சென்னை, அக்.13 தமிழ்நாடுசட்டப்பேரவையில் நிறை வேற்றிய நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து ஆளுநரிடம் விளக்கிக் கூறி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றுத் தர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு தேசிய அளவில் நடத்தப்படுவதால் தமிழ்நாடு கிராமப் புற மாணவர்களின் மருத்துவக் கனவு எட்டாக்கனியாகி இருக்கிறது.
கடந்த 4 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு இருந்து வருகிறது. 18-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இதுவரை தற்கொலை செய்துள்ளனர்.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிரந்தர விலக்கு பெறும் புதிய சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவினர் தந்த அறிக்கையை சுட்டிக்காட்டி நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வகையில் அதில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசுகிறார்.
No comments:
Post a Comment