சென்னை, அக்.28- அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஅய்சிடிஇ) வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வெளிநாடுகளுக்கு சென்று உயர்கல்வி பயில்பவர்கள் இளநிலை, முதுநிலை தொழில்நுட்பப் படிப்புகளில் அங்கீகாரமற்ற அல்லது இணையில்லாத பாடங்களை தேர்வு செய்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறு அதிகம் செலவு செய்து வெளிநாடுகளில் படிக்கும் படிப்புகளுக்கு உரிய அங்கீகாரம் இல்லாததால் நம்நாட்டின் வேலைவாய்ப்புகளை அந்த மாணவர்கள் பெறுவதில் சிக்கல்கள் நிலவுகின்றன. மேலும், அதிக செலவு செய்து மாணவர்கள் கல்வி பயில்வதும் வீணாகி விடுகிறது.
இதை கருத்தில்கொண்டு உயர்கல்வி பயில்வதற்கு வெளிநாடு செல்லும் மாணவர்கள் அதிக கவனத்துடன் படிப்புகளை தேர்வு செய்ய வேண்டும்.
வெளிநாடுகளில் கற்பிக்கப்படும் படிப்புகளுக்கு நம்நாட்டில் உள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்க இயலுமா என்பதை சரிபார்த்த பின்னர் சேரவேண்டும். அதேபோல, பாகிஸ்தான் சென்று உயர் கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள் ஏஅய்சிடிஇ-யிடம் அதற்கான தடையில்லா சான்றைக் கட்டாயம் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தாயின் பெயரை முதல் எழுத்தாக பயன்படுத்த அனுமதி கோரிய வழக்கு
மதுரை,அக்.28- தந்தை பிரிந்த நிலையில் தாயாரின் பெயரை மகளுக்கு முதல் எழுத்தாகப் பயன்படுத்த அனுமதி கோரிய மனு மீது 30 நாளில் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட் டுள்ளது.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கரூர் மாவட்டம் கடவூரைச் சேர்ந்த போதும்பொண்ணு என்பவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது,
எனது மகள் காவ்யா, கடவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்புப் படிக்கிறார். கணவர் 14 ஆண்டுகளுக்கு முன் என்னை விட்டுப் பிரிந்து சென்று விட்டார். நானும், மகளும் எனது தந்தையின் பராமரிப்பில் இருக்கிறோம். மகளை பள்ளியில் சேர்த்தபோது எனது பெயரின் முதல் எழுத்தை (இன்ஷியலாக) அவளது பெயருக்கு முன்னால் பதிவு செய்தேன். ஆதார் அட்டை யிலும் எனது பெயரின் முதல் எழுத்தையே மகளின் பெயருக்கு முன் குறிப்பிட்டுள்ளேன்.
இருப்பினும் எனது பெயரின் முதல் எழுத்தை ஏற்க பள்ளி நிர்வாகம் மறுத்துவிட்டது. 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வின்போது பிரச்சினை வரும் என்றும், அதனால் தந்தை பெயரின் முதல் எழுத்தைக் குறிப்பிடு மாறு பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியது. எனவே, எனது பெயரின் முதல் எழுத்தையே மகளின் பெயருக்கு முன் பயன்படுத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, மனுதாரரின் மனுவை 30 நாளில் பரிசீலித்து பள்ளிக்கல்வி இயக்குநர், கரூர் மாவட்ட ஆட்சியர், தேர்வுத்துறை இயக்குநர் ஆகி யோர் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தர விட்டார்.
புதிதாக அரசுப் பணியில் சேரும் ஊழியர்களுக்கு சொந்த மாவட்டங்களில் பயிற்சி
தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை,அக்.28- புதிதாக அரசுப் பணியில் சேரும் அரசு பணியாளர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் பணி யாளர்களுக்கு பணி தொடர்பான பயிற்சியை அந்தந்த மாவட்டங்களிலேயே வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பவானி சாகர் பயிற்சி மய்யத்திற்குச் சென்று அரசு ஊழியர்கள் பயிற்சி பெற வேண்டிய சூழல் இருந்தது
இனி பயிற்சி பெற வேண்டிய அரசு பணியாளர்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலேயே பயிற்சி வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது
அனைத்து மாவட்டங்களுக்கும் பவானிசாகர் பயிற்சி மய்யத்தில் இருந்து அதிகாரிகள் சுற்றுப்பயணம் மேற் கொண்டு அடிப்படை பயிற்சிகளை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மேலும் ஒரு நீதிபதி நியமனம்
சென்னை,அக்.28- சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக ஜெ.சத்ய நாராயண பிரசாத் நியமிக்கப் பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரை ஞர்களாக பணியாற்றி வந்த சிறீமதி சுந்தரம், டி.பரத சக்ரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபிக் ஆகியோர் கடந்த அக்.20ஆம் தேதி புதிய கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் உயர் நீதிமன் றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றி வந்த ஜெ.சத்ய நாராயண பிரசாத்தை, உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று (27.10.2021) உத்தரவிட்டுள்ளார். அதன் படி அவர் நாளை (29.10.2021) புதிய நீதிபதியாக பொறுப் பேற்கவுள்ளார்.
தமிழ்நாட்டில் புதிதாக 1,075 பேருக்கு கரோனா தொற்று
சென்னை,அக்.28- தமிழ்நாட்டில் நேற்று (27.10.2021) ஆண்கள் 628, பெண்கள் 447 என மொத்தம் 1,075 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிக பட்சமாக சென்னையில் 139, கோவையில் 125 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 26,98,493-ஆக அதிகரித்துள் ளது. இதுவரை 26,50,145 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று (27.10.2021) மட்டும் 1,315 பேர் குணமடைந்து வீடு களுக்குத் திரும்பினர். தமிழ்நாடு முழுவதும் 12,288 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 36,060-ஆக உயர்ந்துள்ளது.
No comments:
Post a Comment