திருவள்ளூர்,அக்.29- திருவள்ளூர் மாவட்டத்தில் திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம், திருவள்ளூர் அருகே உள்ள புலியூர், ஊத்துக்கோட்டை அடுத்த தொளவேடு ஆகிய பகுதிகளில் உள்ள 3 ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளிகளுக்கு, நபார்டு வங்கிதிட்டத்தின் கீழ், தலா ரூ.69.98 லட்சம் மதிப்பில், தலா 4 கூடுதல் வகுப்பறைகள் கொண்ட கட்டடங்கள் தாட்கோ மூலம் அமைக்கப் பட்டுள்ளது.
அப்பணிகள் முடிவுக்கு வந்ததையடுத்து, புதிய வகுப்பறை கட்ட டங்கள் திறப்பு விழா நேற்று (28.10.2021) நடைபெற்றது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் 3 ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்களை திறந்துவைத்தார்.
அப்போது, அமைச்சர் கயல்விழி செல்வராஜ், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டில் நவம்பர் 1ஆம் தேதி 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. ஆகவே, பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நலத் துறை பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் தொடர்பான கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் மதுமதி, தாட்கோ மேலாண்மை இயக்குநர் விவேகானந்தன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் , பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, டி.ஜெ.கோவிந்தராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் புதிதாக 1,061 பேருக்கு கரோனா தொற்று: 12 பேர் உயிரிழப்பு
சென்னை,அக்.29- தமிழ்நாட்டில் நேற்று (28.10.2021) புதிதாக 1,061 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில், ஆண்கள் 622, பெண்கள் 439 பேர். அதிகபட்சமாக சென்னையில் 135, கோயம்புத்தூரில் 123 பேருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 12,051பேர் சிகிச்சையில் உள்ளனர்.கரோனாவால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்றுமட்டும் 12 பேர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 72 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment