இதுதான் திராவிடர் இயக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 5, 2021

இதுதான் திராவிடர் இயக்கம்!

பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம், கொட்டக் கச்சியேந்தல் ; தமிழ்நாட்டில் இருக்கும் இந்த குக்கிராமங்களின் பெயர்கள் அமெரிக்கா வரை பேசப்பட்டதென்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இந்தியா என்கிற ஜனநாயக நாட்டில், ஜாதியைக் காரணம் காட்டி, உள்ளாட்சி நிர்வாகமே இல்லாமல் இருந்த கிராமங்கள் இவை. சுமார் பத்து ஆண்டுகள் இந்த ஊர்களில் இருந்த ஆதிக்க ஜாதியினர், அதே ஊரில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களில் ஒருவரை பஞ்சாயத்துத் தலைவராக ஏற்க மறுத்து தேர்தலையே நடத்தவிடாமல் தடுத்தனர்

யார் மறுத்தாலும்,  சட்டத்தால் மட்டுமே தாழ்த்தப்பட்டமக்களின் உரிமைகளைப் பெற்றுத்தர முடியும் என்று கூறுவது அரசமைப்புச் சட்டம். அந்த அரசமைப்புச் சட்டத்தையே திக்குமுக்கு ஆட வைத்தன இந்தக் கிராமங்கள். தனித்தொகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்த அந்தக் கிராமங்களில் ஒவ்வொரு முறை தேர்தலை நடத்த முயலும் போதும் எதிர்பாராத சம்பவங்கள் நடந்து தேர்தலையே தடுத்துவிடும். வேட்புமனு தாக்கல் செய்வதைத் தடுப்பது, தாக்கல் செய்த வேட்பு மனுக்களை திரும்பப் பெறச்சொல்லி  கொலை மிரட்டல் விடுவது என அந்த ஊர் ஆதிக்க ஜாதியினரின் மிரட்டல்கள் அரசின் நிர்வாகத்தையே நடத்தவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தது.

அதையும் மீறி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றால், ஆதிக்க ஜாதி மக்கள் ஒன்றுகூடி, ஜாதி அதிகாரத்திற்கு இணங்கிய தாழ்த்தப்பட்ட மக்களில் ஒருவரை வேட்பாளராக நிறுத்துவார்கள். அவரை  வெற்றியும் பெற வைப்பார்கள். ஆனால் வெற்றி பெற்ற சில மணி நேரங்களிலேயே அவரைப் பதவி விலக வைப்பார்கள்.  இதனால் உள்ளாட்சித் தேர்தல் என்பது வெறும் கனவாகவே இருந்தது.  1996 முதல் 2006 வரை  ஆறு மாதத்திற்கு ஒரு மறு தேர்தல் என பத்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 19 முறை தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

2006 ஆம் ஆண்டில் இந்த ஊராட்சித் தொகுதிகள் சுழற்சி முறையில் பொதுத்தொகுதிகளாக மாற்றப்படவேண்டும் என்கிற பேச்சு எழுந்தது. அப்போது, இந்த ஊராட்சிகளை பொதுத்தொகுதிகளாக மாற்றினால் அது ஆதிக்க ஜாதிவெறிக்கு அடிபணிகிறோம் என்று பொருள்; அந்த ஊர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு  ஆதிக்க ஜாதியினர் இழைத்துக் கொண்டிருப்பது சமூக அநீதி. இந்த ஒடுக்குமுறைக்கு  திமுக அரசு என்றுமே துணைபோகாது. ஆகவே அவை தனித் தொகுதிகளாகவே இருக்க வேண்டும் என்று விரும்பினார் அப்போது முதலமைச்சராக இருந்த மானமிகு முத்தமிழ் அறிஞர் கலைஞர். அந்த ஊராட்சிகளில் தேர்தலை நடத்தி, பெரியாரும், அம்பேத்கரும் முன்மொழிந்த சமத்துவ சமூகத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார்  முதல் அமைச்சர் கலைஞர்.

அது சற்றுக் கடினமான பணிதான்; உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்காக அந்த மாவட்ட ஆட்சியாளரும், மாவட்ட காவல்துறை ஆணையரும் பல முறை ஊர்மக்களை அழைத்துப் பேசினாலும் எந்தப் பயனும் இல்லை.  காரணம், அரசு, அதன் நிர்வாகம் என எதுவுமே நுழையக் கூட முடியாத அளவிற்கு ஆதிக்க ஜாதி வெறி அந்த கிராமங்களில் கொடூரமாகக் கொடி கட்டிப் பறந்தது.

மக்கள் மனதில் புதர்களாக மண்டிக் கிடந்த ஜாதிவெறி மனநிலையைத் தகர்த்தெறிந்து, 2006 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலை நடத்திக் காட்டியது முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரும், அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த இன்றைய முதலமைச்சர் மு. ஸ்டாலினும்தான். இதற்காக இவர்கள் செய்த முயற்சிகள் ஏராளம்.

அப்போது, பொருத்தமாக மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தவர் திரு.உதய சந்திரன் அய்..எஸ்- ஆவார்.  மாவட்ட ஆட்சியர் மக்களை சந்தித்து விடா முயற்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். தொடர்ச்சியாக நடந்த பேச்சுவார்த்தை, மேற்கொண்டு தேர்தலையும் நடத்திட, அவ்வூர் மக்களை ஜனநாயக முறைக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்கிற கலைஞரின் எண்ணம், முதல் அமைச்சர் கலைஞரின் எண்ணத்தை நிறைவேற்றிட துடித்த உள்ளாட்சித் துறை அமைச்சர்  மு. ஸ்டாலினின் விடாப்பிடியான முயற்சிகள் என அனைத்தும் ஒன்றாக சேர்ந்து பலனைத் தந்தன. 

பாப்பாப்பட்டிக்கு திரு.பெரிய கருப்பன், கீரிப்பட்டிக்கு திரு.பாலுச்சாமி, நாட்டார் மங்கலத்திற்கு திரு.கணேசன், கொட்டக்கச்சியேந்தலுக்கு  திரு.கருப்பன் ஆகியோர் பஞ்சாயத்துத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.  ஜாதியப் படிநிலை என்பது தகர்க்க முடியாத கோட்டை அல்ல என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு உணர்த்த, இந்த நான்கு ஊராட்சித் தலைவர்களையும் சென்னைக்கு அழைத்து சமத்துவப் பெருவிழா நடத்தினார் முதலமைச்சர் கலைஞர். அதுமட்டுமல்ல, ஒவ்வொரு ஊராட்சிக்கும், அதன் வளர்ச்சிப் பணிகளுக்காக திமுகவின் சார்பில்  ரூ.25 இலட்சம் வழங்கப்பட்டது. இதன்மூலம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போதெல்லாம், அதிகாரத்தை அனைத்து மக்களுக்கும் பகிர்ந்தளித்து, சமூகநீதியைத் தொடர்ந்து நிலைநாட்டி வரும் இயக்கம் தந்தை பெரியார் வழிவந்த  திராவிட முன்னேற்றக் கழகம் என்று நிரூபித்தார் கலைஞர். உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த மானமிகு மு. ஸ்டாலினோ, சமூகப் படிநிலைகளை தகர்த்து வெளியே வந்த அந்த நான்கு ஊராட்சிகளுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதல் நிதியுதவி, ஊராட்சித் தலைவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்பு போன்றவை வழங்கி, திமுக அரசு என்றைக்குமே சமத்துவச் சமூகத்தை நோக்கி பயணிக்கும் என்று நிரூபித்தார்.

பாப்பாப்பட்டியைத் தேர்ந்தெடுத்து கிராமப் பஞ்சாயத்து சபையில் சமூகநீதிக்கான சரித்திர நாயகரான முதல் அமைச்சரே கலந்து கொண்டதை இந்தப் பின்னணி வரலாற்றுடன் பொருந்திப் பார்த்தால்தான் திராவிட இயக்கம் என்றால் என்ன? அதன் சாதனை என்ன? தந்தை பெரியார்தம் கொள்கை எத்தகையது என்று விளங்கும் - புரியும்!

வெல்க திராவிடம்!

No comments:

Post a Comment