ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஆயிரக்கணக்கானோர் இந்திய குடிமைப்பணியில் உள்ளனர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 6, 2021

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஆயிரக்கணக்கானோர் இந்திய குடிமைப்பணியில் உள்ளனர்

கருநாடக மேனாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி அதிர்ச்சித் தகவல்

 பெங்களூரு, அக்.6 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்திய குடிமைப்பணியில் ஆயிரக்கணக்கான ஆர்.எஸ்.எஸ் அமைப் பினர் நியமனம் செய்யப் பட்டுள்ளதாக கருநாடக முன்னாள் முதலமைச்சர் குமராசாமி அதிர்ச்சிகர தகவலை கூறியுள்ளார்.

மேனாள் முதலமைச்சர்  குமாரசாமி பெங்களூருவில் ஊடகவியலாளரைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,  நாட்டில் அரசு துறைகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் உயர் பதவியில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய ஆட்சி பணியில் அந்த அமைப்பை சேர்ந்த 4,000 பேர் சேர்ந்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அய்..எஸ், அய்.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற பயிற்சி அளிக்கிறது. கடந்த 2016ஆம் ஆண்டு மட்டும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த 626 பேர் இந்திய ஆட்சி பணி தேர்வில் வெற்றி பெற்றனர். நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது:

நான் எந்த கட்சி குறித்தோ அல்லது அமைப்புகள் குறித்தோ தவறாக பேசவில்லை. கரோனா ஊரடங்கு நேரத்தில் நான் பல்வேறு புத்தகங்களைப் படித்தேன். வரலாற்று அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்தேன். அந்த புத்தகங்களில் கூறியுள்ள சில தகவல்களை தான் நான் கூறியுள்ளேன். நாடு தற்போது சென்று கொண்டிருக்கும் பாதையை பார்க்கும்போது, அந்த கருத்தை கூற வேண்டும் என்று நான் நினைத்தேன். நாட்டில் உண்மையாக என்ன நடக்கிறது என்பது மக்களுக்கு தெரியவில்லை. உண்மையை மூடிமறைத்தால், அது நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களை அவமதித்தது போன்றது ஆகும். மக்களுக்கு உண்மையை தெரிய வேண்டும். உண்மையை சொல்ல எனக்கு எந்த தயக்கமோ, பயமோ இல்லை.

நான் யாருக்கும் எதிராகவோ அல்லது ஆதரவாகவோ இந்த கருத்தை கூறவில்லை. உண்மை பற்றி மக்கள் விவாதிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். நான் எப்போதும் உண்மையின் பக்கம் இருக்கிறேன் என்று எச்.டி. குமாரசாமி தெரிவித்தார்.

No comments:

Post a Comment