கழக சொற்பொழிவாளர்கள் கூட்டமும் கருத்துச் செறிந்த உரையாடலும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 28, 2021

கழக சொற்பொழிவாளர்கள் கூட்டமும் கருத்துச் செறிந்த உரையாடலும்

திராவிடர் கழகச் சொற்பொழிவாளர்கள் கூட்டம் நேற்று மாலை சென்னை பெரியார் திடலில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2020 மார்ச்சு தொடங்கி 2021 அக்டோபர் வரை - 19 மாதங்கள் மக்களைச் சந்தித்து சொற்பொழிவாற்றும் வாய்ப்பு கரோனாவால் பறிக்கப்பட்டது. (சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தைத் தவிர்த்து)

எந்த ஒரு நெருக்கடியான சூழலையும் தன் வயப்படுத்தி, அதனை பயன் விளைவிக்கும் பாட்டையில் மடை மாற்றம் செய்வதுதான் பகுத்தறிவை முழுமையாகப் பயன்படுத்துவோரின் செயல்பாடாக இருக்க முடியும்.

இதனை மிகச் சரியாக செயல்படுத்திக் கொண்டு இருப்பது தி££விடர் கழகமே!

அறிவியல் சிந்தனை இயக்கமான திராவிடர் கழகத் தலைவரின் வழி காட்டுதல்படி காணொலி மூலம்  (ஞீஷீஷீனீ) கருத்துப் பிரச்சாரம் தங்கு தடையின்றி நடைபெற்றுக் கொண்டே இருந்தது - இயக்க வரலாற்றில் ஒளிவீசும் பொன்னேடாகும்.

திராவிடர் கழகத்தின் அனைத்து அணியினரும் பகுத்தறிவாளர் கழகமும் தனித் தனியே ஆரோக்கியமான போட்டியுடன் நடத்திக் காட்டினர்.

வெளிநாட்டு முற்போக்கு - பகுத்தறிவுச் சிந்தனை அமைப்பு களின் சார்பில் ஒழுங்குப்படுத்தப்பட்டிருந்த கருத்தரங்குகளிலும் கழகத் தலைவர் தன் பெரியாரியல் கருத்து முத்திரைகளைப் பதித்தார்.

கழகச் சொற்பொழிவாளர்கள் பல்வேறு மாவட்டங்களிலும் காணொலி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

இன்றைய சூழலில் சொற்பொழிவாளர்களை ஆற்றுப் படுத்தவும், காலத்திற்கேற்ற கருத்துப் பிரச்சாரங்களை எடுத்துச் செல்லவும் தேவையான கருத்துரையாடல் கூட்டம் தான் நேற்று நடைபெற்ற சொற்பொழிவாளர்களின் கூட்டமாகும்.

கூட்டத்திற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் கூறிய கருத்துகள்  விழுமையானவையாகும்.

(1) வீதிகளில், தெரு முனைகளில் கூட்டங்கள் நடத்தும் வாய்ப்பு இல்லாத சூழலில், அரங்கக் கூட்டங்கள், காணொலி  நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் - கலந்து கொள்ள வேண்டும். சொற்பொழிவாளர்கள் பேசுகின்ற தலைப்புகளுக்கான உரையின் நேரத்தை ஒழுங்குப்படுத்திக் கொள்ள வேண்டும்.

2) காணொலி மூலம் இயக்கத்திற்குக் கிடைத்த 1500க்கு மேற்பட்ட பெரியார் பண்ணையின் திராவிட நாற்றுகளுடன் தொடர்பில் இருந்து கொண்டே இருக்க வேண்டும் - கழக நிகழ்ச்சிகளில் அவர்களைப் பங்கேற்கச் செய்ய வேண்டும்.

3) நமது இயக்கத்தில் தலைமுறை இடைவெளி என்பது கிடையாது. மூத்தோர்களும் இளைஞர்களின் தோள்மீது கை போட்டுப் பேசும் பண்பாடு நம்முடையது.

தந்தை பெரியாரின் வயதுக்கும் அண்ணாவின் வயதுக்கும் இடைவெளி 30 ஆண்டுகள் என்றால் எனக்கும் தந்தை பெரியார் அவர்களுக்கும் இடைப்பட்ட ஆண்டுகளைச்  சொல்லவும் வேண்டுமோ! அப்படியிருந்தும் தந்தை பெரியார் என்னை எப்படி  பயன்படுத்திக் கொண்டார் - செயல்பட வைத்தார். அய்யாவின் அந்த அணுகுமுறை இல்லாவிட்டால், நான் எப்படி இயக்கத்தில் இந்த இடத்திற்கு வர முடியும்? இதனை நமது தோழர்கள்   புரிந்து கொண்டு இளைஞர்களை இயக்கத்திற்குள் ஈர்க்க வேண்டும்.

நம் தோழர்களிடம் காணப்படும் சிறு சிறு குறைபாடுகளைப் பெரிதுபடுத்தாமல் - நிறைகளைப் பெரிதுபடுத்துங்கள் - இயக்கம் வளரும். குறைகளைத் தனிப்பட்ட நேரத்தில் சுட்டிக் காட்டலாம்.

(4) சொற்பொழிவாளர்கள் குறிப்புகளை எழுதி வர வேண்டும். எந்த செய்தியையும் ஒரு முறைக்கு இரு முறை படிக்க வேண்டும்.

(5) விபீடணர்கள் இராமாயண காலந்தொட்டு உண்டு. நாராசமாக தந்தை பெரியார் அவர்களைத் திட்டித் தீர்த்த அணுகுண்டு அய்யாவு, விபூதி வீர முத்துசாமி, அய்யம்பேட்டை அரங்கசாமி, .பொ.சி. போன்றவர்கள்  எல்லாம் உண்டு. தந்தை பெரியார் அவற்றையெல்லாம் பொருட்படுத்தவில்லையே!

அதே விபூதி வீரமுத்து தஞ்சைப் பொதுக் கூட்டத்தில் தன் பழைய தவறுகளுக்கு வருந்தி எனக்கு மாலை சூட்டியதுண்டே!

இப்பொழுதும் சிலர் புறப்பட்டுள்ளனர் - அவர்களின் பெயர்களைக் கூடக் குறிப்பிட்டு கூட்டங்களில் பேச வேண்டாம்.

கொஞ்சம் பொறுங்கள் - அவர்களே தங்களின் முகத்திரையைத் தங்களுக்குத் தாங்களே கிழித்துக் கொண்டு வெளியில் வருவார்கள்  - வெளிச்சத்துக்கு வருவார்கள்.

தமிழ் ஹிந்து என்றால் தங்களைத் தமிழ் சூத்திரர்கள் என்று ஒப்புக் கொள்வதாகத் தானே பொருள்  - வருணாசிரமத்தை ஏற்றுக் கொள்வது என்றுதானே பொருள்.

நாம் மனுதர்மத்தை எதிர்க்கிறோம் - துரோக சக்திகள் மனு தர்மத்தைத் தூக்கிப் பிடிக்கின்றன. திராவிடம் என்றால் சமதர்மம் - ஆரியம் என்றால்  மனுதர்மம் என்பதைப் புரிய வைக்க வேண்டும்.

இயக்கம் வெளியிடும் நூல்களைப் படிக்க வேண்டும்.

(6) டிசம்பரில் வரும் எனது பிறந்த நாள் பற்றிப் பலரும் பேசினார்கள்.  அந்த முயற்சிக்குப் பதிலாக 'விடுதலை' சந்தாக்களைத் திரட்டிக் கொடுங்கள் - அதைவிட சிறந்த பிறந்த நாள் பரிசு எனக்கு வேறு எதுவும் இருக்க முடியாது.

இந்த ஆறு அம்சங்களையும் கழகத் தலைவர் தம் உரையில் பதிவு செய்தார். இவற்றை உட்கொண்டு செயல்பட உறுதி  எடுப்போம்.

திராவிடர் கழகம் நடத்தும் எந்த நிகழ்ச்சியும் வெறும் சம்பிரதாயமாக இல்லாமல் ஆழமான கருத்தியல் சார்ந்ததாகவும் இருக்கும் என்பதற்கு அடையாளமே - நேற்றைய கழகச் சொற் பொழிவாளர்கள் கூட்டம். தோழர்கள் சிந்திப்பதோடு - செயல் படுத்துவார்களாக!

No comments:

Post a Comment