“இராவண காவிய ஆய்வுரை” நூலை வெளியிட்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
சென்னை, அக்.15 தமிழ்நாட்டில் இப்பொழுது இராவ ணன் ஆட்சி நடைபெறுகிறது என்று சொல்லிக் கொண் டிருக்கிறார்கள். ‘‘இராமன்'' புதுவையில் இருக்கிறார். தமிழ்நாட்டில் ‘‘இராவணன்'' இருக்கிறார். இராம ராஜ்ஜியத்தினுடைய கொடுமை தாங்க முடியாமல், எங்கேயாவது வரவேண்டும் என்றால், இராவண இராஜ் ஜியத்திற்குத் தான் வரவேண்டும். ஏனென்றால், அங்கே தான் யாகம் கிடையாது; வேள்வி கிடையாது; உயிர்ப் பலிகள் கிடையாது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கடந்த 11.10.2021 அன்று மாலை சென்னை பெரியார் திடலிலுள்ள அன்னை மணியம்மையார் அரங்கத்தில் “புதுமை இலக்கியத் தென்றல்” சார்பில் நடைபெற்ற “வெல்லும் தூய தமிழ்” (மாத இதழ்) ஆசிரியரும், 43 நூல்களை யாத்தவரும், புதுச்சேரி மாநில அரசால் ‘தமிழ் மாமணி’ விருது பெற்றவரும், தனித் தமிழ் ஆர்வலரும், பகுத்தறிவாளருமான முனைவர் மானமிகு க. தமிழ மல்லன் அவர்களின் “இராவண காவிய ஆய்வுரை” நூலை வெளியிட்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
‘‘புதுமை இலக்கியத் தென்றல்’’ சார்பில்...
இந்த அரங்கத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமைதோறும் வழக்குரைஞர் வீரமர்த்தினி அவர் களுடைய சிறப்பான தொடர் முயற்சியினாலே, உழைப்பினாலே ‘‘புதுமை இலக்கியத் தென்றல்'' என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெறும்.
திங்களும், தென்றலும் எப்பொழுதுமே மிகவும் மகிழ்ச்சி தருவன. ஆக, அதை அவர் விடாமல் நடத்தி யாகவேண்டும்.
அதேபோல, வியாழனன்று பெரியார் நூலக வாசகர் வட்ட நிகழ்ச்சி நடைபெறும். இப்படி தொடர்ந்து இந்த அரங்கத்தில் மகிழ்ச்சியோடு பெருமக்கள் இணைந்து அறிவார்ந்த அவையாகக் கூடி நடக்கக்கூடிய இந்த அரங்கத்தில் இன்றைக்கு மீண்டும் ஒரு நீண்ட இடை வெளிக்குப் பிறகு, ஒரு மகிழ்ச்சியான சூழலில், இன் றைக்கு இந்த நிகழ்ச்சியில் உங்களையெல்லாம் சந் திக்கக்கூடிய ஓர் அற்புதமான வாய்ப்பளிக்கக் கூடிய இந்த நிகழ்ச்சி- அதுவும் இராவண காவியத்தினுடைய மாட்சி என்பதிலே தொடங்குகிறது என்பதுதான் மிக முக்கியம்.
தமிழ்நாட்டில் இப்பொழுது
‘‘இராவணன்'' ஆட்சி!
ஏனென்றால், தமிழ்நாட்டில் இப்பொழுது இராவணன் ஆட்சி நடைபெறுகிறது என்று சொல் லிக் கொண்டி ருக்கிறார்கள். இராமன் புதுவையில் இருக்கிறார். தமிழ் நாட்டில் இராவணன் இருக்கிறார்.
அந்த அடிப்படையில் மிக முக்கியமாக புது வையில் இருக்கின்றவர்கள், இராம ராஜ்ஜியத்தி னுடைய கொடுமை தாங்க முடியாமல், எங்கே யாவது வர வேண்டும் என்றால், இராவண இராஜ் ஜியத்திற்குத்தான் வரவேண்டும். ஏனென்றால், அங்கேதான் யாகம் கிடை யாது; வேள்வி கிடையாது; உயிர்ப் பலிகள் கிடையாது என்ற தத்துவம்போன்றே, மானுட நேயம் - யாதும் ஊரே, யாவரும் கேளிர்; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொக்கும் செய்தொழில் வேற்றுமையான் என்பது தான் திராவிடம் என்பதும்!
பிறப்பினால் ஒருவன் உயர்ந்தவன் - பிறப்பி னால் இன்னொருவன் தாழ்ந்தவன். உயர்ந்தவன் மட்டுமே படிக்கவேண்டும்; தாழ்த்தப்பட்டவர்கள் படிக்கக் கூடாது; ஒடுக்கப்பட்டவர்கள் உரிமை பெறக்கூடாது என்ற இராமன் ஆட்சியை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம்தான் - பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்புப் போராட்டமாகும்.
அந்த ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் சமத் துவத்தை உருவாக்கவேண்டும் என்று சொல்லக் கூடிய அளவிற்கு வந்த, மிகப்பெரிய ஒரு வாய்ப்பை எல்லா இடங்களிலும் அவர்கள் தேடினார்கள். அதில் ஒன்று இராமாயண எதிர்ப்பு.
பண்பாட்டுப் படையெடுப்புக் கருவிகள் எவை, எவை?
பண்பாட்டுப் படையெடுப்பின்மூலமாக அதற்கு ஏற்பட்ட ஆபத்தில், அந்தப் பண்பாட்டுப் படையெடுப்புக் கருவிகள் எவை, எவை? அதைப் பெரியார் தமது நுண்ணாடியால் கூர்ந்து கவனித்து, அதை மக்களிடத்தில் கொண்டுபோய் அடையாளப்படுத்திச் சொல்லி, இந்த ஆபத்து இருக்கிறது - இதில்தான் நோய்க் கிருமிகள் இருக்கின்றன என்று சொன்னார்.
அதைப் பல வகையில் வெளிப்படுத்தக் கூடிய முயற்சியில், பண்பாட்டுப் புரட்சியில் ஒன்றுதான், இராவண காவியம் என்ற ஆய்வு நூல் வெளியீடு இலக்கியத்தில் திருப்பமான ஒன்றாகும்.
தமிழ்மாமணி முனைவர் அறிஞர் தமிழமல்லன்
இராவண காவியம் என்பது ஓர் அற்புதமான இலக்கியமாகும். அய்யா நம்முடைய வெற்றியழகனார் இங்கே இருக்கிறார். மிகப்பெரிய அளவிற்கு ஆய் வாளரான முனைவர் தமிழமல்லன் அவர்கள் இங்கே இருக்கிறார். இன்னும் அறிஞர் பெருமக்கள் இங்கே இருக்கிறீர்கள்; தமிழறிஞர்கள், உணர்வாளர்கள் இங்கே இருக்கின்றீர்கள். அப்படிப்பட்ட இந்த அருமையான நிகழ்ச்சி, இன்றைக்கு நீண்ட இடைவெளிக்குப் பின், ஒரு நல்ல தொடக்கமாக, இராவண காவியத்தினுடைய மாட்சி, அதுவும் அந்த நூலை வெளியிட்டு, இராவண காவிய ஆய்வுரை என்று, எவரும் மறுக்க முடியாத அளவிற்கு, சான்றுகளோடு, அந்த சுவையோடு எளிய மக்களுக்கும், எல்லோருக்கும் புரிய வேண்டும் என்பதற் கான முயற்சி எடுத்து, சிறப்பாக எழுதி, கடும் உழைப்பைத் தந்து, அருமையான நூலைத் தந்து, இன்றைக்கு இங்கே வெளியிடக் கூடிய வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கக் கூடிய தமிழ்மாமணி முனைவர் அறிஞர் தமிழமல்லன் அவர்களே,
அவருடைய அன்பு வாழ்க்கைத் துணைவியார் வாழ்விணையர் அம்மா அவர்களே,
அருஞ்செல்வங்களாக இங்கே வந்திருக்கக்கூடிய அவருடைய குருதிக் குடும்பத்தினர் - நாமெல்லாம் கொள்கை உறவுகள் - அவர்கள் குடும்ப உறவுகள்.
அப்படிப்பட்ட ஓர் அற்புதமான நிகழ்ச்சிக்கு சிறப் பான வகையில் ஏற்பாடு செய்த புதுமை இலக்கிய தென்றல் அமைப்பின் தலைவரும், இந்த நிகழ்ச்சியி னுடைய தலைவருமான வழக்குரைஞர் அ.வீரமர்த்தினி அவர்களே,
இந்நிகழ்வில் வரவேற்புரையாற்றிய, இந்தத் திடலில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும், எந்த புத்தக வெளியீடு என்று சொன்னாலும், அந்த நிகழ்வில், யார் தவறினாலும், தவறாவிட்டாலும் ஒருவர் உறுதியாக ஒரு புத்தகம் வாங் குவார். அவர்தான் நம்முடைய அருமை உடன்பிறப்பு கொள்கை வீரர் முனைவர் திவாகரன் அவர்கள்.
அவருடைய குடும்பமே பகுத்தறிவுக் குடும்பம் - திராவிட இயக்க பேரியக்கக் குடும்பம்
எப்படி அவர்கள் தவறாமல் எல்லா நிகழ்வுகளிலும் இருக்கிறார்கள் என்பது வியப்பாக இருக்கும். இன் றைக்குத்தான் அவருடைய பேச்சாற்றலை நான் பார்த்தேன். நிறைய பேசினார் - அதில் ஒரே ஒரு சங்கடம் என்னவென்றால், என்னைப்பற்றி பேசினார் என்பதுதான் எனக்கு சங்கடமாக இருந்ததே தவிர, அவருடைய சிறப்பு என்னவென்பதைப்பற்றி இன் றைக்குத் தெரிந்துகொண்டேன். காரணம், அவருடைய குடும்பமே பகுத்தறிவுக் குடும்பம் - பெரியாருடைய சிந்தனை - திராவிட இயக்க பேரியக்கக் குடும்பமாகும். அப்படிப்பட்ட அய்யா திவாகரன் அவர்களே,
நம்முடைய கவிஞர் அவர்களே, பெரியார் பேருரை யாளர் - அதை நல்ல அளவிற்கு நினைவூட்டி, அழைப் பிதழில் நீங்கள் போட்டிருக்கிறீர்கள். கவிஞர், கவிஞர் என்று எல்லோருமே அதைத்தான் அழைப்பிதழில் போடுவார்கள்.
நடராசன் வாழ்கிறார்!
நம்முடைய காலத்தில், பெரியார் பேருரையாளர் ந.இராமநாதன், பெரியார் பேருரையாளர் புலவர் மா.நன்னன், பெரியார் பேருரையாளர் அ.இறையன், பெரியார் பேருரையாளர் கு.வெ.கி.ஆசான் அவர்கள் என்று அந்த வரிசையில், அவர்கள் எல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பெரியார் பேருரையாளர்கள் என் றாலும், அவர்கள் உணர்வால் வாழ்ந்து கொண்டி ருந்தாலும், நம்மோடு அருகில் இருந்து பேசக்கூடிய அளவிற்கு இன்றைக்கு அவர்கள் எல்லாம் இல்லை - இயற்கையினுடைய கோணல் புத்தியினால். மறைந்து விட்டார்கள் என்ற சொல்லை நான் பயன்படுத்த விரும்பவில்லை. நடராசன் அவர்கள்கூட, நம்மோடு இருந்து கொண்டிருக்கக் கூடியவர் - உணர்வாக. எந்த ஒரு சிறு புத்தகமாக இருந்தாலும், நடராசன் அங்கே வாழ்கிறார் என்று அர்த்தம்.
இங்கே மட்டுமல்ல, உலகளாவிய அளவிற்கு, அமெரிக்காவிற்குச் சென்றாலும், ஆங்கிலத்தில் அதை மிகப்பெரிய அளவிற்குச் சிறப்பாக எடுத்துச் செய்வார். அவருடைய தொண்டு அளப்பரிய தொண்டாகும். அவர் நிறைய நாள்கள் வாழ்ந்திருந்தால், சமுதாயத்திற்கு லாபமாக இருந்திருக்கும். அந்தக் குடும்பத்திற்கு லாபம் என்பதையும் தாண்டி, நம்முடைய இயக்கத்திற்கு லாபமாக அமைந்திருக்கும்.
அப்படிப்பட்ட நடராசன் அவர்களுடைய நினை வையும் போற்றக்கூடிய அளவில், அவருடைய தொண்டையும் நினைவுகூரக்கூடிய வகையில், எல்லா வகையிலும் சிறப்பாக இருக்கக்கூடிய நம்முடைய பெரியார் பேருரையாளரும், கழகத் துணைத் தலைவ ருமான மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
கழகப் பொருளாளர் மானமிகு அருமைத் தோழர் குமரேசன் அவர்களே,
தொடர் சொற்பொழிவை நூலாக்கி இருக்கிறார்கள்!
புதுவை மாநில திராவிடர் கழகத் தலைவர் மானமிகு சிவ.வீரமணி அவர்கள், அங்கே தொடர் சொற்பொழிவை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தி, அந்த அரங்கத்தில் இருப்பவர்கள் மட்டும்தான் அப்பொழுது கேட்கக்கூடிய வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால், அந்த சொற்பொழிவை இப்பொழுது நூலாக்கிக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
நூலைப் படி - சங்கத்தமிழ்
நூலைப்படி - முறைப்படி
நூலைப்படி
காலையில் படி - கடும்பகல் படி
மாலை இரவு படி பொருள்படும்படி
கற்பவை கற்கும்படி
வள்ளுவர் சொன்னபடி
கற்கத்தான் வேண்டுமப்படி
கல்லாதவர் வாழ்வதெப்படி?
பொய்யிலே முக்காற்படி
புரட்டிலே காற்படி
வையகமே ஏமாறும்படி
வைத்துள நூல்களை ஒப்புவதெப்படி?
தொடங்கையில் வருந்தும்படி
இருப்பினும் ஊன்றிப்படி
அடங்கா இன்பம் மறுபடி
ஆகுமென்ற ஆன்றோர் சொற்படி
என்று பாடினார் புரட்சிக்கவிஞர் அவர்கள்
முனை மழுங்காத ஆயுதங்கள் தேவை
மிக அருமையான அளவிற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சிறப்பான ஒரு நூலைக் கொண்டு வந்திருக்கிறார். இந்தக் காலகட்டத்தில் இந்த நூல் ஒரு புதிய போராயுதம், அறிவாயுதம். திராவிடப் பண்பாட்டுப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது இப்பொழுது. இந்தக் காலகட்டத்தில், முனை மழுங்காத ஆயுதங்கள் தேவை. அப்படிப்பட்ட ஓர் ஆயுதமாக இன்றைக்குத் தயாரித்துக் கொடுத்திருக்கின்றார்கள்.
இந்த நூலை ‘காணிக்கை' என்று வழக்கமாக சொல்வார்கள்; அன்பளிப்பு என்று அவர்கள் போட்டி ருந்தாலும்கூட, உண்மையில் இந்த நூல் ‘‘இராவண காவிய ஆய்வுரை'' என்ற இந்த சிறப்பான நூல் - எனக்கு அன்பளிப்பாக அளித்ததைவிட - இன்னும் ஒரு படி நான் மேலே மகிழவேண்டுமானால், அய்யா மு.ந.நட ராசன் அவர்கள் புகழ் வாழ்க என்று அவருடைய படத்தைப் போட்டிருக்கிறார்கள் - அவருக்குத்தான் உண்மையான அன்பளிப்பு - உண்மையான காணிக் கையாகும்.
பயில்தொறும் பண்புடையாளர்களாக இருக்கக்கூடிய நண்பர்கள்!
ஏனென்றால், அந்தப் பணியை அவர் உலகளாவிய அளவிற்குச் செய்தவர்.
பொருட்செலவு, உழைப்பு, கடுமையான உழைப்புக் கொடுத்து எல்லா இடங்களிலும் அதனைச் செய்தவர்.
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு
என்று சொல்வதைப்போல, இந்நூல் நவில்தொறும் நூல் நயமும் பெற்று இங்கே இருக்கிறது. காரணம், பயில்தொறும் பண்புடையாளர்களாக இருக்கக்கூடிய நண்பர்களும் இங்கே அமர்ந்திருக்கிறார்கள். எனவே, இது மகிழ்ச்சிகரமான அருமையான ஒரு வாய்ப்பாகும்.
மணிவாசகர் பதிப்பகம் - மெய்யப்பன்
அந்த வகையில், இந்த நூலைப்பற்றி நிறைய சொல்லவேண்டும்.
இந்நூலை எழுதிய அய்யா முனைவர் அறிஞர் தமிழமல்லன் அவர்களை எப்படிப் பாராட்டுகிறோமோ, இதைப் புத்தகமாகப் பதிப்பித்த சிறப்பான பதிப்பகமான சென்னையில் உள்ள மணிவாசகர் பதிப்பகம் தமிழ் இன உணர்வோடு தமிழுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய ஓர் அற்புதமான பதிப்பகம். இதன் நிறுவனர் மெய்யப்பன் அவர்கள் என்னுடைய அருந்தோழர் - அண்ணாமலைப் பல்கலைக்கழக விடுதியில் நாங்கள் எல்லாம் ஒன்றாக இருந்தவர்கள்.
அவர்கள் தமிழ்படித்த காலத்தில், எனக்கு ஓராண்டு குறைவாக இருக்கலாம். ஆனால், நாங்கள் எல்லாம் சமகாலத்தவர்கள். ஒரே விடுதியில் இருந்தவர்கள். புலவர் இமயவரம்பன் அவர்களோடு மிக நெருக்க மானவர்.எல்லோரும் விடுதி அறையில் அமர்ந்து ஒன்றாகப் பேசிக் கொண்டிருப்போம்.
எங்களுக்கு இனம் முக்கியம்,
மொழி முக்கியம், பண்பாடு முக்கியம்
அருமையான ஒரு பதிப்பகம் மணிவாசகர் பதிப்பகம். அந்தப் பதிப்பகத்தில் இந்நூல் வெளி யிடப்பட்டதும் எனக்கு கொஞ்சம் வியப்பாக இருந்தது. ஏனென்றால், உணர்வுகளில் குறை வில்லை. ஒரு தொழில் ரீதியாக நடத்தக்கூடியவர்கள் - இந்நூலை வெளியிட்டால் பாதிப்பு ஏற்படும் என்பதைப்பற்றி கவலைப்படாமல், எங்களுக்குப் பணம் முக்கியமல்ல - எங்களுக்கு இனம் முக்கியம், மொழி முக்கியம், பண்பாடு முக்கியம் என்ப தைக் காட்டியிருக்கிறார்களே, அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்தத் துணிவும், இந்த சிறப்பும் அவர்களுக்கு என்றும் தொடரவேண்டும்.
தமிழர்கள், தமிழ் உணர்வாளர்கள் இப்படிப் பட்ட போர் ஆயுதங்கள் எங்கே கிடைத்தாலும், அந்தப் படைக்கலன்களைப் பயன்படுத்திக் கொள் ளக்கூடிய ஒரு பாசறையாக இந்த புத்தக அமைப்பு இருக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய அன்பான வேண்டுகோள். ஆகவே, இந்த நூலை நாம் பரப்ப கடமைப்பட்டு இருக்கின்றோம்.
அருமை நண்பர்களே, இந்த புத்தகத்தைப்பற்றி சொல்வதற்கு முன்பாக, புரட்சிக்கவிஞர் அவர்க ளுடைய பாடலை நினைத்துப் பார்த்தாலே நன்கு விளங்கும்.
புலவர் குழந்தை அவர்கள், இராவண காவி யத்தை படைக்கவேண்டிய அவசியம் என்ன என்பதற்கு இரண்டு செய்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
அந்தக் காலத்தில் இராவண காவியம் தடை செய்யப்பட்டது
அதை இந்தப் புத்தகத்தின் மூலமாக, நடராஜன் அவர்கள் மிக அருமையான ஒரு தொகுப்பைக் கொடுத் திருக்கிறார். இதுதான் ஆரம்ப காலத்தில் போடப்பட்ட இராவண காவியம். இது தடை செய்யப்பட்டது அந்தக் காலகட்டத்தில்.
கவிஞர் அவர்கள்கூட ஒரு செய்தியை நினை வூட்டினார் - புலவர் குழந்தை அவர்கள், நாங்கள் மாணவர் பருவத்தில், ஈரோட்டுப் பயிற்சி பள்ளிக்குச் சென்றபொழுது, பவானியில் இருந்தவர். பயிற்சி நடைபெறும்பொழுது அங்கே வருவார். என்னைத் தட்டிக் கொடுத்து ஊக்கம் கொடுப்பார். மிகப்பெரிய அளவிற்குத் தீவிரமானவர். முரட்டுக் கொள்கையாளர்.
(தொடரும்)
No comments:
Post a Comment