தமிழ்நாட்டுக்கு 25.84 டிஎம்சி தண்ணீரை கருநாடகா உடனடியாக வழங்க வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 12, 2021

தமிழ்நாட்டுக்கு 25.84 டிஎம்சி தண்ணீரை கருநாடகா உடனடியாக வழங்க வேண்டும்

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்

புதுடில்லி,அக்.12- தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய 25.84 டிஎம்சி தண்ணீரை கருநாடகா உடனடியாக வழங்க வேண்டும் என, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு  (அக்.11) வெளியிட்ட செய்திக் குறிப்பு:

"காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 53ஆவது கூட்டம் நேற்று (11.10.2021) புதுடில்லியில் அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ் நாடு பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, கருநாடக மாநில நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராகேஷ் சிங் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் தமிழகம் சார்பில் காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் ஆர்.சுப்ரமணியன், நீர்வளத்துறை திருச்சி மண்டலத் தலைமைப் பொறியாளர் எஸ்.ராமமூர்த்தி, கருநாடக மாநில காவிரி நீர்வாரி நிகரம் நிறுவன மேலாண்மை இயக்குநர் கே.ஜெயபிரகாஷ், கேரளா நீர்வளத் துறை தலைமைப் பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ், புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வி.சத்யமூர்த்தி, ஒன்றிய நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் சுஷில் குமார் மற்றும் நான்கு மாநில அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் திருச்சி மண் டலத் தலைமைப் பொறியாளர் தற் போது மேட்டூர் அணையில் நீர் வரத்து மற்றும் நீர் இருப்பு விவரங்களைத் தெரிவித்ததுடன், தமிழ்நாட்டின் நீர்த் தேவையைக் கருதி உடனடியாக பிலிகுண்டுலுவில் உச்ச நீதிமன்ற ஆணையின்படி நிலுவையில் உள்ள நீரையும் மற்றும் மாதாந்திர வாரியான நீரையும் உடனடியாக கருநாடக அரசு அளிக்க வலியுறுத்தினார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கருநாடக மாநிலம் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என, கடந்த இரு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையக் கூட் டத்தில் உத்தரவிட்டும் கர்நாடக மாநிலம் திறந்துவிடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இன்றைய நாள் (10.10.2021 வரை) வரை வழங்காமல் நிலுவையிலுள்ள 25.84 டிஎம்சி நீரை உடனடியாகத் தமிழ்நாட்டுக்கு கருநாடகா வழங்கிட வேண்டும் என, தமிழ்நாடு அரசின் பொதுப் பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா கூட் டத்தில் வலியுறுத்தினார். மேலும், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணை யக் கூட்டத்தை முன்கூட்டியே விரைவாகக் கூட்டப்பட வேண்டும் என, தமிழ்நாடு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

விவாதத்துக்குப் பிறகு காவிரி நீர் முறைப்படுத்தும் குழு, கருநாடகா நிலுவையில் உள்ள 25.84 டிஎம்சி நீரையும் இம்மாதம் 30ஆம் தேதிக் குள் அளிக்க வேண்டிய 14 டிஎம்சி நீரையும் பிலிகுண்டுலுவில் அளிக்க வலியுறுத்தப்பட்டது. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையக் கூட் டத்தை அடுத்த 10  நாள்களுக்குள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது".

இவ்வாறு தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment