வாழ நினைத்தால் வாழலாம்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 30, 2021

வாழ நினைத்தால் வாழலாம்...

இன்ஸ்பிரேஷனல் கோட்ஸ் முகநூல் பக்கத்திலிருந்த ஒரு பதிவு என்னைக் கவர்ந்தது. அதனை தமிழாக்கம் செய்துள்ளேன்:-

50 வயதைக் கடந்து 60 நோக்கி சென்று கொண்டிருக்கும் தோழியிடம், ‘உங்களிடம் என்ன மாற்றங்களை உணர் கிறீர்கள்?’ என்று கேட்டேன்.

அவர் அனுப்பிய பதில் இதோ:

1) என் பெற்றோரை, என் உடன்பிறந்தவர்களை, என் இணையரை, என் குழந்தைகளை, என் தோழிகளை நேசித்த பிறகு, இப்போது என்னை நேசிக்கத் துவங்கி உள்ளேன்.

2) நான்அட்லஸ்அல்ல என்று உணர்ந்து கொண்டுள் ளேன். இந்த உலகத்தை என் தோள்களில் சுமப்பதில்லை.

3) காய்கறி விற்கும் தங்கச்சியிடம், பழம் விற்கும் தம்பியிடம் பேரம் பேசுவதை நிறுத்தி விட்டேன். பத்து ரூபாய் அதிகமாக கொடுத்து விட்டேனே என்று மண்டையை உடைத்துக் கொள்வதில்லை. அவர்கள் மகள்களின் படிப்புச் செலவுக்கு சேமிக்க இது உதவட்டுமே.

4) உணவகங்களில் கூடுதலாக டிப்ஸ் தருகிறேன். அன்றாட வாழ்க்கையை நடத்த, என்னை விட அதிகமாகப் போராடும் சர்வர் முகம் மலரலாம்.

5) ‘எத்தனை தடவை இந்தக் கதையை சொல்லுவீங்கஎன்று இப்போதெல்லாம் முதியவர்களிடம் குறைபடுவ தில்லை. அவர்கள் இந்தக் கதைகளால், தமது பழைய நினைவுகளை அசை போடுகிறார்கள், கடந்த காலத்தி லிருந்து விடுபடுகிறார்கள்.

6) சில நேரங்களில் பிறர் சொல்வது தவறு என்று தெரிந்தாலும், அவர்களை திருத்தாமலிருக்கக் கற்றுக் கொண்டேன். எல்லோரையும் திருத்தும் பொறுப்பு என்னு டையது அல்ல. எல்லோரும் சரியாக இருக்க வேண்டும் என்பதை விட என் மன அமைதி எனக்கு முக்கியம்.

7) பெருந்தன்மையுடன், தாராளமாகப் பாராட்டுகிறேன். இது, பாராட்டு பெறுபவருக்கு மட்டுமல்ல, என்னுடைய மனதுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. சின்ன ஆலோசனை - ஒருவர் உங்களைப் பாராட்டும் போது, ஒருபோதும் மறுக்காதீர்கள், நன்றி சொல்லி முழுமையாக ஏற்றுக் கொள்ளுங்கள்

8) என்னுடைய ஆடையில் எண்ணெய்க் கறை பட்டு விட்டால் அலட்டிக் கொள்வதில்லை. தோற்றத்தை விட ஆளுமைதான் உரக்கப் பேசுகிறது.

9) என்னுடைய மதிப்பை உணராதவர்களிடமிருந்து விலகிப் போகிறேன். அவர்கள் என் மதிப்பை அறியாமல் இருக்கலாம், நான் அறிவேன்.

10) யாராவது பந்தயத்தில் என்னை முந்த வேண்டும் என்று எண்ணிக்கொண்டு, மோசமாக செயல்பட்டாலும் நான் நிதானமாவே இருக்கிறேன். நான் பந்தயத்தில் இல்லை. என் வாழ்க்கையை வாழ்கிறேன்.

11) என் உணர்வுகளை எண்ணி சங்கடப்படாமல் இருக்க கற்றுக் கொள்கிறேன். என்னை மனுஷியாக்குவது என் உணர்வுகள் தான்.

12) ஒரு உறவை முறித்துக் கொள்வதை விட, ஈகோ-வை விட்டுவிடுவது நல்லது என்று அறிந்து கொண்டுள்ளேன். என் ஈகோ என்னை தனிமைப்படுத்தும்; உறவுகளால் நான் தனிமைப்பட்டு போக மாட்டேன்.

13) ஒவ்வொரு நாளையும், இறுதி நாளைப் போல வாழ கற்றுக் கொண்டுள்ளேன். இது கடைசி நாளாகவும் இருக்கலாம்.

14) என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பவற்றை செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய சந்தோசத்திற்கு நான்தான் பொறுப்பு. மகிழ்ச்சி என்பது ஒரு தேர்வு. அதை தேர்ந்தெடுத்து எந்த நேரத்திலும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

- என்னுடைய தோழியின் பதில் எல்லா வயதினருக்கும் பொருத்தமானது என்று நினைக்கிறேன், இதை செயல்படுத்த 50, 60, 70 வயது வரை காத்திருக்க வேண்டுமா என்ன?

- கீதா இளங்கோவன்

No comments:

Post a Comment