ஆசிரியர்: கோவி. லெனின்
வெளியீடு:
நக்கீரன் பப்ளிகேசன்ஸ்
105, ஜானி ஜான்கான் சாலை
இராயப்பேட்டை
சென்னை- 14.
பக்கங்கள்: 200
விலை: 200/-
திராவிட இயக்கம், சமூக நீதி, மதச்சார்பின்மை, ஊடக சுதந்திரம் என்று முற்போக்கு கருத்துகளுடன் பேச்சு, எழுத்து படைப்பு என தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி லெனின் அவர்களால் எழுதப்பட்ட ஆவணம். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் வழியில் திராவிட இயக்கத்தின் இலட்சிய பயண வரலாற்றில் இடம்பிடித்து சாதனை படைத்து வரும் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் பன்முக ஆற்றலை, அளப்பரிய பண்புகளை, சாதனைகளை வெளிப்படுத்தும் நூலாக ஒரு அமைந்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி செயலாளராக அடுத்த தலைமுறை இளைஞர்களை திராவிட இயக்கத்தின் பால் ஈர்த்து திராவிட இயக்கத்தின் எதிர்காலத்தை அரை நூற்றாண்டுக்கு உறுதி செய்த அவரது தலைமை பண்பு தொடங்கி, சட்டமன்ற உறுப்பினராக, சிங்காரச் சென்னையில் நாயகராக அவரை வெளிக்காட்டிய மேயர் பொறுப்பில் சென்னை மாநகரின் மேம்பாட்டுக்கு அவர் ஆற்றிய பெரும் பணிகளை விளக்கி, தமிழ்நாட்டில் உள்ளாட்சித் துறை அமைச்சராய் அவர் ஆற்றிய அரும்பணிகள், குறிப்பாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாத சில ஊராட்சிகளுக்கு தேர்தலை நடத்தி முடித்து, வெற்றி பெற்ற பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா என்ற பெயரில் ஒரு சமத்துவ பெருவிழாவை நடத்தி தனது ஆளுமையை உறுதிப்படுத்திய வரலாற்றை சிறப்பாக விளக்குகிறார் நூலாசிரியர்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தலைவரின் பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க இனமானப் பேராசிரியர் உள்ளிட்ட திமுக பொறுப்பாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க திமுகவின் செயல் தலைவராக பொறுப்பேற்று அவர் செய்த அரும்பணிகளையும், கலைஞர் அவர்கள் மறைவுக்குப்பின் திமு கழகத்தின் தலைமைப் பொறுப்பேற்று இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த அளப்பரிய பணிகளையும் புதிய தலைமுறைக்கு புரியும் வகையில் மிகச் சிறப்பாக படித்துள்ளார் இந்த நூலை. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் வேறு முடிவுகளைத் தந்த நிலையில் தமிழ்நாட்டில் மோடி மஸ்தான் வேலைகளுக்கு முடிவு கட்டிய திராவிடர் சமூகத்தின் கோட்பாட்டின் தளபதியாக மிளிர்ந்தார் என்பதை பல்வேறு அரசியல் நிகழ்வுகளுடன் விளக்குகிறார். இடியாக 2021 தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சராக தம் பணியை தொடங்கி சமூக நீதியின் தொடர் ஓட்டத்தில் சுடரை ஏற்றி ஓடிக்கொண்டிருக்கும் அவரது சமூக நீதி பணியை தொடங்கியிருக்கும் செய்திகளுடன் நிறைவடைகிறது. தளபதி மு.க.ஸ்டாலின் மீது அவதூறாகக் கட்டமைக்கப்பட்டுள்ள பொய் பிம்பங்களை உடைத்து அவரது அரசியல் அறிவை செயலாற்றலை எல்லோரையும் மதிக்கும் பண்பை எளிமையை உழைப்பை வெளிக்காட்டும் நூலாக இந்நூல் அமைந்து உள்ளது. - வை.கலையரசன்
No comments:
Post a Comment