தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 50 சதவீதம் தமிழ் வழி கட்டாயம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 15, 2021

தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 50 சதவீதம் தமிழ் வழி கட்டாயம்

சென்னை, அக்.15 'தொடக்க, நடுநிலை பள்ளிகளில், 50 சதவீதம் தமிழ் வழி வகுப்புகள் கட்டாயம்' என, பள்ளி கல்வித் துறை உத்தர விட்டுள்ளது.

இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குந ரகத்தில் இருந்து, முதன்மைக் கல்வி அதிகாரி களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: இனி வரும் காலங்களில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, ஆங்கில வழி பாடப்பிரிவு துவங்க அனுமதி கேட்கும் பள்ளிகள், அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்துள்ளனவா என பரிசீலித்த பின்னரே, அனுமதி அளிக்க வேண்டும்.

மேலும், ஆங்கில வழி பிரிவு துவங்க, அனுமதி கேட்கும் பள்ளிகளில் குறைந்தபட்சம், 50 சதவீதம் பிரிவுகள், தமிழ் வழியாக இருக்க வேண்டும். இந்த நிபந்தனையை ஏற்கும் பள்ளிகளுக்கே அனுமதி வழங்க வேண்டும்.ஒரு பள்ளியில் நான்கு பிரிவுகள் இருந்தால், இரண்டு பிரிவுகள் தமிழ் வழியாகவும், இரண்டு பிரிவுகள் ஆங்கில வழியாகவும் செயல்படலாம்.

மூன்று பிரிவுகள் இருந்தால், இரண்டு தமிழ் வழி பிரிவு இருக்க வேண்டும். ஒரு பிரிவு மட்டும் இருந்தால், அது தமிழ் வழியாகவே செயல்பட வேண்டும். இந்த அறிவுரைப்படி, அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருக்கலைப்பு கால வரம்பு உயர்வு சட்டத்திருத்தம் நிறைவேற்றம்

புதுடில்லி, அக்.15 பாலியல் பலாத்காரம் உட்பட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, கருக்கலைப்புக்கான உச்சவரம்பை 20 முதல் 24 வாரங்களாக மாற்றுவதற்கான புதிய விதிகளை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

நாட்டில் உள்ள பெண்கள் சாதாரணமாக 12 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்து கொள்ள ஒரு மருத்துவரின் பரிந்துரையும், 12 முதல் 20 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்ய இரு மருத்துவர்களின் பரிந்துரையும் தேவை என விதிகள் அமலில் உள்ளன.பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்வதற்கான காலவரம்பு தொடர்பான சட்டத்திருத்தம், நாடாளுமன்றத்தில் மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, குறிப்பிட்ட வகையை சேர்ந்தோ ருக்கு கருக்கலைப்பு செய்து கொள்வதற்கான அனுமதி, 20 முதல் 24 வாரங்களாக உயர்த்தப்பட்டு உள்ளது. இது தொடர்பான புதிய விதிகளை ஒன்றிய அரசு நேற்று (14.10.2021) அறிவித்தது.

அதன் விவரம் வருமாறு: பாலியல் வன்முறை செய்யப்பட்டோர், விதவைகள், உடல் குறைபாடு உள்ளோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், 24 வாரம் வரை கருக்கலைப்புக்கு அனுமதிக்கப்படுவர். அதேபோல் 24 வார கரு வளர்ச்சி அடைந்த நிலையில், கருவுற்ற பெண்ணுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என உறுதியானாலும் கருக்கலைப்பு செய்யலாம். கருவில் இருக்கும் குழந்தைகள் முழு வளர்ச்சி அடையாமல் மாற்றுத்திறனாளிகளாக பிறக்க வாய்ப்புள்ளது கண்டறியப்படினும், அதனை கலைக்க அனுமதி வழங்கப்படும். காலம் கடந்த நிலையில் கருச்சிதைவு ஏற்பட்டு, கர்ப்பிணிக்கு பாதிப்பு நேரலாம் என உறுதி செய்யப்படுவோருக்கும் இந்த விதிகள் பொருந்தும். இதுபோன்றவர்களை பரிசோதித்து கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கும் பணியை மேற்கொள்ள, மாநில அளவில் மருத்துவ வாரியம் அமைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment