அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 13, 2021

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை?

நாளை (14ஆம் தேதியன்று) ஆயுத பூஜை நடைபெற இருக்கிறது. அந்நாளில் அரசு அலுவலகங்களில் பூஜை என்ற பெயரால் அமர்க்களம் செய்வது தொடர்ந்து கொண்டுள்ளது.

காவல் நிலையங்கள் உட்பட இத்தகு செயல்பாடுகள் இந்திய ஒன்றிய அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மைக் கோட் பாட்டுக்கு எதிரானவை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஏற்கெனவே அரசு ஆணை தெளிவாகவே இருக்கவே செய்கிறது.

அண்ணா அவர்கள் முதவமைச்சராக இருந்தபோதே, அரசு அலுவலகங்களில், வளாகங்களில் எந்த மதத் தொடர்பான உருவங்களோ, படங்களோ, சிலைகளோ இடம் பெறக் கூடாது என்று தெளிவாக ஆணை பிறப்பிக்கப்பட்டது.

பொது (ஜெனரல்-எம்) எண்: 7553 / நினைவுக் குறிப்பு 16-2 நாள்: 29.4.1968

அரசு அலுவலகங்களில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்கக்கூடாது என்ற அரசின் நடவடிக்கையை அமல்படுத்த வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் (கிளை) உத்தர விட்டுள்ளது.

"நெல்லை மாவட்டம் தாழையூத்து சங்கர் நகரைச் சேர்ந்தவர் முத்துராமன். இவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்தார். அதில் கூறி இருந்ததாவது:

"நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம், அரசு மருத்துவமனை மற்றும் வட்டார அலுவலகங்களில் இந்துக் கோவில்கள் இருக்கின்றன. இந்தக் கோவில்களில் தினமும் பூஜையும் நடத்தப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் பிரதோஷம் போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு பூஜையும் நடத்தப்படுகிறது. அரசு அலுவலகங்களில் எல்லா மதத்தினரும் பணியாற்றுகின்றனர். எல்லா மதத்தினரும் தங்களது பணிகளுக்காக அரசு அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர்.

இதுபோன்ற சூழ்நிலையில் அரசு அலுவலகங்களில் இந்துக் கோவில்கள் மட்டும் அமைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது பிற மதத்தினரைப் புண்படுத்துவது போன்றதாகும். அரசு அலுவலக வளாகங்களில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்கக் கூடாது என்று அரசு ஏற்கெனவே ஆணை பிறப்பித்துள்ளது.

இந்த ஆணை அரசு அலுவலகங்களில் அமல்படுத்தப்படுவது இல்லை. எனவே, இந்த ஆணையை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் இந்த ஆணை பின்பற்றப்படு வதைக் கண்காணிக்க மாவட்ட அளவில் குழு அமைக்கவும் உத்தரவிட வேண்டும்." இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஃப்.எம்.இப்ராகிம் கலிபுல்லா, கே.பி.கே. வாசுகி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது: "அரசு அலுவலகங்களில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்கக்கூடாது என்று ஏற்கெனவே அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டியது அரசின் கடமை. ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அதை அமல்படுத்த அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசு அலுவலக வளாகங்களில் மத நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும்." இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

- தீர்ப்பு, 17.3.2010

இப்படி அரசு ஆணைகளும், உயர்நீதிமன்ற தீர்ப்பும் வெளிப்படையாக இப்படி இருக்கும் போது எந்த அடிப்படையில் அல்லதுதுணிவில்' அரசு அலுவலகங்களில் தொடர்ந்து ஆயுதப் பூஜைகளைக் கொண்டாடி வருகின்றனர் என்பது முக்கியமான வினாவாகும்.

அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல; பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் பணியாற்று கின்றனர். எந்த மதத்தையும் ஏற்றுக் கொள்ளாத பகுத்தறிவாளர் களும், நாத்திகர்களும் பணியாற்றவே செய்கிறார்கள்.

இந்த நிலையில் குறிப்பிட்ட மதத்தின் பண்டிகைகளை கொண்டாடுவது என்பது அடுத்த மதக்காரர்களுக்கு உளைச்சலை ஏற்படுத்தக்கூடும் அல்லது தங்கள் மதப் பண்டிகைகளையும் இதுபோல் கொண்டாட வேண்டும் என்ற உணர்வைத் தாங்கி அதன் காரணமாக சச்சரவுகளும், விவாதங்களும் ஏற்பட வாய்ப்பு உண்டு.

அரசுப் பணியாளர்கள் படித்தவர்கள்தானே, அரசின் ஆணைகளையும், நீதிமன்ற தீர்ப்புகளையும் அறிந்தவர்கள் தானே! தெரிந்திருந்தும் அவற்றை மீறுவது நாகரிகமானதல்ல.

வேலியே பயிரை மேய்வது போல - முதலில் காவல்துறை நடந்து கொள்ளும் போக்கு வேதனைக்குரியது, அதிர்ச்சிக்குரியது.

ஒலிபெருக்கி வைப்பது, வாழை மரங்கள் கட்டுவது, மேள தாளங்கள் - இத்தியாதி இத்தியாதி செயல்பாடுகளும் தடபுடலாக இடம் பெறுவது சரியானதுதானா?

இதில் பல ஊழல்களும் தலைவிரித்தாடுகின்றன. ஏலங்கள் கூட விடப்படுவதுண்டு; வசூல் இன்னொரு பக்கம்.

காவல்துறையின் புதிய தலைமை இயக்குநர் இதில் கவனம் செலுத்தி, உரிய நேரத்தில் சுற்றறிக்கை அனுப்பி, இவ்வாண்டு முதற் கொண்டாவது, ஆயுதப் பூஜை என்ற பெயரால் நடக்கும் சட்ட மீறலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தலைமைச் செயலாளரும் முக்கியமாகக் கவனத்தில் கொண்டு அரசு அலுவலகங்கள் சட்டத்திற்கும், ஆணைக்கும் கட்டுப்பட்டவைதான் என்பதை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்துகிறோம்.

இந்தியத் துணைக் கண்டத்திலேயே மத மாச்சரியங்களுக்கு இடம் இல்லாது, அமைதி தவழும் - சட்டத்தை மதிக்கும் மாநிலம் தமிழ்நாடு என்ற மதிப்பீடு உண்டு. அதற்குக் குந்தகம் ஏற்படுத்தும் எந்த ஒரு சிறு செயலையும் அனுமதிக்கக் கூடாது என்பதே நமது கனிவான கருத்தும், வேண்டுகோளுமாகும்.

No comments:

Post a Comment