சில எளிய ஆலோசனைகள்
கோவிட்-19 இரண்டாம் அலையின் தீவிரம் பெருமளவு தணிந்துள்ளது. எனினும் நோயாளிகள் மருத்துவரை சந்திக்கவோ, மருத்துவமனைகளுக்குப் பயணித்து சிகிச்சை பெறவோ இன்னும் அச்சப்படுகின்றனர். நெஞ்சு வலி அல்லது மூச்சுத் திணறல் போன்ற ஆபத்தான அறிகுறிகள் ஏற்பட்டால்கூட சிலர் புறக்கணிக்கின்றனர். இது தவறானது. மோசமான அறிகுறிகளை உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மருத்துவரிடம் இணைய வழியாக தேவையான ஆலோசனையைப் பெறலாம். குறிப்பாக இதயக் கோளாறு நோய்க் குறி உள்ளவர்கள் இதில் அலட்சியம் காட்டக்கூடாது. இதயத்தைப் பாதிக்கும் திறன் கோவிட்-19 கொள்ளை நோய்க்கு உண்டு என்பதை பல்வேறு நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். கோவிட்-19 காரணமாக இதயத்தசைகளில் ஏற்படும் தொற்று இதயத் தசை அழற்சியானது 10%-15% அளவில் பாதிக்கும். இது சாதாரணமாகவோ, கடுமையாகவோ மாறலாம்.
இவ்வகை நோயாளிகளுக்கே தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது. கோவிட்-19 தொற்று பல்வேறு நோய்களுக்குக் காரணமாக உள்ளது. மூளையிலும், கால்களிலும், இதயத் தமனிகளிலும், ரத்த உறைவை அதிகரிக்கும். நிலைமை எதுவாக இருப்பினும் அச்சம் கொள்ளாமல் மருத்துவரை சந்தித்து, உடனடி சிகிச்சையை விரைந்து தொடங்க வேண்டும். வீட்டிலிருந்து அலுவலகப் பணி திடீரென ஏற்பட்ட கொள்ளை நோய்ப் பரவல் நமது பணியாற்றும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்து அல்லது தொடர் வண்டியைப் பிடிக்கவோ, வாகனத்தைத் நிறுத்தவோ, அலுவலகத்தில் இங்குமங்கும் செல்லவோ, அலுவலகச் சிற்றுண்டி சாலைக்கு உணவருந்தவோ, அக்கம் பக்கம் கடைகளுக்குப் போகவோ நாம் மேற்கொள்ளும் சிறு நடைப் பழக்கங்கள், வீட்டிலிருந்து வேலை செய்யும் பணி முறை காரணமாகத் தெரிந்தோ தெரியாமலோ குறைந்துவிட்டது. நீடித்த பணி நேரம் காலை நேர நடைப் பயிற்சியையும், மாலை நேர சைக்கிள் மிதிப்பையும் ஒதுக்கிவிட்டது. இன்றைய வாழ்க்கைமுறை அதிக அலுவல் பணி, குறைந்த உடற்பயிற்சிகள் என்றாகிவிட்டது. இதன் காரணமாக மற்றொரு முக்கிய அபாய அம்சமான மன அழுத்தம் அதிகரித்துள்ளது. மன அழுத்தம் மாரடைப்புக்குக் காரணமாகிறது. அதிக மன அழுத்தம் நீண்ட நேரம் நீடிப்பது இதயத்துக்கு ஆபத்து. உங்களால் சுயமாக மன அழுத்தத்தைச் சமாளிக்க முடியவில்லை என்றால் நிபுணர்களின் உதவியை உடனடியாக நாட வேண்டியது அவசியம்.
ரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவுகளைத் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலமே ஆரோக்கிய இதயத்தைப் பராமரிக்க முடியும்.
நம் இதயத்தைக் கவனிக்கத் தவறும் பட்சத்தில் அடுத்த 4-5 ஆண்டுகளில் மற்றுமொரு உயிர்க்கொல்லி கொள்ளை நோயாக இதய சுகாதாரப் பிரச்சினைகள் அறிவிக்க வேண்டியிருக்கும்.
No comments:
Post a Comment