பெரியார் உலக நிகழ்ச்சிகள் மூன்று நான்கு கட்டங்களாகப் பிரித்து நடத்தப்பட்டு, தந்தை பெரியார் அவர்களின் 150 ஆம் ஆண்டு விழா வருவதற்கு, இன்னும் ஏழாண்டுகள் இருக்கின்றன. அதற்குள் பெரியார் உலகப் பணிகள் முழுமை அடையக்கூடிய அளவிற்கு இருக்கும். மக்களிடத்தில் நிறைய நிதி திரட்டி, மக்களுடைய பங்களிப்போடு இதனை சிறப்பாகச் செய்ய நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியோடு உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம்.
அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களின் தெளிவான ஓர் அறிக்கை!
செய்தியாளர்: தமிழ் நூல்களையெல்லாம் திராவிடக் களஞ்சியமாக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால், தமிழ் மக்களை எப்படி திராவிடம் என்று சொல்கிறார்கள் என்று சிலர் சொல்கிறார்களே?
தமிழர் தலைவர்: இன்றைக்கு மிக அருமையாக தொழில்துறை - தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தெளிவான ஓர் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள்.
சங்கத் தமிழ் இலக்கியங்கள் என்ற தொகுப்பு வேறு; திராவிடக் களஞ்சியம் என்பது வேறு. இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறவர்கள் மற்றவர்களையும் குழப்புகிறார்கள் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். அந்த விளக்கம் தெளிவானது.
எனவேதான், திராவிட இயக்கம் - திராவிடநல் திருநாடு, திராவிட மொழிகள் என்று கால்டுவெல் காலத்திலிருந்து இருக்கிறது. மொழி வரலாறு தெரிந்தவர்களுக்கு, இன வரலாறு தெரிந்தவர்களுக்கு, பண்பாட்டு வரலாறு தெரிந்தவர்களுக்கு இந்தக் கேள்வி எழாது. தெரியாதவர்களுடைய குழப்பம்தான் இது. அதற்கு அமைச்சர் தெளிவான விளக்கம் சொல்லியிருக்கிறார், அது போதுமானது.
விற்பதற்கென்றே ஒரு ஒன்றிய அமைச்சர்!
செய்தியாளர்: ஒன்றிய அரசு பொதுத் துறை நிறுவனங்களை விற்றுக் கொண்டிருக்கிறதே அதுகுறித்து?
தமிழர் தலைவர்: நேற்று முன்தினம்கூட தெளிவான அறிக்கையை எழுதியிருக்கிறோம். தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருவது என்னவென்றால், இன்னும் கொஞ்ச நாள்களில் இந்தியாவையே விற்று விடுவார்கள், அதிலொன்றும் சந்தேகமேயில்லை.
இதுவரை இருந்த ஒன்றிய ஆட்சியில், பா.ஜ.க. ஆட்சி வந்தவுடன், விற்பதற்கென்றே ஓர் அமைச்சரை நியமித்தார்கள். இதுவரையில் உருவாக்குவதற்கென்றுதான் அமைச்சரவை இருந்தது. இவர்களின் தனிச் சிறப்பு என்னவென்றால், விற்பதற்கென்று தனி ஒரு அமைச்சர் - Minister for dis-investment என்றே போட்டு, அருண்ஷோரி அமைச்சராக இருந்தார். வாஜ்பேயி காலத்திலிருந்து இது ஆரம்பம். ஆனால், இவ்வளவு வேகமாக இல்லை.
சப்கா சாத், சப்கா விகாஸ் என்று நம்முடைய பிரதமர் மோடி சொன்னார்; அந்த விகாஸ் என்பது - வளர்ச்சி என்பது எப்படி வளர்கிறது என்றால், விற்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, அடமானம் போடுகிறேன் என்று சொல்லி, அதுவும் தெரிந்தவர்களிடமே அடமானம் போட்டால்தான் வசதியாக இருக்கும் என்று 40 ஆண்டுகள், 30 ஆண்டுகள், 25 ஆண்டுகள் என்று அடமானம் போட்டிருக்கிறார்.
வெகுமானம் பெறவேண்டிய ஓர் அரசு- அடமானம் வைக்கக் கூடிய அரசாகியிருக்கிறது!
ஆகவே, வெகுமானம் பெறவேண்டிய ஓர் அரசு, அடமானம் வைக்கக் கூடிய அரசாக ஆகிக் கொண்டிருக்கின்றது.
ஆரம்பத்திலிருந்தே நாங்கள் தெளிவாகச் சொல்கிறோம், அதனுடைய திட்டம் என்னவென்றால், இதை பொருளாதாரக் கண்ணோட்டத்தோடு மட்டும் பார்க்காதீர்கள் - பண வருவாயை மட்டும் தேடுவது என்று நினைக்காதீர்கள் - அதைவிட மிக ஆழமான மறைமுகமான திட்டம் இருக்கிறது. அந்த மறைமுகமான திட்டம் என்னவென்றால், இட ஒதுக்கீட்டை ஒழிக்கவேண்டும் என்பதுதான்.
இட ஒதுக்கீட்டை ஒழிப்பதற்காகத்தான் மறைமுகத் திட்டங்கள்!
பொதுத் துறை நிறுவனங்களில், எஸ்.டி., எஸ்.சி., ஓ.பி.சி. என்று சொல்லக்கூடிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கிறது. இவற்றை ஒழிப்பதற்காகத்தான் இதுபோன்ற மறைமுகத் திட்டங்களை செயல்படுத்துகிறார்கள்.
இதுவரையில் தனியார்த் துறைகளில் இட ஒதுக்கீடு கிடையாது. ஆகவே, திராவிடர் கழகம் அகில இந்திய அளவில், எல்லோரையும் ஒருங்கிணைத்து நடத்தப்போகின்ற மிகப்பெரிய சமூகநீதிப் போராட்டம் எது என்று சொன்னால், தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு தேவை என்பதுதான்.
இந்தத் தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு தேவை என்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பு என்னவென்றால், அகில இந்திய கட்சியான காங்கிரசில் ஏற்கெனவே தீர்மானம் போட்டிருக்கிறார்கள்; கொள்கை அளவில் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். அதேபோன்று, கம்யூனிஸ்ட் இயக்கமும் கொள்கை அளவில் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி.
ஏனென்றால், மாநில கட்சிகள்தான் சொல்கின்றன என்பது கிடையாது. அகில இந்திய கட்சிகளும் கோருகின்றன.
தனியார்த் துறையில் இட ஒதுக்கீடு வேண்டி அகில இந்திய அளவில் போராட்டம்!
பாரதீய ஜனதா கட்சியைத் தவிர, மீதியுள்ள அகில இந்திய கட்சிகள் அனைத்தும் தனியார்த் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளன.
தனியார்த் துறையில் இட ஒதுக்கீடா? அது எப்படி சாத்தியம் என்று கேட்பவர்கள், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு உண்டு. அபர்மேட்டிவ் ஆக்சன் என்று அதற்குப் பெயர். ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு பெயர் மாறும். இட ஒதுக்கீடு என்று சொல்கிறோம், சமூகநீதி என்று சொல்கிறோம். அதுபோன்று, அமெரிக்காவில் அபர்மேட்டிவ் ஆக்சன் என்று பெயர்.
ஆகவே, அடுத்து நமது போராட்டம் என்பது, சமூகநீதிக் களத்தில், தனியார்த் துறையில் மட்டுமல்ல, கூட்டுத் துறை என்ற ஒன்று உண்டு - கூட்டுத் துறை என்றால், பாதி அரசு - பாதி தனியார் - இவை இரண்டும் சேர்ந்ததுதான் கூட்டுத் துறை என்று பெயர்.
தனியார்த் துறையிலும், கூட்டுத் துறையிலும் பொதுத் துறை போலவே இட ஒதுக்கீடு தேவை என்பதை மய்யப்படுத்தி, அகில இந்தியத் தலைவர்களை அழைத்து - இதே சென்னையில் நாங்கள் முயற்சி எடுத்து - இந்தப் பெரியாரண்டிலேயே மிகப்பெரிய அளவிலே திட்டங்களை வகுத்து - அகில இந்திய அளவிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய ஓர் இயக்கத்தைக் கட்டுவோம்.
சட்டபூர்வமாகவும், நியாயப்பூர்வமாகவும் போராடினால், எதையும் பெறலாம்!
செய்தியாளர்: 'நீட்' தேர்வை நிறுத்துவதற்கு தமிழ்நாடு அரசுக்கு உரிமையில்லை என்று வி.பி.துரைசாமி சொல்கிறாரே?
தமிழர் தலைவர்: தமிழ்நாடு அரசுக்கு உரிமை இல்லை என்பதை அவர் சொல்லவேண்டிய அவசியமில்லை. காரணம் என்னவென்றால், உரிமை இருந்தால், அடுத்த நாளே நம்முடைய முதலமைச்சர் அதை செய்திருப்பாரே!
இவர் ஒன்றும் புதிதாக அதைக் கண்டுபிடித்து சொல்லவில்லை. ஆனால், தமிழ்நாடு அரசு அதிலிருந்து விலக்குக் கேட்பதற்கு உரிமை இருக்கிறது. அதுமட்டுமல்ல, 'சண்டை போடுவதற்கும்' உரிமை இருக்கிறது.
வி.பி.துரைசாமி அரசமைப்புச் சட்டத்தை நன்றாகப் படிக்க வேண்டும்.
அந்த அரசமைப்புச் சட்டத்தில், கல்வி என்பது முதலில் மாநில அரசிடமிருந்தது. அப்படி மாநில அரசிடமிருந்தால், இந்தப் பிரச்சினையே வராது.
அதற்கடுத்து, நெருக்கடி காலத்தில், கல்வி என்பது ஒத்திசைவுப் பட்டியலுக்கு வந்தது. ஒத்திசைவுப் பட்டியல் என்றால், கண்கரண்ட் லிஸ்ட். அதை நிறைய பேர் தவறாக மொழி பெயர்த்து 'பொதுப் பட்டியல்' என்று சொல்கிறார்கள்.
கண்கரண்ட் லிஸ்ட்டை தமிழில் சரியாக மொழிப் பெயர்க்கவேண்டுமானால், 'ஒத்திசைவு பட்டியல்' என்பதுதான் சரி.
அதாவது, மாநிலமும் சட்டம் செய்யலாம்; ஒன்றிய அரசும் சட்டம் செய்யலாம். அப்படி இருக்கக்கூடிய கல்வியில், நாங்களே எல்லாவற்றையும் செய்வோம் என்று சொல்வதற்கு அவர்களுக்குச் சட்டபூர்வமான உரிமை கிடையாது.
அதைத்தான் தெளிவாக எடுத்துச் சொல்லி, புதிய சட்டங்கள் வரப் போகின்றன. நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள், புதிய கோணத்திலும் போராட்டம் நடைபெறும்.
எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது, நுழைவுத் தேர்வினை 14 ஆண்டுகளுக்கு மேலாக நடத்திக் கொண்டிருந்தார்கள். அதற்காக நாங்களும், திராவிட முன்னேற்றக் கழகமும் தொடர்ந்து போராடியதன் காரணமாக, கலைஞர் அவர்கள் முதலமைச்சராக வந்தவுடன், சட்டம் கொண்டு வந்து அதனை ரத்து செய்தார்.
அதேபோன்று, 102ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தில், மாநிலங்களுக்கு உரிமை இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தது. 105 ஆவது அரசமைப்புச் சட்டத்தில் உரிமை உண்டு என்று ஒன்றிய அரசு திருத்தம் செய்தது. இது எப்படி ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே செய்ய முடிந்தது?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு, சட்டபூர்வமாகவும், நியாயப்பூர்வமாகவும் போராடினால், எதையும் பெறலாம்.
இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் படும்பொழுதே, எந்த மாநிலம் விலக்குக் கோருகிறதோ, அதைப் பெறலாம், அவர்களுக்கு உரிமை உண்டு என்று சொன்னார்கள்.
இதே துரைசாமி ஒன்றை மறந்துவிட்டாரே, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபொழுது, நீட் தேர்விலிருந்து விலக்குக் கொடுத்தார்களே!
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வெற்றி பெறுவார்
இன்னுங்கேட்டால், இதுவரையில் அரசமைப்புச் சட்டத்தை சரியான பார்வையோடு, உச்சநீதிமன்றத்தில் எடுத்து அவர்களால் வைக்கப்படவில்லை. இந்த அரசால் சரியாக எடுத்து வைக்கப்பட்டு, இந்தப் போராட்டத்தில் நிச்சயமாக, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வெற்றி பெறுவார். தமிழ்நாடு அரசு வெற்றி பெறும் என்பது உறுதி. அதிலொன்றும் சந்தேகமேயில்லை.
அண்ணாமலையின் ஆரோகணம், அவரோகணம் எல்லாமே ஒன்றிய அரசிடம் காட்டட்டும்!
செய்தியாளர்: கரோனா தொற்றுக் காலகட்டத்தில், கோவில் திருவிழாக்களை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், விநாயகர் சதுர்த்தியை நடத்தியே ஆகவேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை போராட்டம் நடத்துவேன் என்று சொல்லியிருக்கிறாரே?
தமிழர் தலைவர்: அண்ணாமலை அவர்கள் தேர்தலில் நின்று தோற்று போனார். நான்கு பேர் அ.தி.மு.க.வின் உதவினால் வெற்றி பெற்றுவிட்டார்கள். அந்த நான்கு இடங்களையும் காலி செய்வது எப்படி என்பதற்கு அவர் உள்ளார்ந்த திட்டம் போட்டிருக்கிறாரோ என்று நினைக்கிறேன்.
அந்த இடங்களையும் இழப்பதற்காக அவர் வேக வேகமாக முயற்சி செய்கிறார். அவர் ஏதோ தி.மு.க. ஆட்சி கிள்ளுக்கீரை என்று நினைத்து, அதைக் கலைத்துவிடுவோம் என்று சொல்கிறார்.
அப்படி கலைக்கவேண்டும் என்றால், அவர் யாரை கலைக்கவேண்டும் முதலில்? நேற்று முன்தினம் ஒரு சுற்றறிக்கை வந்திருக்கிறது. யார் அந்த அறிக்கை அனுப்பியிருக்கிறார்கள் என்றால், ஒன்றிய உள்துறை செயலாளர் அறிக்கை கொடுத்திருக்கிறார்.
எந்த மத நிகழ்ச்சிகளையும் நடத்தக்கூடாது; அதன்மூலமாக கரோனா தொற்று நிறைய பரவுகிறது என்பதால், அதனைத் தடை செய்யவேண்டும் மாநில அரசுகள் என்று சுற்றறிக்கை கொடுத்திருக்கிறார்.
அண்ணாமலை ஒன்றிய அரசிடம்தான் போகவேண்டும்; அண்ணாமலையின் ஆரோகணம், அவரோகணம் எல்லாமே எங்கே நடக்கவேண்டும் என்றால், ஒன்றிய அரசிடம்தான் அவர் நடத்தவேண்டும்.
அதற்கடுத்ததாக, மற்ற மத நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம்; விநாயகர் சதுர்த்தி விழாக்களை நடத்த வேண்டாம் என்று வட மாநிலங்களில் நடைபெறக்கூடிய பி.ஜே.பி. ஆட்சியினரே சொல்லியிருக்கிறார்கள்; கும்பல் சேரக்கூடாது என்பதற்காக. அந்த ஆட்சிகளைக் கலைத்துவிடுவாரா?
அந்த ஆட்சிகளையெல்லாம் கலைத்துவிட்டு வரட்டும்; பிறகு இங்கே வரட்டும்; அப்படி கலைத்துவிட்டால், மிகவும் நல்லது. கொஞ்சம் நஞ்சம் இருக்கின்ற எதிர்க்கட்சியும் இருக்காது. இப்பொழுதே, எதிர்க்கட்சியினர் ஆளுங்கட்சியினர் போன்றுதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே, இருக்கின்ற நான்கு இடங்களை காலி செய்வதற்காக மிகவும் முயற்சி எடுக்கிறார் அண்ணாமலை, அந்த முயற்சி தொடர்ந்தால் நல்லதுதான்!

No comments:
Post a Comment