சிறுகனூர் சிறக்கவே சிறுகச் சேமிப்போம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 8, 2021

சிறுகனூர் சிறக்கவே சிறுகச் சேமிப்போம்!

பூவை இசையின்பன்

சுயமரியாதை உணர்வு சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது நம் இளைஞர்களிடம்... பெரியாரைப் பற்றிய தேடல்கள் அதிகரித்திருக்கின்றன. பெண் ஏன் அடிமையானாள்? என்ற புத்தகம் பெரிதும் விரும்பப் படுகிறது.  இனி ஜாதிப் பெருமை பேசுபவர்களும் இளைய தலைமுறையினரால் எள்ளி நகையாடப்படும் நிலை வரும். சமூகநீதி நாள் படைத்த சாதனை மனிதர் நம் முதலமைச்சர் முதல் சாதாரண மனிதன் வரை கண்ணுக்குத் தெரியாமல் காற்றில் இருக்கும் ஆக்சி ஜன் போல பெரியார் வினையாற்றத் தொடங்கியிருக்கிறார். சரியான நேரத்தில் நம் பெரியாரியல் காணொலி வழி பயிற்சிகளும் பலன் கூட்டின.இதோடு கழக மகளிரணியும் வலுப்பட்டு வருவது நமக்கு கூடுதல் மகிழ்ச்சி.

ஆசிரியரின் கனவு

'சொந்த புத்தி வேண்டாம் பெரியார் தந்த புத்தியே போதும்' என்று தன் முக்கால் நூற்றாண்டை முதலீடு ஆக்கிய கழகத் தலைவர் தமிழர் தலைவரின் உழைப்பு வட்டியுடன் வளரத் தொடங்கியிருக்கிறது. பலரும் நன்மையுறவே வாழ்வியல் வடிக்கும் உணர்வுக்கு தன்னை ஆட்படுத்திக் கொண்டவர் ஆசிரியர் என்பதால்தான், தான் பெற்ற பகுத்தறிவின் பலனையும் இந்த பாரெல்லாம் பெற வேண்டும் என்ற உந்துதலோடு பெரியார் என்னும் அறிவொளியை உலகம் முழுவதும் நிறைக்கும் பணியை எப்போதும் இன்பமாக செய்கிறார். விளையாட்டு பொழுதுபோக்கு என்று இளவயதில் இருந்தே இளைப்பாறுதல் ஏதும் அறியாத அவரின் கண்கள் காணும் கனவு ஒன்றே ஒன்றுதான் அது *"பெரியார் உலகம்"* எக்காலத்திற்கும் பெரியார் உரியார் என்ற ஆசிரியரின் தொலைநோக்குப் பார்வையோடு அமைக்கப்பட இருக்கும் இந்த மாபெரும் திட்டத்தின் ஆயத்தப் பணிகள் இதோ தொடங்கிவிட்டன.

மாட்சிமையான காட்சிகள்

உலகப்பொதுமறை யாத்தளித்த வள்ளுவர் சிலையை குமரிக் கடல் பரப்பில் வானுயர கலைஞர் அமைத்தார், இப்போது பெரியார் எனும் உலகத் தலைவரின் சிலையை தமிழ் மண்ணின் நிலப்பரப்பின் மய்யத்தில் மிக ஓங்கி உயர்ந்த முதல் சிலையாக நம் ஆசிரியர் நிறுவுகிறார்.

40 அடி பீடத்தின் மேல் தந்தை பெரியாரின் தொண்ணூற்று அய்ந்து ஆண்டுகால உழைப்பைக் குறிக்கும் வகையில் 95 அடி உயர சிலை அமைக்கப்பட்டு அதன் உள் பாதையிலேயே உச்சிவரை சென்று நாம் வெளிப்புற அழகை வாங்கி மகிழ  வாய்ப்பாகும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

இதுவரை வழிபாட்டுத் தலங்களை மட்டுமே கண்ட மக்கள் கூட்டம் ஒரு நாள் முழுவதும் உள்ளே நுழைந்து கண்டுகளித்து அறிவு பெற்றுத் திரும்பும் வகையிலே  சுற்றுலாத் தலமாகவும் அதே நேரத்தில்

பெரியார் நூல் நிலையம்,

பெரியார் அறிவியல் அறிவு புரட்சியகம்,

சமூகநீதி திராவிட இயக்க காட்சியகம்,

பெரியார் கோளரங்கம்,

இன்னும் இன்னும் மெருகூட்டி மெழுகுச் சிலை அரங்கம், காட்சி அரங்கம் குழந்தைகள் விரும்ப, ஓடி ஆட குழந்தைகள் பூங்கா, ஒரே நேரத்தில் பல பேர் வந்து செல்ல வாய்ப்பாக உணவகங்கள் மற்றும் இன்ன பிற ஏற்பாடுகள் என்று தந்தை பெரியாரின் 150 ஆம் ஆண்டு பிறந்த நாளில் இந்த பணிகள் நிறைவடைய இலக்கு வைத்து நான்கு அல்லது அய்ந்து கட்டங்களாக முடிவு பெற சிறப்பான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டின் பெருமைமிக்க அடையாளமாகவும் அறிவாளிகள் விரும்பி வந்து உலவும் இடமாகவும் எதிர்காலத்தில் அமைய இருப்பதோடு  மக்கள் வந்து சற்றுத் தங்கி இளைப்பாறி பயனுள்ள தகவல்களைப் பெற்று  குடும்பத்தோடு ஒளிப்படம் எடுத்துக்கொண்டு சிரித்து மகிழ்ந்து சிறப்பான வாழ்வியலையும் கற்றுக்கொண்டு ஊர் திரும்புகிற சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தலமாகவும் மாற இருக்கின்ற பெரியார் உலகம் எனும் மாபெரும் திட்டத்தின் மதிப்பீடு சுமார் 100 கோடி ரூபாய் ஆகும்!

வணக்கம் பெரியார் உலகம்

 இப்படியாகிய மதிப்புறு திட்டத்தில், முதலே இங்கு மூச்சுக்காற்று போல இருப்பதால் தோழர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் பேசும்போதும் ஏன் இணையர்களுக்கான  காதல் மொழியிலும்  கூட "வணக்கம் பெரியார் உலகம்" என்று சொல்லும் அளவிற்கு நம் சிந்தனை முழுவதும் இந்த செயல்பாடுகளே நிறைந்திருக்க வேண்டும் என்ற விழைவில் நம் கழகத்தின் தலைவர் அன்பு வேண்டுகோள் வைத்தார் நம்மிடம்.

உண்டியலால் உயர்த்துவோம்

பல்வேறு தரப்பிலும் நிதியளிப்பு தொடங்கி தொடர்ந்து வருகிற இந்த நாளில் நம் தோழர்களின் இல்ல வரவேற்பறையில் பெரியார் உலக நிதி என்று பெயர் பொறித்து உண்டியல் வைத்தால் வரும் ஆண்டுகளில் வந்து போவோர் அனைவருக்கும் மிகப்பெரிய மவுன பிரச்சாரமாக அது அமையும் என்பதோடு நம் இல்ல பெரியார் பிஞ்சுகள்  என்ன, ஏது? என்று ஆர்வமோடு கேட்டுக்கொண்டு நாம் கேட்க தயங்கும்  நிலையில் கூட அவர்கள் அந்தப் பணியை கையில் எடுத்துக் கொள்ளுவார்கள். அதன்மூலம் அவர்களுக்கு பெரியார் உலகத்தை அறிமுகப்படுத்த இதை விட மிகச் சிறந்த வாய்ப்பு இருக்காது என்ற  எண்ணம் மேலிடுகிறது. பெரியார் பற்றாளர்களின் இல்லங்கள் மற்றும் நம் தோழர்களின் தொழிற்கூடங்கள் போன்ற இடங்களிலும் இதை தாராளமாக செய்ய நாம் ஒவ்வொருவரும் முன்வரலாம். நம் குடும்பங்களில் உள்ள வீண் செலவுகளைக் குறைக்கவும் நம் கண்முன்னே இருக்கிற இந்த உண்டியல் நம்மை தூண்டி விடும் என்பதோடு வீணான பழக்கங்களை விட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் உள்ளோருக்கும் கூட அதனால் ஏற்படும் செலவுகளை தவிர்த்து இந்த உண்டியலில் சேர்த்துக் கொடுக்கும்போது அவர்கள் உடலும் உள்ளமும் இரண்டுமே மகிழ்ச்சி அடையும் வாய்ப்பும் கிட்டுகிறது. ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுக்க முடியாத எளிய தோழர்கள் கூட இந்த வகையில் பீடத்தில் தம் பெயர் வருகிற அளவிற்கு எளிதாக சேர்க்க வாய்ப்பும் கிட்டும் என்பதும் தெளிவாகிறது.

இந்த உண்டியல் திட்டத்தின் வெற்றியை அனுபவப் பூர்வமாகவே நாங்கள் கண்டுணர்ந்து இருக்கிறோம்  என்பதால்  சிறப்பாகவே இதை எல்லோரும் முன்னெடுக்கலாம். நம் கழகமே இந்த உண்டியல் வழங்கும் திட்டத்தை கையில் எடுக்கலாம்.

ஆசிரியரின் ஆயுள் நீட்டிப்பு

நாம் வழங்கும் ஒவ்வொரு காசிலும் நம் தலைவர் ஆசிரியரின் வாழ்நாள் நீட்டிக்கப்படும் என்ற உணர்வில் நாம் இதை செய்யலாம்.  நம் ஆசிரியரின் பிறந்த நாளான டிசம்பர்-2 சுயமரியாதை நாளில் நாம் சேர்த்து வைத்ததை அவரிடமே கொடுத்து நாம் மகிழ்ச்சி அடையலாம். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சொல்வது போல வரும் காலத்தில் உலகமே வியந்து நோக்கும் பெரியார் உலகத்தில் நம் பங்களிப்பும் இருக்கின்றது, நம் பெயரும் இருக்கின்றது என்று நாமும் நம் வழித்தோன்றல்களும் மார்தட்டிக் கொள்ளலாம் இதன்மூலம்! கோடி கைகள் இணை யட்டும்! 

"சிறுதுளி பெருவெள்ளமாகி சிறுகனூர்  சிறக்கட்டும்"

பெரியார் உலகம் பிறந்து, புதுஉலகம் பூக்கட்டும்!!

No comments:

Post a Comment