தஞ்சை, குடந்தை, திருச்சி நகரங்களில் சூறாவளிப் பயணம் "கற்போம் பெரியாரியம்" நூல் வெளியீட்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 5, 2021

தஞ்சை, குடந்தை, திருச்சி நகரங்களில் சூறாவளிப் பயணம் "கற்போம் பெரியாரியம்" நூல் வெளியீட்டு விழா

 'நீட்' எதிர்ப்புக் கருத்தரங்கமாக பரிணமித்தது

தோழர்களின் சாதனைக்குப் பாராட்டும், வாழ்த்தும் : கழகத் தலைவர் பெருமிதம்

2.10.2021 அன்று மாலை (6.30 மணி தொடங்கி 10 மணி வரை) தஞ்சையிலும், 3.10.2021 அன்று (ஞாயிறு) (காலை 10 மணி முதல் 2.30 மணி வரை) குடந்தையிலும், 3.10.2021 (ஞாயிறு) மாலையில் திருச்சி மாநகரத்திலும் (மாலை 6.30 மணி முதல் 9 மணி வரை) 'நீட்' தேர்வு ஏன் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை விளக்கும் வண்ணம் எனது உரைகளும், 'கற்போம் பெரியாரியம்' நூலைப்பற்றி தஞ்சையில் பேராசிரியர் எழிலரசன் அவர்களும் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் அவர்களும் 'ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை' என்ற நூல் பற்றியும் மிக அருமையான ஆய்வுரைகளை, எளிய முறையில் எல்லோருக்கும் விளங்கும் வகையில் விளக்கினார்கள்.

தி.மு.. மற்றும் கூட்டணி தோழமைக் கட்சிகளின் உள்ளூர் தலைவர்கள், பிரமுகர்கள் எல்லாம் வந்து நிகழ்ச்சியில் உரையாற்றியும், நூல்களைப் பெற்றும், பெரும் ஊக்கமளித்தனர்.

குறுகிய காலத்தில் மாவட்டத் தலைவர் மூத்த வழக்குரைஞர் அமர்சிங், அவர்களும், கழகப் பொதுச் செயலாளர் ஜெயக்குமார் அவர்களும், அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன், மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் அருணகிரி, மண்டலத் தலைவர்

மு.அய்யனார், நகர கழகப் பொறுப்பாளர், .. மாநில தலைவர் அழகிரிசாமி உட்பட பல முக்கியஸ்தர்களாலும் ஏற்பாடு செய்யப்பட்ட  வெளியீட்டு விழாவை, 'நீட்' தேர்வு ஒழிப்புப் பிரச்சினை நிகழ்வுகளை ஒரு மாநாடு போல ஆக்கி விட்டனர்! வெற்றிகரமாக நடத்தினர்!!

மாவட்டத்திலிருந்து பல தோழர்களும் பல கட்சியினரும் பங்கேற்றனர்.

கடந்த தேர்தல் பிரச்சாரத்தை எந்த தஞ்சையில் முடித்தோமோ, நாம் அதே தஞ்சையிலிருந்து மீண்டும் நீட் தேர்வு மோசடி பற்றிய தீவிர பிரச்சார இயக்கத்தை தொடங்கினோம் - மக்களின் பேராதரவுடன்!

விதை நெல்லை விதைப்பது போல் நம் பொறுப்பாளர்கள் தஞ்சையில் (4 புத்தகங்கள்) 229 செட்டுகளை வாங்கி கொள்கைப் பரப்பை கொண்டாட்டமாகவே செய்தனர் - உற்சாகத்தோடு!

அதுபோலவே 'தஞ்சையை மிஞ்சுவோம்" என்று சொல்லாமற் சொல்வது போன்று குடந்தை ராயாஸ் மகாலில் ஒரு மாநாடே நடத்தி விட்டார்கள்! மாவட்ட தலைவர் வழக்குரைஞர் நிம்மதி அவர்களும், அவரது ஒருங்கிணைந்த அனைத்து கழகப் பொறுப்பாளர்கள் கழகப் பணிகளை முத்திரை பதித்துச் செய்யும் முழு ஆற்றலாளர்களாகத் திகழ்வதற்கு அங்கே நடந்த 'நீட்' ஒழிப்புப் பிரச்சாரம், நமது நான்கு நூல்களைப் பரப்பும் விழாவும் வெகு சிறப்புடன் உள்ளூரில் தி.மு.. உட்பட அனைத்து தோழமைக் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள், கூட்டுப் பணித் தோழர்கள் என்ற உரிமை, உற்சாகத்துடன் கலந்து கொண்டு குடந்தை வெறும் பக்தி நகரம் என்பதை மாற்றிடும் வகையில் அது 'புத்தி நகரம்' என்று காட்டும் வண்ணம் 4 புத்தகங்களைக் கொண்ட சுமார் 200 செட்டுகளை பரப்பி,  'எம் உழைப்பு எவருக்கும் சளைத்ததல்ல' என்று உணர்த்தினார்கள்! பேராசிரியர் நம் சீனிவாசன், பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் நூல்களை விளக்கி ஆய்வுரை நிகழ்த்தினர். விழா முடிந்து சாலை ஓரத்தில் மதிய உணவு, பகல் 3 மணிக்கு நாங்கள் முடித்தோம்! அறிவுப் பசி தீர்ந்த பிறகே வயிற்றுப் பசிக்கு உணவு என்பதை நடைமுறைப்படுத்தி மகிழ்ந்தோம்.

மாலை 5 மணி திருச்சி பெரியார் மாளிகை வந்தோம்! 6 மணிக்கு பெரியார் மாளிகையில் புத்தக வெளியீட்டு விழா மாவட்டத் தலைவர் ஆரோக்கியராஜ், .. பொறுப்பாளர் . சுப்ரமணியம், பகுத்தறிவாளர் கழகப் பொறியாளர் சண்முகவேல், மற்றும் பல பொறுப்பாளர்களும் கலந்து 200 செட் (ஒவ்வொரு செட்டும் 4 நூல் தொகுப்பு) பரப்பினர்.

பேராசிரியர் நம் சீனிவாசன் ('கற்போம் பெரியாரியம்'), தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் அமைப்பின் முக்கிய தலைவர் கவிஞர் நந்தலாலா ('ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை' நூல்) ஆகியோரின் ஆழமான உரைகள் சிரிக்கவும், சிந்திக்கவும், நூல்களைப் பெறவும் வைத்தன.

நீட் தேர்வு மற்றும் பெரியாரியம் பற்றிய எல்லா ஊர்களிலும் நான் ஒரு மணி நேரம் குறையாமல் - என்னை அறியாமலேயே உரையாற்றினேன். காரணம் தோழர்கள் எனது பேட்ரியை 'ரீசார்ஜ்' செய்து விட்டனர்! அலுப்பு, சலிப்பு இல்லை. (திருச்சியில் 200 செட்  வரை பரப்பினர்).

நிகழ்ச்சி முடிவில் மகிழ்ச்சி வெள்ளம் அனைவரிடத்திலும்! பல தரப்பட்டவர்கள் கூடியிருந்தனர்.

ஏற்பாடு செய்து உழைத்த அனைவரையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை!

நன்றி! நன்றி!! உழைப்போம் பெரியாரை உலகமயமாக்குவோம்! உலகத்தை பெரியார் மயமாக்குவோம்!!

நம் உழைப்பு எப்போதும் வீண் போவதில்லை வெற்றிகளைக் குவிப்பதில்!

எனவே தோழர்கள் பணி தொடரட்டும்; - பாதுகாப்பையும் மறவாதீர்!

 கி.வீரமணி

தலைவர் 

திராவிடர் கழகம்

சென்னை       

5.10.2021           

No comments:

Post a Comment