தூத்துக்குடி, அக். 15- தூத்துக்குடி, உண்மை வாசகர் வட்டம் சார்பில் 9.10.2021 அன்று மாலை 4 மணி அளவில் பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங்கில் கருத்தரங்கம் நடைபெற்றது.
திராவிடர் கழக மண்டலத் தலைவர் சு.காசி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மு.முனியசாமி அனைவரையும் வரவேற்றார்.
சமூக நீதிக்கான சரித்திர நாயகர் என்ற தலைப்பில் உலகத் திருக்குறள் பேரவையின் மாவட்டச் செய்வாளர் மோ.அன்பழகன், ப.க. தோழர் சீ.மனோகரன், திருவைகுண்டம் நகர திமுக தோழர் சொ.பொன்ராஜ் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்,
சிறப்புரையாக உண்மை வாசகர் வட்டத் தலைவர் மா.பால்ராசேந்திரம் கருத்துரையாற்றினார். அவர்தம் உரையில்:- ஜாதிப் பிரிவினையால் பொது வீதியில் நடக்க உரிமையற்ற மக்களைக் கல்வியில் சிறந்தோராய், பதவிகளில் பெருமைக்குரியோராய்த் திகழ்ந்திடும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த தந்தை பெரியாருக்கு மரியாதை செய்திட்டத் தமிழ்நாடு முதலமைச்சருக்குத் தமிழர் தலைவர் வழங்கிய விருதுதான் சமூக நீதிக்கான சரித்திர நாயகர்.
அதோடுமட்டுமின்றிச் சூத்திரப் பட்டத்தினைத் தாங்கியிருந்த கோயில்களுக்குள் அனைத்துத் திராவிடரும் அர்ச்சகர் ஆகலாமெனப் பணி நியமன ஆணை வழங்கித் தந்தை பெரியார் தம் இறுதிகாலப் போராட்டத்திற்குரிய வெற்றியை உலகறியச் செய்ததோடு, சூத்திர இழிவையும் நீக்கிய வரலாற்று நாயகருக்குத்தான் தகுதியான விருதினைத் தமிழர் தலைவர் வழங்கியுள்ளார். இது நியாயமானதே. அநியாயக்காரர்கள் ஆங்காங்கே அலறினாலும் நாம் இந்த ஆட்சிக்கு அரணாக அமைந்து காத்திடுவோம். சமூக நீதிக்கான ஆட்சியை தொடர்ந்து வீறுடன் நடத்திச்செல்வதற்குக் கருஞ்சட்டைத் தோழர்கள் என்றும் முதல்வருக்குத் துணையாக நின்று பணியாற்றுவோம் என்றார்.
இறுதியாக பெ.காலாடி நன்றி கூற நிகழ்ச்சி இரவு 7 மணிக்கு நிறைவுபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கோபால்சாமி, சு.திருமலைக் குமரேசன், கவிஞர் கோ.இளமுருகு, சங்கரலிங்கம், பொ.போஸ், சு.சுப்புராஜ் மற்றும் தோழர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment