நேற்று அசாம் - இன்று உ.பி.! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 6, 2021

நேற்று அசாம் - இன்று உ.பி.!

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில்  கோவில் நிலத்தில் குடியிருக்கிறார்கள் என்று கூறி இஸ்லாமியர்களை அங்கிருந்து அகற்றும் பணியில் உள்ளூரைச் சேர்ந்த சில ஹிந்துத்துவ அமைப்பு களோடு காவல்துறையினரும் ஈடுபட்டனர்.

இவர்கள் அனைவரும் வங்கதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்று கூறிய நிலையில் அவர்கள் பல தலைமுறைகளாகவே அங்கேயே இருப்பவர்கள்தான்.

 இந்த நிலையில் அசாமில் தாரங் மாவட்டத்தில் இரண்டு கிராமங்களில்  ஆக்கிரமிப்பு நிலங்கள் என்ற பெயரில் அங்குள்ள கிராமத்து மக்களின் நிலங்களை அசாம் அரசு கைப்பற்றியது. அந்த கிராமங்களில் வசித்த 800 குடும்பங்களை அரசு வெளியேற்றியது. இதற்காக அரசு தரப்பு வீடுகளை இடிக்கும் போது அதற்கு எதிராகப் பொது மக்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தின் போது அங்கு  காவல் துறையினர் திடீரென துப்பாக்கிகளுடன் குவிக்கப் பட்டனர். முதலில் அங்கு இருந்த மக்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினர் பின்னர் துப்பாக்கியால் சுட்டனர்.

போராடும் பொது மக்கள் மீது  துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் போராட்டக் களத்தில் இருந்த  வயதான நபர்  ஒருவரை  காவல்துறையினர் 4 பேர் அடுத்தடுத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் இரண்டு குண்டுகள் அவரின் நெஞ்சுப் பகுதியில் பாய்ந்தன; ஆனாலும் அவருக்கு உயிர் இருந்தது. காவல் துறையினரின்  தாக்குதலால் கீழே விழுந்து அவர் துடித்துக்கொண்டு இருந்தார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் சுருண்டு விழுந்த அந்த நபரை காவல்துறையினர்  சுற்றி வளைத்து கடுமையாக தாக்கினார்கள். லத்தியை வைத்து  கடுமையாக மாறி மாறி இரக்கமே இன்றி தாக்குதல் நடத்தினார்கள்.  அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்நிகழ்வு செய்தி தொலைக் காட்சிகளில் நேரலையாக ஓடிக்கொண்டு இருந்தது.

அப்போது சுருண்டு விழுந்து கிடந்த அந்த நபரின் மீது அசாம் அரசு செய்தி புகைப்பட ஊடகவியலாளர் ஒருவர் எகிறி, எகிறி, அவர் மீது மாறி மாறி குதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரின் நெஞ்சிலே மாறி மாறி  குதித்து பின்னர் அவரது கழுத்தையும் நெரித்தார்.

அவர் பிஜாய் சங்கர் பனியா என்று அடையாளம் காணப்பட்டது. பிஜாய் சங்கர் பனியா யார்? மாவட்ட நிர்வாகத்தின் அரசு தரப்பு நிழற்படக் கலைஞர். இவர் ஹிந்துத்துவ மாணவர் அமைப்பு ஒன்றில் உறுப்பினராகவும் இருக்கிறார். ஆகையால் பாஜக கட்சியோடு நெருக்கமான தொடர்பில் இருந்தவர். முக்கியமாக காவல்துறையோடு நெருக்கமான தொடர்பு கொண்டவர். இவர்தான் அப்பாவி நபர் துப்பாக்கியால் சுடப்பட்ட பின் அவரின் உடலில் ஏறி குதித்து ஆட்டம் போட்டு இருக்கிறார்.

 காவல்துறையினர்  இவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகி உள்ளனர். 11 பேர் காயம் அடைந்துள்ளனர். அசாமில் நடந்த இந்த மனிதத் தன்மையற்ற செயல் இணையம் முழுக்கப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பலரும் இந்த காணொலியைப் பகிர்ந்து அசாம் அரசுக்குக் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

நேற்று அசாம், இன்று .பி., நாளை எந்த மாநிலமோ? என்ற அச்சம் மக்களையும், சித்தாந்த ரீதியில் மதச் சார்பற்றவர்களையும் பெரிதும் உலுக்கிக் கொண்டுள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்றுவரும் இந்தப் பாசிசம் - பிரதமர் அமெரிக்காவுக்குச் சென்ற போதும் சரி, அய்.நா.வில் கலந்துகொண்ட போதும் சரி, ஏதோ ஒரு வகையில் எதிரொலித்திருக்கிறது.

பாசிசமா? ஜனநாயகமா? என்பதுதான் இன்றைய கேள்விக் குறி. வெகு மக்கள் பாடம் கற்பிப்பார்கள். உலக வரலாற்றின் சுவர் எழுத்து என்பது இதுதான்!

No comments:

Post a Comment