தந்தை பெரியார் இயக்கம் அமைத்து கொள்கைக்காகப் போராடினார்
சென்னை, அக்.6 காலத்தால் முன்னோடியாக இருந்தவர்கள் பாடினார்கள், பேசினார்கள் - இயக்கம் நடத்தினார்களா? தந்தை பெரியார் இயக்கம் அமைத்து கொள்கைக்காகப் போராடினார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு சிறப்பு நேர்காணலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டி அளித்தார்.
அப்பேட்டியின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
அயோத்திதாசரே திராவிடர்தானே!
நெறியாளர்: பெரியார் மண் என்பதையும் நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இது வள்ளுவரின் மண் - அவருக்கு முன்பாக அயோத்திதாசர் சமூகநீதிக்குக் குரல் கொடுத்திருக்கிறார் என்று சொல்கிறார்களே?
தமிழர் தலைவர்: அயோத்தி தாசரே திராவிடர் என்று சொல்லியிருக்கிறாரே, இதற்கு என்ன பதில்?
பாடினார்கள், பேசினார்கள் - இயக்கம் நடத்தினார்களா?
நெறியாளர்: பெரியார் மண் என்று நீங்கள் அழைப் பதே முதலில் தவறு. பெரியாருக்கு முன்னதாகவே சமூகநீதிக்கோ, இந்த மண்ணுக்கோ, மக்களுக்காகவோ பாடுபட்டவர்கள் இருக்கிறார்கள். ஆகவே, பெரியார் மண் என்று அடையாளப்படுத்துவது தவறு என்று சொல்கிறார்களே?
தமிழர் தலைவர்: அதாவது, முன்னோட்டமாக எத்தனை பேர் இருப்பார்கள். இராமலிங்கனார் ஜாதி ஒழிப்பைப்பற்றி பேசினார்; சித்தர்கள் ஜாதி ஒழிப்பைப் பற்றி பேசினார்கள்.
நடைமுறையில் கொண்டு வந்து, இன்றைக்கு மக்கள் மத்தியில் ஏராளமான போரட்டங்களை நடத்தி, அந்த ஒடுக்கப்பட்ட ஜாதிக்காரரைக் கொண்டு வந்து, உயர்நீதிமன்ற நீதிபதியாக்கி, உச்சநீதிமன்ற நீதிபதியாக்கி - நடைமுறையில் ஆக்கியது யார்?
அதுதானே மிகவும் முக்கியம்.
பாடினார்கள், பேசினார்கள் - இயக்கம் நடத்தினார் களா?
94 ஆண்டுகள் வரையில் போராட்டங்களை நடத்தி னார்களா?
இந்தக் கேள்விகளையெல்லாம் தெரிந்தவர்கள் கேட்கிறார்கள்.
ஆகவே, அவர்களை நாங்கள் குறைத்து மதிப்பிட வில்லை. அவர்கள் முன்னோடிகள். முன்னோட்டம் இருக்கலாம். ஆனால், நடைமுறையில், கட்டடத்தை எழுப்பவேண்டும் அல்லவா! அதுதானே மிகவும் முக்கியம்.
அவர்களை நாங்கள் மறைக்கவேண்டிய அவசிய மில்லையே - அவர்களுடைய தொண்டை நாம் குறைக்கவில்லையே! அவர்கள் காலத்தால் முன்னோடி யாக இருக்கலாம் - ஆனால், அவர்கள் நடைமுறையில் செய்தது என்ன?
பெரியார் இயக்கம் அமைத்தார்; கொள்கைக்கும் அவரே - அமைப்புக்கும் அவரே - போராடியதும் அவரே - எல்லா வகையிலும் செய்திருக்கிறார். அதை எப்படி குறை சொல்ல முடியும்?
குறை சொல்கிறவர்களுக்குக் குறைந்த புத்தி இருக் கிறது என்று அர்த்தமே தவிர வேறொன்றும் கிடையாது.
அண்ணா சாலையில், மீண்டும் கலைஞருக்கு சிலை
நெறியாளர்: அண்ணா சாலையில் கலைஞருக்கு சிலை என்கிற அறிவிப்பு வந்திருக்கிறது. அந்த சிலையை திராவிடர் கழகம் வைக்கப் போகிறதா?
தமிழர் தலைவர்: கலைஞருக்கு சிலை வைக்க வேண்டும். ஏற்கெனவே அண்ணா சாலையில் அவ ருடைய சிலை இருந்தது. அந்த அண்ணா சாலையில், கலைஞருக்கு மீண்டும் சிலை வைக்கவேண்டும் என்பதுதான் எங்களுடைய பிரதானமான கோரிக்கையே தவிர,
ஒருவேளை அரசே முடிவு செய்து, நாங்களே வைக் கிறோம் என்று சொன்னால், சிலை அமைக்கவேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணம்.
நாங்கள் அனுமதி கேட்டிருக்கிறோம். ஏற்கெனவே சிலை இருந்த இடத்தில், மீண்டும் சிலை வைக்கவேண்டும் என்று. அந்த அரசாணை இன்னும் ரத்து செய்யப் படவில்லை.
மற்ற தலைவர்களுக்கெல்லாம் அண்ணா சாலையில் சிலைகள் இருக்கின்றன. அரசு என்ன முடிவு செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
முதலமைச்சர் சொன்ன ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், அண்ணா சாலையில் கலைஞர் சிலை அமைக்கப்படும். அதுதான் எங்களுக்கு அடிப்படை யானது. நாங்கள் சிலை வைக்கிறோமா? அரசாங்கம் சிலை வைக்கிறதா? என்பதில் எங்களுக்கு உரிமைப் பிரச்சினையெல்லாம் கிடையாது.
நாங்கள் வைப்பதைவிட, ஒரு அரசாங்கம் வைத்தால், அரசாங்கம் எல்லோரையும் சார்ந்தது. ஆகவே, அதனால் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சிதான்.
எங்களுக்கு அனுமதி கொடுத்தால், அதனை செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
சமூகநீதி சரித்திர நாயகருக்கும் - சமூகநீதி காத்த வீராங்கனைக்கும் என்ன வேறுபாடு?
நெறியாளர்: அண்மையில், தமிழ்நாடு முதலமைச் சருக்கு ‘‘சமூகநீதியின் சரித்திர நாயகர்'' என்ற பட்டம் வழங்கியிருந்தீர்கள்; சமூகநீதியின் சரித்திர நாயகருக்கும், சமூகநீதி காத்த வீராங்கனைக்கும் என்ன வேறுபாடு?
தமிழர் தலைவர்: இரண்டிற்கும் போட்டியும் கிடையாது; எது உயர்ந்தது? எது தாழ்ந்தது? என்பதும் கிடையாது. எது சூப்பர்லேட்டிவ் டிகிரி, எது மற்றது என்பதும் கிடையாது.
தமிழ்நாட்டிற்கு ஒரு பெரிய பெருமை உண்டு. பெரியார் மண்ணுக்கு, சமூகநீதி மண்ணுக்கு.
என்ன அந்த பெருமை என்றால், கட்சிகள் மாறலாம்; முதலமைச்சர்கள் மாறலாம்; ஆட்சிகள் மாறலாம்; ஆனால், சமூகநீதியினுடைய போக்குக்குத் தடை ஏற்படாது.
காமராஜர் காலத்தில் 25 சதவிகிதம்
கலைஞர் காலத்தில் 35 சதவிகிதம்
அதேபோன்று 16 சதவிகிதம் - 18 சதவிகிதம்
69 சதவிகிதம்
இப்பொழுது 69 சதவிகிதம் பாதுகாக்கப்பட்டு, ஒன்றிய அரசு உத்தியோகங்களில் இன்னின்ன இட ஒதுக்கீடு - பெண்களுக்கு இன்னின்ன ஒதுக்கீடு என்று வளர்ந்துகொண்டே இருக்கிறது.
எனவே, இந்த சரித்திரத்தைப் பாதுகாக்கக் கூடிய ஆட்சியாகவும், சரித்திர நாயகராகவும் இருக்கிறார்.
பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்பட்டு இருக்கிறதா?
நெறியாளர்: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்று பணி நியமன ஆணைவரை வந்து, அது அடுத்த கட்டத்திற்குப் போயிருக்கிறது; பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்பட்டு இருக்கிறதா?
தமிழர் தலைவர்: ஆமாம். அகற்றப்பட்டதினால்தானே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகப் பணி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்பதுதான் தந்தை பெரியாரின் கடைசிப் போராட்டமாகும்.
இதே திடலில்தான். அதற்குக் களம் காணவேண்டும் என்று சொன்னார்கள். அந்தப் போராட்டத்தை அறிவித்தார். அய்யா அவர்கள் மறைந்துவிட்டார். அன்னை மணியம்மையார் நடத்தினார்கள்; நாங்கள் தொடர்ந்து அந்தப் போராட்டத்தை நடத்தினோம்.
கலைஞர் அவர்கள், தந்தை பெரியாருக்கு இறுதி மரியாதை - அரசு மரியாதை செய்தபொழுது, தந்தை பெரியாருக்கு அரசு மரியாதையைத்தான் என்னால் கொடுக்க முடிந்தது - ஆனால், அவருடைய நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்க முடியவில்லை என்று உரு வகப்படுத்தினார்.
எது நெஞ்சில் தைத்த முள்?
அந்த ஆசை, அந்த எண்ணம், அந்த விழைவு நிறைவேறாத ஒரு சூழல்.
எனவே, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இன்றைக்குப் பணி நிய மனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
ஆகவே, பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்பட்டு விட்டது.
ஏற்கெனவே நடைமுறையில் எங்கே இருக்கிறது?
நெறியாளர்: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்பது ஏற்கெனவே தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கக் கூடியதுதான். இப்பொழுது பணி நியமன ஆணை கொடுத்து வேண்டுமென்றே இவர்கள் செய்ததுபோல காட்டுகிறார்கள் என்று பா.ஜ.க.வினர் சொல்கிறார்களே?
தமிழர் தலைவர்: ஏற்கெனவே நடைமுறையில் எங்கே இருக்கிறது? பூசாரிகள் இருப்பதா? அர்ச்சகர் அல்ல - பூசாரி என்று ஏன் பெயர் வைத்திருக்கிறார்கள், முதலில் அதற்குப் பதில் சொல்லட்டும்.
எந்தக் கோவிலிலாவது அர்ச்சகராக ஆதிதிராவிடர் இருந்தாரா? பெண்கள் இருந்தார்களா?
ஏன் வரலாற்றுத் திரிபுவாதம் செய்கிறீர்கள்? யார் சொன்னார்கள் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது என்று.
காளியாத்தா கோவிலிலும், மாரியம்மன் கோவிலிலும் கூட வருமானம் வருகிறது என்றவுடன், உள்ளே புகுந்துவிட்டார்கள். யார் உள்ள போகக்கூடாதவனோ அவன் உள்ளே புகுந்து விட்டான். வருமானம் வந்தால், உள்ளே போய்விடுகிறார்கள்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற பெயரில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை சொல்லுங்கள்.
காளியாத்தா கோவிலிலும், மாரியாத்தா கோவிலிலும் மணி அடிப்பவர் அர்ச்சகரா? அவருக்கு அர்ச்சகர் என்ற பெயர் உண்டா?
அவருடைய பெயர் பூசாரி என்கிறார்கள்.
நம்மாள் காளியத்தா கோவிலில் இருந்தால், ‘டேய்' என்று அழைப்பார்கள். இவர்கள் அர்ச்சகர்களாக இருந் தால், ‘சாமி' என்பார்கள். இதில் வித்தியாசம் இருக்கிறதா, இல்லையா?
கோவில் கட்டியவர்கள் யார்?
சிலையை அடித்தவர் யார்?
பெரிய மணியை நம்மாட்களிடம் கொடுத்துவிட் டார்கள்; சின்ன மணியை அவன் வைத்துக்கொண்டான்.
பெரியார்தான் சொன்னார், மணி மாறட்டும் என்று. பெரிய மணியை அவன் அடிக்கட்டும்; சின்ன மணியை இவனிடம் கொடு என்றார்.
அந்த முள்ளை அகற்றினார்கள். அதுதான் முள்.
சதி அல்ல- சட்ட விதி!
நெறியாளர்: இன்னொரு சந்தேகத்தையும் எழுப்பு கிறார்கள். கடவுள் நம்பிக்கை அற்றவர்களையெல்லாம் இந்து அறநிலையத் துறையில் அர்ச்சகராக நியமிக் கக்கூடிய சதி நடக்கிறது; அர்ச்சகராகப் பணி நியமனம் பெற்றவர், பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். கடவுள் இல்லை என்று சொன்ன பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பவர், எப்படி உள்ளார்ந்த உணர்வோடு அர்ச்சகராக செயல்படுவார்; இந்து அறநிலையத் துறையில், கடவுள் நம்பிக்கையற்றவர்களை உள்ளே திணிக்கக்கூடிய சதி நடக்கிறது என்கிறார்களே?
தமிழர் தலைவர்: சதி அல்ல - அதுதான் இப்பொழுது நடக்கவேண்டிய விதி - சட்ட விதி.
எப்படியென்று கேட்டால், முதலாவதாக அடிப் படையில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன.
கடவுள் நம்பிக்கையற்றவர்கள் யாரும் அர்ச்சகராக நியமிக்கப்படவில்லை.
இந்து மதம் என்றால், நாத்திகர் இந்துவாக இருக்க லாமா? இல்லையா? என்ற கேள்விக்குப் பதில் சொல்லட்டும்.
ஏன் அர்ச்சகராக இருக்கக்கூடாது.
ஆகமப் பயிற்சி பெற்றவர்கள்தான் அர்ச்சகராக பணியில் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இல்லாத ஒன்றை கற்பனையாக எடுத்துக்கொண்டு பேசினால், அதனால் என்ன பயன்?
பொய் என்பதை அவர்களே ஒப்புக்கொண்டு விட்டார்கள்!
நெறியாளர்: மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில், இந்து சமய ஆன்மிகப் பணிகள் நிறைய நடக்கின்றன; பெரியாரின் வழிவந்த தி.மு.க. ஆட்சியில் நிறைய இந்து சமய ஆன்மிகப் பணிகள் நடக்கிறதே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: அப்படியென்றால் நன்றாக ஒன்று புரிகிறது. ஸ்டாலின் முதலமைச்சரானால், கோவில்களை யெல்லாம் மூடிவிடுவார்; ஸ்டாலின் முதலமைச்சரானால், கடவுள்கள் எல்லாம் வெளிநாட்டுக்குப் போய்விடு வார்கள், விசா வாங்காமல் என்று சொன்னது - பொய் என்பதை அவர்களே ஒப்புக்கொண்டு விட்டார்கள் அல்லவா!
இந்தக் கேள்விக்கு அதுதானே பதில்!
திராவிட முன்னேற்றக் கழகத்துக்காரர்கள் கடவுள் மறுப்பாளர்கள் அல்ல!
நெறியாளர்: அவர்கள் ஒப்புக்கொண்டது இருக் கட்டும்; பெரியாரின் வழிவந்த தி.மு.க. ஆட்சியில், நிறைய இந்து சமய ஆன்மிகப் பணிகள் நடக்கிறதே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: எங்கள் இரண்டு பேருக்கும் மத்தியில் நீங்கள் நுழையவே முடியாது. என்ன கேள்வி கேட்டாலும், எங்கள் இரண்டு பேருக்கும் உள்ள ஒற்று மைக்கு மத்தியில் நீங்கள் நுழையவே முடியாது.
ஏனென்றால், எது எங்களைப் பிரிக்கிறது என்பதில் தெளிவு இருக்கிறது.
எது எங்களை இணைக்கிறது என்பதிலும் தெளிவாக இருக்கிறோம்.
ஆகவே, அவர் ஒரு அரசாங்கத்தை நடத்துகிறார். தி.மு.க.விற்கு வாக்களித்தவர்களுக்கும் அவர் முதல மைச்சர்; வாக்களிக்காதவர்களுக்கும் அவர்தான் முதல மைச்சர்.
எல்லோரையும் திருப்தி செய்யக் கூடிய காரியங்களை ஒரு அரசாங்கம் செய்ய முடியாது. சில காரியங்கள் சிலரைத் திருப்தி செய்யும்; சில காரியங்களால் சிலருக்கு அதிருப்தி ஏற்படும்.
அதிருப்தி ஏற்படுவதாலேயோ, மற்ற சங்கடங்கள் வருவதினாலேயோ, முதலமைச்சர் செய்யும் நல்ல காரியங்களையெல்லாம் மறைக்கவேண்டும் என்கிற அவசியமே கிடையாது.
தி.மு.க. என்ற திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், தி.க. என்கிற திராவிடர் கழகத்திற்கும் இடையே கொள்கையில் ஒரு கோடு இருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்காரர்கள் கடவுள் மறுப்பாளர்கள் அல்ல.
அப்படி இருந்தும், சமூகநீதி, மற்ற விடயங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் சிறப்பாக செயல்படுகிறது.
அரசியலுக்குப் போனால், சில விஷயங்களில் நீக்குப் போக்குடன் செயல்படவேண்டி இருக்கும்.
ஆகவேதான், தந்தை பெரியார் அவர்கள் அரசி யலுக்குப் போகவில்லை.
நான் எப்பொழுதும் கொள்கைக்காரனாக இருந்தி ருக்கிறேனே தவிர, கட்சிக்காரனாக இருந்ததில்லை என்று சொன்னார் தந்தை பெரியார் அவர்கள்.
நாளைக்கும் திராவிடர் கழகம் அரசியலுக்குப் போகாது. காரணம் என்ன? நாங்களே ஆட்சியில் அமர்ந்தாலும்கூட, சில நீக்குப் போக்குகளை கடைப் பிடித்தாகவேண்டும்.
அந்த நெருக்கடிக்கு ஆளாகக்கூடாது என்பதால் தான், எங்கள் இயக்கம் அரசியலுக்குப் போகாத இயக்கமாகும்.
அமைச்சர் சேகர்பாபு செயல்களை எப்படி பார்க்கிறீர்கள்?
நெறியாளர்: திருவட்டாறு கோவிலுக்கு அமைச்சர் துரைமுருகன் சென்றபொழுது, திரு.கி.வீரமணி அவர் கள் விமர்சித்தார். அமைச்சர் சேகர்பாபு செயல்களை எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: ஆமாம், விமர்சித்தோம். ஆனால், இப்பொழுது அமைச்சர் சேகர்பாபுவுக்கு அதுதான் வேலை. கோவில்களில் சிலைகள் எல்லாம் இருக்கின் றனவா? நகைகள் எல்லாம் இருக்கின்றனவா? என்கிற கணக்கெடுக்கிறார்.
திராவிடர் கழகம் கூட அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி கொடுத்து, அர்ச்சகர் பணிக்கு அனுப்புங்கள்என்று ஏன் சொல்கிறோம்?
கொள்கை வேறு; உரிமை வேறு என்று பெரியார் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
கடவுள் இல்லை என்று சொல்வது எங்கள் கொள்கை.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்பது உரிமை.
ஆளுநரைத் திரும்பப் பெறவேண்டும் என்கிற குரல்கள் அதிகம் கேட்கிறதே?
நெறியாளர்: தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநர் நியமிக் கப்பட்டு இருக்கிறார். அவருடைய நியமனத்தை திரு.ஸ்டாலின் அவர்கள் வரவேற்றாலும், தி.மு.க. கூட்டணி யில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி யினர் போன்றோர் சந்தேகக் கண்களோடு பார்க்கி றார்கள். ஆளுநரைத் திரும்பப் பெறவேண்டும் என்கிற குரல்கள் அதிகம் கேட்கிறதே?
தமிழர் தலைவர்: ஆளுநர் என்று சொல்வதே பொது வாக தொடக்கத்தில் இருந்தே - ஒரு உண்மையான, தத்துவ ரீதியான அடிப்படை தத்துவம் என்னவென்றால், டில்லியினுடைய முகவர்கள்; ஒன்றிய அரசினுடைய முகவர்கள்.
இங்கே இருப்பவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதை ஒன்றிய அரசிடம் சொல்பவர்கள்தான்.
இரண்டாவது, ஒன்றிய அரசு என்ன சொல்லுகிறதோ, அதற்குக் கண்ணை மூடிக்கொண்டு கையொப்பம் போடுவதுதான் ஆளுநர்களின் பணி என்பது, ஆர்.வெங்கட்ராமன், குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் தெரிந்து போய்விட்டது.
ஆளுநரே பரிந்துரை செய்யாத தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது என்பது நமக்குத் தெரிந்த பழைய வரலாறு.
பர்னாலா அவர்கள் இங்கே ஆளுநராக இருந்த பொழுது, ‘அதர்வைஸ்' என்ற ஒரு சொல்லைக் கண்டுபிடித்து, அப்படி செய்தார்கள்.
புதிதாக ஆளுநராக வந்திருப்பவர், அவர் என்ன வேலை செய்யப்போகிறார் என்பதைப் பொறுத் திருந்துதான் பார்க்கவேண்டும்.
ஏற்கெனவே இருந்த ஆளுநர், மிக வேக வேகமாக வந்து, நான் எல்லா அரசு அலுவலகங்களையும் ஆய்வு செய்யப் போகிறேன் என்று சொன்னார். வந்த வேகம், போகப் போக இல்லை.
ஏற்கெனவே ஆளுநராக ஒரு அய்.பி.எஸ். அதிகாரி ஆந்திராவில் இருந்திருக்கிறார், வாஜ்பேயி பிரதமராக இருந்தபொழுது.
ஏற்கெனவே அண்ணா போன்றவர்கள் சொல்லியிருக்கிறார்கள், கவர்னர் பதவியே தேவையில்லாத ஒன்று என்று.
ஆனால், அரசமைப்பு சட்டப்படி, ஆளுநர் என்பவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்துவதைத் தவிர, அதைத் தாண்டி, வேறு வகையான அளவிற்கு அவர் செல்லக்கூடிய அளவிற்கு நடந்தால், மக்கள் பொறுத் திருந்து பார்ப்பார்கள். அதற்குரிய விளைவுகளை அவர் சந்திக்கவேண்டி இருக்கும்.
நடைபெறவிருக்கின்ற பஞ்சாயத்துத் தேர்தலில், தனியாக நின்று அவர்கள் வென்று காட்டட்டும்
நெறியாளர்: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி 150 இடங்களில் வெற்றி பெறும் என்று தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சித் தலைவர் திரு.அண்ணாமலை நம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கிறார். திராவிடக் கட்சிகளுக்கு இனி தமிழ்நாட்டில் இடமில்லை என்று சொல்லியிருக்கிறார், அதற்கான வாய்ப்பு இருக்கிறதா?
தமிழர் தலைவர்: வருகின்ற அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவிருக்கின்ற பஞ்சாயத்துத் தேர்தலில், தனியாக நின்று அவர்கள் வென்று காட்டட்டும். பிறகு சட்டமன்றத் தேர்தலைப்பற்றி பேசுவோம். உங்கள்மூலமாக நான் சொல்லும் இந்தச் செய்தி அண்ணாமலைக்குப் போகும் என்று நினைக்கிறேன்.
அண்ணாமலைக்கு அரோகரோ என்று போய் விடக்கூடாது, கடைசியில்.
ஏனென்றால், 2026 ஆம் ஆண்டிற்கு ஏன் போகவேண்டும்? இப்பொழுது நடைபெறவிருக்கின்ற ஊராட்சித் தேர்தலில் கூட்டுச் சேராமல் தனித்து நிற்கட்டுமே!
சட்டமன்றத் தேர்தலில் 150 இடங்களில் வெற்றி பெறுவதற்கு முன்னோட்டமாக, பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெறுகின்ற 9 மாவட்டங்களில் தனித்து நின்று வெற்றி பெற்று காட்டட்டுமே!
அல்லது கடந்த சட்டமன்றத் தேர்தலில் நான்கு இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறார்கள் அல்லவா - அந்த நான்கு இடங்களையும் ராஜினாமா செய்துவிட்டு, நாங்கள் தனித்து நின்று வெற்றி பெற்றுக் காட்டுவோம் - உங்களுக்கெல்லாம் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக என்று - அண்ணாமலை சொல்கிறான், மற்றவர்கள் செய்கிறார்கள் என்ற சினிமா வசனம் போன்று ஏதாவது சொன்னால்கூடவரவேற்கலாம்.
ஆசைப்படுவதில் தவறு இல்லை. ஏனென்றால், ஒரு கட்சிக்குத் தலைவராக இருக்கிறார். இதைக்கூட சொல்லவில்லை என்றால், அவர் எப்படி தலைமைப் பதவியில் நீடிப்பார். ஆகவே, அவருக்கு ஆசைப்படு வதற்கு முழு உரிமை உண்டு.
நடைமுறையில் சாத்தியம் உண்டா? என்றால் கிடையவே கிடையாது.
நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி வந்தார்கள்?
நெறியாளர்: ஏன் முடியாது என்று நினைக்கிறீர்கள்? வேல் யாத்திரையை நடத்தும்பொழுது, இதே திரு.வீரமணி அவர்கள், பாரதீய ஜனதா என்னதான் செய்தாலும், தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளையோ, அவர்களின் நம்பிக்கையையோ பெற முடியாது என்று சொன்னீர்கள். இன்றைக்கு நான்கு சட்டமன்ற உறுப்பி னர்கள் வந்துவிட்டார்கள்; நான்கு நாற்பதாகும், நாற்பது 150 ஆகும் என்று சொல்லலாம் அல்லவா?
தமிழர் தலைவர்: நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க.விற்கு எப்படி வந்தார்கள்? தனியாக நின்று வந்தால் சொல்லலாம்.
தோள் ஊன்றல் என்பது வேறு; காலூன்றல் என்பது வேறு
நெறியாளர்: இது தி.மு.க.வுக்கும் பொருந்தும் அல்லவா?
தமிழர் தலைவர்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், தனியாக நின்று வெற்றி பெறுங்கள் என்று சொல்கிறோம்.
காலூன்ற முடியும் என்றால் என்ன அர்த்தம்?
தனியாக நிற்பதுதான் காலூன்றுவது. அடுத்தவர்களின் தோள்மீது ஏறி நின்று, நான் எவ்வளவு உயரம் பாருங்கள் என்று சொல்வது காலூன்றுவது என்ற அர்த்தம் அல்ல.
உங்களுக்காக காலூன்றுவது வேறொருத்தர். நீங்கள் அவர்கள்மீது தோள் ஊன்றி இருக்கிறீர்களே தவிர, காலூன்றி அல்ல.
தோள் ஊன்றல் என்பது வேறு; காலூன்றல் என்பது வேறு என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.
அ.தி.மு.க.வின் செயல்பாடுகளை எப்படி மதிப்பீடுகிறீர்கள்?
நெறியாளர்: தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.க.வின் செயல்பாடுகளை எப்படி மதிப்பிடு கிறீர்கள்?
தமிழர் தலைவர்: அவர்களே சொல்லிவிட்டார்களே, அதற்குமேல் நான் என்ன மதிப்பீடு செய்வது.
கரை ஒரு பக்கம் இருக்கிறது
ஆறு ஒரு பக்கம் இருக்கிறது
நெருப்பு ஒரு பக்கம் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்களே, அதற்குமேல் நான் என்ன சொல்லவேண்டி இருக்கிறது.
பிரச்சினைக்கு அப்பாற்பட்டு இருந்தால் நல்லதுதான்!
நெறியாளர்: ஓ.பி.எஸ்.தானே சொல்லியிருக்கிறார்; இ.பி.எஸ். சொல்லவில்லையே?
தமிழர் தலைவர்: நான் அவர்களைப் பிரித்துப் பார்க்கவில்லை. இதுதான் அவர்களுடைய நிலைமை!
கரையா? நெருப்பா? ஆறா? என்பதில் அவர்களுக்கே சிக்கலாக இருக்கிறது.
அவர்களுக்கிடையில் நாளுக்கு நாள் சிக்கல்கள் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது என்று இதிலேயிருந்து தெரிகிறது.
ஆளுங்கட்சியாக இருக்கட்டும்; எதிர்க்கட்சியாக இருக்கட்டும்; இதையே மாறி மாறி வரக்கூடிய சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கக் கூடிய அளவில் அவர்கள் பிரச்சினைக்கு அப்பாற்பட்டு இருந்தால் நல்லதுதான்.
செய்ய முடியாத வாக்குறுதிகளை சொல்லி, தி.மு.க. தோற்றுவிட்டதா?
நெறியாளர்: நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வு ரத்து செய்யப்படும்; நீட் தேர்வு நடக்காது; மாணவக் கண்மணிகளே தைரியமாக இருங்கள் என்று தி.மு.க. சொன்ன உறுதிமொழி இன்றைக்குப் பொய்யாகி விட்டது; நீட் தேர்வு நடந்துவிட்டது. அப்படியென்றால், செய்ய முடியாத வாக்குறுதிகளை சொல்லி, தி.மு.க. தோற்றுவிட்டது என்று பார்க்கலாமா?
தமிழர் தலைவர்: அது தவறானது. நீட் தேர்வு என்பது மாநில அரசின் அதிகாரத்தின்கீழே இருந்தால், தாராள மாக செய்யலாம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் உரிமை களை, உணர்வுகளை பிரதமர் மதிப்பார் என்கிற எண்ணத்தில், பிரதமரைச் சந்தித்து, தமிழ்நாடு முதல மைச்சர் சொன்னார். பிரதமர் கேட்கவில்லை.
அடுத்தபடியாக, முறைப்படி ஒரு குழுவை அமைத்து, அந்தக் குழுவினுடைய பரிந்துரையை வாங்கி, ஒரு சட்டத்தை நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
இது ஒரே நாளில் நடக்காது. நுழைவுத் தேர்வை எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது கொண்டு வந்தபொழுது, அதனை எதிர்த்து 21 ஆண்டு களாக திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் தொடர்ந்து போராடித்தான் வெற்றி பெற்றோம்.
அதற்குப் பிறகு 2006 இல் ஜனதா கொண்டு வந்த நுழைவுத் தேர்வையும் எதிர்த்துப் போராடினோம்.
அரசியலில் இதேபோன்ற நிலை நீடிக்கும் என்று நீங்கள் நினைக்கவேண்டிய அவசியமில்லை. உடனே நாங்கள் முடித்துவிடுவோம் என்கிற கருத்தை அவர் சொல்லவில்லை.
சட்டப் போராட்டம் - மக்கள் போராட்டம் எல்லாம் சேர்ந்து வெற்றி பெற வைக்கும்!
நெறியாளர்: 8 மாதம் பொறுத்திருங்கள் மாணவர்களே, நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், நீட் தேர்வு நடக்காது என்று சொன்னார்களே?
தமிழர் தலைவர்: ஆட்சி முடியவில்லையே. ஆட்சிக்கு வந்தவுடன், முதற்கட்டமாக முயற்சிகளை செய்திருக்கிறார்கள். இதில் அலட்சியமாக இல்லையே! பிரதமரைப் போய்ச் சந்தித்தார்; அதற்காக ஒரு குழுவை அமைத்தார்கள்; அந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில், ஒரு சட்டத்தை நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
உடனடியாக நடந்துவிடும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், இது இவர்களுடைய அதிகாரத்தில் இல் லையே! அன்றைக்கும் அதே நிலைதான்; இன்றைக்கும் அதே நிலைதான்!
ஆகவேதான், நிச்சயம் இந்தப் போராட்டத்தில் வெற்றி பெறுவோம், சட்ட ரீதியாக.
ஏனென்றால், முதலில் அவர்கள் எடுத்த நிலைப்பாடு - விதிவிலக்கே கிடைக்காது என்று சொன்னார்கள்.
பிறகு எப்படி ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த பொழுது, நீட் தேர்விலிருந்து ஓராண்டு விதிவிலக்கு எப்படி வந்தது? அப்படியென்றால், ஒன்றிய அரசு நினைத்தால், விதிவிலக்குக் கொடுக்கலாம் என்கிற வழி இருக்கிறதா, இல்லையா?
அதுமட்டுமல்ல, இப்பொழுது சட்டப் போராட்டங்கள் ஒரு பக்கம் நடக்கின்றன; மக்கள் போராட்டம் இன் னொரு பக்கம் நடக்கும்.
சட்டப் போராட்டம் - மக்கள் போராட்டம் எல்லாம் சேர்ந்து நிச்சயமாக நாம் இருந்து பார்க்கப் போகிறோம், நீட் தேர்வுக்கு விடை கொடுக்கப்படும்; மாணவர்கள் காப்பாற்றப்படுவார்கள்.
மற்ற மாநிலங்களில், சமூகநீதிபற்றி ஒரு சிந்தனை இல்லை!
நெறியாளர்: மற்ற மாநிலங்கள் எல்லாம் நீட் தேர்வை ஏற்றுக்கொள்ளும்பொழுது, தமிழ்நாட்டிற்கு மட்டும் அப்படி என்ன ஒரு சிக்கல்? இங்கே மட்டும் தொடர்ந்து ஏன் தற்கொலைகள் நடைபெறுகின்றன? சர்ச்சைகள் வருகின்றன. மாணவக் கண்மணிகளுக்கு ஒரு தவறான நம்பிக்கையை, ஒரு தைரியமின்மையை அரசியல் கட்சி கள் விதைப்பதினால்தான், மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்; மற்ற மாநிலங்களில் ஏன் தற்கொலைகள் நடைபெறவில்லை?
தமிழர் தலைவர்: மற்ற மாநிலங்களில், சமூகநீதிபற்றி ஒரு சிந்தனை - அதிகமாகத் தெரியவில்லையே!
தமிழ்நாடுதான் வழிகாட்டும் - மற்ற மாநிலங்கள் பின்பற்றும்
நெறியாளர்: கேரளா உள்பட மற்ற மாநிலங்களுக்குமா?
தமிழர் தலைவர்: எல்லா மாநிலங்களுக்கும். ஏனென் றால், கேரளாவில் நீட்டைப் பொறுத்தவரை அதனுடைய அடிப்படை தெரியவில்லை.
இப்பொழுதானே கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்திருக்கிறார்கள்.
எப்பொழுதும் தமிழ்நாடுதான் வழிகாட்டும் - மற்ற மாநிலங்கள் பின்பற்றும்.
அதேபோன்று, இன்னும் சில மாதங்களில், மற்ற மற்ற மாநிலங்களிலும் அந்த உணர்வுகள் தாராளமாக வரும்.
ஏனென்றால், பாதிக்கப்படுகிறவர்கள் அங்கே அதிகமாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதுவரையில், அவர்கள் அலட்சியமாக இருந்தார் கள். அவர்களுக்கு வேறு பிரச்சினைகள் முன்னால் இருந்தது.
எல்லாவற்றிலும் சமூகநீதிக் கண்ணோட்டத்தோடு பார்க்கக் கூடிய பெரியாருடைய நுண்ணாடி தமிழ் நாட்டில்தான் இருக்கிறது.
ஆகவேதான், தமிழ்நாட்டில் எடுத்துச் சொல்கிறோம், மற்ற மாநிலங்களில் பின்னால் வரும்.
பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் கேட்கவேண்டும்!
நெறியாளர்: விநாயகர் சதுர்த்திக்குப் பொது ஊர் வலம், கொண்டாட்டத்திற்குத் தடை விதிப்பது என்பதன் மூலம் இந்து மத விரோத அரசு தி.மு.க. அரசு என்பதை வெளிப்படையாகக் காட்டியிருக்கிறது என்று சொல் கிறார்களே?
தமிழர் தலைவர்: அப்படியென்றால், அவர்கள் யாரை கேட்கவேண்டும் என்றால், மோடியைத்தான் கேட்கவேண்டும். உள்துறை அமைச்சரான அமித் ஷாவை கேட்கவேண்டும்.
ஏனென்றால், உள்துறை மூலமாக மாநில அரசு களுக்கு ஒரு சுற்றறிக்கையின்மூலம் உத்தரவு போட்டி ருக்கிறார்கள்.
மத விழாக்கள், ஊர்வலங்களை நடத்துவதற்கு அனுமதிக்கக்கூடாது என்று ஒன்றிய அரசு அளித்த சுற்றறிக்கையின்படி மாநில அரசு நடந்திருக்கிறது.
ஆகவே, இதற்காக யார்மேலாவது கோபப்படவேண் டும் என்றால், அவர்கள்மீதுதான் கோபப்படவேண்டும். தூண்டியவர்கள் யார் என்றால், ஒன்றிய அரசுதான்.
சசிகலா அவர்களுடைய அரசியல் நகர்வுகளை எப்படி பார்க்கிறீர்கள்?
நெறியாளர்: திருமதி. சசிகலா அவர்களுடைய அரசியல் நகர்வுகளை எப்படி பார்க்கிறீர்கள்? ஒரு கட்டத்தில் அவருக்கு ஆதரவுக் குரல் கொடுத்தீர்கள்; அ.தி.மு.க.வை கைப்பற்றுவேன் என்று சொல்லியிருக்கிறார்களே?
தமிழர் தலைவர்: இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. பதில் சொல்லவேண்டிய அளவிற்கு இன்றைய காலகட்டத்திற்கு அதற்கான முக்கியத்துவம் இல்லை.
நெறியாளர்: இவ்வளவு நேரம் எங்களுடைய பல்வகையான கேள்விகளுக்குப் பதில் அளித்தீர்கள்.
நன்றி, வணக்கம்!
தமிழர் தலைவர்: நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியில் கூறினார்.
No comments:
Post a Comment