இந்தக் காலகட்டத்தில் நம்மக்களுக்கு எதைச் சொல்லவேண்டுமோ அவற்றை அருமையாக விளக்கினார் நமது மாண்புமிகு மானமிகு அமைச்சர் துரைமுருகன்
வேலூரில் திராவிடர் கழகத் தலைவர் எழுச்சியுரை
வேலூர், ஆக.29 திராவிட இயக்க இளைஞர்களுக்கு, நாட்டு மக்களுக்கு எவற்றை எல்லாம் சொல்லவேண் டுமோ அவற்றை மிகச் சிறப்பாக கூறினார் சகோதரர் மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன் என்றும், உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய ஏ.ஆர்.தவே என்பவர் ஆர்.எஸ்.எஸ். நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பது எதைக் காட்டுகிறது என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வினா எழுப்பினார்.
‘நீட்’ தேர்வு ஒழிக்கப்படவேண்டும்
ஏன்? எதற்காக? கருத்தரங்கம்
கடந்த 24.10.2021 அன்று காலை வேலூர் பேபி மகாலில் நடைபெற்ற ‘நீட்’ தேர்வு ஒழிக்கப்படவேண்டும் ஏன்? எதற்காக? என்ற கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
கடவுளைக் காட்டித்தானே இந்த ஜாதியை நிலைநாட்டியிருக்கிறார்கள்
மாட்டுக்கும், மிருகத்திற்கும் சுயமரியாதை கிடை யாது. ஆனால், மனிதன்? எத்தனை காலம் பழகியிருப் பார்கள்? மிக நெருக்கமான நண்பர்களாக இருந்திருப் பார்கள்? ஏங்க, உங்களுடைய நண்பர் திருமணம் நடைபெறுகிறதே, நீங்கள் போகவில்லையா? என்று கேட்டால்,
ஏங்க, அழைப்பிதழ் கொடுக்கவில்லை, நான் எப்படி போவது? என்று சொல்வார்.
அவர் மறந்து போயிருப்பார், மிக நெருக்கமானவர் களை நாம் மறந்து போய்விடுவது உண்டு.
பிறக்கும்பொழுதே ஒருவன் மேல்ஜாதி - கீழ்ஜாதி என்று பிரித்து வைத்திருக்கிறார்கள்.
கடவுள் மேல் என்ன பெரியாருக்குக் கோபம் என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பாருங்கள்.
அந்தக் கடவுளைக் காட்டித்தானே இந்த ஜாதியை நிலைநாட்டியிருக்கிறார்கள்.
உயர்நீதிமன்றத்தில் நேற்று ஒரு தீர்ப்பு கொடுத்திருக்கிறார், இறந்து போன பிறகுகூட சுடுகாட்டில் ஒருவரைப் புதைப்பதற்கு உரிமையில்லையா? இறந்து போன பிறகுகூட அவனுடைய ஜாதியைச் சொல்வதா£? என்று தீர்ப்பு எழுதுகிறார், அவரைப் பாராட்டவேண்டும்.
பெரியார் எங்கெல்லாம் போயிருக்கிறார் என்பதைப் பாருங்கள்; உயர்நீதிமன்றத்தில், உச்சநீதிமன்றத்தில்.
மனித சமத்துவத்திற்கும், சுதந்திரத்திற்கும் போராடிய இயக்கம் சுயமரியாதை இயக்கம்
உயிரோடு இருக்கும்பொழுது மட்டுமல்ல, இறந்து போன பிறகுகூட ஜாதி வருகிறது- சுடு காட்டில் கூட பேதம் இருக்கிறது; இதனைக் கண்டித்த இயக்கம் - மனித சமத்துவத்திற்கும், சுதந்திரத்திற்கும் போராடிய இயக்கம் சுயமரியாதை இயக்கம்.
அந்த இயக்கத்தினுடைய தொடர்ச்சிதான், இன் றைக்கு நம்முடைய ஒப்பற்றத் தலைவர் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆளுமையை எடுத்துக்காட்டக்கூடிய ஒப்பற்ற ஆட்சி இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நம்முடைய ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்' தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெறக்கூடிய ஆட்சி - இவர்களைப் போன்றவர்கள் கூட இருந்து.
தந்தை பெரியாருடைய பிறந்த நாளை - ‘சமூகநீதி நாள்' என்று அறிவித்தார்.
சமூகநீதி என்றால் என்ன?
அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான்.
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சொன்னாரே, படிக்கட்டு ஜாதி முறை என்று.
மேலே இருக்கிறவன் மேலேயே இருக்கவேண்டும்; கீழே இருப்பவன் கீழேயே இருக்கவேண்டும்.
பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்று நான்கு ஜாதி - அதற்கும் கீழே அவர்ணஸ்தர்கள், பஞ்சமர்கள் - அய்ந்தாவது ஜாதி ஆதிதிராவிடர்கள். அதற்கும் கீழே ஒரு ஜாதி உண்டு - அதுதான் எல்லா ஜாதிப் பெண்களும் - உயர்ஜாதிப் பெண்கள் உள்பட.
இப்படி இருந்த நிலையை மாற்றி, அனைவருக்கும் உறவினர்; யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்றார்.
ஆரம்ப காலத்தில், யாதும் ஊரே, யாவரும் கேளிர்,
பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்
இதுதான் திராவிடம்.
அப்படிப்பட்ட ஒரு சமத்துவம் இருக்கவேண்டிய இடத்தில், எவ்வளவு பெரிய பேதம் இருந்தது?
கீழ்ஜாதிக்காரனுக்கு எதைக் கொடுத்தாலும் அறி வைக் கொடுக்கக்கூடாது என்ற நிலை இருந்தது.
இன்றைக்கு வாய்ப்புக் கொடுத்ததும், நம் பிள்ளைகள் மேலே வருகிறார்களா, இல்லையா? அதனால் என்ன குறைந்து போயிற்று?
தகுதி, திறமை எங்களுக்குத்தான் இருக்கிறது என்று எவ்வளவு காலம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
இந்த இயக்கம் சாதாரணமானதல்ல நண்பர்களே, இன்னும் எவ்வளவோ இருக்கிறது சொல்வதற்கு - நேரத்தைக் கருதி உங்களுக்கு சில செய்திகளை மட்டும் சொல்கிறேன்.
புத்தகங்களை நீங்கள் வாங்கியிருக்கிறீர்கள், அதைப் படிப்பீர்கள் என்று நம்புகிறோம்.
‘‘தமிழ்நாட்டில் காந்தி’
காந்தியாருக்கே அந்த உரிமையைப் பெற்றுக் கொடுத்தது பெரியாரின் சுயமரியாதை இயக்கம்தான்.
‘‘தமிழ்நாட்டில் காந்தி'' என்ற தலைப்பில் ஒரு புத்தகம். அதை நீங்கள் படித்துப் பார்க்கவேண்டும். ஆயிரம் பக்கங்களுக்கு மேல் உள்ள புத்தகம் அது.
தமிழ்நாட்டில் காந்தி எவ்வெப்பொழுதெல்லாம் வந்தார்; எங்கெங்கெல்லாம் தங்கினார், என்னென்ன ஊரில் எல்லாம் பேசினார் என்பதெல்லாம் அந்த நூலில் பதிவாகியிருக்கிறது. மதுரை சர்வோதய சங்கம் அந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது; இராமசாமி என்பவர் அந்தப் புத்தகத்தைத் தொகுத்திருக்கிறார். தேதி வாரியாக அந்தப் புத்தகத்தில் செய்திகள் இருக்கும்.
1927 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் - தஞ்சை மாவட்டத்தில் உத்தமர் காந்தியார் அவர்கள் தங்கியிருந்தார்.
காந்தியார் சிலையை அண்ணா திறக்கக்கூடாது என்று சொன்னார்கள் என்பதை இங்கே அழகாகச் சொன்னார்.
அய்யாவிற்கு ரொம்ப செல்லப் பிள்ளையாக இருந்தவர் ம.பா.சாரதி
திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் தனித்தனியாக இருந்த காலத்தில்கூட, இந்த ஊரில் அய்யாவிற்கு ரொம்ப செல்லப் பிள்ளையாக இருந்தவர் ம.பா.சாரதி அவர்கள். அவர் நகர் மன்றத் தலைவராக இருந்தவர்.
என்னப்பா என்று கேட்பார்; அதேமாதிரி மணியம் மையாரிடமும் பேசுவார். சாரதி வீட்டுத் திருமணம் பெரியார் இல்லாமல் நடக்காது; எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அய்யா செல்வார். நாங்கள் எல்லோரும் செல்வோம்.
காந்தியாருடைய சிலையை, அண்ணா திறந்து வைக்கக்கூடாது என்று அன்றைக்கு மறியல் செய் தார்கள்.
டி.கே.ராமலிங்கம் அவர்கள் பாராட்டியிருக்கிறார்.
‘‘உத்தமர் காந்தியடிகள்’’
காந்தியை அவர் நினைவூட்டினார், தமிழ்நாட்டி லேயே முதன்முதலாக அண்ணா அவர்களால் திறக்கப் பட்ட சிலை ஒரு ஊரில் இருக்கிறது என்றால், அது வேலூரில்தான். ‘‘உத்தமர் காந்தியடிகள்'' என்ற தலைப் பில் ஒரு புத்தகமாக வந்தது - அண்ணாவினுடைய உரை.
அதற்காக மறியல் செய்தார்கள் - காரணம்,
ஆர்.எஸ்.எஸ். கொஞ்சம் உள்ளே புகுந்தது.
எங்களுடைய தோழர்கள் பிள்ளையார் சிலையை உடைத்தார்கள் என்பதற்காக, மண்டையை உடைத் தார்கள்.
திருநாவுக்கரசு, மோகன்ராஜூ, சுந்தரராசுலு போன்ற தோழர்கள் அப்போது இருந்தார்கள்.
பன்னீர்செல்வம், கரந்தை உமாமகேசுவரம் பிள்ளை ஆகியோர் சென்று, காந்தியாரை சந்திக்கிறார்கள்.
‘‘தமிழ்நாட்டில் காந்தி' என்ற புத்தகத்தில் இருக்கிறது.
காந்தியார், இவர்களைப் பார்த்து ‘‘என்ன செய்தி?'' என்று கேட்டார்.
சுயமரியாதை இயக்கம் தொடங்கி இரண்டு ஆண்டு கள் ஆகியிருக்கும். உங்களுக்குத் தெரியும், இந்தியா விலேயே நேர் எதிர் எதிரான கொள்கைகளைக் கொண்ட இரண்டு இயக்கம் - 1925 ஆம் ஆண்டு தொடங்கப் பெற்றது.
ஒன்று, சுயமரியாதை இயக்கம் - தமிழ்நாட்டில்
இன்னொன்று ஆர்.எஸ்.எஸ். இயக்கம்- வடநாட்டில், ஹெட்கேவர் தலைமையில் தொடங்கப்பட்டது.
திராவிட இயக்கத்திற்கு என்னென்ன கொள்கையோ, அதற்கு நேர் எதிரான கொள்கைதான் ஆர்.எஸ்.எஸ். கொள்கை.
அன்றைக்கும்- இன்றைக்கும் - என்றைக்கும்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்“ என்று சொல்வது திராவிட இயக்கம்.
“வருணாசிரம தர்மம்தான் எல்லாமே” என்று சொல்வதுதான் ஆர்.எஸ்.எஸ். இயக்கம்.
எல்லோருக்கும் எல்லாமும் - அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான் திராவிட இயக்கம்.
இன்னார்க்கு இதுதான் - தலையில் எழுதியிருக்கிறது - அவன் அதற்குமேல் ஆசைப்படக்கூடாது என்பது ஆர்.எஸ்.எஸ். இயக்கம்.
இப்படி பல விஷயங்கள் இருக்கின்றன.
அப்பொழுது, பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி ஏற்பட்டு, பெரியார் அய்யா வேகமாகப் பிரச்சாரம் செய்தார்; சுயமரியாதை இயக்கம் தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கின்ற நேரத்தில்,
பன்னீர்செல்வம், கரந்தை உமாமகேசுவரம் பிள்ளை
பன்னீர்செல்வம், கரந்தை உமாமகேசுவரம் பிள்ளை ஆகியோர் சென்று, காந்தியாரை சந்தித்து,
நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள்; இங்கே பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பிரச்சினை மிகக் கொழுந்துவிட்டு எரிகிறது - அதைப்பற்றி நீங்கள் பேசுங்கள்; சமரசம் செய்து வையுங்கள். ஈ.வெ.ராமசாமி தலைமையில் தீவிர மாக இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பிரச்சினை தீர்ந்து, ஒன்றாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்.
நீங்கள் தலையிட்டுப் பேசினீர்கள் என்றால், சரியாகிவிடும் என்று சொன்னார்கள்.
அப்பொழுது காந்தியார் சொல்கிறார், ‘‘அப்படி இல்லையாமே! நீங்கள் சொல்வதுபோன்று, பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பிரச்சினை கொழுந்துவிட்டு எரிவதுபோன்று தெரியவில்லையே'' என்று கூறினார்.
காந்தியாருக்கும் சேர்த்து சுயமரியாதை உரிமையை வாங்கிக் கொடுத்த இயக்கம் சுயமரியாதை இயக்கம்
மேலும், என்னுடைய அனுபவத்தை சொல்கிறேன் என்று காந்தியார் சொல்கிறார்,
‘‘1927 ஆம் ஆண்டிற்கு முன்பாக நான் இரண்டு, மூன்று முறை தமிழ்நாட்டிற்கு வந்திருக்கின்றேன். அப்பொழுதெல்லாம் மயிலாப்பூரில் உள்ள நம்முடைய சீனிவாசய்யங்கார் வீட்டில் தங்குவேன். திண்ணையில்தான் அமர வைப்பார்கள். என்னுடைய துணை வியார் கஸ்தூரிபாவும் திண்ணையில்தான் இருப்பார். ஆனால், இன்றைக்கு நான் பார்க்கிறேன், அவர்களுடைய வீட்டின் அடுப்பங்கரை வரையில் கஸ்தூரிபா போகிறார். என்னை வீட்டினுள் அமர வைத்தார்கள்'' என்று.
இதற்கு என்ன அர்த்தம்?
1927 ஆம் ஆண்டிற்கு முன்பு ‘தேசப் பிதா' காந்தியார், அவர் சாதாரண காந்தியார் அல்ல; தேசத்திற்குப் போராடுகின்ற காந்தியாரை, மயிலாப்பூரில், காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சீனிவாசய்யங்கார் வீட்டில், திண்ணையில் அமர வைத்தார்கள். உள்ளே போக அனுமதியில்லை.
இந்தத் தகவல் பல பேருக்குத் தெரியாது. காங்கிரஸ் காரர்களுக்கே தெரியாது. காந்தி பக்தர்களுக்கே தெரியாது; நம்முடைய இளைஞர்களுக்குத் தெரியாது.
ஆனால், 1927 ஆம் ஆண்டு, காந்தியார் திண்ணையில் உட்காரவில்லை. வீட்டிற்குள் சென்றேன் என்று சொல்கிறார் காந்தியார்.
காரணம் என்ன?
1927 ஆம் ஆண்டிற்கு முன்பு இவரை திண்ணையில் உட்கார வைத்தபொழுது, சுயமரியாதை இயக்கம் பிறக்கவில்லை. பெரியார், சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிவில்லை.
சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியதினுடைய விளைவுதான் - பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்று பேதம் சொல்கிறீர்களே என்று சொன்ன பிறகுதான், சீனிவாசய்யங்கார் வீட்டினுடைய கதவும், சமையலறைக் கதவும் திறந்தது என்று சொன்னால், காந்தியாருக்கும் சேர்த்து சுயமரியாதை உரிமையை வாங்கிக் கொடுத்த இயக்கம் சுயமரியாதை இயக்கம்.
இதை நான் சொல்லவில்லை, அந்தப் புத்தகத்தில் இருப்பதைத்தான் சொல்கிறேன்.
இன்னமும் அந்தக் கொடுமை முடிந்ததா? என்றால், இல்லை.
இங்கே கதிர்ஆனந்த் சொன்னார், மற்றவர்களும் சொன்னார்களே!
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வேண்டும் என்று பெரியார் கேட்டாரே, ஏன்? மோட்சத்தில் முன் சீட்டு வேண்டும் என்பதற்காகவா? இல்லை. அல்லது நான்கு பேருக்கு உத்தியோகம் வாங்கிக் கொடுப்பதற்கா? என்றால், இல்லை.
ஜாதிப் பாம்பை வைக்கத்தில் அடித்தார்; கோவில் கருவறைக்குள் நுழைந்தது!
காலங்காலமாக பிறவியினால், இழிவுபடுத்தி வைத்தி ருக்கிறார்களே, அந்த ஜாதிப் பாம்பை வைக்கத்தில் அடித்தார். அது மற்ற மற்ற இடங்களுக்குச் சென்றது; விடாமல் துரத்தினார்; பாதுகாப்பான இடம் தேடி அலைந்தது அந்த ஜாதிப் பாம்பு - கோவில் கருவ றைக்குள் சென்றது - அங்கு சென்று பாதுகாப்பாக இருக்கிறது. இன்றைக்கும் உள்ளே நுழைய முடிய வில்லையே!
கோவில் கட்டியது யார்?
நம்மாள்
தர்மகர்த்தா யார்?
நம்மாள்
நிலம் கொடுத்தது யார்?
நம்மாள்
சிலை அடித்தது யார்?
நம்மாள்
பெரிய மணியை வைத்து, அந்தக் கயிற்றை நம்மாள் கையில் கொடுத்தது அவாள்!
சின்ன மணியை தூக்கிக்கொண்டு, ‘கிடுகிடு' என்று ஆட்டிக்கொண்டே உள்ளே போவது - அவர் சொன்ன ‘அவாள்!'
இந்தப் பேதம் இருக்கக்கூடாது; அந்தப் பேதத்தை ஒழிக்கவேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னார். கலைஞர் ஆட்சியில் போராடப் போகிறோம் என்று சொன்னார் - வேண்டாம் என்று சொன்ன கலைஞர், அதற்காக சட்டம் கொண்டு வருகிறேன் என்றார்.
அந்த சட்டமும் வந்தது - அதை எதிர்த்து வழக்குத் தொடுத்தனர். அந்த வழக்கில் வெற்றி பெற்றும், அதனை நடைமுறைப்படுத்த முடியாத அளவிற்கு வைத்திருந் தார்கள்.
கலைஞர் அவர்கள் வேதனைப்பட்டார்
அப்பொழுதுதான் கலைஞர் அவர்கள் வேதனைப் பட்டு சொன்னார், அய்யா பெரியாருக்கு அரசு மரியாதைதான் என்னால் கொடுக்க முடிந்தது; ஆனால், அவருடைய நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்க முடியவில்லை?'' என்று.
அதைத்தான் இங்கே கதிர்ஆனந்த் அவர்களும் சொன்னார்.
பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுத்த பெருமை - நம்முடைய முதலமைச்சர் சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்களையே சாரும்.
அன்றைக்கு எங்களுக்கு எவ்வளவு பெரிய பூரிப்பு. எங்களுடைய வாழ்நாளிலேயே மறக்க முடியாத நாள் - ஆகஸ்ட் 14 ஆம் தேதி.
அன்றுதான் சமூக விடுதலை. ஆகஸ்டு 15 ஆம் தேதியை அரசியல் விடுதலை என்று நீங்கள் சொல்ல லாம். ஆனால், சமூக விடுதலையை ஆகஸ்ட் 14 ஆம் தேதியன்று கொடுத்தார்.
ஆகவே, இன்னமும் வழக்குத் தொடுக்கிறார்கள். உள்ளே போகக்கூடாது என்கிறார்களே, இன்னமும் மாறவில்லையே அவர்கள். மாறிவிட்டார்கள், மாறிவிட்டார்கள் என்று நாம் ஏமாறுகிறோமே!
பெரியாரை வாசித்தால் மட்டும் போதாது;
சுவாசிக்கவேண்டும்!
பெரியாரை வாசித்தால் மட்டும் போதாது நண்பர் களே,
சுவாசிக்கவேண்டும்.
உலகம் முழுவதும் இன்றைக்குப் பெரியார் தேவைப் படுகிறார்.
அண்ணா அவர்கள் மிக அழகாக ஒரே வரியில் சொன்னார்,
‘‘Putting Century into a Capsule'' என்று ஆங்கி லத்தில் ஒரு சொற்றொடர் உண்டு.
‘‘பல நூற்றாண்டுகளை ஒரு சிறு குளிகையில் அடைத்து கொடுப்பது'' போன்ற சாதனைகளை செய்த வர் பெரியார்.
பல நூற்றாண்டுகளைப் புரட்டிப் போட்டார் தந்தை பெரியார் அவர்கள்.
எங்களைப் பாராட்டினால் எங்களுடைய தலை குனிந்தே இருக்கும்!
எங்களை எதிர்த்துப் பேசும்பொழுது, எங்களு டைய தலை நிமிர்ந்திருக்கும். பெரியார் தொண் டர்கள் எங்கே இருந்தாலும், திராவிட இயக்கத்தவர் எங்கே இருந்தாலும், எங்களை எதிர்த்துப் பேசும்பொழுது தலை நிமிர்ந்திருக்கும்.
ஆனால், யாராவது எங்களைப் பாராட்டிப் பேசினால், எங்களுடைய தலை குனிந்துகொண்டே, இருக்கவேண்டிய அளவிற்கு இருக்கும்.
அந்த அளவிற்கு எங்களை நீங்கள் உற்சாகப்படுத்தினீர்கள்; நன்றி!
சட்டப்பேரவையில் சொன்னதைப்பற்றி நண்பர்கள் இங்கே குறிப்பிட்டார்கள்.
அமைச்சர் அவர்கள் எனக்குத் தனிச் சிறப்பு செய்யவேண்டும் என்று சொன்னதைப்பற்றி குறிப்பிடவேண்டுமெனில் இந்த ஆட்சி செய்கின்ற ஒவ்வொன்றும் எங்களுக்குச் சிறப்புதான். இதைவிட பெரிய சிறப்பு தேவையில்லை.
ஒவ்வொன்றும் நீங்கள் செய்கிறீர்களே, எந்த ஆட்சியிலும் நடைபெறாதது இந்த ஆட்சியில் தான் நடைபெறுகிறது.
ஒவ்வொரு நாளும், ஒன்றைப் பாராட்டி முடிப்ப தற்குள், இன்னொன்று மேலே வந்து விழுகிறது.
‘அறிஞர்’ எடப்பாடியாரே சொன்னாரே!
சில பைத்தியக்காரர்கள் சொன்னார்கள், ஜோதிடர்கள் சொன்னார்கள் - ஏனென்றால், சிலர் ஜோதிடத்தை நம்பு கிறார்கள், அவர்களுக்கும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.
அவருடைய ஜாதகத்தில் முதலமைச்சராக வருவார் என்பதற்கு இடமே இல்லை என்றார்கள். ராசியே இல்லை என்று சொன்னார்கள்.
ஏன்? நம்முடைய ‘அறிஞர்' எடப்பாடியாரே பேசினார், சட்டப்பேரவையில். ‘அறிஞர்' என்று அவரை ஏன் சொல்கிறேன் என்றால், அவர் 'தெளி'வாகப் பல விஷயங்களை சொல்வார்.
நம்முடைய அமைச்சர் நிறைய புத்தகம் படிப்பார் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். மற்ற தோழர் களும் நிறைய புத்தகம் படிப்பீர்கள். சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் என்ற ஒரு புத்தகத்தை நான் தேடுகிறேன், இன்னமும் எனக்குக் கிடைக்கவில்லை. யாராவது வைத்திருந்தால் கொடுங்கள்.
‘அறிஞர்‘ எடப்பாடியாரே சொன்னார், ‘‘ஸ்டாலினுக்கு ராசியில்லை; முதலமைச்சராக அவர் வர முடியாது'' என்று.
முதலமைச்சராக வந்ததோடு மட்டுமல்ல, 150 நாள் களுக்குள் இந்தியாவினுடைய முதல் முதலமைச்சர் என்று பெயர் எடுத்திருக்கிறார்.
தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவில்லை; மாநிலத்தை முன்னிலைப்படுத்துகிறார்!
ஆனால், இதைக்கூட சமூகநீதிக்கான சரித்திர நாயகர் என்ன சொல்கிறார் தெரியுமா?
‘‘என்னை முதல் முதலமைச்சர் என்று சொல்கிறீர்கள்; ஆனால், இதைவிட மிக முக்கியம் எனக்கு என்னவென் றால், தமிழ்நாடு முதல் மாநிலம் என்று வரவேண்டும், அதுதான் முக்கியம்'' என்றார்.
இதுதான் திராவிட இயக்கத்தினுடைய முதிர்ச்சி.
தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவில்லை நண்பர்களே, நாட்டை முன்னிலைப்படுத்துகிறார்; மக் களை முன்னிலைப்படுத்துகிறார்.
இதுதான் திராவிட இயக்கம்; இதுதான் சுயமரியாதைக் களஞ்சியம் - இதுதான் விளைச்சல்.
தந்தை பெரியாரை 95 ஆண்டு காலம் வாழ வைத்த பெருமை இருக்கிறது என்றால், இந்த வேலூர் மண் அதற்கு அடிப்படைக் காரணம்.
அன்னை மணியம்மையாரைப்பற்றி சொன்னார்கள். அவர், தன்னுடைய இளமையைப் பறிகொடுத்தார் என்பதை மிக அழகாக விளக்கி அமைச்சர் இங்கே சொன்னார்.
என்னைப் பற்றியும் அவர் சொன்னார், அதை நான் பெரிதாக நினைக்கவில்லை.
முழுக்காரணம் மணியம்மையார்தான்!
தந்தை பெரியார் அவர்களின் ஆயுள் நீடித்தமைக்கு அன்னை மணியம்மையார் அவர்களே முழுக் காரணம்.
இதை அண்ணா சொன்னார் -
சுயமரியாதைத் திருமண சட்ட வடிவம் சரியாக இருக்கிறதா? சொல்லுங்கள், பெரியார் பார்த்துவிட்டாரா? என்று முதலமைச்சர் அண்ணா கேட்கிறார்.
அண்ணா தம்மை சந்திக்க இரவு ஒன்றரை மணிக் குத்தான் வரச் சொல்லுவார்; அப்பொழுதுதான் அவர் கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருப்பார்.
எனக்குக் கார் கிடையாது; வேறொரு நண்பரின் ஸ்கூட்டரில்தான் சென்றோம்.
அப்பொழுது அண்ணா அவர்கள் சொன்னார், ‘‘என்னப்பா, 30 ஆண்டுகளுக்கு முன்பு அய்யாவிற்கு வயிற்று வலி ஏற்படும்; வயிற்றில் புண் இருந்தது. அவர் மிகவும் கஷ்டப்படுவார். ஆனால், அதையும் தாண்டி இன்றைக்கு அய்யா வாழ்ந்து கொண்டிருக்கிறார் என் றால், இதற்கு முழுக்காரணம் மணியம்மையார்தான். அந்த அம்மா மட்டும் இல்லையானால்'' என்று சொன்னார்.
இரவு ஒன்றரை மணிக்குச் சொன்னார் - அப்படிப் பட்ட ஒரு சிறந்த பெருமை பெற்ற அன்னை மணியம் மையாரை தந்த மண் இந்த வேலூர் மண்.
அய்யாவிற்கு ஏற்பட்ட இயற்கையாக சிறுநீர் பிரியாத தொந்தரவு - அந்த வலி தாங்க முடியாமல், ‘‘நான் தற் கொலை செய்துகொள்ளலாமா?'' என்றுகூட நினைத் தேன்'' என்று சொன்னார்.
90 வயதில் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய யாரும் துணியமாட்டார்கள். டாக்டர் எச்.எஸ்.பட் அவர்கள், செய்தார்கள். அவருக்கு காலங்காலமாக நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.
உங்களுக்கெல்லாம் இரண்டு கால்கள்; எனக்கு ஆறுகால்கள் என்பார்
சிறுநீர் பிரிவதற்கு வேறொரு இடத்தில் ஓட்டை போட்டு, ஒரு குழாயை இணைத்து, அதைப் பாட்டிலினுள் நுழைத்து - அந்தப் பாட்டிலை, ஒரு பிளாஸ்டிக் பக் கெட்டில் வைத்துக்கொண்டு, 90 வயதிலிருந்து 95 ஆண்டுகாலம் வரை வாழ்ந்தார் அல்லவா!
அவர் சொல்லுவார், ‘‘உங்களுக்கெல்லாம் இரண்டு கால்கள்; எனக்கு ஆறுகால்கள் என்பார். எப்படி என் றால், நான் எழுந்திருக்கவேண்டும் என்றால், என்னுடைய இரண்டு பக்கமும் இரண்டு பேர் தாங்கிப் பிடித்துக் கொண்டுதான் வருவார்கள்'' என்பார்.
ஏன் தள்ளிப் போகவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
பேசும்பொழுது அந்த டியூப் நகர்ந்து போகும்; அப்பொழுது ‘‘அய்யோ, அம்மா'' என்ற முனகலோடு பேசுவார்.
இந்த வேலூரில்தான் அவர்கள் மறைந்தார்.
மருத்துவமனையில், நானும், எங்கள் நிர்வாகி சம்பந் தமும் இருந்தோம். மருத்துவமனைக்கு வந்து மூன்று நாள்கள் ஆகிவிட்டது - அய்யாவிடம் நான் கேட்கிறேன், ‘‘சுற்றுப்பயணம் நிகழ்ச்சி விவரம் வருகிறதே, அதை தள்ளிப் போடலாம் என்று நினைக்கிறேன்'' என்று சொன்னேன்.
அதுவரை அய்யா அவர்கள் எங்களிடம் கோபப் பட்டது கிடையாது. அதுபோன்று நாங்களும் நடந்து கொள்ளமாட்டோம்.
உடனே அய்யா அவர்கள் கோபமாக, ‘‘ஏன் தள்ளிப் போடவேண்டும் என்று சொல்கிறீர்கள்; ஏன் நான் போய் பேசமாட்டேனா? பேசப் போவது நான்; நீங்கள் அல்ல. ஏன் தள்ளிப் போகவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?'' என்றார்.
என்னுடைய இறுதி மூச்சு
அடங்குகின்ற வரையில் உழைப்பேன்!
இறப்பதற்கு நான்கு நாள்களுக்கு முன்புகூட உழைத்த ஒருவரை - அப்படிப்பட்ட ஒரு தலை வரை, தந்தை பெரியாரை - வாழ வைத்த அன்னை மணியம்மையார் - வாழ வைத்த மருத்துவமனை - அவர்களுக்கு சிறப்பு செய்த அதே இடத்தில், இன்றைக்கு நீங்கள் என்னையும் தூக்கிப் பிடித்து, உங்கள் தோள்மீது அமர்த்திக் கொண்டு என்னை உற்சாகப்படுத்தினீர்கள் என்றால்,
ஒரே ஒரு பதிலைத்தான் என்னால் சொல்ல முடியும் - நீங்கள் என்மேல் வைத்திருக்கும் நம்பிக் கையை, என்னுடைய இறுதி மூச்சு அடங்குகின்ற வரையில், நான் அதற்காகவே உழைப்பேன். வேறு எந்தப் பலாபலனும் இல்லை. இதைவிட எனக்கு வேறு என்ன பெருமை வேண்டும்?
நீங்கள் சொன்னீர்கள், ஒரு பஞ்சாயத்து போர்டு தேர்தலில்கூட நிற்கமாட்டோம் என்று. நாங்கள் ஆட்சிக்குப் போகவேண்டும் என்கிற அவசியம் இல்லையே!
‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்!'
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாதனையை செய்து கொண்டே இருக்கிறாரே, நம்முடைய சமூகநீதிக்கான சரித்திர நாயகர் அவர்கள்.
நேற்றுகூட முதலமைச்சர் அவர்களிடம் தொலைப் பேசியில் பேசினேன். எல்லையற்ற மகிழ்ச்சியோடு உங்களிடம் பேசுகிறேன் என்று.
சமூகநீதி சமூகநீதி என்று சொல்கிறோமே, அதற்காக எத்தனை ஆண்டுகளாகப் பாடுபட்டிருப்போம். தமிழ் நாட்டிற்கு மட்டும் செல்லாது என்று சொன்னார்கள்; பெரியார் பாடுபட்டதினால், அதனுடைய பலன் இந்தியா முழுதும் வந்தது.
நாடாளுமன்றத்தில் ‘பெரியார் வாழ்க!'
என்ற குரல் ஓங்கி ஒலித்தது!
அதனால்தான், நம்மு டைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் இருக்கும் பொழுது, அங்கே இருப்பவர்கள் ‘‘ஜெய் ராம்'' என்றார்கள்;
உடனே இவர்கள் ‘‘பெரியார்'' என்றவுடன், அவர்கள் அடங்கிப் போனார்கள். ‘‘பெரியார்'', ‘‘அம்பேத்கர்'', ‘‘கலைஞர்'', ‘‘தமிழ் வாழ்க'' என்று உங்களைப் போன்ற வர்கள் குரல் கொடுத்தீர்கள்.
அதையெல்லாம் நான் தொலைக்காட்சியில் பார்த் தேன். நம்முடைய இளைஞர்கள் முத்துகள் - அவர் களிடம் அறிவுச் சுடரை கொடுத்துவிட்டோம்.
எங்களுக்கு வயதாகிவிட்டது என்று கவலைப் படவில்லை - எங்களுக்கு இளமை திரும்பிவிட்டது உங்களைப் பார்த்து.
அஷ்டத்திக்கு பாலகர்கள் போன்று அலறுகிறார்கள். தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றாலே, தி.மு.க. உறுப்பினர்கள் என்றாலே, அவர்கள் ஏவுகணை போன்று போகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில், சமூகநீதியின் அளவு கோல்படி இட ஒதுக்கீடு என்று சொன்னார்கள்.
ஒவ்வொரு துறையிலும் அது நடைமுறைப்படுத்தப் பட்டு இருக்கிறதா? என்று பார்க்கவேண்டும் அல்லவா!
கைகளுக்கு கிட்டியது, வாய்க்கு எட்டவேண்டும் அல்லவா?
அதற்கு வழியில்லை என்றபொழுதுதான் நாங்கள் சொன்னோம், சமூகநீதி கண்காணிப்புக் குழு ஒன்றை கட்டாயம் அமைக்கவேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொண்டோம்.
சமூகநீதிக்குப் பாதுகாப்பு ஏற்படுத்திய ஒரே ஆட்சி
அதன்படி சமூகநீதி கண்காணிப்புக் குழுத் தலைவர், மற்றும் உறுப்பினர்களை அறிவித்தார் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.
இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும், இந்த 75 ஆண்டுகால சுதந்திரத்தில், இட ஒதுக்கீட்டிற்கு, சமூகநீதிக்குப் பாதுகாப்பு ஏற்படுத்திய ஒரே ஆட்சி என்பதற்கு - இன்றைக்கு ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்' நேற்று போட்ட உத்தரவுதான் அடிப்படையானது.
ஒன்றைப் பாராட்டுவதற்குள், இன்னொன்று, அதைப் பாராட்டுவதற்குள் இன்னொன்று என்று தொடர்கிறது.
நேற்று மாலையில் அவரைப் பாராட்டும்பொழுதுகூட சொன்னேன், மருத்துவ முகாமை ஆய்வு செய்கிறீர்கள்; திடீரென்று பேருந்தில் ஏறி ஆய்வு செய்கிறீர்கள் என்றேன்.
ஆகவேதான், இது ஒரு நீண்ட பயணம். அந்த சமூகநீதி பயணத்தினுடைய இன்னொரு பகுதிதான் நண்பர்களே, நீட் தேர்வு எதிர்ப்பு என்பது.
அனிதாவில் தொடங்கி, 18 மாணவச் செல்வங்களை நாம் இழந்திருக்கிறோம். இன்னமும் அந்தக் கொடுமை கள் இருக்கின்றன.
புள்ளி விவரங்களோடு நீட் எதிர்ப்பு மசோதாவை நிறைவேற்றினார்கள்!
தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் சொன்னார்களே, நீட் தேர்வை ஒழித்துவிட்டார்களா? என்று சிலர் புரியாமல் கேட்கிறார்கள்.
பிரதமரை நேரில் சந்தித்து, நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
சட்டப்பேரவையில் மசோதாவை நிறைவேற்றி இருக்கிறார்கள். கடந்த ஆட்சியில் செய்ததுபோன்று செய்யவில்லை. அதற்கென்று ஒரு குழுவை ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், மருத்துவர்கள், கல்வியாளர்கள், சமூகவியலாளர்கள் அனைவரும் ஆய்வு செய்து, எப்படியெல்லாம் நீட் தேர்வு நம்முடைய கிராமத்துப் பிள்ளைகளைப் பாதிக்கிறது? தமிழ்ப் படித்தவர்களைப் பாதிக்கிறது? ஏழை, எளியவர்களைப் பாதிக்கிறது? என்ற விவரங்களையெல்லாம் புள்ளி விவரங்களோடு அறிக்கை கொடுத்தார்கள். அந்த அறிக்கையின்படி ஒரு மசோதா தயாரிக்கப்பட்டு, சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அந்த மசோதா தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பப் பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருக் கிறது.
அதுமட்டுமல்ல, இன்றைய ஆளுங்கட்சியில் உள்ள வர்கள், எதிர்க்கவேண்டும் என்றால், தைரியமாக எதிர்க் கிறார்கள். எதிர்க்கட்சியாக இருந்தபொழுதும் எதிர்த் தார்கள்.
ஆனால், கடந்த ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருந்த பொழுது, நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக ஒன்றிய அரசிடம் கேட்கவில் லையே!
கடந்த கால ஆட்சியாளர்களே, துணிவு, முதுகெலும்பு உங்களுக்கு இருந்ததா?
மாநிலங்களவையில் இவர்களுடைய ஆதரவு, ஒன்றிய அரசுக்குத் தேவை - அப்பொழுது, நீட் தேர்வி லிருந்து விதிவிலக்குக் கொடுத்தால்தான், உங்களுக்கு நாங்கள் வாக்களிப்போம் என்று சொல்லக்கூடிய துணிவு, முதுகெலும்பு உங்களுக்கு இருந்ததா? இல்லையே!
நாங்களும்தான் மசோதாக்களை கொண்டுவந்தோம்; இப்பொழுது அதுபோன்றுதானே இன்றைய ஆளுங் கட்சியினரும் செய்கிறார்கள் என்று சொல்லாதீர்கள்.
ஏனென்றால், நீங்கள் செய்தது வேறு; இவர்கள் ஆதாரப்பூர்வமாக, புள்ளிவிவரங்களோடு அந்த மசோதாவை நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
அப்படி அவர்கள் அதற்கு செவி செய்யவில்லை என்றால், மக்கள் இயக்கம் இருக்கிறதே. ஒரு நாள் அல்ல- இது ஒழிகின்ற வரையில் நாங்கள் ஓயப்போவ தில்லை. நம்முடைய மாணவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான்.
கல்வியை மாநில பட்டியலிலிருந்து எடுத்துக்கொண்டு போனார்கள்; ஒத்திசைவுப் பட்டியலில்தான் கல்வி இருக்கிறது. இரண்டு பேரும் சேர்ந்து செய்யக் கூடியது தான்.
ஒரே ஜாதி என்று சொல்ல முடியுமா?
இப்பொழுது ஒன்றிய அரசில் இருப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்?
ஒரே மொழி - சமஸ்கிருதம்; ஒரே நாடு - ஒரே ரேசன் - ஒரே தேர்வு - ஒரே கலாச்சாரம் - ஆரிய கலாச்சாரம் என்று.
அவர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கி றோம், ஒரே ஜாதி என்று சொல்ல முடியுமா? உங்களால்.
அவர்கள் சொல்ல முடியாது - ஏனென்றால், அவர்களுக்கு ஜாதியைக் காப்பாற்றவேண்டும்.
உயர்ந்த ஜாதி, நாங்கள் மட்டும்தான் படிக்க வேண்டும்; நாங்கள் மட்டும்தான் டாக்டராக வேண்டும்.
ஆக, சமஸ்கிருதம் தெரிந்திருந்தால்தான், டாக்டருக்குப் படிக்க முடியும் என்ற முந்தைய நிலையை அவர்களால் நேரிடையாக சொல்ல முடியாது என்பதால், அதற்குப் பதிலாக நீட் தேர்வை கொண்டு வருகிறார்கள். குலக்கல்வித் திட்டத்தை மறுபடியும் கொண்டு வருகிறார்கள்.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் காரணமாகத்தான் தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரி உருவாயிற்று. அதுமட்டுமல்ல, போஸ்ட் கிராஜூவேட் என்று சொல்லக்கூடிய எம்.எல்., எம்.டி., எம்.எஸ். படிப் பிற்கு ஏராளமான இடங்கள் உருவாக்கப்பட்டன.
நீட் தேர்வு என்பது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது
சூப்பர் ஸ்பெஷாலிட்டி, எம்.சி.எச். - இதெல்லாம் டபுள் டிஜிட் -இவையெல்லாம் உத்தரப்பிரதேச மாநிலத் திலோ, ராஜஸ்தான் மாநிலத்திலோ மற்ற மாநிலங்களிலோ கிடையாது. இங்கே மட்டும்தான். இதுதான் அவர் களுடைய கண்களை உறுத்திற்று - அதற்காகத்தான் நீட் தேர்வை கொண்டு வந்தார்கள்.
எனவேதான், நீட் தேர்வு என்பது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது - நம்மை கேட்டுத்தான் செய்திருக்கவேண்டும். நம்முடைய உரிமை அது.
உச்சநீதிமன்றம் என்ன சொன்னது?
நீட் தேர்வைப் பொறுத்தவரையில் சிலர் என்ன சொல்கிறார்கள், ‘‘உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது, உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது'' என்று.
உச்சநீதிமன்றத்தில் என்ன நடந்தது தெரியுமா?
2013 ஆம் ஆண்டு, முதன்முதலில் நீட் தேர்வை கொண்டு வந்தபொழுது, வழக்குப் போட்டார்கள். நுழைவுத் தேர்வு வேண்டுமா? வேண்டாமா? என்று.
அந்த வழக்கு மூன்று நீதிபதிகள் அமர்வின்முன்பு வந்தது. நீதிபதி அல்தாமஸ் கபீர் தலைமையில், நீதிபதி விக்ரம் ஜித் சென், நீதிபதி அனில்தவே ஆகியோர் முன்பு.
அந்த வழக்கின் முடிவில், இரண்டு நீதிபதிகள் நுழை வுத் தேர்வு தேவையில்லை என்று தீர்ப்பளித்தார்கள்.
மூன்றாவது நீதிபதியான குஜராத் பார்ப்பனர் அனில்தவே, பி.ஜே.பி,க்காரர், ஆர்.எஸ்.எஸ்.காரர். அவர் மாறுபட்ட தீர்ப்பை எழுதினார்.
மூன்று நீதிபதிகளில், இரண்டு நீதிபதிகள் ஓய்வு பெறுகிறார்கள். மோடி ஆட்சி வந்தவுடன், மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தார்கள்.
ஏற்கெனவே மூன்று நீதிபதிகள் அமர்வில் இருந்த நீதிபதியான அனில்தவே தலைமையில் வழக்கு விசாரணைக்கு வருகிறது.
மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா - கேதன் தேசாய் என்பவர்தான் மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுமதி கொடுப்பவர்.
கேதன் தேசாய் வீட்டில் சி.பி.அய். ரெய்டு - பணம் எடுக்கவில்லை; வெறும் தங்கமாகத்தான் எடுத்தார்கள்
தமிழ்நாட்டில் உள்ள தருமபுரி மருத்துவக் கல்லூரி அனுமதி சம்பந்தமாக கலைஞர் அவர்கள் சந்தித்தபொழுது, அவரை 15 நிமிடம் காக்க வைத்தனர். கலைஞர் அதைப்பற்றி கவலைப்படாமல், நமக்குக் காரியம்தான் முக்கியம் என்று சொன்னார்.
அந்த கேதன் தேசாய் வீட்டில் சி.பி.அய். ரெய்டு - அவருடைய வீட்டிலிருந்து பணம் எடுக்கவில்லை - வெறும் தங்கமாகத்தான் எடுத்தார்கள் - ஏனென்றால், ‘தங்கமான' மனிதர் அவர்.
அதிகமாக தங்கம் சேர்க்கும் கடவுள் திருப்பதி வெங்கடாசலபதி. வெங்கடாசலபதிக்கும் - கேதன் தேசாய்க்கும் நடந்த போட்டியில், வெங்கடாசலபதி தோற்றுப் போனார். அப்படிப்பட்ட யோக்கியர்கள்.
‘இந்து' நாளேட்டில் வந்த ஒரு செய்தி!
அவர்தான் நீட் தேர்வை உருவாக்கியவர். நீட் தேர்விற்காக, மறுபடியும் தீர்ப்பு எழுதுகிறேன் என்று சொன்னாரே நீதிபதி அனில்தவே -
அவரைப்பற்றி நேற்று வந்த இந்து பத்திரிகையில் செய்தி வந்திருக்கிறது. ஹிந்துத்துவாவைப்பற்றி ஒரு புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார்கள், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்.
‘‘Hindutva paradigm integral Humanism and quest for non western World View'' என்ற தலைப்பில் வெளிவந்த ஒரு புத்தக வெளியீட்டு விழா செய்திக்கு அடியில் ஒரு செய்தி - இதெல்லாம் பெரியார் நுண்ணாடி - கண்ணாடி போட்டுப் பார்த்தால்தான் தெரியும். மற்றவர்களுக்கு அது சாதாரணமாகத் தெரியாது - தூக்கிப் போட்டுவிடுவார்கள். எங்களுக்கு இதுதான் வேலை.
former Supreme Court Judge Justice Anil R.Dave allso spoke at event and term the book as one to be quied and ......
‘‘ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் ஹிந்துத்துவாவைப் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அனில்தவே, இந்தப் புத்தகத்தை சாதாரணமாகப் படிக்கக்கூடாது; மென்று தின்னவேண்டும்'' என்று சொல்கிறார்.
இந்த அனில்தவே, உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தபொழுதே என்ன சொன்னார்?
‘‘எனக்கு அதிகாரம் இருந்தால், இந்த அரசமைப்புச் சட்டத்தை எடுத்துவிட்டு, மனுதர்மத்தையே அரசமைப்புச் சட்டமாக்குவேன்'' என்று வெளிப்படையாக சொன்னவர்.
இவர்தான் நீட் தேர்வை கொண்டு வந்தார். இதற்குமேல் உங்களுக்கு விளக்கவேண்டிய அவசியமில்லை.
நீட் தேர்வை எதற்காக கொண்டு வந்தார்கள், ஊழலை ஒழிக்கிறோம் என்று சொல்லித்தானே.
ஊழல் ஒழிந்ததா? ஆள் மாறாட்டம் - கேள்வித்தாள் பல லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்பட்டது.
12 மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம்
எனவே நண்பர்களே, இந்தப் போராட்டம் என்பது ஓயாது.
நீட் தேர்வு தேவையில்லை என்பதை வலியுறுத்தி, நமது முதலமைச்சர் 12 மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்துடன், நீதிபதி ஏ.கே.ராஜன் குழு கொடுத்த அறிக்கையையும் இணைத்துக் கொடுத்தார்.
நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி போன்றோர் ஒவ்வொரு மாநில முதலமைச்சர்களையும் நேரில் சந்தித்து அந்தக் கடிதத்தைக் கொடுத்தார்கள்.
எனவே, இந்த முயற்சி என்பது - இது நம்முடைய பிள்ளைகளைக் காப்பாற்றுகின்ற முயற்சி நண்பர்களே - இது வெறும் தேர்வுப் பிரச்சினையல்ல - இது மாநில உரிமைப் பிரச்சினை -
கல்வி உரிமைப் பிரச்சினை -
சமூகநீதி பாதுகாப்புப் பிரச்சினை -
ஆகவே, இப்படிப்பட்ட ஓர் அருமையான வாய்ப்பை ஏற்பாடு செய்து, நீண்ட நேரம் நீங்கள் அமர்ந்து ஓர் அருமையான சொற்பொழிவு - திராவிட இயக்க வரலாற்றில் - இந்தக் காலகட்டத்தில் எதைச் சொல்லவேண்டுமோ அதைச் சொன்னார் - நம்முடைய பொதுச்செயலாளர் - நம்முடைய நீர்வளத் துறை அமைச்சர் மாண்புமிகு மானமிகு நம்முடைய அமைச்சர் அவர்கள் - ஏனென்றால், மாண்புமிகு வரும் - போகும் - ஆனால், மானமிகு என்பது என்றைக்கும் இருக்கும்.
‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்’’
நம்முடைய கலைஞர் அவர்களிடம், ‘‘உங்களைப்பற்றி ஒரு வரியில் விமர்சனம் செய்துகொள்ளுங்கள்'' என்று அவருடைய பிறந்த நாளன்று, செய்தியாளர்கள் கேட்டபொழுது,
வேறு யாராவது இருந்திருந்தால், யோசித்திருப்பார்கள்; ஆனால், கலைஞர் அவர்கள், கணினி போன்று, பட்டென்று பதில் சொன்னார், ‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்'' என்றார்.
அதுதான் இன்றைய நம்முடைய அமைச்சரின் உரை. இந்த இயக்கம் இப்படிப்பட்டவர்களைப் பெற்றிருக்கிறது. அதுமட்டுமல்ல, இது வெறும் புத்தக அறிமுக விழா மட்டுமல்ல கதிர்ஆனந்திடம் நாங்கள் கொடுத்தது புத்தகம் மட்டுமல்ல - இந்தச் சுடரை - கொள்கைச் சுடரை ஏந்தி - கொஞ்சம் கொஞ்சமாக மாறவேண்டும் - அவர் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிடுவார். இன்னும் நான்கு கூட்டங்களுக்கு என்னோடு வரவேண்டும்.
கனிமொழி சொல்லித்தான் பெரியாரைப்பற்றி தெரிந்துகொண்டேன் என்று சொன்னார். இப்பொழுது அவருடைய அப்பா சொன்னதைக் கேட்டிருப்பார்.
எந்தப் பிள்ளையும், அப்பா சொன்னால் கேட்கமாட்டார்கள்; தாத்தா சொன்னாத்தான் கேட்பாங்க.
தாத்தாதான் நண்பர்கள் போன்று இருப்பார்கள். அப்பாக்கள் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள். நம்முடைய அமைச்சர் எப்படி என்று தெரியாது. அப்பா கண்டிப்பாக இல்லை என்றால், அம்மா கண்டிப்பாக இருப்பார்.
கொள்கை விழா மட்டுமல்ல - குடும்ப உறவு விழா!
ஆகவே, இது ஒரு நல்ல குடும்பம்; திராவிடப் பேரியக்கக் குடும்பம்; கொள்கைக் குடும்பம்.
இது ஒரு கொள்கை விழா மட்டுமல்ல - குடும்ப உறவு விழா!
ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி!
வாழ்க பெரியார்!
வளர்க திராவிடம்!
வருக சமூகநீதி!
ஒழிப்போம், ஒழிப்போம்
நீட் தேர்வை ஒழிப்போம்!
ஒழிப்போம், ஒழிப்போம்
நீட் தேர்வை ஒழிப்போம்!
என்ற உணர்வைப் பெறுங்கள் என்று கூறி, விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
No comments:
Post a Comment